டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

கார் ஷெட் அல்ல... மியூஸியம்!

கார் ஷெட் அல்ல... மியூஸியம்!

  சு.சுரேஷ்குமார்  >>வீ.நாகமணி

##~##

வீட்டில் கார் நிறுத்தும் கேரேஜை கார்களின் கலைக்கூடமாக மாற்றி, ''இதுதான் என்னுடைய உலகம்'' என்கிறார் ஸ்ரீவர்தன்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் கார்கோ பிரிவில் மேலாளராகப் பணிபுரியும் ஸ்ரீவர்தன், ஏற்கெனவே மோட்டார் விகடன் வாசகர்களுக்கு அறிமுகமான வின்டேஜ் கார் பிரியர்தான். வின்டேஜ் கார்களின் சேகரிப்பில் இவருக்கு இருபது ஆண்டுகள் அனுபவம் உண்டு. 1934 மாடல் ஆஸ்டின் டூரர், இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற போர்டு ஜி.பி.டபிள்யூ, 1938 மாடல் மெர்சிடீஸ் பென்ஸ் ஆகிய கார்கள் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் இவரது அழகான காரேஜுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இவரது கலைக்கூடம் பற்றி கண்களில் ஆர்வம் மின்னப் பேசினார்.

''என்னோட சின்ன வயசில காருங்கிறதே பெரிய அதிசயம். ரோட்டுல போற காருங்களை வேடிக்கை பார்க்குறதுக்குக் காத்துக்கிட்டு இருப்பேன். அப்போ, கார் வாங்குற அளவுக்கு வசதி கிடையாது. கார் வாங்குற அளவுக்கு வசதி வந்தப்ப... சின்ன வயசில பார்த்த கிளாஸிக் காருங்க மேலதான் ஆர்வம் வந்தது. அப்படி ஆரம்பமானதுதான் என்னோட இந்த கலெக்ஷன்!'' என எதார்த்தமாகப் பேச ஆரம்பித்தார் ஸ்ரீவர்தன்.

கார் ஷெட் அல்ல... மியூஸியம்!

''என்னோட கலெக்ஷன் எல்லாத்தையும் ஒரு ரூம்ல போட்டு பூட்டி வைக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை... அதனால, என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போதான் கார் நிறுத்துற இடத்தையே ஒரு சின்ன மியூஸியமா மாத்துனா என்னன்னு ஐடியா வந்தது. பிறகு, அதுக்கான விஷயங்கள் என்னென்ன இருக்கணும்னு தேடிப் பிடிச்சு ஒவ்வொன்னா சேகரிச்சு, இந்த மினி மியூஸியத்தை உருவாக்கினேன். என்னோட இந்த மியூஸியத்தைப் பார்க்கிறவங்க... காருங்கிறது எப்படி படிப்படியா உருவாகி வந்தது அப்படிங்கிறதை தெளிவாப் புரிஞ்சுக்கலாம். பரிணாம வளர்ச்சி மனுஷனுக்கு மட்டுமில்லை... இந்த மிஷின்களுக்கும் இருக்கு'' என்றவரிடம், வின்டேஜ் கார் பராமரிப்பு ரகசியம் என்ன என்று கேட்டோம்.  

கார் ஷெட் அல்ல... மியூஸியம்!

''இங்கிருக்கும் கார்கள் எல்லாம் நான் தேடி தேடி வாங்கி சேர்த்தது. அதை மறுபடி ரீ-ஸ்டோர் பண்ண பல மாசங்கள் ஆச்சு. வின்டேஜ் காருங்களோட தயாரிப்பு பல வருஷங்களுக்கு முன்னாடியே நின்னு போனதால, ஸ்பேர் பார்ட்ஸ் மார்க்கெட்டில் வாங்க முடியாது. சக வின்டேஜ் ஆர்வலர்கள் மூலமும், இன்டர்நெட் தேடுதல் மூலமும் பாகங்களை வர வெச்சு இந்த கார்களை சரி செஞ்சேன். இப்போ என்கிட்ட இருக்க எல்லா கார்களும் ரன்னிங் கண்டிஷன்ல இருக்கு. வின்டேஜ் கார் ராலிக்கு இந்த கார்களிலேதான் போறேன். ரொம்ப பழைய கார்கள் என்பதால எப்போதாவது நடு வழியில் பிரேக் டவுன் ஆகி நிக்கும். மத்தபடி ஒரு பிரச்னையும் இல்லை!'' என்கிறார் சிரித்துக் கொண்டே!

இவரது கலெக்ஷனில் 1940 மாடலான போர்டு ஜீப்தான் இவரது பெர்சனல் ஃபேவரைட். இரண்டாம் உலகப் போருக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஜீப்பில், துப்பாக்கி வைக்கும் ஸ்டேண்ட், எக்ஸ்ட்ரா ப்யூல் டேங்க், ட்ராலி என அத்தனை விஷயங்களையும் அப்படியே ரீ-ஸ்டோர் செய்ததோடு ஒரு பக்க சுவர் முழுவதும் உலகப் போரின்போது இந்த ஜீப் மாடலை 'ப்ரமோட்’ செய்ய வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்களையும் படங்களையும் சேகரித்து அழகாக ஃப்ரேம் செய்து வைத்திருக்கிறார். இந்தப் பழங்காலத்து வாகனங்களுக்கு பளிச் நியான் விளக்குகள் போட்டு, சுவரில் போஸ்டர்கள் ஒட்டி ஒரு குட்டி மியூஸியம் போல மாற்றி இருக்கிறார்.

கார் ஷெட் அல்ல... மியூஸியம்!

கண்ணாடிப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் அழகான ஸ்கேல் மாடல் கார்களை நாம் ஆர்வத்தோடு பார்த்தபோது, ''வின்டேஜ் கார்களைச் சேகரிக்க ஆரம்பிச்ச நான், எல்லா பழைய மாடல் கார்களை எல்லாத்தையுமே நம்மால வாங்கிட முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன், அதனாலதான் அதோட ஸ்கேல் மாடல்களை வாங்க ஆரம்பிச்சேன். வேலை விஷயமா வெளிநாடு போகும்போதெல்லாம் இந்த மாதிரி கார்களை வாங்கிடுவேன். என் நண்பர்கள் போனாலும் வாங்கி வரச் சொல்லுவேன். அப்படி ஆரம்பிச்ச சேகரிப்பு... இப்போ 350 கார்களைத் தாண்டிடுச்சு!

இந்த ஸ்கேல் மாடல் கார்கள் நீங்க நெனைக்கற மாதிரி வெறும் பொம்மைகள் கிடையாது. இது எல்லாம் அந்தந்த மாடல் கார்களோட அச்சு பிசகாத மினியேச்சர்ஸ். இதோட பானெட்டை திறந்து இன்ஜினைப் பார்க்கலாம். கதவுகளைத் திறக்கவும், ஸ்டீயரிங்கை திருப்பவும் முடியும்'' என்கிறார்.  

தனது பிஸியான வேலை நேரம் போக, மற்ற நேரங்களை இவர் தனது புதிய சேகரிப்புகளை ரீ-ஸ்டோர் செய்வதிலும் மினியேச்சர் கார்களுக்கான படங்களுடன் கூடிய கேட்லாக் உருவாக்கவும் செலவிட்டு வருகிறார். இணையத்தில் ஆட்டோமொபைல் கம்யூனிட்டிகளில் இவர் வெளியிட்ட இவரது காரேஜின் புகைப்படங்கள்தான் இப்போது செம ஹிட்.

அதில் இவரது காரேஜுக்கு ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடம் இருந்தும், கார் காதலர்களிடம் இருந்தும் கிடைத்த வரவேற்புகளால் பூரித்துப் போய் இருக்கிறார் ஸ்ரீவர்தன்!