Election bannerElection banner
Published:Updated:

கோனா... ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

கோனா... ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?
கோனா... ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

39 KW பேட்டரி Back கொண்ட மாடல், ஃபுல் சார்ஜில் 312 கி.மீ செல்லும். இதுவே கூடுதல் திறன்மிக்க 64 KW பேட்டரி Back கொண்ட மாடல் என்றால், அது ஃபுல் சார்ஜில் 482 கி.மீ செல்கிறது.


தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரான கோனா EV-யை, வரும் ஜூலை 9-ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உலகளவில் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் வெளியான இது, கோனா எஸ்யூவி-யின் தோற்றத்துடனேயே வரும். காரை உற்றுநோக்கும்போது மூடப்பட்ட கிரில் பகுதி, ஸ்பெஷலான 17 இன்ச் அலாய் வீல்கள், காணாமல்போன எக்ஸாஸ்ட் பைப், டிஜிட்டல் மீட்டர்கள், சிறப்பான ஏரோடைனமிக்ஸுக்காக மேம்படுத்தப்பட்டிருக்கும் பம்பர்கள் மற்றும் ஸ்பாய்லர் எனக் கணிசமான மாற்றங்கள் தென்படுகின்றன. காரின் பிளாட்ஃபார்மில் பேட்டரிகள் வைக்கப்பட்டிருப்பதால், கேபின் இடவசதியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சார்ஜிங் கேபிள் பூட் ஸ்பேஸில் இடம்பெற்றிருப்பதால், வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது இதன் பூட் ஸ்பேஸ், 373 லிட்டரிலிருந்து 332 லிட்டராகக் குறைந்துவிட்டது. வசதிகளில் மாற்றமிருக்காது எனலாம்.  

கோனா... ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

சர்வதேசச் சந்தைகளில் கோனா EV, இரு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதன்படி 39 KW பேட்டரி Back கொண்ட மாடல், ஃபுல் சார்ஜில் 312 கி.மீ செல்லும். இதுவே கூடுதல் திறன்மிக்க 64 KW பேட்டரி Back கொண்ட மாடல் என்றால், அது ஃபுல் சார்ஜில் 482 கி.மீ செல்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவிருப்பது, 39 KW பேட்டரி Back வெர்ஷன்தான். 136bhp பவர் மற்றும் 39.5kgm டார்க்கை வெளிப்படுத்தும் இது, 0-100 கிமீ வேகத்தை 9.7 விநாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்சமாக 155 கிமீ வரை செல்லும் எனத் தகவல் வந்துள்ளது. கோனா EV-யில் இருக்கும் லித்தியம் அயர்ன் பேட்டரியை, வெறும் 54 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும் (உபயம்: 100 KW DC ஃபாஸ்ட் சார்ஜர்). ஒருவேளை வழக்கமான AC வோல்டேஜ் பிளக்பாயின்ட்டைப் பயன்படுத்தினால், 6.1 மணி நேரத்தில் பேட்டரியை ஃபுல் சார்ஜ் ஏற்றிவிடலாம். 

கோனா... ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

இந்தியாவின் முதல் Long Range EV என்ற பெருமையைப் பெறவிருக்கும் கோனா EV-யுடன், Home Charger வசதியை வழங்கவுள்ளது ஹூண்டாய். தனது டீலர்ஷிப்களில் இதற்காக சார்ஜிங் ஸ்டேஷன்களையும் இந்த நிறுவனம் கட்டமைக்க முடிவெடுத்திருக்கிறது. சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை Heads-Up டிஸ்பிளே, 7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், HVAC உடனான முன்பக்க இருக்கைகளை எட்டுவிதமாக எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யும் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் சென்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், Rear Cross Traffic Alert, முன்பக்கத்தில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் என வழக்கம்போல அடித்து நொறுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை, உத்தேசமாக 25 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் களமிறக்கவும், மாதத்துக்கு 50 - 60 கார்களை விற்பனை செய்யவும் (வருடத்துக்கு 500 - 600 கார்கள்) ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனாலேயே சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் இந்த EV-யை CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்து அசெம்பிள் செய்யவுள்ளது. 

கோனா... ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

இதனால் லித்தியம் அயர்ன் பேட்டரி மற்றும் Permanent Magnet Synchronous எலெக்ட்ரிக் மோட்டார் போன்ற விலை உயர்ந்த பாகங்கள் இருப்பினும், காரின் விலையை ஓரளவுக்குக் கட்டுபடியாகக்கூடிய அளவில் நிர்ணயிக்க முடியும். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதானமான மெட்ரோ நகரங்களில் கோனா EV அறிமுகமாகலாம். தவிர, இந்த வெர்ஷனுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, பின்னாளில் பவர்ஃபுல்லான 204bhp - 64 KW பேட்டரி Back திறன்கொண்ட மாடல் (0-100 கிமீ வேகம்: 7.6 விநாடி மற்றும் டாப் ஸ்பீடு: 167 கிமீ) வரலாம். Euro NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை வழக்கமான மாடல் பெற்றிருப்பது செம! தற்போதைய சூழலில் இதற்குப் போட்டியாளர்கள் இல்லை. என்றாலும், இந்த ஆண்டின் இறுதியில் eZS எலெக்ட்ரிக் எஸ்யூவியை எம்ஜி மோட்டார்ஸ், நம் நாட்டுக்குக் கொண்டுவரவிருக்கிறது! 

கோனா... ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

தனது தொழில்நுட்பத் திறனை இந்தியாவுக்கு எடுத்துக்காட்டவே, கோனா EV-யை நம் ஊர் சாலைகளில் டயர் பதிக்க விரும்புகிறது ஹூண்டாய். ஆனால், நம் நாட்டில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவுதான் (2018-ல் விற்பனையான எலெக்ட்ரிக் பாசஞ்சர் வாகனங்கள் வெறும் 3,600தான்). வழக்கமான பெட்ரோல்/டீசலில் இயங்கும் கார்களுக்கு இருக்கும் பெட்ரோல் பங்க் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவையான சார்ஜிங் பாயின்ட்கள் இல்லாதது நெருடல். தவிர, என்னதான் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களில் முன்னேற்றம் தெரிந்தாலும், எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் என்பது சொற்பமாகவே இருக்கிறது (டாடா டிகோர் EV மற்றும் மஹிந்திரா வெரிட்டோ EV பற்றித் தெரியுமா?). எனவே, Zero Emission Vehicle எனப் பெயர்பெற்ற எலெக்ட்ரிக் கார்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால் மட்டுமே, ஹூண்டாயின் கனவு சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

கோனா... ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?
Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு