பிரீமியம் ஸ்டோரி
 ##~##

சென்னை பில்லபான்ஸ் சர்வதேசப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சூர்யாதான், இந்த ஆண்டின் தேசிய கோ-கார்ட் சாம்பியன்! 

சூர்யாவின் சொந்த ஊரான திண்டுக்கல்லில் சந்தித்தோம். ''சின்ன வயசுல இருந்தே கார்கள் மேல் அதிக ஆர்வம். அப்பாவோடு வெளியே போகும்போது, சாலையில் செல்லும் கார்களைக் காட்டி, 'அது என்ன கார், இது என்ன கார்?’னு கேட்டுட்டே இருப்பேனாம். ஒரு கட்டத்துல, ஒரு கார் தூரத்தில் வரும்போதே அது என்ன பிராண்டுனு சொல்ற அளவுக்கு, எல்லா கார்களும் எனக்குப் பரிச்சயம். கார் மேல் எனக்கு ஆர்வம் இருப்பதைப் பார்த்த என் அப்பா, ஒரு கார் எப்படி கியர், கிளட்ச், இன்ஜின்னு செயல்படுதுன்னு சொல்லிக்கொடுத்தார். அதனால், கார் மீது ஆர்வம் அதிகமாச்சு. வழக்கமான கார்களை சாலையில ஓட்ட 18 வயசு ஆகணுமே... நான் சின்னப் பையன் என்பதால், கோ-கார்ட் மேல் கவனம் திரும்பிச்சு.

ஜூனியர் சாம்பியன்!

எட்டு வயசிலேயே கோ-கார்ட் ரேஸ் கார் ஓட்டக் கத்துக்க ஆரம்பிச்சேன். மத்த கார் ஓட்டுவது மாதிரி ரேஸ் கார் ஓட்டுவது அவ்வளவு சுலபம் இல்லை. கார் ஓட்டும்போது உடம்பு பயங்கரமா அதிரும். தோள்பட்டைகளில் வலி தெறிக்கும். அதை ஓட்டுவதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் ரொம்ப முக்கியம். 2006|ம் வருஷத்தில் இருந்து தேசிய அளவிலான கோமர் 40 தீலீஜீ கார்ட்டிங் சேலஞ்ஜ், மினிமேக்ஸ் கார்ட்டிங் சேலஞ்ஜ் போட்டிகளில் கலந்துட்டுவர்றேன்.

ஆண்டுதோறும் ஜே.கே. டயர்ஸ் தேசிய கோ-கார்ட் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் நடத்துவாங்க. ஏப்ரல்ல ஹைதராபாத்ல நடந்தது போட்டி. இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 12 பேர் கலந்துக்கிட்டோம். 125 சிசி காரில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 42.942 நொடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடிச்சேன். போட்டி செமக் கடுமையாக இருந்தது. எனக்கும் பின்னாடி வந்த போட்டியாளருக்கும் இடைவெளி ஒரு மில்லி செகண்ட்தான். தேசிய அளவில் பல திறமையான ரேஸர்களுடன் போட்டிப் போட்டு வெற்றி பெற்றது சந்தோஷமா இருக்கு. ஃபார்முலா-1 ரேஸ்ல உலக அளவுல சாதிக்கணும்கிறதுதான் என் லட்சியம்!''

ரேஸ் என்றால், சென்னை, கோவை மட்டும்தானா என்ன... அடுத்து திண்டுக்கல் ரேஸர் ரெடி! 

ஆர்.குமரேசன்  வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு