Published:Updated:

பேட்டரி மாற்ற 19 லட்சம் கேட்ட டெஸ்லா! எலெக்ட்ரிக் காரை வெடி வைத்துத் தகர்த்த உரிமையாளர்!

வெடி வைத்துத் தகர்க்க தயாராக இருக்கும் டெஸ்லா கார்
News
வெடி வைத்துத் தகர்க்க தயாராக இருக்கும் டெஸ்லா கார்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் உருவ பொம்மையும் வெடித்தது!

தெற்கு ஃபின்லாந்து நாட்டில் உள்ள கைமென்லாக்ஸோ பகுதியில் உள்ள ஜாலா என்றொரு கிராமம் – டாப் ஆங்கிளில் விரிகிறது. மைனஸ் டிகிரியில் பனியில் உறைந்திருப்பதுதான் ஜாலாவின் மாயாஜாலம். அப்படிப்பட்ட கிராமத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் ஒரு மிஸன் நடக்க இருக்கிறது. ஒரு டெஸ்லா மாடல் S 2013 காரை பாம் வைத்துத் தகர்ப்பதுதான் அந்த மிஸன். இப்படித்தான் காட்சி விரிகிறது அந்தக் குறும்படத்தில். ஹாலிவுட் ஸ்டைலில் ஓடிக் கொண்டிருந்த அந்தக் குறும்படத்தின் பெயர் `Insane Tesla Model S Explosion’. ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபடவிருப்பதைத் தகர்க்கும் மிஸனா… இல்லையென்றால் ஹாலிவுட் ஸ்டைலில் உலகத்தைக் காப்பாற்றுவதற்காக டெஸ்லாவுக்கு வெடி வைக்கிறார்களா என்று கண்கள் விரியப் பார்த்தால்… அந்த டெஸ்லா S மாடல் காரின் உரிமையாளர் த்வாமஸ் கட்டெய்னன் என்பவர் நீண்ட ஜடைமுடி, குரங்குக் குல்லாவுடன் பேசுகிறார்.

டெஸ்லா S உரிமையாளர் த்வாமஸ் கட்டெய்னன்
டெஸ்லா S உரிமையாளர் த்வாமஸ் கட்டெய்னன்

‘‘நான் இந்த டெஸ்லா மாடல் 2013 காரை வாங்கியபோது, மிகவும் சந்தோஷமாக இருந்தேன். காரணம், டெஸ்லா என்பது ப்ரெஸ்டீஜியஸ் கார். முதல் 1,500 கிமீ ஓட்டும் வரை கார் செமையாக இருந்தது. நான் மகிழ்ச்சியாக இருந்தேன். சில ஆண்டுகள் நன்றாகத்தான் இருந்தது கார். அதற்குப் பிறகு திடீரென்று காரில் பிரச்னை. டெஸ்லா சர்வீஸ் ஷோரூமில் கொண்டு போய் விட்டேன். மாதக்கணக்கில் அங்கேயேதான் இருந்தது எனது டெஸ்லா. அப்புறம் ஒரு நாள் எனக்குத் தொலைபேசி வந்தது. ‘உங்கள் காரை எங்களால் பழுது பார்க்க முடியவில்லை. ஒரே ஒரு ஆப்ஷன் இருக்கிறது’ என்றார்கள். என்னவென்றால், காரின் பேட்டரியை மாற்றினால் மட்டுமே என் கார் ஓடும் என்றும், அதற்குக்கூட டெஸ்லாவிடம் அப்ரூவல் வாங்க வேண்டும் என்றும் சொன்னார்கள். என் டெஸ்லாவை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால், இப்போது நான் என் டெஸ்லா காரை டைனமைட் வெடி வைத்துத் தகர்க்கத்தான் ட்ரக்கில் அதை ஏற்றி வந்திருக்கிறேன்!’’ என்று அந்த வீடியோவில் பேசுகிறார் த்வாமஸ்.

ஆசை ஆசையாக வாங்கிய காரை, அவர் ஏன் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும்? காரணம், அந்த பேட்டரியை மாற்ற சுமார் 22,480 யூரோ டாலர்கள் செலவாகும் என்று டெஸ்லா டீலர்ஷிப்பில் சொன்னதுதான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 19 லட்சம். வீடியோவில் ஓர் இடத்தில், ‘‘நீங்கள் இந்தச் செலவுக்கு பேட்டரி வாங்கப் போகிறீர்களா… டைனமைட் வாங்கி காரை வெடிக்க வைக்கப் போகிறீர்களா… இவ்வளவு செலவு போட்டு பேட்டரி மாத்துறக்கு காரை பாம் வெச்சே வெடிக்க வெச்சுடலாம் என்று அவர் நக்கலாகச் சொல்வதும் இடம் பெறுகிறது. கிட்டத்தட்ட 30 கிலோ டைனமைட்டை இதற்காக பர்ச்சேஸ் செய்திருக்கிறார் த்வாமஸ். இந்த மிஸனுக்காக பல நண்பர்களை ஒன்றுதிரட்டி… முக்கியமாக யூடியூபர் Pommijatkat என்பவரின் உதவியுடன் இதை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். ரிலீஸான இரண்டு மணி நேரத்திலேயே 2.5 லட்சம் வியூஸ் எகிறியிருக்கிறதாம் இந்த டெஸ்லா வெடிப்பு வீடியோ.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எலான் மஸ்க் உருவ பொம்மை
எலான் மஸ்க் உருவ பொம்மை

வீடியோவின் நடுவே… ஒரு ஹெலிகாப்டர் வருகிறது. அதிலிருந்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் உருவ பொம்மை கீழே விழுகிறது. அதை வைத்தும் நக்கல் தொடர்கிறது. ‘‘எலான் மஸ்க் நேற்று பேசினார். உங்க டெஸ்லாவில் ரைடு போக விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்’’ என்று த்வாமஸின் ஸ்டன்ட் நண்பர் ஒருவர் கமென்ட் அடிக்கிறார்.

ட்ரக்கில் இருந்து இறக்கப்படும் டெஸ்லா காரின் பக்கவாட்டைச் சுற்றி டைனமைட்கள் கட்டப்படுகின்றன. டைனமைட் வெடிக்கும்போது சுற்றுவட்டாரத்துக்கும், பொதுமக்களுக்கும் ஏதும் சேதாரம் ஏற்படக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறது த்வாமஸ் டீம்.

Tesla explsion
Tesla explsion

பொதுவாக, எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரிக்கு 4 முதல் 5 ஆண்டுகள் அல்லது 1 முதல் 1.5 லட்சம் கிமீ வரை வாரன்ட்டி கொடுப்பார்கள். இந்த டெஸ்லா எஸ் மாடல் காரை த்வாமஸ் வாங்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதுவரை அவர் சந்தோஷமாகவே இருந்திருக்கிறார். வாரன்ட்டி பீரியட் முடிந்த பிறகுதான் அவருக்கு இந்தச் சிக்கல் வந்திருக்கிறது. ஒரு எலெக்ட்ரிக் காரில் பெரிய செலவே அதன் பேட்டரியும், எலெக்ட்ரிக் மோட்டாரும்தான். அதனால்தான் இவ்வளவு செலவைச் சொல்லியிருக்கிறது டெஸ்லா. அமெரிக்காவில் இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், வாடிக்கையாளர்களுக்குச் செலவைக் குறைப்பதற்காக ஆஃப்டர் மார்க்கெட் போன்ற தேர்டு பார்ட்டி சர்வீஸை ரெக்கமண்ட் செய்வதில்லை.

காரோடு சேர்த்து எலான் மஸ்க்கின் உருவ பொம்மையும் எரிந்து முடிகிறது. எரிந்து போன காரின் பாகங்களைத் தூக்கி எறிந்தபடி, ‘‘டெஸ்லாவை நான் ஓட்டும்போதுகூட இவ்வளவு உற்சாகமாக இருந்திருப்பேனா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட பெருமைமிகு டெஸ்லாவை வெடி வைத்துத் தகர்த்த முதல் வாடிக்கையாளர் நான்தான் என்பதில் பெருமை கொள்கிறேன்!’’ என்று வீடியோ முடிவில் நண்பர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு பை சொல்கிறார் த்வாமஸ்.

jaguar with donkeys
jaguar with donkeys

காஸ்ட்லி பைக்கில் திருப்தியடையாத வாடிக்கையாளர் ஒருவர் தன் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்தது…

‘‘இந்த காருக்கு பொதி சுமக்கும் கழுதையே தேவலை’’ என்று தனது காஸ்ட்லி ஜாகுவார் காரை கழுதைகளை வைத்து இழுத்து ஊர்வலம் போனது…

அதே கழுதைகளை வைத்து ஸ்கோடா, பென்ஸ், டொயோட்டா கார்களை இழுக்க வைத்துப் போன வாடிக்கையாளர்கள்…

‘‘நீங்கள் நரகத்தைப் பார்க்க வேண்டுமா.. ஃபியட் கார் வாங்குங்கள்’’ என்று ஒரு வாடிக்கையாளர் தனது ஃபியட் காரை அம்போவென தெருவில் விட்டு விட்டுப் போனது…

என்று நம் ஊரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், த்வாமஸின் இந்தச் செயல், கோபத்தின் உச்சபட்ச வெளிப்பாடாக இருப்பதால், இது டெஸ்லாவுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை.