Published:Updated:

ஒரு புள்ளி வித்தியாசத்தில்.... ஹாமில்ட்டனுக்குப் பின்னால்... வெர்ஸ்டப்பன்!

Formula 1
பிரீமியம் ஸ்டோரி
Formula 1

ரேஸ்: ஃபார்முலா-1 லூயிஸ் ஹாமில்ட்டன் vs மேக்ஸ் வெர்ஸ்டப்பன்

ஒரு புள்ளி வித்தியாசத்தில்.... ஹாமில்ட்டனுக்குப் பின்னால்... வெர்ஸ்டப்பன்!

ரேஸ்: ஃபார்முலா-1 லூயிஸ் ஹாமில்ட்டன் vs மேக்ஸ் வெர்ஸ்டப்பன்

Published:Updated:
Formula 1
பிரீமியம் ஸ்டோரி
Formula 1
2021 ஃபார்முலா 1 உலக சாம்பியன் ஷிப் அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டுகளைப்போல் இது லூயிஸ் ஹாமில்ட்டன் மற்றும் மெர்சிடீஸ் ஆதிக்கம் நிறைந்த சீஸானாக இருக்காது என்பதை முதல் இரண்டு ரேஸ்களே உணர்த்திவிட்டன. போல் பொசிஷன் வென்றது, ரேஸை வென்றது என அவர்களுக்கு இணையாக போட்டி போட்டிருக்கிறது ரெட்புல். குறிப்பாக, மேக்ஸ் வெர்ஸ்டப்பன். 7 முறை உலக சாம்பியனுக்கு டஃப் கொடுக்க வந்துவிட்டார் இந்த 23 வயது இளைஞர்.

2013-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் வென்ற பிறகு ரெட்புல் அணியால் மீண்டும் முதலிடம் பிடிக்கவே முடியவில்லை. நான்கு ஆண்டுகள் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருந்த செபாஸ்டியன் வெட்டலின் கரியர் சடர்ன் பிரேக் அடிக்க, ரெட்புல் அணியும் அங்கேயே நின்றுவிட்டது. 7 ஆண்டுகளாக மெர்சிடீஸ் நடத்திய ஒன் டீம் ஷோவை ரெட்புல் வெறுமனே வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.

இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற உறுதியில், ரேஸிங் பாயின்ட் அணிக்காகப் பங்கேற்று வந்த அனுபவ வீரரான செர்ஜியோ பெரஸ்ஸை ரெட்புல் ஒப்பந்தம் செய்திருக்கிறது. தங்கள் கொள்கையை மாற்றியதில் இருந்தே இந்த சீஸன் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது புரியும்.

ஒரு புள்ளி வித்தியாசத்தில்.... ஹாமில்ட்டனுக்குப் பின்னால்... வெர்ஸ்டப்பன்!

இந்த ஆண்டு ரெட்புல் அறிமுகம் செய்த RB16B காரில், ரியர் எண்ட், floor fin என அப்டேட்கள் வர, இந்த சீஸனின் அதிவேக கார்களாக அறியப்பட்டன ரெட்புல் கார்கள். அதனால், ஆரம்பத்தில் இருந்தே மெர்சிடீஸ், ரெட்புல் யுத்தம் சூடிபிடிக்கும் என்று கருதப்பட்டது.

எதிர்பார்த்ததைப்போலவே சீஸனின் முதல் ரேஸான பஹ்ரைன் ஜிபி-யில் pole பொசிஷனைக் கைப்பற்றினார் ரெட்புல்லின் வெர்ஸ்டப்பன்! தகுதிச் சுற்றுகளில் அவர் மின்னலென ஓட்ட, நிச்சயம் முதல் ரேஸை வெல்வார் என்றுதான் அனைவரும் கணித்தார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு ஹாமில்ட்டன் ஃபேவரிட்டாக இல்லாமல் ஒரு ரேஸை தொடங்கினார்.

ஆரம்பகட்டத்திலேயே safety car, virtual safety car என ரேஸ் தடைபட்டது. ஒவ்வொரு முறை பச்சைக்கொடி காட்டப்பட்டபோதும் வெர்ஸ்டப்பனை முந்த முயற்சி செய்தார் ஹாமில்ட்டன். ஆனால், அவரால் முடியவில்லை. ஆனால், சமயோஜிதமாக ஒரு முடிவு செய்தது மெர்சிடீஸ் அணி. 13-வது லேப்பின்போதே ஹாமில்ட்டனை பிட்டுக்கு அழைத்தார்கள். மீடியம் டயரில் இருந்தவர் ஹார்டு டயருக்கு மாறினார். புதிய டயரின் வேகத்தைப் பன்படுத்திக் கொண்டதால், வெர்ஸ்டப்பனுக்கு இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே இருந்தது.

ஒரு புள்ளி வித்தியாசத்தில்.... ஹாமில்ட்டனுக்குப் பின்னால்... வெர்ஸ்டப்பன்!


39-வது லேப்பில் தன் இரண்டாவது பிட் ஸ்டாப்பை வெர்ஸ்டப்பன் எடுக்க, ஆட்டம் அவர் பக்கம் திரும்பத் தொடங்கியது. புதிய டயர் எடுத்ததும் தன் வேகத்தால் இடைவெளியைக் குறைத்துக்கொண்டே இருந்தார் அவர். 40-வது லேப்பில் 8.7 விநாடிகள் பின்தங்கியிருந்தவர், 43-வது லேப்பின்போது 5.25 விநாடிகளே பின்தங்கினார். அடுத்தடுத்த லேப்களில் 3.9, 2.9, 2.6, 2.1 என அந்த வித்தியாசம் குறைந்துகொண்டே இருந்தது. தொடர்ந்து இடைவெளியைக் குறைத்துக்கொண்டே இருந்தவர், 52-வது லேப்பில் DRS ரேஞ்சுக்குள் வந்தார்.

இந்த சீஸனைப் பொறுத்தவரை இந்த காம்பினேஷன்களுக்கு இடையிலான போட்டியாகத்தான் இருக்கப் போகிறது.

ரெட்புல் வேகம் + வெர்ஸ்டப்பனின் தைரியம் vs மெர்சிடீஸ் யுக்தி + ஹாமில்ட்டனின் உறுதி

அந்த முதல் காம்போ ஏற்படுத்திய நெருக்கடியை முதலில் மெர்சிடீஸின் யுக்தி முறியடித்தது. ஆனால், இந்த முறை சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கும் வெர்ஸ்டப்பனை மீண்டும் அப்படி தடுத்துவிட முடியாது. இம்முறை எல்லாம் டிராக்கிலேயே நடைபெற்றாக வேண்டும். ஹாமில்ட்டன் தயாராக இருந்தார். எதற்கும் எப்போதும் விட்டுக்கொடுக்காதவர், இந்த முதல் ரேஸை விட்டுவிடுவதாக இல்லை. எந்தவொரு வளைவிலும் வெர்ஸ்டப்பனை முந்த விடவில்லை. அந்த ரெட்புல் டிரைவர் என்ன செய்வார் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்றதுபோல் ஓட்டினார்.

மீண்டும் அலோன்சோ!

3 ஆண்டுகள் ஃபார்முலா-1 ட்ராக்குகளிலிருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் சாம்பியன் ஃபெர்னாண்டோ அலோன்சோ, இப்போது மீண்டும் களம் கண்டிருக்கிறார். 39 வயதான இவர் ஆல்பைன் அணிக்காகப் பங்கேற்று எமிலியா கிராண்ட் ப்ரீயில் 1 புள்ளியும் பெற்றுவிட்டார்.

பொறுமை இழந்த வெர்ஸ்டப்பன், நான்காவது வளைவுக்கு வந்தபோது டிராக்குக்கு வெளியே சென்று ஹாமில்ட்டனை முந்தினார். ஆனால், அது விதிமுறைப்படி தவறு என்பதால், ரேஸ் நிர்வாகம் அவரைப் பின்தங்கச் சொல்லி வலியுறுத்தியது. முன்னிலையை விட்டுக் கொடுத்துவிட்டு, மீண்டும் முந்தத் தயாராக இருந்தார் வெர்ஸ்டப்பன். ஆனால், ஹாமில்ட்டனின் அனுபவத்தை அவரால் அவ்வளவு எளிதில் பின்தள்ளிவிட முடியவில்லை. இறுதியில், வெறும் 0.745 விநாடிகளில் ரேஸை இழந்தார் அவர்!

மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
மேக்ஸ் வெர்ஸ்டப்பன்


பஹ்ரைனில் விட்டதை இத்தாலியில் (எமிலியா ரோமக்னா கிராண்ட் ப்ரீ) பிடித்துவிடவேண்டும் என்று உறுதியாக இருந்தார் வெர்ஸ்டப்பன். தன் தொடக்கத்திலேயே அதை உணர்த்தவும் செய்தார். மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கியவர், முதல் லேப்பிலேயே ஹாமில்ட்டனை முந்தினார். மீண்டும் முன்னணிக்கு வர நினைத்த ஹாமில்ட்டன், வெர்ஸ்டப்பனின் அட்டகாச டிஃபென்ஸால் தன் முயற்சியில் தோல்வியடைந்தார். அதுபோக, அவர் காரின் முன்பக்க விங்கும் உடைந்துபோக, அவரால் அதன்பிறகு முன்னிலை பெறமுடியவில்லை. வெர்ஸ்டப்பன் ரேஸை வென்றுவிட்டார்! ஹாமில்ட்டனுக்கும், மெர்சிடீஸுக்குமான சண்டை, இரண்டாவது போட்டியிலேயே அரங்கேறிவிட்டது.

ஆனால், இந்த ரேஸில் ஹாமில்ட்டன் வெற்றி பெறாதது விஷயமல்ல. அவர் இரண்டாவது இடம் வந்ததுவே மகத்தான விஷயம். 31-வது லேப்பில் ஜார்ஜ் ரஸல் காரோடு ஏற்பட்ட மோதலால், தடுப்புகளில் மோதினார் ஹாமில்ட்டன். சரளைக் கற்களிலிருந்து அவரால் எளிதாக காரை எடுத்துவிட முடியவில்லை. ஒருவழியாக ரிவர்ஸ் எடுத்து, டிராக்குக்குள் வந்தபோது ஒன்பதாவது இடத்தில் இருந்தார் நடப்பு சாம்பியன்.

ஹாமில்ட்டன் அப்படியே இருந்திருந்தால், புள்ளிப் பட்டியலில் வெர்ஸ்டப்பனுக்கும் அவருக்குமான இடைவெளி அதிகரித்திருக்கும். ஆனால், அவர் விடவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல் அவரது மன உறுதி யாராலும் உடைக்க முடியாதது. மின்னலெனப் பாய்ந்தார். அடுத்த 10 லேப்களுக்குள் ஐந்தாவது இடத்துக்கு வந்தார். 55-வது லேப்பின்போது மூன்றாவது இடமே பிடித்துவிட்டார். நான்கு லேப்கள் மீதமிருக்கும் நிலையில் லாண்டோ நாரிஸைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவதாக ரேஸையும் முடித்தார் அந்த அனுபவ வீரர்.

லூயிஸ் ஹாமில்ட்டன்
லூயிஸ் ஹாமில்ட்டன்


இப்போது சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் வெர்ஸ்டப்பனைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் ஹாமில்ட்டன். எமிலியாவில் அதிவேக லேப்புக்குக் கிடைத்த அந்த 1 புள்ளிதான் இப்போது இருவருக்குமான வித்தியாசம்.

சொல்லப்போனால், பஹ்ரைனில் வெர்ஸ்டப்பன் அதிவேக லேப்புக்கு ஒரு புள்ளி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அங்குதான் மெர்சிடீஸின் மாஸ்டர் ப்ளான் மாற்றம் ஏற்படுத்தியது. போட்டாஸ் மூன்றாவது இடம் பெறுவது உறுதியாகிவிட்டதால், அந்த ஒரு புள்ளி பெற, கடைசி லேப்புக்கு முன் பிட் ஸ்டாப் எடுத்து, ‘soft’ டயர் மாற்றினார். அந்த டயரின் உதவியோடு அதிவேக லேப்பைப் பதிவு செய்து ஒரு புள்ளியையும் வென்றார் அவர். இல்லையெனில், இந்நேரம் வெர்ஸ்டப்பன், ஹாமில்ட்டன் இருவரும் சமநிலையில் இருந்திருப்பார்கள்.

ஹாமில்ட்டனுக்குத்தான் போட்டி என்பதை வெர்ஸ்டப்பனும், எவ்வளவு மோசமான நிலை வந்தாலும் தான் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதை ஹாமில்ட்டனும் நிரூபித்துவிட்டனர். தங்கள் யுக்திகளால் புள்ளிப் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதை மெர்சிடீஸ் நிரூபித்துவிட்டது. ரெட்புல் தங்கள் கார்களில் இருக்கும் சிறு பிரச்னைகளைச் சரிசெய்து செர்ஜியோ பெரஸைக் கோதாவுக்குள் இறக்கிவிடுவது மட்டும்தான் இன்னும் பாக்கி. ஒரு மகத்தான ரேஸிங் சீஸன் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது!

மீண்டும் ஒரு ஷூமேக்கர்!

கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கர் இந்த சீஸன் ஃபார்முலா-1 பந்தயத்தில் அறிமுகமாகியிருக்கிறார். ஹாஸ் அணிக்காகப் பங்கேற்றிருக்கும் மிக் ஷூமேக்கர், இரண்டு ரேஸ்களிலும் 16-வது இடம் பிடித்தார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism