கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

2022-ல் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள்!

எலெக்ட்ரிக் கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எலெக்ட்ரிக் கார்கள்

அடுத்த ஆண்டு என்னென்ன எலெக்ட்ரிக் கார்கள் வருகின்றன? எலெக்ட்ரிக் கார் வாங்கப் போகிறவர்களுக்கான செக் லிஸ்ட்!

தற்போது மார்க்கெட்டில் சிறந்த கார்களாக இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள்தான் என்றாலும், இனி வரும் காலங்களில் பெட்ரோல் டீசலில் இருந்து தயாரிப்பாளர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி - கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்குக் குடிபெயரத் தொடங்குவார்கள். குறைந்த விலையில் அதிக ரேஞ்ச் கொண்ட கார்களை உற்பத்தி செய்வதில் இருக்கும் சவாலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதற்கான கட்டுமானக் குறைபாடும் - குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் வெளியாதற்குத் தடையாக இருக்கின்றன. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன், சர்வீஸ் பாய்ன்ட் என இந்தியாவில் இப்போதுதான் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இனி வரும் ஆண்டுகளில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் கார் வெளியீடுகளை இந்தியாவில் பார்க்க முடியும். அதற்கு ஒரு முன்னோட்டமாக, இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியல் இதோ!

ஆடி Q4 e-tron
ஆடி Q4 e-tron

ஆடி Q4 e-tron

வெளியீடு: 2022-ன் பிற்பாதியில்

ரேஞ்ச்: 351 - 490 கிமீ (ஆடி குறிப்பிட்டுள்ளதன்படி)

உத்தேச விலை: 75 லட்சம் ரூபாய்

இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஆடியின் நான்காவது எலெக்ட்ரிக் கார், ஆடி Q4 e-tron. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாண்டர்டான எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்பேக் என இரண்டு பாடி ஸ்டைல்களில் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது இந்த ஆடி Q4. இந்தக் காரானது ஆடியின் தாய் நிறுவனமான போக்ஸ்வாகனின் MEB ப்ளாட்ஃபார்மில் உருவாகிறது. இதே ப்ளாட்ஃபார்மில்தான் ஸ்கோடாவின் என்யாக் மற்றும் போக்ஸ்வாகனின் ID4 மாடலும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி Q3 மற்றும் Q5 இரண்டுக்கும் இடையில் சரியான இடைவெளியில் அமர்ந்து வால்வோ XC40 ரீசார்ஜ் மாடலுக்குப் போட்டியாக இந்தியாவில் களமிறங்கவுள்ளது ஆடி Q4. மற்ற e-tron மாடல்களைப்போலவே இந்த Q4-ன் உட்பக்க டிசைனும் இருக்கும் எனத் தெரிகிறது. எனினும், இந்த Q4-ல் கூடுதலாக சில வசதிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Q4-ன் இரண்டு பாடி ஸ்டைல் மாடல்களும் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டு வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் 170hp-யில் இருந்து மாடலுக்கு ஏற்றவாறு 299hp வரை பவரைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

ஹூண்டாய் கோனா
ஹூண்டாய் கோனா

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் ஃபேஸ்லிஃப்ட்:

வெளியீடு: 2022 பாதியில்

ரேஞ்ச்: 304 - 483 கிமீ

உத்தேச விலை: 25 லட்சம் ரூபாய்

இந்தியாவில் வெளியான ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் மாடலான கோனா எலெக்ட்ரிக்கின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. சர்வதேச சந்தையில் 2020 நவம்பர் மாதமே இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுகமாகிவிட்டாலும், இந்தியாவுக்கு இந்த ஆண்டுதான் வருகிறது. வெளிப்புறத்தில் மட்டும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களைப் பெற்றிருக்கிறது கோனா எலெக்ட்ரிக். முன்பக்கம் கிரில்கள் இன்றி மினிமல் லுக்குடன் இருக்கிறது கோனா எலெக்ட்ரிக். மேலும், மறுவடிவம் செய்யப்பட்ட பம்பர்கள் மற்றும் எல்இடி விளக்குகளைப் பெறுகிறது ஃபேஸ்லிஃப்டட் கோனா. பின்பக்கமும் புதிய பம்பருடன் வருகிறது.

உட்பக்க டிசைனில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சில புதிய வசதிகளைப் பெற்றிருக்கிறது கோனா ஃபேஸ்லிஃப்ட். பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டம், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கனெக்டட் கார் டெக் என சில புதிய வசதிகளுடன் வெளியாகவிருக்கிறது புதிய கோனா. மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. அதே, 39.2kWh பேட்டரியுடன், 136hp மோட்டாருடனும்தான் வெளியாகவிருக்கிறது. ஆனால் சர்வதேச சந்தையில் கோனாவின் ஹை-எண்டு மாடல் ஒன்றும் விற்பனையில் இருக்கிறது. 64kWh பேட்டரி, 204hp பவருடன் 483 கிமீ ரேஞ்ச் கொண்டிருக்கும் அந்த ஹை-எண்டு மாடல்.அடுத்த வருடம் இந்த மாடலையும் சேர்த்து இந்தியாவுக்கு ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாடலையும் CKD முறையில் இந்தியாவில் அசெம்பிள் மட்டும் செய்து விற்பனை செய்யவிருக்கிறது ஹூண்டாய். இதன் போட்டியாளராக MG ZS EV மாடல் இருக்கிறது.

கியா EV6
கியா EV6

கியா EV6

வெளியீடு: 2022 பிற்பாதியில்

ரேஞ்ச்: 400 - 510 கிமீ

உத்தேச விலை: 60 லட்சம் ரூபாய்

EV6 வெளியீட்டுடன் இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் வாகன பயணத்தைத் தொடங்கவிருக்கிறது கியா. ஹூண்டாயின் Ioniq 5 உருவாகி வரும் அதே E-GMP ப்ளாட்ஃபார்மில்தான் EV6-யும் உருவாக்கியிருக்கிறது கியா. மேலும், இந்தியாவில் முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டே விற்பனை செய்யப்படவிருக்கிறது கியா EV6. 58kWh மற்றும் 77.4kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் என இரண்டு டிரைவ் ஆப்ஷன்களுடனும் இருக்கிறது EV6. வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் பேட்டரிக்கு ஏற்ப பவரும் 170hp-யில் இருந்து 325hp வரை வேறுபடுகின்றன. மேலும் அதிகபட்சமாக 510 கிமீ ரேஞ்ச் வரை கொடுக்கிறது இந்த EV6 மாடல். ஹூண்டாயின் Ioniq 6-ல் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற மோட்டார்தான் EV6-லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. EV6-ன் ஹை-எண்டான GT மாடல் ஒன்றும் இருக்கிறது. இதன் இரண்டு மோட்டார்களும் 585hp பவரையும், 740Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனுடனும் இருக்கின்றன. மேலும், இதன் அதிகபட்ச வேகம் 260 கிமீ-யாம். இந்தியாவிற்கு இதில் எந்த வெர்ஷனை கியா கொண்டு வரவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பென்ஸ் EQS
பென்ஸ் EQS

மெர்சிடீஸ் பென்ஸ் EQS

வெளியீடு: 2022 பாதியில்

ரேஞ்ச்: 770 கிமீ

உத்தேச விலை: 2.5 கோடி ரூபாய்

மெர்சிடீஸ் S க்ளாஸின் எலெக்ட்ரிக் பவர்டு கார் என EQS-ஐ வைத்துக் கொள்ளலாம். இதனை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்தியேகமாகத் தயாரித்திருக்கும் EVA (Electric Vehicle Architecture) ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் கார் இந்த EQS.

ஃபேஸ்லிஃப்டட் டெஸ்லா மாடல் S காரை விட இந்த EQS சிறந்த ஏரோடைனமிக்ஸ் திறனைக் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறது மெர்சிடீஸ். S கிளாஸில் உள்ள வசதிகளோடு, S கிளாஸைவிட கூடுதல் இடவசதியோடே இருக்கிறது இந்த எலெக்ட்ரிக் EQS. ஒரே ஒரு மோட்டாருடன் 334hp பவர் மற்றும் 458Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடன் EQS 450, இரண்டு மோட்டார்களுடன் மொத்தமாக 523hp பவர் மற்றும் 856Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனுடன் EQS 580 என இரண்டு வேரியன்ட்கள் இருக்கின்றன. இரண்டுமே 107.8kWh பேட்டரியையே பயன்படுத்துகின்றன. இவை இரண்டின் அதிகபட்ச வேகமுமே 210 கிமீ தான். சிறிய பேட்டரி கொண்ட ஒரு வேரியன்ட்டும், அதிக பவர் கொண்ட மற்றொரு வேரியன்ட்டையும் வெளியிடும் திட்டமும் மெர்சிடீஸிடம் உள்ளதாம். அடுத்த ஆண்டு இந்தியாவில் எந்ததெந்த வசதிகளுடன் வெளியாகவிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

வால்வோ XC40 ரீசார்ஜ்
வால்வோ XC40 ரீசார்ஜ்

வால்வோ XC40 ரீசார்ஜ்

வெளியீடு: 2022 தொடக்கத்தில்

ரேஞ்ச்: 400 கிமீ-க்கு மேல்

உத்தேச விலை: 70 லட்சம் ரூபாய்

வால்வோவின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காராக இந்தியாவில் வெளியாகவிருக்கிறது XC40 ரீசார்ஜ். XC40 பெட்ரோல் டீசல் வேரியன்ட் உருவான அதே CMA (Compact Modular Architecture) ப்ளாட்ஃபார்மில்தான் இந்த XC40 ரீசார்ஜும் உருவாகியிருக்கிறது என்பதால், தோற்றத்தில் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. எலெக்ட்ரிக் வேரியன்ட்டில் முன்பக்க கிரில் காணமால் போயிருக்கிறது, புதிதாக ரீசார்ஜ் என்ற அடைமொழியைப் பெற்றிருக்கிறது - அவ்வளவுதான். உட்பக்கமும் புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிய இன்ஃபோடெய்ன்மன்ட் சிஸ்டத்தை மட்டும் பெறுகிறது எலெக்ட்ரிக் XC40. 78kWh பேட்டரி, இரண்டு 204hp மோட்டார்களுடன் மொத்தமாக 408hp பவர் மற்றும் 660Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்கிறது XC40 ரீசார்ஜ். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் திட்டத்துடன் இருக்கிறது வால்வோ. அதில் முதல் காராக இந்த XC40 ரீசார்ஜ் இருக்கிறது. வால்வோவில் அடுத்து வெளியாகும் எலெக்ட்ரிக் கார்கள் அனைத்தும் ‘ரீசார்ஜ்’ என்ற அடைமொழியுடனே வெளியாகும் எனத் தெரிவித்திருக்கிறது வால்வோ. இந்த எலெக்ட்ரிக் XC40-யை 150kW DC ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்தால், 40 நிமிடத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடுமாம். இதன் விலையை முடிந்த அளவு குறைப்பதற்காகப் பாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய வால்வோ திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

போர்ஷே டேக்கேன்
போர்ஷே டேக்கேன்
பிஎம்டபிள்யூ iX
பிஎம்டபிள்யூ iX

போர்ஷே டேக்கேன் மற்றும் பிஎம்டபிள்யூ iX

இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போர்ஷே டேக்கேன் (Taycan) மற்றும் BMW iX மாடல்கள் இந்த ஆண்டே வெளியாகிவிட்டன. கடந்த நவம்பர் மாதம் 1.50 கோடி ரூபாயில் தொடங்கி, 2.31 கோடி ரூபாயிலான விலையில் மொத்தம் ஏழு டேக்கேன் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது போர்ஷே. இதில் நான்கு செடான் வகை மாடல்களும், மூன்று எஸ்டேட் வகை க்ராஸ் டூரிஸ்மோ மாடல்களும் அடக்கம். செடான் மற்றும் எஸ்டேட் என்றாலும், சூப்பர் கார்ளுக்கு இணையான மோட்டார்களைப் பெற்றிருக்கின்றன இந்தக் கார்கள். இரண்டு பாடி ஸ்டைல்களிலுமே டாப் எண்டான டர்போ S மாடல் 761hp பவர் மற்றும் 1050Nm டார்க்கை உற்பத்தி செய்யும் மோட்டாரைப் பெற்றிருக்கின்றன. 100 கிமீ வேகத்தை 2.8 நொடிகளில் செடான் மாடலும், 2.9 நொடிகளில் க்ராஸ் டுரிஸ்மோ மாடலும் எட்டுகிறது என்பது சிறப்பு.

அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த மற்றொரு மாடலான BMW iX, கடந்த மாதமே வெளியாகியிருக்கிறது. BMW-வின் இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் கார், இந்தியாவில் BMW-வின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காராக வெளியாகியிருக்கிறது iX. இதனை BMW-வின் ப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் கார் எனக் கூறலாம். ஐாகுவார் i-பேஸ் மற்றும் ஆடி e-tron-க்குப் போட்டியாக இதனைக் களமிறக்கியிருக்கிறது BMW. 1.16 கோடி ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது BMW iX.