கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

2022-ல் வெளியாகவிருக்கும் செடான்கள்!

2022 கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2022 கார்கள்

புது கார் வாங்கப் போகிறவர்களுக்கான செக்லிஸ்ட்: 2022 கார்கள்

இந்திய கார் மார்க்கெட், எஸ்யூவி அலையில் மிதந்து கொண்டிருந்தாலும், `நெடுஞ்சாலைகளில் ஜிவ்வெனப் பறக்க செடான்தான் வேணும்’ எனும் வாடிக்கையாளர்களால் செடானுக்கும் ஒரு மாஸ் மார்க்கெட் அலை இருக்கத்தான் செய்கிறது. அதாவது, இந்தியாவில் செடான் ரசிகர் பட்டாளத்துக்கும் குறைவில்லை. வரும் ஆண்டு வெளியாகவிருக்கும் செடான் லைன்-அப் என்ன என்பதைப் பார்த்துவிடலாம்.

ஹோண்டா சிட்டி ஹைபிரிட்
ஹோண்டா சிட்டி ஹைபிரிட்

ஹோண்டா சிட்டி ஹைபிரிட்

(Honda City Hybrid)

வெளியீடு: பிப்ரவரி 2022

இன்ஜின்: 1.5 லிட்டர் பெட்ரோல் (ஹைபிரிட்)

உத்தேச விலை : 15 - 18 லட்சம் ரூபாய்

செடான் பிரியர்களின் ஆஸ்தான செடானான ஹோண்டா சிட்டியின் ஹைபிரிட் வெர்ஷனை அடுத்த ஆண்டு வெளியிடும் முடிவில் இருக்கிறது ஹோண்டா. மிகவும் ஆற்றலுடைய ,இந்தியாவின் சிறப்பான ஹைபிரிட் காராக இந்த ஹோண்டா சிட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வசதிகளும் இந்த வாதத்திற்கு வலுச்சேர்க்கின்றன. இந்த ஹோண்டாவில் 98bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 109bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டரும் உண்டு. இதனை முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாகவும் பயன்படுத்தலாம், முழுமையான பெட்ரோல் வாகனமாகவும் பயன்படுத்தலாம் - அல்லது இரண்டையுமேகூடப் பயன்படுத்தலாம் என்பது தான் தனிச்சிறப்பு. கேட்கும்போதே மிகவும் ப்ராக்டிக்கலாக இருக்கிறது இந்த ஹோண்டா சிட்டி ஹைபிரிட். மேலும் இது 20 கிமீ மைலேஜ் மைலேஜும் கொடுக்குமாம். என்ன, இதன் விலைதான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கலாம்.

மெர்சிடீஸ் பென்ஸ் C-க்ளாஸ்
மெர்சிடீஸ் பென்ஸ் C-க்ளாஸ்

மெர்சிடீஸ் பென்ஸ் C-க்ளாஸ்

(Mercedes-Benz C-Class)

வெளியீடு : 2022 பிற்பாதியில்

இன்ஜின் : 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல்

உத்தேச விலை : 45 - 55 லட்சம் ரூபாய்

ஆறாம் தலைமுறை C-க்ளாஸ் மாடலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது மெர்சிடீஸ் பென்ஸ். புதிய E-க்ளாஸ் மற்றும் S-க்ளாஸைப் போலவே டிசைன் லாங்குவேஜை புதிய C-க்ளாஸ் மாடலிலும் கொண்டு வந்திருக்கிறது மெர்சிடீஸ். மேலும், முந்தைய C-க்ளாஸை விட 25மிமீ நீளமான வீல்பேஸைப் பெற்றிருக்கிறது புதிய C-க்ளாஸ். இதனால், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் இடவசதி அதிகரிக்கும். உள்பக்கமும் புதிய வசதிகள் பலவற்றைப் பெற்றிருக்கிறது இந்தப் புதிய C-க்ளாஸ். 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் ஸடாண்டர்டாகவே கொடுக்கப்படுகிறது. வேண்டும் என்றால் 11.9 இன்ச் டச்ஸ்க்ரீனையும் பொருத்திக் கொள்ளலாம். HD LCD இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேவும் டிரைவர் பார்வைக்கு உண்டு. க்ளைமேட் கண்ட்ரோல் கன்ட்ரோல்களும் டச்ஸ்கிரீன் மூலம்தான்.

இன்ஜின் ஆப்ஷன்களாக 48V Belt-Integrated Starter Generator-உடன் (BISG) கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் இந்த C-க்ளாஸ் கிடைக்கும். இந்த BISG ஆனது, டீசெலரேஷனில் இருந்து 20bhp பவரை எக்ஸ்ட்ராவாக உற்பத்தி செய்து கொடுக்குமாம். இந்த C -க்ளாஸை BMW 3 சீரிஸ், ஆடி A4 மற்றும் ஜாகுவார் XE ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்தியாவில் களமிறக்குகிறது மெர்சிடீஸ்.


 (Mercedes-Maybach S-Class)
(Mercedes-Maybach S-Class)

மெர்சிடீஸ் மேபேக் S-கிளாஸ்

(Mercedes-Maybach S-Class)

வெளியீடு: 2022 தொடக்கத்தில்

இன்ஜின் : 4.0 லிட்டர் பெட்ரோல், 6.0 லிட்டர் பெட்ரோல்

உத்தேச விலை: 2 - 2.8 கோடி ரூபாய்

S-க்ளாஸின் டாப் வெர்ஷனான மேபேக் S-க்ளாஸை இந்தியாவுக்குக் கொண்டு வரவிருக்கிறது மெர்சிடீஸ். இந்த அர்பன்-லக்ஸூரி காரானது சொகுசுத்தன்மையையும், நல்ல இடவசதியையுமே பிரதானமாக வைத்து உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 5,469மிமீ. மெர்சிடீஸின் நீளமான வீல்பேஸ் கொண்ட ஸ்டாண்டர்டான S-க்ளாஸை விட 180மிமீ அதிக நீளமான வீல்பேஸைக் கொண்டிருக்கிறது மேபேக் S-க்ளாஸ். இதனால் பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு இடவசதியில் கொஞ்சம்கூடக் குறை இருக்காது. இன்டகிரேட்டட் மஸாஜர்களுடன் கூடிய பின் இருக்கைகள் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு டேப்லெட் போல இரண்டு என்டர்டெய்ன்மென்ட் ஸ்கிரீன்கள், பின் பக்கக் கதவுகளைத் திறக்க மற்றும் மூட கைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை, பவர்டு ரியர் டோர்கள்தான். இந்த மேபேக்கில் ரோடு நாய்ஸ் காம்பன்சேஷன் சிஸ்டம் கூட இருக்கிறது (ஹெட்போன்களில் நாய்ஸ்-கேன்ஸல் வசதி எப்படிச் செயல்படுகிறதோ, அதேபோலச் செயல்படுமாம்!)

இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த மேபேக் S-க்ளாஸ், இந்தியாவிற்கு வரவிருக்கிறது. மேபாக் S-க்ளாஸ் S 580 வேரியன்ட்டானது 500hp பவரை வெளிப்படுத்தும். 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இந்த வேரியன்ட்டை இந்தியாவில் அசெம்பிள் மட்டும் செய்து விற்பனை செய்யவிருக்கிறது மெர்சிடீஸ். மற்றொரு S 680 வேரியன்ட் ஒன்றும் இருக்கிறது. இந்த வேரியன்ட்டானது 612hp பவரை வெளிப்படுத்தக் கூடிய, 6.0 லிட்டர் V12 இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இந்த மாடலை CBU முறையில் முழுமையாக இறக்குமதி செய்து விற்பனை செய்யவிருக்கிறது மெர்சிடீஸ்.

ஸ்கோடா ஸ்லாவியா
ஸ்கோடா ஸ்லாவியா

ஸ்கோடா ஸ்லாவியா

(Skoda Slavia)

வெளியீடு: 2022 தொடக்கத்தில்

இன்ஜின்: 1.0 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல்

உத்தேச விலை: 12 - 15 லட்சம் ரூபாய்

ரேபிட்டுக்கு மாற்றாக இந்தியாவில் களமிறங்குகிறது ஸ்கோடாவின் ஸ்லாவியா. ஃபோக்ஸ்வாகன் இந்தியாவிற்காக உருவாக்கி வைத்திருக்கும் MQB-A0-IN ப்ளாட்ஃபார்மில் தயராயாகியிருக்கும் ஸ்கோடாவின் இரண்டாவது மாடல் ஸ்லாவியா. ரேபிட்டுக்கு மாற்றாகக் களமிறங்கினாலும், ரேபிட்டை விட பெரிய வீல்பேஸைக் கொண்டிருக்கிறது ஸ்லாவியா. இன்னும் சொல்லப்போனால் செடான் செக்மென்ட்டிலேயே சிறப்பான வீல்பேஸ் கொண்ட கார்களுள் ஒன்றாக ஸ்லாவியாவைக் கூறலாம். இது மட்டுமில்லாமல் உள்பக்கம் வசதிகளையும் ஸ்லாவியாவுக்குத் தாராளமாகவே வழங்கியிருக்கிறது ஸ்கோடா. வயர்லெஸ் சார்ஜிங், மை ஸ்கோடா கனெக்டட் கார் டெக், புதிய இன்ஃபோடெய்ன்மென்ட் ஸ்கிரீன், வென்டிலேட்டட் சீட்கள், டிஜிட்டல் இன்ட்ரூமென்ட் கிளஸ்ட்ர, 6 ஏர்பேக்குகள் மற்றும் தரமான ஆடியோ சிஸ்டம் என நிறைவான வசதிகளைக் கொண்டிருக்கிறது ஸ்லாவியா.

சில மாதங்களுக்கு முன் புதிதாக வெளியான குஷாக்கைப் போலவே இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியாகவிருக்கிறது ஸ்கோடா. 115hp பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்ட ஆப்ஷன் ஒன்றும், 150hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஆப்ஷன் ஒன்றும் இருக்கிறது. இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட் உண்டு. அதோடு, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன் 1.0 லிட்டரிலும், 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன் 1.5 லிட்டரிலும் உண்டு. கடந்த நவம்பர் மாதமே இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்திவிட்டது ஸ்கோடா. அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த ஸ்லாவியாவை நாம் எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா கேம்ரி ஃபேஸ்லிஃப்ட்
டொயோட்டா கேம்ரி ஃபேஸ்லிஃப்ட்

டொயோட்டா கேம்ரி ஃபேஸ்லிஃப்ட்

Toyota Camry Facelift

வெளியீடு: 2022 பாதியில்

இன்ஜின்: 2.5 லிட்டர் பெட்ரோல் (ஹைபிரிட்)

உத்தேச விலை: 35 - 40 லட்சம் ரூபாய்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஃபேஸ்லிஃப்டட் டொயோட்டா கேம்ரியை உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது டொயோட்டா. ஆனால், இந்தியாவில் இதுவரை அந்த அப்டேட் செய்யப்பட்ட டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடல் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு கேம்ரியின் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை நாம் எதிர்பார்க்கலாம். ஃபேஸ்லிஃப்ட் என்பதால் காஸ்மெட்டிக் மாற்றங்களில் வெறித்தனமான மாற்றங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. புதிய முன்பக்க பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் மறுவடிவம் செய்யப்பட்ட டெய்ல் லேம்ப்கள் என்று இந்த கேம்ரி, சில ப்ரீமியம் சொகுசு செடான்களுக்கே சவால் விடப் போகிறது. பேஸ்லிஃப்டட் கேம்ரி ஹைபிரிட். உள்பக்கம் 9.0 இன்ச் டச்ஸ்க்ரீனும், அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெய்ன்மென்ட் சாஃப்ட்வேரையும் பெற்றிருக்கிறது கேம்ரி.

மற்றபடி மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் கேம்ரி ஃபேஸ்லிஃப்ட்டில் இல்லை. அதே 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஒரே ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் சேர்த்து மொத்தமாக 218hp பவரை உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்கிறது கேம்ரி. CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வந்தால், DCT-யை எதிர்பார்க்கிறவர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கும்! விலையும் கொஞ்சம் அதிகமாகலாம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ்
ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ்

ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ்

(Volkswagen Virtus)

வெளியீடு: ஏப்ரல் 2022

இன்ஜின்: 1.0 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல்

விலை: 12 - 15 லட்சம் ரூபாய்

ஸ்கோடா ஸ்லாவியாவின் ஃபோக்ஸ்வாகன் வெர்ஷன்தான் இந்த வெர்ட்டஸ். தன்னுடைய வென்ட்டோ மாடலுக்கு மாற்றாக இந்த வெர்ட்டஸைக் களமிறக்குகிறுது ஃபோக்ஸ்வாகன். வென்ட்டோவைவிட கொஞ்சம் பெரிய காராக வரும் வெர்ட்டஸும், MQB-A0-IN ப்ளாட்ஃபார்மில்தான் உருவாகியிருக்கிறது. போக்ஸ்வாகனின் டைகூன் எஸ்யூவியில் இருக்கும் அதே வசதிகளை இந்த வெர்ட்டஸிலும் கொடுத்திருக்கிறது. 10 இன்ச் டச்ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வென்ட்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது வெர்ட்டஸ்.

ஸ்லாவியா மற்றும் டைகூனைப்போலவே 115hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் மற்றும் 150hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களைப் பெற்றிருக்கிறது வெர்ட்டஸ். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு. கூடுதலாக 1.0 லிட்டரில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்கும், 1.5 லிட்டரில் 7 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகமும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் இதன் வெளியீடும் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸூகி சியாஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறது வெர்ட்டஸ்.