கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

2023-ன் புது கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2023-ன் புது கார்கள்

2023-ன் புது கார்கள் லிஸ்ட்

டிசம்பர் மாசம் கொஞ்சம் குழப்பமான மாசம். ‘கார் இப்போ வாங்கலாமா… அடுத்த மாசம் பார்த்துக்கலாமா’ - இப்படி ஒரு குழப்பம் எப்படிப்பட்ட லெஜெண்ட்களாக இருந்தாலும் ஏற்படும். அப்படிப்பட்ட லெஜெண்ட்கள்கூட, புத்தாண்டு பிறக்கும்போது… அதிலும் முக்கியமாக இந்த 2023 பிறக்கும்போது கொஞ்சம் காத்திருந்து கார் வாங்குவதே நல்லது. காரணம், கன்னாபின்னாவென கார்கள் ரிலீஸாக இருக்கின்றன இந்த 2023–ல். இந்த ஆண்டு எஸ்யூவிகளுக்கான ஆண்டு போல. ஏகப்பட்ட எஸ்யூவிகள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கின்றன. ‘பத்தாயிரம், இருபதாயிரம் தள்ளுபடி கிடைக்குதே’னு இந்த அற்புதமான கார்களைத் தள்ளுபடி பண்ணிடாதீங்க! வாங்க.. ட்ரெய்லருக்குள் போகலாம்! இது ஜஸ்ட் ட்ரெய்லர்தான் என்பதால்… சுருக்கமாகப் பார்க்கலாம்! விரிவான விஷயங்கள் வரும் மாதங்களில்!

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

ஹேட்ச்பேக்

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

ரிலீஸ்: 2023 கடைசியில் விலை: சுமார் 7 – 10 லட்சம்

விற்பனையில் எப்போதுமே நம்பர் ஒன் ஆக இருக்கும் ஸ்விஃப்ட், இந்த ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், புது ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டுக்காகவே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது மாருதி என்று தகவல். இப்போதைக்கு ஐரோப்பாவில் இதன் டெஸ்ட் டிரைவ் கொண்டிருக்கிறதாம். பலவித டிசைன் மாற்றங்களுடன், டர்ன்–பை–டர்ன் நேவிகேஷன், ஹெட்அப் டிஸ்ப்ளே, பெரிய டச் ஸ்க்ரீன், கனெக்டட் தொழில்நுட்பம் என்று காலத்துக்குத் தேவையான ஏகப்பட்ட வசதிளுடன், இன்ஜின் மாற்றங்களுடன் வரலாம் ஸ்விஃப்ட். அட, மாருதியின் ஹைபிரிட் இன்ஜின் இந்த ஸ்விஃப்ட்டிலும் உண்டாம். அதுவும் ஸ்ட்ராங் ஹைபிரிட்டில் வரலாம் என்கிறார்கள். இந்த ஆண்டு மத்தியில் ஐரோப்பாவிலும், இந்த ஆண்டு இறுதியில் நம் நாட்டுக்கும் ஸ்விஃப்ட் லாஞ்ச் ஆகலாம்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

மாருதி சுஸூகி பெலினோ க்ராஸ்

ரிலீஸ்: ஏப்ரல் விலை: சுமார் 8.5 – 12 லட்சம்

இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரையும் கவர இருப்பது இந்த மாருதி பெலினோவாகத்தான் இருக்கும். மேலும், 2023–ன் முதல் மாருதி ரிலீஸும் இதுவாகத்தான் இருக்கலாம். ஒன்றுமில்லை ஜென்டில்மேன்… இப்போது ஓடிக் கொண்டிருக்கும் பெலினோ கொஞ்சம் பல்க்கியாக.. கும்மென்று இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கப் போகிறது இந்தப் புது பெலினோ. கொஞ்சம் கூபே ஸ்டைல் ரூஃப் லைனுடன், செம ஸ்போர்ட்டியாக வரப் போகிறது பெலினோ. முன் பக்கம் பார்த்தால் கிராண்ட் விட்டாராவை நினைவுபடுத்தலாம். ஆம், விட்டாராவின் கிரில்தான் இதில் இருக்கப் போகிறது. ஆனால், இது பிரெஸ்ஸாவைவிடச் சின்ன சைஸில் இருக்கலாம். இதை எஸ்யூவியாகவும் எடுத்துக் கொள்ளலாம்; ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். இதில் லேட்டஸ்ட் டிரைவிங் நார்ம்ஸுக்கு ஏற்ப 1.0லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் வரப் போகிறது. இது பெலினோ RS-ல் இருக்கும் அதே டர்போதான். இது மாருதியின் ஃபேவரைட்டான மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வரப் போகிறது.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!
Gaurav Yadav

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

ரிலீஸ்: 2023 மத்தியில் விலை: சுமார் 6.5 – 9 லட்சம்

ஆரா மாதிரியே இந்தக் குட்டி ஹேட்ச்பேக்கும் ஃபேஸ்லிஃப்ட் ஆகக் காத்திருக்கிறது. இப்போது விற்பனையில் இருக்கும் அதே 1.2லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினுடன்தான் இது வரவிருக்கிறது. அதே 83bhp பவரும், 114Nm டார்க்கும் தரும் இது. ஆம், டர்போ பெட்ரோல் இன்ஜினும் உண்டு. இது வெறித்தனமான 100bhp பவரையும், 172Nm டார்க்கையும் தரக் காத்திருக்கிறது. ஹூண்டாய் ஸ்போர்ட்டி டிசைன் லாங்வேஜின்படி இது ரெடியாக இருக்கிறது. பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்தான், இந்த கிராண்ட் ஐ10 நியோஸுக்கு அழகாக இருக்கும். அது இப்போது காரின் பம்பர் முனைகளில் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. அலாய் வீல்களும் புதுசாய் மாறலாம். முன் பக்க பம்ப்பரில் பனி விளக்குகளுக்கான ஹவுஸிங் வர இருக்கிறது. லெதர் சீட் அப்ஹோல்சரி மற்றும் இன்டீரியர் தீமும் புதுசு. இது லாஞ்ச் ஆனால், ஸ்விஃப்ட்டுக்கு இவர் மட்டும்தான் நேரடிப் போட்டியாளராக இருப்பார்.

செடான்

ஹூண்டாய் வெர்னா

ரிலீஸ்: மே 2023 விலை: சுமார் 12–16 லட்சம்

வெர்னாவும் ஃபேஸ்லிஃப்ட் ஆக வேண்டிய நேரம். ரொம்ப நாட்களாக வெர்னா வெறுமனே இருக்கிறது. அதனால், அடுத்த வெர்னா வரவிருக்கிறது. இந்த அடுத்த வெர்னாவின் குறியீட்டுப் பெயராக BN7 என்று பெயர் வைத்திருக்கிறது ஹூண்டாய். இதுவும் ஹூண்டாயின் Sensuous Sportiness டிசைன் லாங்வேஜ் தீமின்படி ரெடியாக இருக்கிறது. இதில் ஸ்ப்ளிட் ஹெட்லாம்ப்ஸ்தான் சரியான ஹைலைட்டாக இருக்கலாம். RDE (Real Driving Emissions) நார்ம்ஸின்படி இந்த வெர்னாவில் அநேகமாக டீசல் இருக்காது. இப்போது இருக்கும் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும் வரவிருக்கிறது. கூடவே மைல்டு ஹைபிரிட் இன்ஜின் செட்அப் மற்றும் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்தையும் வெர்னாவில் பொருத்த இருக்கிறது ஹூண்டாய். டர்போ இல்லாமல் வெர்னா எப்படி? க்ரெட்டா, செல்ட்டோஸில் இருக்கும் அதே 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் வெர்னாவில் ஆப்ஷனலாக உண்டு. வசதிகளில்தான் வேற லெவல் செய்கிறதே ஹூண்டாய். இதில் ADAS டெக்னாலஜியும் வரவிருக்கிறது. பெரிய ப்ரீமியம் காரான டூஸானில் இருக்கும் அடாஸ் லெவலை இதில் பொருத்த இருக்கிறார்கள். இப்போது இருக்கும் வெர்னாவில் இருந்த பின் இடவசதிக் குறைபாடு இந்தப் புது வெர்னாவில் இருக்காது. பெரிதாக வரவிருக்கிறது புது வெர்னா.

ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் வெர்னா
Photo: Santhi

ஹூண்டாய் ஆரா

ரிலீஸ்: 2023 கடைசியில் விலை: 6.5 முதல் 9.5 லட்சம் வரை

எக்ஸென்ட்டை இன்னும் கொஞ்சம் ப்ரீமியமாக்கி ஆரா காரைக் கொண்டு வந்தது ஹூண்டாய். இப்போது ஆரா, இன்னும் செதுக்கப்பட இருக்கிறது இந்த ஆண்டுக்காக. லேட்டஸ்ட்டாகத்தான் இதன் டீசல் மாடலைக் காலி செய்தார்கள். அதனால், இந்த ஆராவில் டீசல் வருமா என்றால், இருக்காது. பெட்ரோல், டர்போ பெட்ரோல், CNG என 3 டைப்களில் ஆரா வரலாம். கிராண்ட் ஐ10 –யை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் புது ஆராவும் டிசைனாகி வரவிருக்கிறது. டிசைனில் Sensuous Sportiness தீம்படி இன்னும் இதை ஸ்போர்ட்டியாக்க இருக்கிறதாம் ஹூண்டாய்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

ரிலீஸ்: பிப்ரவரி 2023 விலை: 1.5 – 1.7 கோடி ரூபாய்

இப்போதுள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரைப் பார்த்தால் ஒரு மரியாதை கலந்த உணர்வு வருவது நிஜம். வரப்போகும் புது 7 சீரிஸைப் பார்த்தால், மரியாதையுடன் ஒரு ஸ்போர்ட்டினெஸ் ஃபீலும் தானாக ஒட்டிக் கொள்ளும். செம போல்டான எக்ஸ்டீரியர் ஸ்டைலிங்கில் வருகிறது 7 சீரிஸ். வழக்கமாக இருக்கும் டபுள் பேரல் ஹெட்லாம்ப்ஸ் இந்தப் புது பிஎம்டபிள்யூ 7 சீரிஸில் இருக்காது. இப்போதெல்லாம் சின்ன வாண்டு நிறுவனங்களே ஸ்ப்ளிட் ஹெட்லாம்ப் ஸ்டைலுக்கு மாறி விட்ட நிலையில், இதிலும் ஸ்டைலான, வீரியமான ஸ்ப்ளிட் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட்ஸ் இருக்கும். வழக்கமாக கிட்னி கிரில் இருக்கும்தானே; இதில் மிகப் பெரிய கறுப்பு நிற கிட்னி கிரில் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது.

டேஷ்போர்டு முழுக்க டச் ஸ்க்ரீன் இருப்பதை பென்ஸ் ஃபாலோ செய்கிறது. பிஎம்டபிள்யூவும் அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறது. 14.9 இன்ச் மற்றும் 12.3 இன்ச் டச் ஸ்க்ரீனுக்குக் கீழேதான் காரின் கன்சோலே பயணிக்கிறது. பின் பக்க ஓனர்களுக்கு… அதாவது பயணிகளுக்கு 31.3 இன்ச், 8K சினிமா ஸ்க்ரீன் ஆப்ஷனை வழங்குகிறது பிஎம்டபிள்யூ. இதை ரூஃபில் இருந்து மடித்துக் கொள்ளும்படி வசதி இருக்கிறது. வீடியோ ஸ்ட்ரீமிங் சர்வீஸும் உண்டு. பின் பக்க இரண்டு பயணிகளுக்கும் இது தவிர, 5.5 இன்ச் டச் ஸ்க்ரீனில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மட்டுமில்லை; ஏசி, சீட்கள் போன்றவற்றையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் ஆப்ஷனும் கொடுக்கிறார்கள்.

இன்ஜினைப் பொருத்தவரை 299bhp பவர் தரும் 3.0லிட்டர் டீசல் (730d), 380bhp பவரைத் தரும் 3.0லிட்டர் பெட்ரோல் (740i), 543bhp பவர் தரும் 4.4லிட்டர் V8 பெட்ரோல் (M760i)... எம்மாடியோவ்! – இப்படி வெறித்தன ஆப்ஷன்களில் வருகிறது 7 சீரிஸ். எல்லாவற்றிலுமே மைல்டான 48V ஹைபிரிட் சிஸ்டம் உண்டு. சுத்தமான எலெக்ட்ரிக் வெர்ஷனான i7 காரையும் அப்படியே போகிற போக்கில் லாஞ்ச் செய்ய இருக்கிறது பிஎம்டபிள்யூ. மொத்தத்தில், வெறித்தனமான பெர்ஃபாமன்ஸ், உச்சகட்ட சொகுசு இவற்றுடன் 2023 பிப்ரவரி அல்லது மார்ச்சுக்குள் களமிறங்கலாம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 நடுவில் விலை: 45 – 50 லட்சம்

பென்ஸ் சும்மாவே இருக்காது. லேட்டஸ்ட்டாகத்தான் மைனராக ரெஃப்ரெஷ் ஆகி வந்தது பென்ஸ் ஏ க்ளாஸ். இப்போது மறுபடியும் ஃபேஸ்லிஃப்ட் வருகிறது ஏ க்ளாஸில். முன் பக்க பானெட், புத்தம் புதிய எல்இடி ஹெட்லைட்ஸ், புது எல்இடி டிஆர்எல்–கள்… அப்படியே பின் பக்கம் டெயில் லாம்ப்களில் சின்ன மாற்றம் என்று புது ஏ க்ளாஸைக் கொண்டு வருகிறது பென்ஸ். உள்பக்கம் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என்று கணிக்கப்படுகிறது. ஆனால், பென்ஸின் ஃபேவரைட்டான MBUX சிஸ்டம், லேட்டஸ்ட் அப்டேட்டில் வருகிறது இந்த ஏ க்ளாஸில். டீசல் இன்ஜினைப் பொருத்தவரையும் பெரிதாக மாற்றங்கள் இருக்காது. அதே 2.0லி டீசல் இருக்கும். ஆனால், பெட்ரோலைப் பொருத்தவரை அந்த 1.3 லிட்டரில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் வரப் போகிறது.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

வால்வோ S60 ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 நடுவில் விலை: சுமார் 50 – 55 லட்சம்

இந்த S60–யை மைல்டான அப்டேட் களுடன் இந்த ஆண்டுக்கான ஃபேஸ்லிஃப்ட்டாகக் கொண்டு வருகிறது வால்வோ. எக்ஸ்டீரியரைப் பொருத்தவரை – பம்பரில் உள்ள ஏர் இன்டேக், பின் பக்கம் ரியர் ஆப்ரான் – அதனுடன் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஸ்டைலான எக்ஸாஸ்ட் பைப்கள், புத்தம் புது அலாய் வீல்கள் என்று சின்ன மாற்றங்கள் கண்டு வருகிறது S60. உள்பக்கம் பெரிய மாற்றம் என்று பார்த்தால்… புத்தம் புதிய ஆண்ட்ராய்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் – அதாவது மற்ற வால்வோ லைன்–அப் கார்களில் உள்ள வசதி இதில் வருகிறது. இதில் கூகுள் மேப், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற ஆப்கள் உண்டு. உலகம் முழுதும் டீசலில் மைல்டு ஹைபிரிட்டைக் கொடுக்கும் வால்வோ, இந்தியாவைப் பொருத்தவரை பெட்ரோலில் மைல்டு ஹைபிரிட் பவர் ட்ரெயினைக் கொடுக்க இருக்கிறது. இதற்கு முன்பு ஃபேஸ்லிஃப்ட் ஆன வால்வோ S60–ல் 190bhp பவர் தரும் 2.0லி பெட்ரோல் இன்ஜின் இருந்தால்… இந்தப் புது S60 ஃபேஸ்லிஃப்ட்டில் XC40 காரில் இருக்கும் மைல்டு ஹைபிரிட் வெர்ஷன் பெட்ரோலைக் கொண்டு வருகிறது வால்வோ.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

எஸ்யூவி

சிட்ரன் C3 (7 சீட்டர்)

ரிலீஸ்: 2023 டிசம்பர் விலை: சுமார் 12 - 14 லட்சம்

சிட்ரனில் C5 எஸ்யூவியை வாங்க வேண்டும் என்றால், பெரிய தனவானாக இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டுதான் C3 எனும் ஹேட்ச்பேக்கை… க்ராஸ்ஓவரை… இல்லை எஸ்யூவியைக் கொண்டு வந்தது. இப்போது இந்த C3–யிலும் 7 சீட்டர் மாடலைக் கொண்டு வரத் திட்டம் தீட்டியிருக்கிறது சிட்ரன். இந்த மாடலின் டெஸ்ட் டிரைவ் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது இந்தியா முழுக்க. ஸ்பை ஷாட்டில் அடிபட்ட C3 காரைப் பார்க்கும்போது, விஷுவலாக C3 காரின் பி–பில்லர் அப்படியே இருக்கிறது. பெரிய ரியர் ஓவர்ஹேங்கும், சி பில்லருமே இது ஒரு 7 சீட்டர் என்பதைச் சொல்லிவிடுகிறது. ஆனால், எல்லாமே பெரிதாகி இருக்கிறது. முக்கியமாக, 3 வரிசை சீட். பெரிய 16 இன்ச் வீல்கள், பெரிய பானெட், நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் என்று பெரிதாக.. அநேகமாக 4 மீட்டருக்கு மேல் வர இருக்கிறது இந்தப் புது C3. இதற்கு C3 ஏர்க்ராஸ் அல்லது C3 ப்ளஸ் அல்லது C3 ஸ்போர்ட் டூரர் என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம் சிட்ரன்.

உள்பக்கமும் C3–ன் அதே லேஅவுட்தான் இருக்கப் போகிறது. ஆனால், பெரிய எஸ்யூவி என்பதால், கொஞ்சம் உயரமாக இருக்கலாம். வசதிகளைப் பொருத்தவரை என்னவென்று தெரியவில்லை. பானெட்டுக்குக் கீழே 1.2லிட்டர் NA (Naturally Aspirated) இன்ஜின் உண்டு. பெர்ஃபாமன்ஸ் பிரியர்களுக்கு டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடனும் வருகிறது சிட்ரன் C3 ஏர்க்ராஸ் அல்லது C3 ஸ்போர்ட் டூரர் அல்லது C3 ப்ளஸ். விலையைப் பொருத்துதான் இதன் வெற்றி இருக்கிறது. 12 – 14 லட்சத்துக்குள் கொண்டு வந்தால் நல்ல மார்க்கெட்டைப் பிடிக்கலாம் சிட்ரன்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

ஃபோர்ஸ் கூர்க்கா 5 – டோர்

ரிலீஸ்: 2023 மார்ச் விலை: சுமார் 15 லட்சம்

`கூர்க்காவில் 5 டோர் ஆப்ஷன் கொடுத்தால் என்ன’ என்று வாடிக்கையாளர்கள் சொன்னது ஃபோர்ஸ் மோட்டார்ஸுக்குக் கேட்டதாலோ என்னவோ, இந்த ஆண்டு மார்ச்சுக்குள் 5 டோர் வெர்ஷன் கூர்க்காவைக் களமிறக்க இருக்கிறது. இதிலும் 7 சீட்டர் ஆப்ஷன் இருக்கலாம். இரண்டாவது வரிசைக்குக் கேப்டன் சீட் அல்லது பெஞ்ச் சீட் வசதி… மூன்றாவது வரிசைக்கு ஜம்ப் சீட் அல்லது கேப்டன் சேர்கள் வசதி கொடுக்கப்படலாம்.

5 டோர் என்பதற்காக இது புது ப்ளாட்ஃபார்மில் ரெடி செய்யப்படவில்லை. 3 டோர் ரெடியாகும் அதே ப்ளாட்ஃபார்மில்தான் இதுவும் தயாராகிறது. என்ன, 400 மிமீ பெரிய வீல்பேஸுடன் வரலாம். இன்ஜினைப் பொருத்தவரை மெர்சிடீஸ் பென்ஸிடம் இருந்து பெறப்படும் அதே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட 2.6 லிட்டர் டீசல் இன்ஜின்தான் இதிலும் இருக்கப் போகிறது. சுத்தமான ஆஃப்ரோடராச்சே.. அதனால் லே ரேஞ்ச் கியர்பாக்ஸும் உண்டு. கூடவே டிஃப்ரன்ஷியல் லாக், 4வீல் டிரைவ் ஆப்ஷன், தண்ணீருக்குள் புகுந்து புறப்பட உதவும் ஸ்நார்க்கிள் போன்ற அட்வென்ச்சர் வசதிகளுடனும் இந்த 5 டோர் கூர்க்கா வருகிறான்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

ஹோண்டா மிட்சைஸ் எஸ்யூவி

ரிலீஸ்: 2023 ஜூன் விலை: சுமார் 16 – 18 லட்சம்

செடானில் ஹோண்டாவைக் குறை சொல்ல முடியாது. ஆனால், எஸ்யூவியில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. வேறொன்றும் வேண்டாம்; எப்படியாவது க்ரெட்டாவை முந்த வேண்டும். இதுதான் இப்போதைக்கு ஹோண்டாவின் திட்டம். அதற்காகவே ஒரு மிட் சைஸ் எஸ்யூவியைக் கொண்டு வரத் திட்டம் போட்டிருக்கிறது ஹோண்டா. இந்தப் புது எஸ்யூவி 4.2 மீட்டர் நீளம் இருக்கலாம். க்ரெட்டாவைப்போல் இது 5 சீட்டராகத்தான் வரும். ஆனால், பூட் ஸ்பேஸ் தாராளமாக இருக்குமாம். இடவசதியில் க்ரெட்டாவை அடிக்க வேண்டும் என்பதும் ஹோண்டாவின் திட்டம்.

இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் என 2 மாடல்கள் இருக்கும். புது டிரைவிங் நார்ம்ஸ்களால், 2023 பிப்ரவரியில் இருந்து மற்ற நிறுவனங்களைப்போல் டீசலைக் காலி செய்ய முடிவெடுத்து இருக்கிறதாம் ஹோண்டாவும். அதனால், இந்த மிட் சைஸ் எஸ்யூவியில் டீசல் இருக்காது. இதில் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம், நெக்ஸ்ட் ஜென் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் இருக்கலாம். மற்றபடி வேறெந்தத் தகவல்களும் கசிய விடாமல், இந்த மிட் சைஸ் எஸ்யூவியை ஸ்பை ஷாட்டில்கூட படாமல் டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறதாம் ஹோண்டா.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 நடுவில் விலை: சுமார் 13 – 19 லட்சம்

ஹூண்டாய்க்குத் தாகம் அடங்கவே அடங்காது. அதுவும் தனது ஃப்ளாக்ஷிப் மாடலான க்ரெட்டாவில் கை வைத்துக் கொண்டே இருக்கும். இந்த ஆண்டு வரப் போகும் க்ரெட்டா பெரிய மாற்றங்களுக்கு உள்ளாக இருக்கிறதாம். வெளியே அவுட்லுக்கிலும் சரி; உள்ளேயும் சரி கணிசமான மாற்றங்களுடன் வேற லெவல் க்ரெட்டாவாக வர இருக்கிறது ஹூண்டாயின் இந்த மிட் சைஸ் எஸ்யூவி. டூஸானை இன்ஸ்பயர் செய்து வடிவமைக்கப்பட்ட அந்த பாராமெட்ரிக் ஜுவல் கிரில்தான் இதன் மெயின் அட்ராக்ஷனாக இருக்கும். இருமுனைகளிலும் எல்இடி டிஆர்எல்கள். ரீ–புரொஃபைல் செய்யப்பட்ட பூட் கதவு போன்றவை இருக்கும். உள்பக்கமும் பல விஷயங்கள் அல்கஸார், டூஸான் போன்ற பெரிய கார்களில் இருந்து பெறப்படுபவையாக, ப்ரீமியம் ரகத்தில் இருக்கலாம். முக்கியமான மாற்றமாக 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், அல்கஸாரில் இருப்பது. ADAS லெவல் தொழில்நுட்பத்தை டூஸானில் இருந்து எடுத்து வருகிறது இந்தப் புது க்ரெட்டா. இன்ஜினைப் பொருத்தவரை அதே டீசல்/பெட்ரோல்/மேனுவல்/ஆட்டோமேட்டிக் எனப் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என்று சொல்லப்படுகிறது இந்த 2023 க்ரெட்டாவில்.

ஹூண்டாய் Ai3 மைக்ரோ எஸ்யூவி

ரிலீஸ்: 2023 ஆகஸ்ட் விலை: சுமார் 7 – 9 லட்சம்

ஹோண்டாவுக்கு ஹூண்டாயை அடிக்க வேண்டும் என்றால், ஹூண்டாயைப் பொருத்தவரை குட்டி எஸ்யூவியில் டாடாவை அடிக்க வேண்டும். அதற்காகவே ஒரு மைக்ரோ எஸ்யூவியைக் கொண்டு வரவிருக்கிறதாம் ஹூண்டாய். பஞ்ச்சுக்குப் போட்டியாக வரும் இந்த என்ட்ரி லெவல் எஸ்யூவியின் குறியீட்டுப் பெயர் Ai3 CUV (Compact Utility Vehicle). இது ஹூண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆராவின் ப்ளாட்ஃபார்ம் ரெடியாகும் அதே கட்டுமானத்தில்தான் வரப்போகிறதாம். 1.2 லி பெட்ரோல் இன்ஜினும் அதே! மற்ற குட்டி கார்களில் சிஎன்ஜி ஆப்ஷனைக் கொடுத்து வரும் ஹூண்டாய், இந்தக் குட்டி எஸ்யூவியிலும் சிஎன்ஜி வரலாம். பஞ்ச்சுக்குப் போட்டியாக வருவதால், விலையில் தாராளம் காட்ட இருக்கிறதாம் ஹூண்டாய்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

கியா செல்ட்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 ஜூலை – ஆகஸ்ட் விலை: சுமார் 12.5 – 20 லட்சம்

கியா மட்டும் சும்மா இருக்குமா? க்ரெட்டாபோலவே செல்ட்டோஸையும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக்கிக் கொண்டு வர இருக்கிறது கியா. புத்தம் புது பானெட் மற்றும் ஹெட்லைட்களுடன் எக்ஸ்டீரியரே மாறப் போகிறதாம். புது அலாய் வீல்களுடன் பின் பக்கமும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகப் போகிறது. புதிய டெயில் லாம்ப்ஸ், ரீ–புரொஃபைல் செய்யப்பட்ட ரியர் பம்பர், ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட் என்று ஏகப்பட்ட மாற்றங்கள் செல்ட்டோஸில் இருக்கும். உள்பக்கத்தைப் பொருத்தவரை புது அப்ஹோல்சரி சீட்கள் மற்றும் காஸ்மெட்டிக் வேலைப்பாடுகளுடன் காணப்படும் செல்ட்டோஸின் டேஷ்போர்டு. இதில் அடாஸ் லெவல் தொழில்நுட்பமும் உண்டு. கூடவே, டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் புதுசு – உடன் ரீ–டிசைன்டு செய்யப்பட்ட கன்ட்ரோல் பேனல் மற்றும் ஏர் கண்டிஷனிங்கும் புதுசு! பானெட்டுக்குக் கீழே தற்போது இருக்கும் செல்ட்டோஸின் அதே இன்ஜின் சமாச்சாரங்கள்தான் இருக்கும். அதாவது, இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் பெரிய மாற்றமே அவுட்லுக்தான்! அதற்காக மட்டும் விலையை ஏற்றாமல் இருக்க வேண்டும் கியா.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

மாருதி சுஸூகி ஜிம்னி

ரிலீஸ்: 2023 ஆகஸ்ட் – செப்டம்பர் விலை: சுமார் 15 லட்சம்

ஜிம்னி ஜிம்னி என்றுதான் இப்போது கார் ஆர்வலர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவழியாக இந்த ஆண்டு முக்கால்வாசியில் ஜிம்னி ஜீப்பைக் கொண்டு வரலாம் மாருதி. ஜிம்னியைப் பற்றி நிறைய சுவாரஸ்யங்கள் உண்டு. உலகளவில் விற்பனையில் இருக்கும் 3 டோர் ஜிம்னியின் பெரிய வெர்ஷனாக… அதாவது 5 டோர் வெர்ஷனாகத்தான் நம் ஊருக்கு வரப்போகிறது மாருதி சுஸூகி ஜிம்னி. இருந்தாலும், இது பிரெஸ்ஸாவைவிட நீளம் குறைவான ஜீப் என்பது சுவாரஸ்யம்தானே! இதன் நீளம் 3,850 மிமீ. ஆனால், 3 டோர் வெர்ஷனைவிட 300 மிமீ வீல்பேஸ் அதிகமாக நம் ஊருக்கு வரப் போகிறது இந்த 5 டோர். இந்த 4 மீட்டருக்குட்பட்ட ஜீப்பில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கப் போவதால், சப் 4 மீட்டர் கார்களுக்குண்டான வரி விலக்கிலிருந்து விலக்காகலாம் இந்த ஜிம்னி. முதலில் இந்த 5 டோர் இந்தியாவில் பிறந்து, அப்படியே இந்தோனேஷியா போன்ற மற்ற நாடுகளில் குளோபலாக வளர இருக்கிறதாம்.

இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் மாருதியின் ஃபேவரைட்டான மைல்டு ஹைபிரிட் செட்அப் வரலாம். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸா அல்லது 6 ஸ்பீடு கியர்பாக்ஸா என்பது இன்னும் தெரியவில்லை. கூர்க்கா, தார் போன்றவற்றுக்குப் போட்டியாக சுத்தமான ஆஃப்ரோடராக இந்த ஜிம்னி வரவிருப்பதால்… லோ–ரேஷியோ கியர் செட்அப், மாருதி கிராண்ட்விட்டாராவில் இருக்கும் ஆல்கிரிப் ப்ரோ எனும் 4வீல் டிரைவ் தொழில்நுட்பம் போன்றவை இதில் இருக்கும்.

இப்போதே 3 டோர் ஜிம்னி – இடது மற்றும் வலது பக்க ஸ்டீயரிங் செட்அப்புடன் மாருதியின் ப்ளான்ட்டில் ரெடியாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஏற்றுமதி மட்டும்தான் செய்து வருகிறது. அதனால், இந்த ஜிம்னி இந்தியாவில் திரிவதில் – நம்மைவிட மாருதிதான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறது.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 மார்ச் விலை: சுமார் 15 – 20 லட்சம்

எஸ்யூவி என்றால் எம்ஜி இல்லாமல் இருக்காதே! பின்னே எம்ஜி ஷோரூமில் எஸ்யூவிகளைத் தவிர எதுவும் இருக்காதே! 2023–க்கு ஹெக்டரை ஃபேஸ்லிஃப்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறது எம்ஜி. முன் பக்கம் கிரில்லே மாறப் போகிறது. இதை `Argyle - Inspired’ டைமண்ட் மெஷ் கிரில் என்கிறார்கள். பார்ப்பதற்கு இன்னும் ப்ரீமியமாக இருக்கும். காரைச் சுற்றி தகதகவென சில்வர் நிறத்தில் நிறைய க்ரோம் வேலைப்பாடுகள் இருக்கும். பம்பர், ஹெட்லைட்ஸ் என எல்லாமே ரீ–டிசைன் செய்யப்பட இருக்கின்றன.

இந்த செக்மென்ட்டில் முதன்முதலில் பெரிய டச் ஸ்க்ரீன் கொண்டு வந்தது எம்ஜி. இப்போது அதையும் தாண்டி 14 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வரப் போகிறது இந்த ஹெக்டரில். டேஷ்போர்டில் படுக்கை வசத்தில் ஏசி வென்ட்கள் அப்படியே சென்டர் கன்சோலில் சரிந்து விழுவது அழகாக இருக்கும். இந்த ஃபேஸ்லிஃப்ட் ஹெக்டரில் அடாஸ் தொழில்நுட்பங்களும், அங்கங்கே சென்சார்கள், 360 டிகிரி கேமரா என வசதிகளும் கொட்டிக் கிடக்கும். வழக்கம்போல் நடப்பில் இருக்கும் 170bhp பவர் தரும் 2.0லிட்டர் டீசல் இன்ஜினும்… 143bhp பவர் கொடுக்கும் 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் இருக்கும். இதில் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் இருக்கப் போகிறது. இந்த ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் சுமார் 15 – 20 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலைக்குள் வரலாம்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!
Surendhar Muthu

மெர்சிடீஸ் பென்ஸ் GLC

ரிலீஸ்: 2023 மார்ச் விலை: சுமார் 65 – 70 லட்சம் வரை

இந்த 2023–க்கு செகண்ட் ஜென் GLC–யைக் கொண்டு வரப் போகிறது பென்ஸ். இது பழசைவிட கொஞ்சம் அளவுகளில் நீளமாக/அகலமாக இருக்கும். பெரிய கிரில், புது ஹெட்லாம்ப் டிசைன், ஸ்லிம் அண்ட் ஸ்லீக் ஆன டெயில் லாம்ப்கள் என மொத்தமாக மாறப் போகிறது பென்ஸ் GLC எஸ்யூவி.

இன்டீரியரைப் பொருத்தவரை அப்படியே C க்ளாஸ் காரில் இருந்து பல விஷயங்களைப் பெறப் போகிறது GLC. 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், போர்ட்ரெய்ட் வடிவ 11.9 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புது ஏர் வென்ட்கள் போன்றவற்றை உதாரணத்துக்குச் சொல்லலாம். கூடவே பெரிய பனோரமிக் சன்ரூஃப், புதிய ஹெட் அப் டிஸ்ப்ளே யூனிட் மற்றும் பர்மஸ்டர் 710W சரவுண்ட் சிஸ்டம் போன்றவற்றுடனும் வருகிறது பென்ஸ் GLC.

குளோபலாக, இந்த GLC எஸ்யூவி, 2 பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. GLC200, GLC300, GLC220d – இந்த மாடல்கள் எல்லாவற்றிலுமே 48V மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும், இன்டக்ரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மோட்டாரும் உண்டு. கூடவே, GLC300e, GLC400e, GLC300de என 3 வேரியன்ட்கள்… ப்ளக் இன் ஹைபிரிட் வேரியன்ட்களாகவும்… அதாவது 120 கிமீ வரை சுத்தமான எலெக்ட்ரிக் ரேஞ்ச் தரும் காராகவும் ஜொலிக்கப் போகிறது GLC.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

நிஸான் எக்ஸ்–ட்ரெயில்

ரிலீஸ்: 2023 நடுவில் விலை: சுமார் 40 லட்சம்

நிஸான் எக்ஸ்–ட்ரெயிலுக்கென்று இப்போதும் ஒரு கூட்டம் உண்டு. முதல் இரண்டு ஜென் எக்ஸ்–ட்ரெயில் கார்கள் நம் நாட்டில் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருந்தன. 3–வது ஜென் மாடலை சில ஆண்டுகளுக்கு முன் நிஸான் ஷோகேஸ் செய்தபோதும், யார் கண் வைத்தார்களோ… அது கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இது யூரோ என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார்.

இப்போது நம் ஊருக்கு வரவிருப்பது 4–வது ஜென் எக்ஸ்–ட்ரெயில். கிக்ஸில் இருக்கும் அதே கிரில்லைத்தான் இந்த எக்ஸ்–ட்ரெயில் காரில் பொருத்தி இருக்கிறது நிஸான். ஆனால், நல்லவேளையாக – இதில் ஸ்ப்ளிட் ஹெட்லாம்ப்ஸ் இருப்பது கிக்ஸில் இருந்து தனித்துக் காட்டுகிறது. ரெனோ–நிஸான் பார்ட்னர்ஷிப்பில் உருவாகும் CMF-C ப்ளாட்ஃபார்மில்தான் இந்தப் புது எக்ஸ்–ட்ரெயில் ரெடியாகி வருகிறது. 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் லே அவுட்டில் வருகிறது எக்ஸ்–ட்ரெயில். உள்ளே 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.. 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் போன்றவை உண்டு. கிக்ஸைப் போலவே இதிலும் 360 டிகிரி கேமரா உண்டு. கூடவே இதில் அடாஸ் தொழில்நுட்பம் எக்ஸ்ட்ராவாக வரப்போகிறது.

இன்ஜின் விவரங்களைப் பற்றிப் பெரிதாக ஐடியா இல்லை. ஆனாலும் இதில் மைல்டு ஹைபிரிட் கொண்ட 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வருமா… அல்லது ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் கொண்ட 1.5லிட்டர் e-Power ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் வருமா என்பது தெரியவில்லை. இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் எக்ஸ்–ட்ரெயில், அப்படியே ஒரு சுத்தமான எலெக்ட்ரிக் காராக ஓடக்கூடிய வல்லமை கொண்டது. ஓட ஓட, இந்த இன்ஜினே பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளும் எக்ஸ்–ட்ரெயில் எஸ்யூவியில்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 நடுவில் விலை: 16 – 23 லட்சம்

2019–ல்தான் ஹேரியர் லாஞ்ச் ஆனது. அதற்குப் பிறகு இப்போது ஹேரியரை டாடா மோட்டார்ஸ் அப்டேட் செய்யவிருப்பதாகத் தகவல். கிண்ணென்ற கட்டுமானம் கொண்ட 5 ஸ்டார் ரேட்டிங்தான் ஹேரியரின் பெரிய பலம். ஆனால், மற்ற போட்டியாளர்கள் வசதிகளில் ஹேரியரை முந்துவதை டாடா கவனித்திருக்க வேண்டும். இந்த அப்டேட்டட் ஹேரியரில்… பெரிய டச் ஸ்க்ரீன், கனெக்டடட் தொழில்நுட்ப வசதிகள், அடாஸ் லெவல் டெக்னாலஜி, 360 டிகிரி கேமரா என்று வசதிகளைத் தெளிக்க இருக்கிறது டாடா. தோற்றத்திலும் கிரில், ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ், புது அலாய் வீல் டிசைன் என்று தனது புரொஃபைலிலும் மாறி வரப் போகிறது ஹேரியர். இப்போதைக்கு நடப்பில் ஓடிக் கொண்டிருக்கும் 2.0லிட்டர் டீசல் இன்ஜினுடன்தான் இந்த ஹேரியரும் வரும். ஆனால், கூடவே 1.5லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினிலும் டாடா வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 கடைசியில் விலை: சுமார் 18 – 25 லட்சம்

ஹேரியர் மாறும்போது, சஃபாரி மட்டும் என்ன தக்காளித் தொக்கா! ஆம், சஃபாரியும் ஃபேஸ்லிஃப்ட் ஆக இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி, பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அடாஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா என்று ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டில் இருக்கும் பல விஷயங்களை சஃபாரியில் எதிர்பார்க்கலாம். ஹேரியைரப்போலவே இதன் டிசைனும் மாற்றம் காணவிருக்கிறது. என்ன, இந்தப் புது சஃபாரி – பெரிய ஹேரியர்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

எம்பிவி

கியா கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 மே – ஜூன் விலை: சுமார் 31 லட்சம்

மார்க்கெட்டில்… பெரிய எம்பிவியாக வலம் வருவது கியா கார்னிவல். இனோவா க்ரிஸ்ட்டாவுக்குப் போட்டியாக… அதை விடுங்கள்; கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும்… கொஞ்சம் விட்டால் 1 கோடி ரூபாய் டொயோட்டா வெல்ஃபயருக்கே போட்டி போடக் கூடிய வசதிகளும் தகுதிகளும் இந்தக் கார்னிவலுக்கு உண்டு. அப்படிப்பட்ட கார்னிவலின் 4–வது ஜென் மாடல், இப்போது இந்தியாவுக்கு வரவிருக்கிறது. இது ஆஸ்திரேலியா என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது என்பது ஸ்பெஷல்.

ஸ்லிம்மான ஹெட்லைட்ஸ், கொஞ்சம் ஸ்போர்ட்டினெஸ்ஸைக் கூட்டும். அங்கங்கே ஆங்குலரான கோடுகள்.. எம்பிவிக்கு ஏற்றதுபோல் பின் பக்கம் Squared-off டிசைன் தன்மை, முன் பக்கம் ஷார்ப்பான கிரில் என்று மொத்தமாக மாறப் போகிறது புது கார்னிவல். பின் பக்கம், அந்த சிங்கிள் லைன் டிஜிட்டல் எல்இடி ஸ்ட்ரிப் கார் முழுவதும் நீளப் போகிறது. இப்போது அதுதானே ட்ரெண்டிங்.

மேலும், ஒரு க்ரோம் பட்டை இதன் சி பில்லரில் இணைவது அழகாக இருக்கிறது. ரியர் ஓவர்ஹேங்கே பெருசாக இருக்கிறது. ஆம், சி பில்லர்… ரியர் ஓவர்ஹேங் என்றால்.. இது ஏகப்பட்ட சீட் ஆப்ஷன்களுடன் வரப் போகிறது. 7, 9, 11… (எம்மாடியோவ்) சீட்டிங் ஆப்ஷன்கள் இதில் உண்டு. இப்போதே மார்க்கெட்டில் 6, 7, 8 என சீட்டிங் வசதிகள் உண்டு. இது அதையும் தாண்டி! அதனால், இது இப்போது இருக்கும் கார்னிவலைவிட நீளமாக.. வீல்பேஸ் அதிகமாக வரப் போகிறது. இதனால், 2–வது மற்றும் 3–வது வரிசை சீட்களுக்கு இடவசதி தாராளமாகப் போகிறது.

இன்டீரியரில் இரண்டு 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே சிஸ்டம் இருக்கின்றன. ஒன்று – இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துக்கு.. மற்றொன்று – டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கு!

குளோபலாக, 201bhp பவரும் 440Nm டார்க்கும் தரும் 2.2லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் மற்றும் 296bhp பவரும் 355 Nm டார்க்கும் தரும் பெட்ரோல் இன்ஜின் என இரண்டிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நம் ஊரைப் பொருத்தவரை, விற்பனையில் இருக்கும் அதே டீசலில் மட்டுமே ஓடப் போகிறது 4–வது ஜென் கியா கார்னிவல்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

டொயோட்டா இனோவா ஹைக்ராஸ்

ரிலீஸ்: 2023 பிப்ரவரி விலை: சுமார் 24 – 28 லட்சம்

இதைப் பற்றிய ரிப்போர்ட் போன இதழிலேயே கொடுத்திருந்தோம். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்; இனோவா க்ரிஸ்ட்டாவின் கிண்ணென்ற அடுத்த வெர்ஷன்தான் இந்த இனோவா ஹைக்ராஸ். 100 மிமீ அதிகரிக்கப்பட்ட வீல்பேஸ் இதை இன்னும் பெரிய எம்பிவி ஆக்குகிறது.

பவர்ட்ரெயின்களைப் பொருத்தவரை – இந்த ஹைக்ராஸ் மாடலிலும் டீசல் இருக்காது என்று நம்பப்படுகிறது. வெறும் பெட்ரோலில் மட்டும்தான் வரலாம். டொயோட்டாவின் பார்வை இப்போதெல்லாம், ஹைபிரிட் மீதுதான் இருக்கிறது. ஹைரைடர்தான் இந்தியாவின் முதல் ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல். ஹைரைடரைத் தொடர்ந்து, ஹைக்ராஸும் இந்த ஸ்ட்ராங் மார்க்கெட்டில் இடம் பிடிக்கும். இதில் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இதன் கூடவே 2.0லிட்டர் NA இன்ஜினும் எக்ஸ்ட்ரா ஆப்ஷனாக இருக்கும். மற்றபடி இதன் பவர்/டார்க் விவரங்கள் தெரியவில்லை.

இதற்கு முந்தைய… அல்லது நடப்பு இனோவாக்களில் இருக்கும் வசதிகளைத் தாண்டி பல ப்ரீமியம் ஃப்யூச்சர்களை இதில் தரவிருக்கிறது டொயோட்டா.

உதாரணத்துக்கு, 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பெரிய பனோரமிக் சன்ரூஃப் என இனோவாவுக்கே இது ரொம்பப் புதுசு! அதேபோல், டொயோட்டாவின் ADAS தொழில்நுட்பம் கொண்ட முதல் எம்பிவியும் இதுதான்.

டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்

ரிலீஸ்: 2023 மார்ச் விலை: சுமார் 19 – 24 லட்சம்

ஹைக்ராஸையும் க்ரிஸ்ட்டாவையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். காலங்காலமாக ஓடிக் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையான இந்த எம்பிவி–யை டொயோட்டா விடாது. நடுவில் டீசல் புக்கிங்கை நிறுத்திக் கண்ணாமூச்சி காட்டியது டொயோட்டா. இப்போது க்ரிஸ்ட்டாவை ஃபேஸ்லிஃப்ட் செய்து வெளியிடத் தயாராக இருக்கிறது. கொஞ்சம் பவுடர் போட்டு, மேக்அப் போட்டு லேசான விஷுவல் மாற்றங்களுடன் வரப் போகிறது இனோவா க்ரிஸ்ட்டா. இதன் முழு விவரங்கள் தெரியவில்லை. ரக்கட் ஆன இதன் லேடர் ஆன் ஃப்ரேம் செட் அப் கொண்ட க்ரிஸ்ட்டா, ஃப்ளீட் மார்க்கெட்டிலும் சக்கைப் போடு போடுவதால்.. க்ரிஸ்ட்டாவுக்கு மாற்றங்கள் அவசியம் தேவைப்படுகிறது. க்ரிஸ்ட்டா வாங்கப் போகிறவர்கள், சில மாதங்கள் காத்திருப்பது நல்லது.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

எலெக்ட்ரிக் கார்கள்

சிட்ரன் C3 எலெக்ட்ரிக்

ரிலீஸ்: 2023 பிப்ரவரி விலை: சுமார் 10 – 12 லட்சம்

சிட்ரனும் புத்திசாலித்தனமாகக் காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது. ஆம், தனது C3 மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பை வெளியிடத் தயாராகி விட்டது சிட்ரன். ICE சிட்ரன் C3 மாடலை அப்படியே அடிப்படையாகக் கொண்டுதான் இது வெளிவரப் போகிறது என்பதால், தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது. முன் பக்க பக்கவாட்டு ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட், பின் பக்கத்தில் காணாமல் போயிருக்கும் எக்ஸாஸ்ட் பைப் போன்றவை மட்டும்தான் பெரிய வித்தியாசமாக இருக்கும். அதேபோல், உள்ளேயும் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. கியர் லீவருக்குப் பதில் எலெக்ட்ரிக் கார்களுக்கே உரிய அந்த டிரைவ் கன்ட்ரோலர் இருக்கும். சிட்ரன் C3–ல் வசதிக் குறைபாடுகள்தான் பெரிய குறையாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் C3–ல் க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் வாஷ் வைப்பர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவை இருக்கும்.

இதில் 3.3kW ஆன்போர்டு சார்ஜர் வழங்குகிறது சிட்ரன். கூடவே CCS2 ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இதில் உண்டு. மற்றபடி பேட்டரி / மோட்டார் போன்ற விவரங்கள் தெரியவில்லை என்றாலும், இதன் க்ளெய்ம்டு ரேஞ்சாக சுமார் 340 கிமீ சொல்லப்படுகிறது. இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது, இந்த எலெக்ட்ரிக் சிட்ரன் C3–யை நாங்கள் ஓட்டிக் கொண்டிருப்போம். டாடா டியாகோ, டிகோர் போன்றவற்றுக்கு இப்போது ஒரே போட்டி – C3 என்பதுதான் இங்கே பரபரப்பான செய்தி!

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

ஹூண்டாய் அயனிக் 5

ரிலீஸ்: 2023 பிப்ரவரி விலை: சுமார் 50 லட்சம்

இந்த ‘அயனிக் 5’ இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கார். இந்த ‘அயனிக் 5’ கார், கியா EV-6 மாடலின் அதே ப்ளாட்ஃபார்மில் ரெடியாகி வருகிறது. ஆனால், EV-6–யை வாங்க வேண்டும் என்றால், 70 லட்சம் கொடுத்து CBU முறையில்தான் வாங்க வேண்டும். இதுவே அயனிக் 5–ன் சிறப்பு, இது இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதுதான்.

குளோபலாக இது 58kW மோட்டார் மற்றும் 77.4kWh பேட்டரி சக்தியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு இதைவிடக் கொஞ்சம் சிறிய மோட்டார் மற்றும் பேட்டரி வரலாம். பவர் 169bhp என்று தகவல் அடிபடுகிறது. இதன் க்ளெய்ம்டு ரேஞ்சும் 383 கிமீ என்கிறார்கள். இப்போதைக்கு ஹூண்டாயில் கோனா மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது லைன்அப்பாக வரும் அயனிக் 5–ன் பெரிய பலமே – லோக்கல் அசெம்பிளி மற்றும் இதன் விலைதான். இதன் விலை சுமார் 45 லட்சத்துக்குள் வந்தால்… மற்ற கார்களுக்கு ஷாக் அடிக்கலாம்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

மஹிந்திரா e-எக்ஸ்யூவி400

ரிலீஸ்: பிப்ரவரி 2023 விலை: சுமார் 18 – 20 லட்சம்

2020 ஆட்டோ எக்ஸ்போவில் e-XUV300 காரைப் பார்த்த நினைவிருக்கிறதா… அதேபோல்தான் இருக்கிறது இந்த e-XUV400 காரும். அதனால், இதைப் பார்ப்பதற்கு பெட்ரோல்/டீசல் மாடல் XUV300 போலவேதான் இருக்கும். மூடப்பட்ட முன்பக்க கிரில், அதற்கு உள்ளே அம்பு வடிவ இன்செர்ட்டுகள்… ரொம்ப முக்கியமாக அங்கங்கே செம்பு நிறத்தில் ஆக்ஸென்ட்கள்தான் இதைத் தனித்துக் காட்டுகின்றன. ஆனாலும், இது XUV300–யைவிடக் கொஞ்சம் பெரிய கார், ஆம், இது 4 மீட்டரைத் தாண்டிய (4.2மீ) ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி. இதனால், இதன் பூட் ஸ்பேஸ் எக்ஸ்ட்ராவாக 121 லிட்டர் கிடைக்கிறது.

இதன் உள்பக்கம் முழுதும் ஆல்–பிளாக் தீம் கொண்ட டேஷ்போர்டு டிசைன். இங்கேயும் Copper ஆக்ஸென்ட்கள் உண்டு. கியர் லீவருக்குப் பதில் டிரைவ் செலெக்டர். ஆனால், அந்த 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன்தான் இதிலும் இருக்கிறது. இது AdrenoX மென்பொருள் மூலம் இயங்குகிறது.

பவரைப் பொருத்தவரை 150bhp-யும், 310Nm டார்க்கும் சக்தி கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் இதில் இருக்கிறது. இதன் பேட்டரி பவர் பேக் 39.4kWh. MIDC டிரைவ் சைக்கிள்படி, சிங்கிள் 100%சார்ஜில் இது 456 கிமீ தூரம் ரேஞ்ச் போகும் என்கிறார்கள். இதன் டாப் ஸ்பீடு 150 கிமீ.. இப்போதைக்கு சுமார் 20 லட்சம் பட்ஜெட்டுக்கு ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி – என்றால், நெக்ஸானுக்குப் பிறகு இருப்பது மஹிந்திரா e-XUV400.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!

எம்ஜி ஏர் இவி (AIR EV)

ரிலீஸ்: 2023 ஜூலை விலை: சுமார் 10 – 12 லட்சம்

எம்ஜியில் இருந்து சின்னதாக ஒரு பட்ஜெட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். அதுதான் இந்த ஏர். இந்தோனேஷியாவில் ஓடிக் கொண்டிருக்கும் Wuling Air EV எனும் காரை அடிப்படையாக வைத்து இது பிறந்திருக்கிறது. இது ஒரு காம்பேக்ட் எலெக்ட்ரிக். வெறும் 2 கதவுகள்தான். இதன் நீளமே வெறும் 2.9 மீட்டர்கள்தான். அதற்குள் 2,010 மிமீ வீல்பேஸ் கிடைப்பதுபோல் செய்திருப்பது அருமை. இருந்தாலும், இது ஆல்ட்டோவைவிட சுமார் 400 மிமீ குறைவு.

இதில் 20kWh முதல் 25kWh சக்தி கொண்ட பேட்டரி பேக் கொடுக்கலாம் எம்ஜி. இதன் சிங்கிள் சார்ஜ் ரேஞ்ச் 200 – 250 கிமீ என்கிறார்கள். சிங்கிள், ஃப்ரன்ட் ஆக்ஸில் மோட்டார் கொண்ட இந்த எலெக்ட்ரிக்கின் பவர் 68bhp. இவ்வளவு குட்டியா இருக்கே… பட்ஜெட் காரா இருக்குமோ என்றால்… 10 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள். காரணம், இதில் ஏகப்பட்ட வசதிகளைக் கொடுத்து அதைச் சரிக்கட்ட இருக்கிறது. பஜாஜில் க்யூட் என்றொரு குவாட்ரிசைக்கிள் வந்தது நினைவிருக்கிறதா… அதுபோல் ஆகாமல் இருக்க வேண்டும் இந்த எம்ஜி AIR EV–யும்.

2023-ல் வரப்போகும் கார்கள்! ஒரு வ்வ்ர்ர்ரூம் ட்ரெய்லர்!
Thamizh Thenral K

ஆடி Q8 E-TRON

ரிலீஸ்: 2023 கடைசியில் விலை: சுமார் 1.10 – 1.25 கோடி வரை

இ–ட்ரான் மற்றும் இ–ட்ரான் ஸ்போர்ட்பேக் காரைக் கொஞ்சம் புதுப்பித்துக் கொண்டு, Q8 பேட்ஜில் தருகிறது ஆடி. அதுதான் ஆடி Q8 E-TRON. இதில் புது கிரில், புதுப்பிக்கப்பட்ட எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ் என எல்லாமே புதுசு! உள்பக்கம், ரீ–சைக்கிள் செய்யப்பட்ட பொருட்களால்… இதன் அப்ஹோல்சரி மற்றும் இன்டீரியரை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் MMI (Multimedia Interface) நேவிகேஷன் ப்ளஸ் தொழில்நுட்பத்தில் இ–ட்ரான் ரூட் ப்ளானர் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் 8.6 இன்ச் டச் ஸ்க்ரீன் வசதி உண்டு.

குளோபலாக இந்த Q8 E-TRON மாடல்கள் 50 மற்றும் 55 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். இதில் ட்வின் எலெக்ட்ரிக் மோட்டார் செட்அப் உண்டு. ஒவ்வொரு ஆக்ஸிலுக்கும் ஒன்று. இதில் நெக்ஸ்ட் ஜென் பேட்டரியைப் பொருத்த இருக்கிறது. இதனால், பழசைவிட 100 கிமீ எக்ஸ்ட்ரா ரேஞ்ச் கிடைக்கும் என்கிறார்கள். 89kWh பேட்டரி கொண்ட 50 வேரியன்ட் – சுமார் 505 கிமீ–யும், 104kWh பேட்டரி பவர் கொண்ட 55 வேரியன்ட் மாடல்– சுமார் 600 கிமீ ரேஞ்சும் தரும் என்கிறது ஆடி.