ஸ்பெஷல்
Published:Updated:

டீசல் கார்கள் விலையேற்றம் நியாயமா?

டீசல் கார்கள் விலையேற்றம் நியாயமா?

 ##~##

பெட்ரோல் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்களை, பின்னங்கால் பிடறியில் அடிபட ஓட வைத்தது பெட்ரோலின் விலை உயர்வு. இப்போது, டீசல் கார்களின் பக்கம் கவனத்தைத் திருப்பியவர்களையும் மிரட்டுகிறது மத்திய அரசு. ஆம், டீசல் இன்ஜின்கொண்ட கார்களுக்கான வரியை உயர்த்தும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு. இந்த வரி உயர்வால், டீசல் கார்களின் விலை 1.5 லட்சத்தில் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவில், இடியாக இறங்கி இருக்கிறது இந்தச் செய்தி.

 என் இந்த ஷாக் ட்ரீட்மென்ட்?

பெட்ரோல் விலையைப்போல, டீசல் விலையை நினைத்த சமயத்தில் உயர்த்த முடியாது. காரணம், டீசல் இன்ஜின்கொண்ட கமர்ஷியல் வாகனங்கள்தான் நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, லாரி ஸ்ட்ரைக், எதிர்க்கட்சி பந்த் போன்ற போராட்டங்கள் பெரிய அளவில் ஏற்படும்.

டீசல் கார்கள் விலையேற்றம் நியாயமா?

டீசலுக்கு மத்திய அரசு தரும் மானியம், கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டும் அல்லாமல், சொந்தமாக கார் வைத்து இருப்பவர்களுக்கும் கிடைக்கிறது. சரி, இனிமேல் கார்களுக்கு மட்டும் டீசலின் விலை உயர்த்தலாம் என்றால், பின்பு கள்ளச்சந்தையில் டீசல் விற்பனை களைகட்ட ஆரம்பித்துவிடும்.

எரிபொருள் விலையேற்றத்துக்கு, உலகச் சந்தையில் உயரும் கச்சா எண்ணெயின் விலையை எப்போதும் காரணமாகச் சொல்லும் அரசுக்கு, ஒருவேளை கச்சா எண்ணெய் விலை குறைந்தால், டீசல் விலையைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். ஆனால், டீசல் கார்களுக்கான வரியைக் கூட்டினால்... பெரிதாக எந்த மக்கள் போராட்டமும் வராது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் வரி உயர்த்தும் ஆலோசனையை அரசு பரிசீலித்து வருகிறது. விலை ஏற்றத்துக்கான அவசியம் என்ன என்று கேட்டால், நம் நாட்டின் மொத்த டீசல் வாகனங்களில், 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை கார்களின் பங்கு இருக்கிறது. சரக்கு மற்றும் தளவாடப் போக்குவரத்துக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் அரசு தரும் டீசல் மானியத்தில், கிட்டத்தட்ட ரூபாய் 7,000 கோடியில் இருந்து 8,000 கோடி வரை கார் வைத்திருப்பவர்களுக்கு மானியமாகத் தருகிறது அரசு. கார் வாங்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களுக்கு, ஏன் மானியம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் பிறந்ததே இந்த டீசல் கார்களுக்கான வரி உயர்வு.  

சரி, மக்கள் நினைக்கிறார்கள்?

டீசல் கார்கள் விலையேற்றம் நியாயமா?

பசுபதி, (ரவி டிராவல்ஸ், சென்னை):

''இந்த விலையேற்றம் எங்களை எந்த அளவு பாதிக்குமோ, அதே அளவு வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். கார் விலை ஏறினால், கண்டிப்பாக கார் வாடகையை ஏற்றுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. மிடில் கிளாஸ் குடும்பங்கள் இனி கோவில், பிக்னிக் செல்ல டிராவல்ஸ் பக்கம் வர யோசிப்பார்கள். எங்கள் தொழில் நிச்சயம் பாதிக்கும்!''

பாலாஜி, (விற்பனை மேலாளர், டாடா வி.எஸ்.டி மோட்டார்ஸ்):

டீசல் கார்கள் விலையேற்றம் நியாயமா?

''டிராவல்ஸ் கார்களுக்கு ஆயுள் வரியை உயர்த்தியதில் இருந்தே கார் விற்பனை மந்தமாகத்தான்    இருக்கிறது. வரப்போகும் இந்த டீசல் கார் வரி உயர்வு மிடில் கிளாஸ் குடும்பங்களையும், டாக்ஸி உரிமையாளர்களையும் பதம் பார்க்கும். ஹேட்ச்பேக் மாடல்கள், செடான் கார் விலை அளவுக்கு உயரப் போகிறது. கடன் மூலம் கார் வாங்குவதற்கான முன் பணம், வட்டி என எல்லாமே ஏறுமுகம்தான். ஏற்கெனவே புக்கிங் செய்யப்பட்டு இருந்தாலும், காரின் புதிய விலை என்னவோ, அதை கொடுத்துத் தான் கார் வாங்க முடியும். டீசல் இன்ஜின் கொண்ட சின்ன கார்களின் எதிர்காலம் இனி கேள்விக் குறிதான். ஏற்கெனவே பெட்ரோலின் விலை உயர்வால் தள்ளாடிக்கொண்டு இருக்கும் ஆட்டோமொபைல் துறை, மேலும் சரிவைச் சந்திக்கும்!''  

நாகராஜ், (தொழிற்சாலை - கோவை):

டீசல் கார்கள் விலையேற்றம் நியாயமா?

''டீசல் விலையை ஏற்றாமல் (இது வரையில்) தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொண்டு இருக்கும் அரசு, டீசல் கார்களுக்கு வரியை உயர்த்துவது, முதுகுக்குப் பின்னால் இருந்து குத்துவதற்குச் சமம். தற்போதெல்லாம் அரசின் கொள்கை முடிவுகள் தொடர்ந்து மக்களைக் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கும் போக்கு உருவாகி இருப்பதற்கு இது உதாரணம். கார் வாங்குபவனுக்கு வரி உயர்வு எல்லாம் ஒரு பிரச்னையா என்று தப்புக் கணக்குந் போடக் கூடாது. ஆயிரம் இரண்டாயிரம் என்றால் பரவாயில்லை. ஆனால், லட்சக்கணக்கில் உயர்த்துவதுதான் பிரச்னை. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பொறுப்பில் இருப்பவர்கள் இதை பொறுப்பாக யோசிக்க வேண்டும்.''

சந்திரன், ஸ்ரீடிராவல்ஸ் - சூலூர்:

டீசல் கார்கள் விலையேற்றம் நியாயமா?

''லைஃப் டாக்ஸை ஒரே தடவையா கட்டச் சொல்லிப் படுத்துற கஷ்டம் ஒரு புறம். இப்போ டீசல் கார்களோட கலால் வரியை அதிகப்படுத்துறதா சொல்றது டிராவல்ஸ் வெச்சு நடத்துறவங்களை உயிரோட புதைக்கிற மாதிரி இருக்குது. டிராவல்ஸ் ஓனர்கள் பெட்ரோல் கார் எடுக்கிறதில்லை. டீசல் கார்களைத்தான் வாங்குகிறோம். ரெண்டு டீசல் கார் வெச்சிருக்கிற ஒரு ஓனர் இன்னும் ரெண்டு கார்களை வாங்கினாதானே தொழில் வளரும்? ஆனா, எங்களோட தொழிலை அபிவிருத்தி பண்ணவிடாம இப்படி அந்த வரி, இந்த வரின்னு சொல்லிக்கிட்டே இருந்தா பணத்துக்கு நாங்க எங்கே போவோம்?''

அரசுதான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

எஸ்.ஷக்தி, மோ.அருண்ரூப பிரசாந்த்    ஜெ.வேங்கடராஜ்