Published:Updated:

எல்லை தாண்டியும் தொடரும் பயணங்கள்!

கோவை டொ திபெத்

எல்லை தாண்டியும் தொடரும் பயணங்கள்!

கோவை டொ திபெத்

Published:Updated:
எல்லை தாண்டியும் தொடரும் பயணங்கள்!
 ##~##

யணத்தின் பரவசத்தை அனுபவிக்க, இந்தியா முழுவதும் சாலைகளில் பயணப்பட்ட ஒருவருக்கு, எல்லை கடந்தும் பயணத்தைத் தொடர வேண்டும் என்று ஆசை எழுந்ததில் வியப்பு இல்லை. கோவையில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தில் உள்ள கயிலாய மலைக்கு, தனது மிட்சுபிஷி அவுட்லேண்டர் காரில் வந்திருந்த ஜீவானந்தத்தை, கயிலாயத்தின் அடிவாரத்தில் (டார்ச்சன்) சந்தித்தேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ஓரு காரை, இமயமலையில் கண்டதும் ஆச்சரியமாகி, அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். கோவையில் ஆட்டோமொபைல் உதிரி பாக உருக்குத் தொழிற்சாலை நடத்தி வரும் ஜீவானந்தத்துக்கு, பயணம் செய்துகொண்டே இருப்பதுதான் மிகவும் பிடித்தமான விஷயமாம். ''இவ்வளவு உயரமான இடத்துக்கு காரில் வர வேண்டும் என ஏன் தோன்றியது?'' என்ற கேள்விக்கு, ''தமிழகம் திரும்பியதும் முழுக் கதையும் பேசுவோம்'' என்று சொல்லிவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். இமயமலையில் இருந்து தமிழகம் திரும்பியதும் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஜீவாவிடம் பேசினேன்.    

''என் சின்ன வயதில் இருந்தே தொழில் தொடர்பாக, இந்தியா முழுக்க சாலைகளில் பயணம் செய்திருக்கிறேன். ஆளற்ற வனாந்தரங்களில் கருங்கூந்தல்போல வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் தனியே செல்லும்போது, பயணத்தின் சிலிர்ப்புகளை உணர்ந்திருக்கிறேன். அதுதான் இப்படி எல்லை கடந்தும் பயணிக்கத் தூண்டிய திரி!

எல்லை தாண்டியும் தொடரும் பயணங்கள்!

கடந்த ஆண்டு, இமயமலையில் உள்ள லே வரை காரில் சென்று வந்தேன். இமயமலையின் அழகிய நிலப் பரப்பும், அதல பாதாளங்களும், அதில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும் என்னை மிகவும் ஈர்த்தன. இமயமலைத் தொடரைத் தாண்டிச் சென்றால், எப்படி இருக்கும்? என அப்போது எழுந்த ஆர்வம் தான் இந்தப் பயணத்துக்கான எண்ணெய்.

'இது போன்ற பயணத்துக்குத் தனியாகச் செல்லக்கூடாது. துணைக்கு இன்னொரு காரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கொஞ்சம் ஆபத்தான பயணமும் கூட’ என்று எச்சரித்தார் ஆட்டோமொபைல் நிபுணரான எனது நண்பர். டெல்லியில் உள்ள எனது நண்பர் சஞ்சயிடம் எனது திட்டத்தைச் சொன்னதுதான் தாமதம்... 'நானும் இந்தப் பயணத்தில் கலந்துகொள்கிறேன். எனது டொயோட்டா லேண்ட் க்ரூஸரை எடுத்து வருகிறேன்’ என உற்சாகமானார். வந்தவர் தனியாக வராமல், கூடவே தன் இன்னொரு நண்பரான பர்வேஷ்ஷையும் அழைத்து வருவதாகச் சொன்னார். பற்றிக் கொண்டது பயணத் தீ!

சரி, கார்களை பயணத்துக்குத் தயார் செய்ய வேண்டுமல்லவா? அதற்காக, இது போன்ற சிக்கலான இடத்தில் ஓட்டுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட அண்டர் சேஸி புரொடெக்ட் பிளேட், ரூஃப் கேரியர் ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தினோம். காரை முழுமையாக சர்வீஸ் செய்தோம். பிரேக் பேட் செட், பிரேக் ஆயில், இன்ஜின் ஆயில், ரேடியேட்டர் கூலன்ட், ஃப்யூஸ், ஸ்டெப்னி டயர் மற்றும் ட்யூப் இரண்டு செட் தயார் செய்து வைத்துவிட்டோம்.

ஆனால், இந்தப் பயணத்துக்கு ஆர்வம் மட்டும் இருந்ததே தவிர, எப்படி நடைமுறைப் படுத்துவது என்பது பற்றி எதுவுமே தெரியவில்லை. இதற்காக, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த நண்பர் துஷார் என்பவரிடம் ஆலோசனை பெற்றோம். அதன்படி, சீனாவின் தலைநகர் பீஜிங் வரை காரில் சென்று வரலாம் எனத் திட்டமிட்டோம். இதற்கு அனுமதி எப்படி, எங்கே பெறுவது என எதுவுமே தெரியவில்லை.

எல்லை தாண்டியும் தொடரும் பயணங்கள்!

கடைசியில், இணையதளம் மூலமாக சீனாவைத் தொடர்புகொள்ள வழி கிடைத்தது. அந்த நாடு, இதற்காக சில ஏஜென்ட்டுகளை அமர்த்தி இருக்கிறது. அவர்களின் மூலம் சீனாவின் சுங்கத்துறை, போக்குவரத்துத் துறை, காவல்துறை ஆகியவற்றின் அனுமதியும், விசாவும் வேண்டி விண்ணப்பித்தோம். எங்கள் ஐந்து பேருக்கும் சீனாவின் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு, இங்குள்ள ஓட்டுநர் உரிமத்தை அனுப்பியதும், அதன் அனுபவத்தின் (வருட) அடிப்படையில் ஐந்து பேருக்கும் சீனாவின் தற்காலிக வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கினார்கள். இந்தப் பயணத்துக்கு 25 நாட்கள் மட்டுமே அனுமதி கிடைத்ததால், பீஜிங் என்பதை திபெத் தலைநகர் லாசா (Lasha) என மாற்றி அமைத்தோம். சாலை வழியாக நம் நாட்டு எல்லையைக் கடக்க, நம் நாட்டில் எந்த அனுமதியும் தேவையில்லை.

இந்தியாவில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்துக்கு, இதற்கு முன்பு யாரும் சொந்த காரில் பயணம் சென்றிருக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால், இந்தப் பயணம் எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட ஓராண்டு போராட்டத்துக்குப் பின்பு, 2012 ஆகஸ்ட் முதல் தேதி அனுமதி கிடைத்தது. இறுதியாக, ஆகஸ்ட் இரண்டாம் தேதி நான், எனது நண்பர் லியோ மற்றும் குர்மித் சிங் (மெக்கானிக்) ஆகிய மூவரும் கோவையில் இருந்து பயணத்தை ஆரம்பித்தோம்.

ஹூப்ளி, தானே, ஜோத்பூர் வழியாக ஆக்ரா சென்று சேர்ந்தோம். டெல்லியில் இருந்து வந்த நண்பர் சஞ்சய், ஆக்ராவில் எங்களுடன் இணைந்து கொள்ள... ஆறாம் தேதி இரண்டு கார்களில் புறப்பட்டோம். கோரக்பூர் வழியாக, நேபாளத்தில் நுழைந்து காத்மாண்டுவை அடைவது திட்டம். நேபாளச் சாலைகள் ஆபத்து நிறைந்த கரடுமுரடானவை. எங்கள் இருவரின் காரும் எந்தச் சிக்கலும் இல்லாமல், சுமூகமான பயணத்துக்கு உதவி செய்தது.  

நேபாள எல்லையில் அதிகாரிகளின் சோதனைகளுக்குப் பின்பு காத்மாண்டுவை அடைந்தோம். நேபாளம் - திபெத் எல்லையான கோதாரி(Kodhari) எனும் இடத்தில் ஒரு காட்டாறு பாய்கிறது. அதற்கு இடையே ஒரு பாலம். இதை நட்புப் பாலம் என்கிறார்கள். இந்த இடத்தை 13-ம் தேதி அடைந்தோம். நட்புப் பாலத்தின் நடுவே இரு நாட்டின் எல்லைகள்!

இந்த நட்புப் பாலத்தின் வழியாக சீன எல்லைக்குள் நுழைவது டிராகனுக்குள் நுழைவதுபோல் இருந்தது. அந்த அளவுக்குக் கடுமையான பாதுகாப்பு சோதனைகள். அங்கிருந்த சீன அதிகாரிகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. நாம் கொண்டு சென்ற அனுமதி ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு, 'மேலிடத்தில் ஒப்புதல் பெற வேண்டும்’ என காத்திருக்கச் சொன்னார்கள். அங்கேயே எட்டு மணி நேரம் காத்திருந்தோம். ஒரு வழியாக அனுமதி கிடைத்ததும், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தில் நுழைந்தோம். அந்தச் சாலையில் இதுவரை இந்தியாவில் இருந்து யாரும் கார் ஓட்டிச் சென்றதில்லை என்று அறிந்ததும் சிலிர்ப்பாக இருந்தது. அந்தச் சாலையில் வாகனம் ஓட்டுவதே சிறந்த அனுபவமாக இருந்தது.

அங்கிருந்து ஜாங்மு (Zangumu) என்ற இடத்தில் இரவு தங்கிவிட்டு, மறுநாள் நிலாயம் என்ற சின்ன ஊரை அடைந்தோம். கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடம் நோக்கிச் செல்வதால், 'ஆல்ட்டிட்யூட் சிக்னெஸ்’ எங்களுக்கு உடல்ரீதியாக வாந்தி, மயக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், அங்கேயே இரண்டு நாள் தங்கிவிட்டு, பின்பு சாகா (Saga) ஜோங்பா (Zongba) வழியாக மானசரோவர், கயிலாயம் சேர்ந்தோம். டார்ச்சன் என்ற இடம்தான் கயிலையின் அடிவாரம். இங்கு இரண்டு நாள் தங்கினோம்.

எங்கள் பயண இலக்கான லாசாவுக்குச் செல்லலாம் என 24-ம் தேதி தயாரானபோது, அனுமதி கிடைக்கவில்லை; காரணமும் தெரியவில்லை. சரி, வந்த வழியாகவே திரும்பிவிடுவோம் என 26-ம் தேதி கீழிறங்க ஆரம்பித்தோம். இந்தப் பயணத்தில் நாங்களே சில சமயம் சமைத்துச் சாப்பிட்டோம். சில இடங்கள், கடல் மட்டத்துக்கு மேல் 17,400 அடி உயரம் வரை இருந்ததால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை. நல்லவேளையாக, நாங்கள் கையோடு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எடுத்துச் சென்றதால், ஆக்ஸிஜன் குறைவான இடத்தில் உபயோகித்துச் சமாளித்தோம். கடுமையான வானிலை, உயர மாற்றம், குளிரின் உச்சம், சீன உணவு என எல்லாவற்றையும் சமாளித்து, மீண்டும் செப்டம்பர் இரண்டாம் தேதி கோவை வந்தபோது, எனது அவுட்லேண்டரின் ஓடோ மீட்டர் 11,000 கி.மீ ஓடியதாகக் காட்டியது.

இந்தப் பயணத்தில், எங்களுக்குத்தான் உடல் உபாதைகள் ஏற்பட்டதே தவிர, கார்களுக்கு எதுவுமே நேரவில்லை. ஒரு பஞ்சர்கூட ஆகவில்லை என்பதுதான் ஆச்சரியம். இந்தப் பயணம் தந்த உற்சாகம், த்ரில், அனுபவம் எங்களை அடுத்த பயணத்துக்குத் திட்டமிட வைத்துள்ளது. ஆம், அடுத்து சாலை வழியாகவே ஆறு நாடுகளுக்குச் சென்று வரலாம் என திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம்'' என்றார் ஜீவானந்தம்.

தேடலுக்கும், பயணங்களுக்கும் எல்லைகள் ஏது?!