Published:Updated:

தேசிய கார் ரேஸ்

சாம்பியன் சுந்தர்!

 ##~##

ஷ்வின் சுந்தர், அர்ஜுன் பாலு - இன்னும் ஒரு ரேஸ் மீதம் இருக்கும் நிலையில், இருவருமே வெவ்வேறு பிரிவுகளில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். ஜே.கே.டயர் தேசிய கார் ரேஸ் பந்தயத்தின் ஐந்தாவது சுற்று, அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவின் இளம் ரேஸ் வீரர்கள் மோதிக்கொண்ட இந்த ரேஸைக் காண, கூட்டம் களைகட்டியது!

பார்முலா-4

ரேஸின் ஹைலைட்டே எல்ஜிபி ஃபார்முலா-4 ரேஸ்தான். இந்தியாவின் முன்னணி ரேஸ் வீரரான அஷ்வின் சுந்தருக்கும், சரோஷ் ஹட்டாரியாவுக்கும் இடையேயான சேஸிங்தான் ரேஸைப் பரபரப்பாக்கியது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற மூன்று ரேஸ்களிலுமே வெற்றி பெற்று அசத்தினார் அஷ்வின் சுந்தர். ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி ரேஸில் ஒரு விநாடி வித்தியாசத்தில் சரோஷ் ஹட்டாரியாவைத் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றி பெற்றார் அஷ்வின் சுந்தர். இன்னும் ஒரு சுற்று மீதம் இருந்தாலும், சாம்பியன்ஷிப் பட்டியலில் 186 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் அஷ்வின் சுந்தரைவிட 54 புள்ளிகள் பின்தங்கிஇருக்கும் சரோஷ் ஹட்டாரியா, இறுதி ரேஸில் என்ன நடந்தாலும் அஷ்வினைவிட அதிகப் புள்ளிகள் பெற முடியாது. சாம்பியன்ஷிப் பட்டியலில் 106 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் சரண் விக்ரம்.

தேசிய கார் ரேஸ்

இந்தியன் டூரிங் கார்ஸ்!

50 வயதைத் தாண்டிவிட்ட ரேஸர்கள் முதல், 18 வயது ரேஸர்கள் வரை கலந்துகொள்ளும் இந்தியன் டூரிங் கார்ஸ் போட்டி, இந்த ஆண்டு மிகவும் த்ரில்லிங்காக அமைந்தது. திடீரென கார் வெடித்தது, அந்தரத்தில் கார் பறந்தது எனப் பல்வேறு சாகசங்களைக் காட்டிய இந்த கார் ரேஸ் போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்றவர் அர்ஜுன் பாலு. கோவையைச் சேர்ந்த அர்ஜுன் பாலு இரண்டாம் இடத்தில் இருந்த லீலா கிருஷ்ணனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஏழு முறை இந்திய தேசிய கார் ரேஸ் சாம்பியன் பட்டம் வென்றவரான லீலா கிருஷ்ணன், இந்தியாவின் பிரபல ட்யூனர்களில் ஒருவர். 17 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு ரேஸ் களத்தில் குதித்த லீலா கிருஷ்ணனை 37 வயதான அர்ஜூன் பாலு தோற்கடித்திருக்கிறார்.

சாம்பியன்ஷிப் பட்டியலில் 168 புள்ளிகளுடன் அர்ஜுன் பாலு முதல் இடத்தில் இருக்கிறார். லீலா கிருஷ்ணன் 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பதால், அடுத்த ரேஸில் அர்ஜுன் பாலு கலந்து கொள்ளவில்லை என்றாலும்... சாம்பியன் அர்ஜூன் பாலுதான்!

தேசிய கார் ரேஸ்

ஜூனியர் டூரிங் கார்ஸ்

ஜூனியர் டூரிங் கார்ஸ் பிரிவில் இன்னும் சாம்பியனுக்கான போட்டா போட்டி மீதம் இருக்கிறது. 173 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கும், 140 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் தில்ஜித் ஷாஜிக்கும் இடையே, பரபர கிளைமேக்ஸை இறுதிச் சுற்றில் பார்க்கலாம்!

போலோ ஆர் கப்!

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் நடத்திவரும் போலோ ஆர் கப் ரேஸிலும் சாம்பியன்ஷிப் இன்னும் சீல் செய்யப்படவில்லை. சென்னையில் நடந்த முதல் ரேஸில் அமேயா வால்வால்கரும், இரண்டாவது ரேஸில் ராஹுல் நூரானியும் வெற்றி பெற்றனர். டெல்லி புத் சர்க்யூட்டில் நடைபெற இருக்கும் இறுதிச் சுற்றில், வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்துவிடும்!

தேசிய கார் ரேஸ்