ஆட்டோ ஃபோகஸ்!
 ##~##

'சின்ன கேமராவாக இருந்தாலும், அதன் முழுமையான தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொண்டு, சரியான கோணத்தில், சரியான லைட்டிங்கில் படம் எடுத்து அனுப்புங்கள். உங்கள் படங்களைப் பார்க்க நான் ஆவலோடு இருக்கிறேன்’ என்று கடந்த இதழில் சொல்லி இருந்தேன். வெவ்வேறு லைட்டிங்கில், பல கோணங்களில் நீங்கள் எடுத்து அனுப்பிய படங்கள் என் இன்பாக்ஸை நிரப்பிவிட்டன. வாழ்த்துகள் வாசகர்களே. நீங்கள் அனுப்பிய படங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதை நீங்கள் அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இந்த இதழில், மோஷன் போட்டோகிராஃபி பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். ஆட்டோமொபைல் என்பதே மோஷன்தான். அதாவது, வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல வேண்டும். மூவ்மென்ட் இருந்தால்தான் காரின் முழுமையான டைனமிக்ஸ் தெரியும்; டிரைவிங் ப்ளஷர் தெரியும்; படம் தத்ரூபமாகவும் இருக்கும்.

அதை உண்மையாகக் காண்பிக்க வேண்டும் என்றால், கேமராவும் - காரும் ஒரே வேகத்தில் 'மூவ்’ ஆக வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, சினிமாவில் செய்வதுபோல எஸ்கார்ட் காரில் கேமராவைத் தோளில் தாங்கியபடி கேமராமேன் ஜன்னலில் தொங்கியபடியே பயணிக்க... ஷ§ட் செய்ய வேண்டிய காரைப் பின்னால் வரவிட்டுப் படம் எடுக்கலாம். என்னுடைய ஆரம்ப காலங்களில் நானும் இந்த டெக்னிக் படிதான் படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால், இதில் மைனஸ்கள் அதிகம். முதலில், பாதுகாப்பு கிடையாது. இந்த ஷாட்டை எடுக்க வேண்டும் என்றால், அந்தச் சாலையின் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல், படங்களில் ஷேக் அதிகமாக இருக்கும். ஷாட் சரியாகக் கிடைக்குமா என்பதும் சந்தேகம். உழைப்பைவிட அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்க வேண்டும்.

ஆட்டோ ஃபோகஸ்!

இரண்டாவது வழி, மோஷன் ரிக்கில் படம் எடுப்பது. வெளிநாடுகளில் கார், பைக்குகளை மோஷன் ரிக்கில் வைத்துத்தான் படம் எடுப்பார்கள். ரிக் என்பது ஒரு கருவி. ஆனால், இந்தியாவில் மோஷன் ரிக் இல்லை. நாமே தயார் செய்ய வேண்டும். பலர் இதற்கு ஆகும் செலவை நினைத்து சாதாரணமாகப் படம் எடுத்து, அதை போட்டோஷாப்பில் மோஷன் படம் போல மாற்றுவார்கள். ஆனால், இதில் முழுமையான ரிசல்ட் கிடைக்காது. மோஷன் ரிக்கில் ஷூட் செய்ய வேண்டும் என்று, இன்ஜினீயரிங் தெரிந்த நண்பர்களின் துணையோடு, நானே மோஷன் ரிக்கைத் தயார் செய்து ஷ§ட் செய்ய ஆரம்பித்தேன். மோஷன் ரிக்கைத் தயார் செய்வதற்கு மட்டும் 5 லட்சம் ரூபாய் செலவானது.

ஆட்டோ ஃபோகஸ்!

ரிக்கை காருக்கு அடியில் பொருத்திவிட்டு அதன் எக்ஸ்டென்ஷனில் கேமராவை ஃபிக்ஸ் செய்ய வேண்டும். கார் நகரும்போதே கேமராவும் கூடவே சேர்ந்து நகரும். காருடனேயே கேமரா பொருத்தப்பட்டு இருப்பதால், கேமராவைப் பொறுத்தவரை கார் நகரவில்லை. இதனால், போட்டோவில் கார் ஷார்ப்பாக இருக்கும். காரின் டிசைன் முழுமையாகத் தெரியும். காருக்கு வெளியே ரோடு, மரங்கள் எல்லாம் 'ப்ளர்’ ஆகத் தெரியும். காரணம், கேமராவைப் பொறுத்தவரை மற்றவை நகர்கிறது, காரைத் தவிர. எந்த இடத்தில் அதாவது, எந்த பேக்ரவுண்ட்டில் நாம் படம் எடுக்க வேண்டுமோ, அந்த இடத்தில் சரியான படம் கிடைக்கும்.

முதன்முதலில் நான் சொந்தமாக ரிக் தயாரித்து, மிட்சுபிஷி சிடியா காரைத்தான் படம் எடுத்தேன். மாலை நேர சூரிய வெளிச்சத்தில் சிடியாவைப் படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் பிளான். ரிக்கை ரெடி செய்து வைத்துவிட்டு, அடுத்த நாள் மாலை நேர ஷூட்டிங்குக்கு காலை 7.30 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடிவிட்டோம். ரிக்கை வைத்து டெஸ்ட் செய்யலாம் என்று ரிக்கைப் பொருத்தினேன். காரை நகர்த்தியடவுனே ரிக் தனியாகக் கீழே சாய... ஆரம்பமே தோல்வி. மாலை 5.30 மணிக்குத்தான் ஷூட் என்பதால், உடனடியாக ரிக்கைச் சரி செய்யும் வேலையில் இறங்கி, மதியத்துக்குள் சரிசெய்து, ட்ரையல் பார்த்து, மாலை நேரத்தில் மோஷன் ரிக் மூலம் சிடியாவைப் படம் பிடித்து விட்டேன். மொத்தம் மூன்று நாட்கள் ஷூட்டிங். முதல் இரண்டு நாட்களும் மிட்சுபிஷியில் இருந்து அதிகாரிகள் யாரும் வரைவில்லை. கடைசி நாள் ஷூட்டிங்கின் போதுதான் மிட்சுபிஷியின் தலைவர் வந்தார். அவரிடம் விளம்பர ஏஜென்ஸிகாரர், ''வெளிநாட்டில் சிடியாவை எப்படி ஷூட் செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்'' என்று ஒரு படத்தை லேப்-டாப்பில் காட்டினார். ஆச்சரியப்பட்ட மிட்சுபிஷி அதிகாரி, ''வெளிநாட்டில் எப்படி எடுத்திருக்கிறார்கள் பாருங்கள். இதுபோலத்தான் நாமும் எடுக்க வேண்டும்'' என்று சொல்ல... ஏஜென்சிகாரர், ''இது, இங்கே நேற்று எடுத்த படம்தான்'' என்று சொல்லவும், அந்த அதிகாரி ஷாக் ஆகிவிட்டார். இந்த ஷூட்டுக்குப் பின்புதான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

மோஷன் ரிக்கைப் பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், போட்டோஷாப் சாஃப்ட்வேர் இருக்கிறது. அதில் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று போட்டோகிராபர்கள் நினைக்கக் கூடாது. இயற்கையாக, உண்மையாக ஒரு படத்தை எடுக்க என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் செய்ய வேண்டும். அப்படி முயன்றால்தான் சிறப்பான படங்களை எடுக்க முடியும். நீங்கள் போட்டோகிராஃபியில் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.

(படம் பேசும்)

ஆட்டோ ஃபோகஸ்!