Published:Updated:

கிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை

கோட்டை முதல் குமரி வரை

கிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை

கோட்டை முதல் குமரி வரை

Published:Updated:
கிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை
 ##~##

மெர்சிடீஸ் பென்ஸ் இ கிளாஸ் கூபே, நம் அலுவலகத்தில் காத்திருந்தது. சொகுசு கார் என்றாலும், கூபே மாடல் பறப்பதற்குத்தான். ஆனால், அதற்கு சாலை வேண்டுமே? டூர் ஸ்பெஷல் இதழ் தயாராகிக்கொண்டு இருந்தது. சரி, பென்ஸில் தமிழகத்தில் இருக்கும் நான்கு வழிச் சாலைகள் அனைத்தையும் இதன் மூலம் அளந்துவிடுவோம் எனத் தீர்மானித்துப் புறப்பட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 புதிதாக பென்ஸில் அறிமுகமாகி இருக்கும் 'இ கிளாஸ்’ கூபே மாடல் படகு போலவே இருக்கிறது. பொதுவாக, கூபே மாடலில் இருவர் மட்டுமே அமர முடியும். ஆனால், நம் நாட்டில் அறிமுகமாகி இருக்கும் இ கிளாஸ் கூபே மாடலில், நான்கு சீட்டுகள். சீட்டுகள் அனைத்தும் மிகவும் தாழ்வாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், நன்றாக வளைந்து மடிந்துதான் காருக்குள் நுழைய வேண்டும். அதேபோல், கூபே மாடல் என்பதால், இரண்டு கதவுகள் மட்டுமே! அதனால், பின்பக்க இருக்கைக்குச் செல்ல தனிப் பயிற்சி தேவை. ஆனால், காரின் கதவுகள் பெரிதாகவும், மிக அகலமாக திறந்துவைக்கும்படி வடிவமைத்து இருப்பதால், கூடுதல் சிரமத்தைத் தரவில்லை. காரின் முன் இருக்கைகள் மிக மிக வசதியானவை. ஆனால், பின்னிருக்கைகள் கொஞ்சம் நெருக்கடியாக இருக்கின்றன. டிரைவர் இருக்கையில் அமர்ந்தால் விமானத்தின் காக்பிட் போல இருக்கிறது. விண்ட் ஷீல்டு விசாலமாக இருப்பதால், சாலையைத் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. இதில் இருப்பது 3,498 சிசி கொள்ளளவு கொண்ட வி6 பெட்ரோல் இன்ஜின். அதனால், சக்திக்குப் பஞ்சம் இல்லை. ரியர் வீல் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட இதில் இருப்பது, 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்ல, நேர் சாலையாக இல்லாமல் 'ஜிக்ஜாக்’ ஆக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். முதலில், சென்னையில் இருந்து ஈசிஆர் சாலையில் புதுச்சேரி. அங்கிருந்து திண்டிவனம். அதன் பின்பு திருச்சி, மதுரை வரை நான்கு வழிச் சாலைதான். மதுரையில் இருந்து ரிங் ரோட்டில் நுழைந்தால், அங்கிருந்து தூத்துக்குடிக்கும் நான்கு வழிச் சாலைதான். அங்கிருந்து திருச்செந்தூர், உவரி, கூடங்குளம் வழியாக கன்னியாகுமரி. அங்கிருந்து திரும்பி திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் மீண்டும் சென்னை என்பதுதான் திட்டம்.

கிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை

சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு ஈசிஆர் சாலையில் பயணத்தைத் துவங்கி, புதுச்சேரியில் போட்டோ ஷூட் முடித்துவிட்டு திண்டிவனம் சாலையில் நுழைந்தோம். புதுச்சேரி நகர் கடந்ததும் தொடங்குகிறது நான்கு வழிச் சாலை. இதை சாலை என்பதைவிட ரன்வே என்று சொல்லலாம். இருபதே நிமிடங்களில் திண்டிவனம் எட்டி திருச்சி செல்லும் சாலையில் நுழைந்தோம். சென்னையில் இருந்து திண்டிவனம் வரை இருக்கும் நால்வழிச் சாலை ஏற்கெனவே இருந்ததுதான். திண்டிவனத்தில் இருந்து மதுரை வரை இருப்பதுதான் புதிய சாலை. ஆனால், இந்தச் சாலைகளில் ஏற்படும் சின்னச்சின்ன சேதாரங்களை, மேடு பள்ளங்களை உடனடியாகக் கவனிப்பதே இல்லை. அதனால், இந்தச் சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் அலுங்கிக் குலுங்கி, திடீரென எதிர்ப்படும் பள்ளத்தைக் கண்டு பிரேக் அடித்து, மேடுகளைத் தவிர்த்து ஓட்ட வேண்டியிருக்கிறது. பென்ஸ் இ கிளாஸ் கூபேவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் குறைவு. டோல்கேட்டுகளில் இருக்கும் ஸ்பீடு பிரேக்கர்களையே சமாளிக்க முடியாமல், சில இடங்களில் உரசியது. சஸ்பென்ஷன் செட்டிங் மிகவும் சாஃப்ட். அதனால், சாலையில் இருக்கும் மேடு பள்ளங்கள் காரை சீராகப் பயணிக்க விடாமல் தொந்தரவு செய்துகொண்டே இருந்தன.

கிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை

மதியம் திருச்சியை எட்டியதும் நகருக்குள் நுழைந்து மதிய உணவை முடித்துவிட்டு மதுரை நோக்கிப் புறப்பட்டோம். மதுரை சாலையில் எந்த வசதியுமே இருப்பது போலத் தெரியவில்லை. சாலைகளில் நடுவே செடிகள் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம், இரவில் எதிர்திசையில் வரும் வாகனங்களின் வெளிச்சத்தால் தடுமாறக் கூடாது. ஆனால், இங்கு ஒப்புக்குக்கூட அப்படி எந்த முயற்சியும் நடக்கவில்லை. மதுரை அடைந்ததும் ரிங் ரோடு எனும் மகா மோசமான சாலை வழியாக, தூத்துக்குடி பைபாஸ் சாலையை அடைந்தோம். இங்கிருந்து நான்கு வழிச் சாலைதான். சாலை மேடு பள்ளங்கள் இல்லாமல் நன்றாக இருக்கிறது. ஆனால், இங்கும் சாலையின் நடுவே செடிகள் இல்லை. இரவு 7 மணிக்கு தூத்துக்குடி அடைந்தோம். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பென்ஸ் காரில் 12 மணி நேரப் பயணமா என வியக்க வேண்டாம். ஈசிஆர் சாலை, அடிக்கடி நடுவே போட்டோ ஷூட் என பல பிரேக்குகள் போட்டதால் இந்தத் தாமதம்.

கிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை

தூத்துக்குடியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது போன்ற விஷயங்கள் குறைவுதான் என்றாலும், இது ஒரு தொழில் நகரம். இந்த மாவட்டத்தில் முக்கியத் தொழிலாக மீன் பிடித்தலைச் சொல்லலாம். அதேபோல், இந்த நகரம் தொழில் வளர்ச்சி அடைந்ததற்கு துறைமுகம் முக்கியக் காரணம். தெர்மல் பவர் ஸ்டேஷன், ஸ்பிக், ஸ்டெர்லைட் தொழிற்சாலைகள் எனப் பரபரப்பான நகரம்.

முயல் தீவு என்று ஓர் அருமையான இடம் இருக்கிறது. இங்கு விசேஷ நாட்களில் மட்டும் அனுமதித்து வந்தார்கள். சமீபத்தில் அதற்கும் தடா. எனவே, மறுநாள் காலை தூத்துக்குடியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில் புறப்பட்டோம். முத்தையாபுரம், பழையகாயல், முக்காணி, ஆத்தூர், ஆறுமுகனேரி, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் என வழியில் ஏராளமான ஊர்கள். தமிழகத்தின் பல முக்கியப் புள்ளிகளின் சொந்த ஊர்கள் இந்தப் பகுதியில்தான் இருக்கின்றன. ஆனால், சாலைதான் மகா மோசம். தூத்துக்குடி டு திருச்செந்தூர் 40 கி.மீ தூரத்தைக் கடக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. இதில் ஸ்பீடு பிரேக்கர்களும் அதிகம். ஒவ்வொன்றும், சிறு குன்றுகள் போல இருக்கின்றன. இதில், பென்ஸ் கூபே படாதபாடுபட்டுத்தான் திருச்செந்தூரை அடைந்தது.

கன்னியாகுமரி செல்ல இரு வழித் தடங்கள் உள்ளன. ஒன்று திருநெல்வேலி வழியாக நான்கு வழிச் சாலை. மற்றொன்று, மணப்பாடு, உவரி, கூடங்குளம் வழியாக கடற்கரை ஓரமாகவே இருக்கும் ஈசிஆர் சாலை. இந்தச் சாலை நமக்கு புதிய வழித் தடம். எனவே, இந்தச் சாலையையே தேர்ந்தெடுத்தோம். மணப்பாடு மணல் குன்று மீது இருக்கும் தேவாலயத்துக்கு காரை ஏற்றியபோதுதான் மணப்பாடு கடற்கரையின் அழகிய முகம் தெரிகிறது. மணிரத்னத்தின் 'கடல்’ படம் இங்கேதான் படம் பிடிக்கப்பட்டது.

அங்கிருந்து உவரி நோக்கிப் பயணித்தோம். வழியெங்கும் உடை முள் காடு, பனை மரங்கள். இந்தச் சாலையில் அதிகம் போக்குவரத்து இல்லை. ஆனால், அவ்வப்போது செம்புழுதி தூவியபடி லாரிகள்தான் அதிகம் தென்படுகின்றன. கடற்கரை ஓரம் இருக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, மீண்டும் புறப்பட்டோம். சில கி.மீ கடந்ததும் சட்டென நிலக் காட்சி மாற ஆரம்பித்தது. ராட்சசக் காற்றாலைகள் தென்பட ஆரம்பித்தன. கூடங்குளத்தை நெருங்குகிறோம் என்பதை தூரத்தில் தெரியும் அணு உலை உணர்த்தியது. இங்கு சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. சுமார் 20 கி.மீ தூரம் வரை மண் சாலையிலேயே கூடங்குளத்தை அடைந்தோம். ஓராண்டுக்கும் மேலாக அற வழியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் ஊர் இது. கூடங்குளத்தில் தற்போது போராட்டம் நடக்கவில்லை. கடற்கரை ஓரமுள்ள இடிந்தகரை என்ற கிராமத்தில்தான் நடக்கிறது. அணு உலைக்குச் செல்லும் வாயிலில் ஏராளமான பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை

கூடங்குளத்தில் இருந்து நால்வழிச் சாலையை எட்டும் வரை சாலை மிக நன்றாக அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நுழைந்து கன்னியாகுமரியை நெருங்கினோம். ஆனால், மீண்டும் ஒரு சின்ன சாலைக்குள் புகுந்துதான் கன்னியாகுமரிக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. காரணம், இடையே சில கி.மீ தூரத்துக்கு சாலை போடவே இல்லை. ஆனால், குமரி முனையில் முடியும் இடத்தில் சாலை இருக்கிறது. இடையே என்னதான் நடக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

கன்னியாகுமரிக்கு சூரியன் மறையும் முன்பே எட்டிவிட்டோம். காற்று பலமாக வீசிக்கொண்டு இருந்தது. மழை வருவதற்கான அறிகுறி தெரிந்தது. சீசன் இன்னும் ஆரம்பமாகவில்லை என்பதால், முக்கடல் சந்திப்பு, காந்தி மண்டபம் போன்ற இடங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. திருவள்ளுவர் சிலைக்கு பராமரிப்புப் பணி நடந்துகொண்டு இருந்ததால், விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகுப் போக்குவரத்து இருந்தது. குமரியில் போட்டோ ஷூட் முடித்துவிட்டு மீண்டும் நான்கு வழிச் சாலை வழியே திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டோம். திருநெல்வேலி வரை சாலை நன்றாக இருக்கிறது. திருநெல்வேலி தாண்டியதும். இருட்டத் துவங்க, மழை எங்களைப் பின் தொடர ஆரம்பித்தது. பென்ஸின் ஹெட்லைட்டை ஒளிரவிட்டோம். ஆனால், இங்கும் சாலையில் நடுவே செடிகள் சரிவர வளர்க்கப்படாமல் இருந்ததால், கொஞ்சம் நிதானமாகவே ஓட்ட வேண்டி இருந்தது. சாலையும் பராமரிப்பு இன்றியே இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆனால், மதுரையை எட்டியதும் சாலைக்கு வேறு ஒரு முகம் கிடைத்தது. கச்சிதமான செடி வளர்ப்பும், சாலையின் தரமும் ஆக்ஸிலரேட்டரை மிதிக்கத் தூண்டியது. திண்டுக்கல்லை எட்டியதும் கரூர் பைபாஸ் சாலை அருகே விடுதி ஒன்றில் தங்கினோம்.

கிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை

அதிகாலையில் துவங்கிய மழை, விடிய விடிய கொட்டித் தீர்த்தது. கரூர் பைபாஸ் சாலையில் ஏறி நால்வழிச் சாலையில் நுழைந்தோம். மிகத் தரமான சாலை. கரூர் தாண்டி நாமக்கல் நகர எல்லையில் மட்டும் பக்கவாட்டுப் போக்குவரத்தால் நால்வழிச் சாலையில் நிதானமாகவே செல்ல நேர்ந்தது. சேலம் கடந்து கிருஷ்ணகிரி வரை, சாலை மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் நால்வழிச் சாலைகளில் தற்போது சிறந்த சாலை என்றால், அதை மதுரை - கிருஷ்ணகிரி சாலைதான். பராமரிப்பும் கச்சிதம். சென்னை - பெங்களூரு சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும் வேலைகள் நடந்துவருவதால் அதைக் கணக்கில்கொள்ள முடியாது.

கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை சாலையில் காரைத் திருப்பினோம். ஆம்பூர், வேலூர், வழியாக சென்னை சேர்ந்தோம். பென்ஸின் டேஷ்போர்டில் இருந்த ஓடோ மீட்டரை பார்த்தபோது, இந்த மூன்று நாட்களில் மொத்தம் 1,723 கி.மீ தூரம் பயணம் செய்த விபரத்தைக் காட்டியது. ஆனால், இந்தப் பயணத்தை அலுப்பே இல்லாமல் சொகுசாக ஆக்கிய பெருமை மெர்சிடீஸ் பென்ஸ் இ கிளாஸ் கூபே காரையே சேரும்!