##~##

'வரும் முன் காப்போம்’ என்பது நமக்கு மட்டும் அல்ல... வாகனத்துக்கும் 100 சதவிகிதம் பொருந்தும். காரில் திடீரென எந்தப் பாகமும் செயலிழக்காது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிரச்னை ஆரம்பித்து, பெரிய ரிப்பேரில் முடியும். அதனால், கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தாலே, பண விரயத்தில் இருந்து தப்ப முடியும். காரின் உரிமையாளராக இருக்கும் ஒருவர், காரின் எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்திருக்க முடியாதுதான். ஆனால், தனது காரைப் பற்றிய அடிப்படை விஷயங்களையும், சின்னச் சின்னப் பராமரிப்பு முறைகளையும் அறிந்துவைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில், கார் செல்லும் இடத்துக்கு எல்லாம் மெக்கானிக்கையும் அழைத்துக் கொண்டுசெல்ல முடியாதே. காரின் உரிமையாளரான ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறார் டாடா மோட்டார்ஸ் டீலரான, சென்னை வி.எஸ்.டி மோட்டார்ஸ் சர்வீஸ் சென்டரைச் சேர்ந்த தலைமை மேலாளர் குகன். 

செல்ஃப் செக்கப்

நம்மால் முடியும்!

காலையில் காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு, பானெட்டைத் திறந்து சில விஷயங்களை நீங்களே சோதிக்கலாம். இதை தினமும் செய்தாலும் சரி அல்லது வாரம் ஒருமுறை செய்தாலும் சரி. முக்கியமாக, இன்ஜின் ஆயில் அளவைச் சோதிக்க வேண்டும். அதேபோல கூலன்ட், கிளட்ச் ஃப்ளூயிட், பிரேக் ஆயில், ஸ்டீயரிங் ஆயில், பேட்டரி எலெக்ட்ரோட் லெவல் என அனைத்தையுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ள 'மினிமம் - மேக்ஸிமம்’ அளவுக்குள் இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மால் முடியும்!

ரெகுலர் செக்கப்

டயர்களில் காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா, டயரின் ஒரு சில இடங்களில் மட்டும் தேய்மானம் அதிகமாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். டயர்கள், பரவலாகத் தேயாமல் விட்டு விட்டுத் தேய்ந்திருந்தால், அலைன்மென்ட் சரியாக இல்லாமல் இருக்கலாம் அல்லது சஸ்பென்ஷனில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். இவை உடனடியாக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்று தீர்க்க வேண்டிய பிரச்னை.

காரை ஸ்டார்ட் செய்ததும் ஆக்ஸிலரேட்டரை மிதிக்காமல், சில விநாடிகள் ஐடிலிங்கில் இயங்கிய பிறகு படிப்படியாக உயர்த்திப் பாருங்கள். அப்போது இன்ஜின், ஸ்மூத்தாக வேறு சத்தம் இல்லாமல் சீராக இயங்குகிறதா எனக் கவனியுங்கள். ஆக்ஸிலரேட்டரை உயர்த்திவிட்டு டக்கென ரிலீஸ் செய்யுங்கள். இப்போது இன்ஜின் ஆர்பிஎம் படிப்படியாகக் குறைய வேண்டும். அப்படி சீராக இல்லாமல் இருந்தால், கேபிளில் அல்லது கார்புரேட்டரில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

கிளட்ச் மிதித்து கியர் மாற்றி மீண்டும் கிளட்ச்சை ரிலீஸ் செய்யும்போது கார் சீராகச் செல்கிறதா அல்லது லேசான ஜெர்க் இருக்கிறதா என்று கவனியுங்கள். ஜெர்க் இருந்தால் கிளட்ச்சில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

நம்மால் முடியும்!

சிறிது தூரம் கார் நகர்ந்ததும், பிரேக் பெடலில் கால் வைத்து லேசாக அழுத்துங்கள். உங்கள் விசைக்கு ஏற்ப கார் வேகம் குறைந்து நிற்க வேண்டும். பிரேக் பெடல் பாதி தூரம் சென்ற பிறகு தான் பிரேக் இயங்குகிறது என்றால், பிரேக்கைக் கவனிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

காரை ஸ்டார்ட் செய்யும்போது ஏ.சி, ஹெட்லைட் , மியூஸிக் சிஸ்டம் போன்ற எலெக்ட்ரிக்கல் உபகரணங்கள் ஆஃப் செய்து இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்துகொண்டு ஸ்டார்ட் செய்யுங்கள்.

ஸ்டார்ட் செய்த பிறகு பானெட்டில் இருந்து 'கீச் கீச்’ எனச் சத்தம் வந்தால், பெல்ட் அல்லது பேரிங் பிரச்னையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், பிரேக் அடிக்கும்போதும் இதுபோல சத்தம் வந்தால், பிரேக் டிரம்மில் பிரச்னை இருக்கும்.

மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது சத்தம் வந்தால், சஸ்பென்ஷனில் இருந்து வரலாம். அதைச் சோதிப்பது அவசியம்.

கியர் மாற்றும்போது ஜெர்க் உணர்ந்தால், கிளட்ச் அல்லது கியர் பாக்ஸில் பிரச்னை இருக்கும் என்பதை அறிந்துகொள்ளவும். பல சமயம், ஹேண்ட் பிரேக் போட்டவாறு காரை இயக்குகிறோம் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். காரை ஸ்டார்ட் செய்து கியர் மாற்றுவதற்கு முன்பு, அதைச் சோதிக்க மறக்காதீர்கள். வெயிலில் காரை நிறுத்த நேர்ந்தால், வைப்பரைத் தூக்கிவைக்கலாம் அல்லது தெர்மோகோல் சீட்டை அதில் வைக்கலாம்.

திடீரென காரில் ஃப்யூஸ் போய்விட்டால் அதை எங்கே எப்படி மாற்ற வேண்டும் என்பதை மெக்கானிக்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், டயர் பஞ்சராகிவிட்டால் ஸ்டெப்னியை எப்படி மாற்ற வேண்டும் என்பதை ஒருமுறையாவது மெக்கானிக்கிடம் பயிற்சி எடுப்பது மிகவும் நல்லது. அதேபோல், காரை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். ஸ்டெப்னி டயர் தேவையான காற்றழுத்தத்துடன் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

காரைப் பார்க்கிங் செய்யும் இடம் சுத்தமான இடமாக இருந்தால் நல்லது. ஏனெனில், எலிகள் இன்ஜின் 'பே’யில் புகுந்து எலெக்ட்ரிக்கல் ஒயர்களை நாசம் செய்துவிடும் வாய்ப்பு உண்டு. எலித் தொல்லை இருந்தால் இன்ஜின் 'பே’ அருகில் புகையிலைத் துண்டு வைப்பதுதான் சிறந்த வழி.

சர்வீஸ்

கார் தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ள கால - கி.மீ இடைவெளியில், சரியாக சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டுசென்றுவிடுங்கள். இதைச் சரியாகச் செய்தாலே கார் - இன்ஜின் ஆயுள் நீடிக்கும். அதேபோல், ஃப்ரீ சர்வீஸ் முடிந்த பிறகு எக்ஸ்டெண்டட் வாரன்டி இருந்தால், அதைப் பயன்படுத்தலாம். இதற்குப் பெரும்பாலும் குறைவான தொகையாகத்தான் இருக்கும். காருக்கு ஏற்படும் எதிர்பாராத பெரிய செலவுகளை இது கட்டுப்படுத்திவிடும்.

இன்ஷூரன்ஸை தடையின்றி புதுப்பித்துக்கொண்டே இருங்கள். இதில், காம்ப்ரஹென்ஸிவ் பாலிஸி இருந்தால் மட்டுமே, ஆபத்தான சமயத்தில் ஆபத்பாந்தவனாக விளங்கும்.

 நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு