Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

ந்த காரை வாங்குவது? எந்த பேங்கில் லோன் வாங்குவது என்பதையெல்லாம்விட குழப்பியடிப்பது, எங்கே சர்வீஸ் விடுவது என்ற கேள்விதான்! கார் வாங்கிய கம்பனியிலேயே சர்வீஸ் விடலாம்; அதுதான் சிறந்தது என்பது பலரின் கருத்து. முதல் மூன்று ஃப்ரீ சர்வீஸ் வரை ஒரு சிக்கலும் இல்லை; கம்பெனி ஷோ ரூமிலேயே சர்வீஸ் விடலாம். அதற்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் குழப்பம் வரும்.

மல்ட்டி பிராண்ட் கார் சர்வீஸ் சென்டரில் இருந்து, 33-வது தடவையாக அழைக்கும் கொஞ்சும் கிளியின் குரலில் மயங்கி, அங்கே சர்வீஸ் விட்டுப் பார்ப்போம். பின்பு, சின்னப் பிரச்னைக்காக லோக்கல் மெக்கானிக்கிடம் விடும்போது, அவர் நம்மை செமையாக அசத்த... அவரிடம் ஒரு வருடம் மாட்டிக்கொள்வோம். திரும்ப லோக்கல் மெக்கானிக் சொதப்ப... கம்பெனி ஷோ ரூமிலேயே விடுவது என... இந்தச் சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

##~##

காரை சர்வீஸ் விட்டு எடுத்தால் எப்படி இருக்க வேண்டும்? தாய் வீடு சென்று திரும்பும் மனைவிபோல சும்மா பளபளவென இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், பல சமயங்களில், குடிகாரக் கணவனிடம் சிக்கிச் சீரழிந்து, மனம் வெறுத்து தாய்வீடு செல்லும் மனைவி போல இருக்கும்!

சிலர், தினமும் அவர்கள் குளிக்கிறார்களோ இல்லையோ, கர்ம சிரத்தையாக காரைக் கழுவிவிடுவார்கள். அதற்குப் பிறகு, காரை கவர் போட்டு மூடிவிட்டு இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிவிடுவார்கள். காரை ஓட்டுகிறார்களோ இல்லையோ, இந்தக் குல வழக்கம் தினமும் தொடரும். வெளியே அந்த அளவுக்குக் கழுவி ஊத்துகிறவர்கள், உள்ளே இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றி கண்டு கொள்ளவே மாட்டார்கள். மூன்று ஃப்ரீ சர்வீஸ் விட்டதோடு சரி... எப்போதாவது கார் வழியில் நின்றுவிட்டால், எல்லாம் தெரிந்த மாதிரி பானெட்டை முதல் முறையாகத் திறந்து, எக்ஸிபிஷனில் பார்ப்பது போல முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டும், ஸ்டைலாக நின்றுகொண்டும் மெக்கானிக் வரும் வரை நோட்டம் விடுவது இவர்களின் பாரம்பரியப் பழக்கம். இந்த லட்சணத்தில் காரின் உள்ளே இருந்து மனைவி வேறு, 'சரி பண்ணிட்டீங்களா?’ என அப்பாவியாகக் குரல் விடுவார்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், முன்கூட்டியே காரை சர்வீஸ் விடுவது மற்றும் தேவையானபோது உடனே ஸ்பேர் பார்ட்ஸை மாற்றிவிடுவது என் வழக்கம். நாம் என்னதான் பக்கா பிளானிங்காக இருந்தாலும், நம்மை சுளுக்கு எடுக்க சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் படித்துவிட்டு ரெடியாக இருக்கிறார்களே, அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியுமா?

முன்பு, ஹூண்டாய் நிறுவனமே நடத்தும் 'ஹூண்டாய் மோட்டார் பிளாசா’வில் சர்வீஸ் விடுவது வழக்கம். அங்கு என்ன பிரச்னை எனில், சி.எம் அப்பாயின்மென்ட் போல இரண்டு மாதங்களுக்கு முன்பே தேதி வாங்க வேண்டும். நாம் சொல்லும் பிரச்னைகளைக் கவனமாக எழுதிக் கொள்வார்கள். சில பார்ட்ஸை மாத்தலாம் எனவும் அட்வைஸ் செய்வார்கள். ''நாளை மாலை 5 மணிக்கு கார் ரெடியாக இருக்கும். வந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என சர்வீஸ் அட்வைஸர் சொல்வார். ''லேட்டா வந்துடாதீங்க'' எனப் பலமுறை அழுத்திச் சொல்வார். மறுநாள் மாலை நான்கு மணிக்கு போன் செய்து, ''உடனே வாருங்கள்'' என்பார்.

ஐந்து மணிக்குச் சென்றால், ''எல்லாம் முடிஞ்சது. வாட்டர் வாஷ் மட்டும்தான் பாக்கி. வெயிட் ப்ளீஸ்'' எனச் சொல்லிச் சென்று விடுவார். என்னைப் போலவே பலரும் விமானத்துக்குக் காத்திருப்பதுபோலக் காத்திருப்பார்கள். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்பு, அவரைத் தேடிச் சென்றால், ''வாட்டர் வாஷ் ஓவர். ஜஸ்ட் பாலீஷ் போயிட்டு இருக்கு'' எனக் கூறிவிட்டு, ''டேய் சுந்தர், சாருக்கு ஒரு காஃபி கொடு'' என்பார். இன்னும் ஒரு 30 நிமிடங்கள் கழித்து, ''முடிஞ்சிடுச்சு. ஜஸ்ட் ஃபைனல் க்ளீனிங் செய்றாங்க'' என்பார். இதெல்லாம் நடந்துகொண்டு இருக்கும்போதே, ''பில் கொடுங்க... செட்டில் செஞ்சுடுறேன்'' என்றால், கொடுக்க மாட்டார். கடைசியாக, பில்லைக் காட்டி ஹோட்டல் சர்வர் ஐட்டம் பேரைச் சொல்வதுபோல புயலென விளக்கி முடித்து, ''கேஷ் கட்டிடுங்க'' என்பார். கேஷ் கவுன்ட்டர் சென்றால்... கேஷியர், பிரின்ட்டரில் மாட்டிக்கொண்டு இருக்கும் பேப்பரைப் பிடித்து பலவந்தம் செய்து கொண்டு இருப்பார்.

ஒரு வழியாக பில் சம்பிரதாயம், கேட் பாஸ் சடங்கு எல்லாம் முடிந்து வந்து பார்த்தால், நம் காரை இரண்டு பேர் அழுக்குத் துணியால் துடைத்துக்கொண்டு இருப்பார்கள். கால் வைக்கும் இடத்தில் பேப்பர் வைப்பது, டயருக்கு பாலீஷ் போடுவது என பரபரப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும்.

இரண்டு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் காரில் ஏறி அமர்ந்தால், சின்னச் சின்ன விஷயங்களில் கோட்டைவிட்டு இருப்பார்கள். பவர் விண்டோஸ் வேலை செய்யாது; ஹெட் லைட் வெளிச்சம் உமிழாது; ஹாரன் அடிக்காது; பின் வீல் சுத்தாது; ரியர் வியூ மிரர் வேலை செய்யாது; ஒருமுறை கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். பேட்டரி கனெக்ஷன் அவுட்!

எனக்குப் பயமாக இருக்கும். இந்த சின்னச் சின்ன விஷயங்களையே கவனிக்காமல் கொடுக்கிறார்களே... பிரேக், கிளட்ச், இன்ஜின் எல்லாம் சரிவர சர்வீஸ் செய்திருப்பார்களா எனச் சந்தேகத்துடன் ஓட்டிக் கொண்டு வருவேன். ஏன் எப்போதும் இந்த கடைசி நேர அவசரம் என்பது எனக்கு புரிந்ததே இல்லை.

'டி.எஸ்.சி  ஹூண்டாய்’ ஷோ ரூமில்தான் ஆக்ஸென்ட் வாங்கினேன். முதல் சர்வீஸின் போதே காரின் முன் பக்கம் இடித்து பழுதாகி இருந்தது. டயர் பஞ்சர் ஆகி இருந்ததால், நானே முதன்முறையாக ஸ்டெப்னி மாற்றி இருந்தேன். சர்வீஸுக்காக காரை விடும்போது, ''முதல் முறையாக நானே ஸ்டெப்னி மாற்றி இருக்கிறேன். எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. செக் செய்து விடுங்கள்'' எனச் சொல்லி இருந்தேன். எல்லாம் சரியாக உள்ளது என சொல்லி சர்வீஸ் முடிந்து காரைக் கொடுத்து விட்டனர்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

லாங் டிரைவ் கொச்சின் சென்றபோது பஞ்சர் ஆனது. கொச்சினில் தெருவோரக் கடையில் பஞ்சர் ஒட்டுகையில், பஞ்சர் ஒட்டுபவர் பஞ்சர் ஒட்டிவிட்டு, பின்பு அனைத்து வீல்களையும் அவராகவே செக் செய்து, ஒரு வீலில் நட் தவறாகத் திருப்பி போட்டிருக்கிறது எனச் சொல்லி, சரியாகப் போட்டுக் கொடுத்தார். இதை பிராண்டட் சர்வீஸ் சென்டர் செய்யவில்லை. இன்னும் கொஞ்ச நாள் கவனிக்காமல் விட்டிருந்தால், ஒரு வீல் கழண்டு ஓடி ஆக்ஸிடென்ட் ஆகி இருக்கும்.

எவ்வளவு அலட்சியம் பாருங்கள். என்ன சிஸ்டம் ஃபாலோ செய்கிறார்களோ? இதில் ஐஎஸ்ஓ 9001 : 10001 என சகட்டுக்கு பல சர்டிஃபிகேட்டை வேறு ஃபிரேம் போட்டு மாட்டி இருக்கிறார்கள்.

சில பிரச்னைகளால் ஹூண்டாய் நிறுவனத்தின் மீது ஊடலில் இருந்த காலத்தில், 'கார்நேஷன்’ பாப்பா கொஞ்சிக் கொஞ்சி அழைத்ததால், அங்கு ஒருமுறை சர்வீஸ் விட்டேன். 'வழக்கம்போல ஐந்து மணிக்கு வாங்க’ எனச் சொல்லி ஏழு மணி வரை தேவுடு காக்கவைத்தனர். ஏழு மணிக்கு சின்னச் சின்னப் பிரச்னைகளைக் கண்டுபிடித்துச் சரிசெய்து பின்பு, காரை வெளியே ஓட்டி வந்துவிட்டேன். மியூசிக் சிஸ்டம் ஆன் செய்தால், பாட்டு பாடவில்லை. எடு ரிவர்ஸ்!

பாட்டு பாடவில்லை என கம்ப்ளெயின்ட் செய்தால், 'காரை விடும்போது பாடுச்சா? பாத்தீங்களா (கேட்டீங்களா)?’ என என்னையே பலமுறை சந்தேகமாகக் கேட்டனர். மேனேஜர் வந்து சூழ்நிலையைக் கிரகித்துக்கொண்டு, ''இதுவரை எங்க கிட்ட சர்வீஸ் விட்ட கார்களில் திரும்பக் கொடுக்கையில் இப்படிப் பாட்டு பாடாமல் இருந்ததே இல்லை. இதான் முதல் முறை'' எனக் கூறி எனக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வரவழைக்கப் பார்த்தார்.

''காரின் உள்ளே 70 ஆயிரம் ரூபாய்க்கு ஆம்ப், சப் வூஃபர் என பல ஐட்டங்கள் இருக்கு; நிறைய வொயரிங் இருக்கு;  காரை விடும்போதே சொல்லித்தான் விட்டேன். ஏற்கெனவே இதுபோல எனக்கு அனுபவம் இருக்கு. நான் சொல்லும்போது யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. எனக்கு சிஸ்டம் பாடணும்'' என்றேன் கண்டிப்புடன்.

வொயரிங் பிரச்னைதான். இரண்டு மணி நேரம் போராடிச் சரிசெய்து கொடுத்தனர். ''அடுத்த தடவை விடும்போது, பாட்டு பாடுதானு எங்களுக்குப் போட்டுக் காட்டிட்டு விடணும்'' என்றார் மேனேஜர்.

லோக்கல் மெக்கானிக்கிடம்  முதல் முறை காரை பிரேக் பிரச்னை என விட்டபோது, ஜஸ்ட் 150 ரூபாய்தான் வாங்கினார். காரை வேறு பளபளவென துடைத்து வைத்திருந்தார். இன்டீரியர் கிளீனிங் வேறு. பவ்யமாக, செம மரியாதையுடன் தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளையுடன் பேசுவதுபோலப் பேசினார். 'ச்சே.. இவரை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே’ என நொந்துகொண்டேன். அன்று மனைவியுடன் நடந்த சண்டையில் கொதித்துக்கொண்டிருந்த இதயத்துக்கு இவரின் அணுகுமுறை ஒத்தடம் கொடுத்ததுபோல ஆறுதலாக இருந்தது.

அடுத்தடுத்த சர்வீஸில் இவரிடம் விட்டபோது தான் இவரின் ஃப்ராடு ரூபம் புரிந்தது. 'ஜெனியூன் ஸ்பேர் பார்ட்ஸ் சார்'' என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்வார். விண்ட் ஷீல்டு மாற்றும்போதே இவர் வேலையைக் காட்டினார், நான் உஷாராகவில்லை. கிளட்ச் பிளேட் மாற்ற வேண்டும் என அவரே சொல்லி, ''ஜெனியூன் ஸ்பேர் பார்ட்ஸ் சார்'' என்றார். இதுக்கு மேல் நான் முட்டையிட மாட்டேன் என நினைத்தாரோ என்னவோ, சார்ஜஸ் போட்டு அறுத்து எடுத்துவிட்டார்.

நான் வழக்கமாக சர்வீஸ் விடும்போது பேப்பர்ஸ், காரில் இருக்கும் சின்னச் சின்னப் பொருட்கள் என அனைத்தையும் எடுத்து வீட்டில் வைத்துவிடுவது வழக்கம். ஆனால் அந்த முறை, ஆபீஸ் வேலையாக திடீரென ஹைதராபாத் செல்ல வேண்டி இருந்ததால், காரிலிருந்து எதையும் எடுக்காமல் அப்படியே சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு போய் விட்டேன். ரோபோ போல காரைச் சுற்றி சுற்றி வந்து பேப்பரில் ஏதோ கிறுக்கிக்கொண்ட சர்வீஸ் அட்வைஸர், மீட்டர் ரீடிங் பார்ப்பதற்காக காரினுள் நுழைந்தவர் சரேலென வெளியே வந்து விழுந்தார்.

விஷயம் ஒன்றுமில்லை. நான் ஜாலிக்காக  பச்சை கலரில் ஒரு ரப்பர் பாம்பை சென்டர் மிரரில் தொங்கவிட்டு இருப்பேன். பார்க்க தத்ரூபமாக இருக்கும். அது வேறு சும்மா இல்லாமல் கொடுத்த காசுக்கு அதிகமாக லைட்டாக நெளிந்துகொண்டு இருக்கும். அதைப் பார்த்துதான் இவர் கொஞ்சம் ஓவர் ரியாக்ஷன் கொடுத்துவிட்டார். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்தான். ரப்பர் பாம்பைக் கண்டாலே மெக்கானிக்கும் நடுங்குவார் என தெரிந்துகொண்டேன். நம்மால் செய்ய முடியாததை இந்த ரப்பர் பாம்பு செய்து விட்டதே என எனக்குத் திருப்தி. அவர் கொஞ்சம் தெளிந்து... கடுப்புடன், ''சர்வீஸ் எல்லாம் செய்ய முடியாது. இதை மொதல்ல எடுத்துட்டுப் போங்க சார்'' என்றார் கடுப்புடன்.

ஏர்போர்ட் செக்யூரிட்டி என்ன பாடுபடப் போகிறானோ என நினைத்துக்கொண்டே பாம்பை எடுத்து லேப்டாப் பேக்கில் போட்டுக்கொண்டு, ஏர்போர்ட்டை நோக்கி விரைந்தேன்.

(கியரை மாத்துவோம்)

இங்கு பஞ்சர் போடப்படும்!
அடுத்த கட்டுரைக்கு