Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!
இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

 ##~##

ண்டியும் கேர்ள் ஃப்ரெண்டும் ஒண்ணு. யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது - என்பது மூத்தோர் (நொந்துபோய் சொன்ன) வாக்கு. நம் வண்டியை எப்படியாவது கடன் வாங்கி கண்டமாக்கிவிட வேண்டும் என்றே பிளான் போட்டு, நம்மிடமிருந்து வண்டியைக் கடன் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள் சில கில்லாடிகள். 

அதன் பிறகு, காதலியை கமிஷனர் ஆஃபீஸுக்கு அனுப்பிவிட்டு, பதைபதைப்போடு காத்திருக்கும் காதலன் போல, நாம் காத்திருக்க வேண்டியதுதான். வண்டியை நம்மிடம் இருந்து வாங்குவதற்கு அவர் காட்டும் புத்திசாலித்தனத்தையும், உழைப்பையும் வேறு எதிலாவது காட்டினால், நிச்சயம் புது வண்டியே வாங்கிவிடலாம்.  

ரெகுலராக போன் செய்வதில் துவங்கும் இவரின் திருவிளையாடல். அதன் பின், நேரில் வந்து உறவை வலுக்கட்டாயமாக வலுப்படுத்துவார். குழந்தை அவர்கள் மீது உச்சா போனாலும் நித்யானந்தா போல சிரிப்பார். 'நான் அந்தப் பக்கம்தான் போறேன்... அப்படியே வாங்கிட்டு வந்துடுறேன்’ என வாலன்டியராகச் சொல்லி, மளிகை சாமான், காய்கறி எல்லாம் வாங்கிக்கொடுத்து, உள்துறை அமைச்சரிணியின் அபிமானத்தைப் பெற்றுவிடுவார்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

இப்படிப் பலவாறாக நம்மை கார்னர் செய்து, பின் ஒரு கொடூரமான நாளில், 'வண்டி வேணும்’ எனக் கேட்பார். நம்மால் ஒன்றும் சொல்ல முடியாது. தலையில் தண்ணீர் தெளித்ததுபோல ஸ்லோமோஷனில் நடந்து சென்று கார் சாவியை எடுத்துக்கொடுக்க வேண்டியதுதான். சென்டிமென்டல், எமோஷனல் என பல 'ல்’ களைக் கலந்துகட்டி அடித்து, நம்மை மென்ட'ல்’ ஆக்கி வண்டியை எடுத்துக்கொண்டு பறந்துவிடுவார்.

மற்ற பொருட்களை இரவல் கொடுப்பதோ, பணம் கடன் கொடுப்பதோ வேறு. கார் அல்லது பைக்கைக் கடன் கொடுப்பது என்பது வேறு. நம் வண்டி என்பது ஒரு மெஷின் மட்டும் அல்ல. அது ஒரு ஃபீலிங். நம் வண்டி என்பது நம் சுதந்திரம் என யாரோ சொன்னதாகப் படித்துள்ளேன். வண்டியை இரவல் வாங்கிச் செல்பவர், என்னதான் ஜாக்கிரதையாக அதைக் கையாண்டாலும், ரிதம் கண்டிப்பாக மாறிவிடும். சிலர் கதறக் கதற வண்டியைக் கற்பழிப்பதும் உண்டு. வண்டியை எடுத்துச் சென்ற பின்பு கேங் ரேப் செய்வதும் உண்டு. சிலர் வண்டிக்கு வெளியே எந்தச் சேதாரமும் இல்லாமல் தமிழ்நாடு போலீஸ் ஸ்டைலில் பலத்த உள்காயங்களோடு திருப்பிக் கொடுப்பார்கள். சிலர் வண்டியின் வெளியே உலக மேப்பையே வரைந்துவிட்டு, ''லைட்டா கீறிடிச்சு மாப்ள, பாலீஷ் போட்டா சரியாயிடும்'' எனச் சொல்லி சாவியைத் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

பண விரயத்தோடு போகும் பிரச்னைகளைத் தாண்டி, கடும் சிக்கலையும் மன உளைச்சலையும் தரும் பிரச்னைகளும் உள்ளன.

நண்பர் ஒருவரின் காரை, ஒரு கும்பல் கடன் வாங்கி பாண்டிச்சேரி சென்று குடித்துவிட்டுத் திரும்புகையில், அல்பத்தனமாக சில ஆஃப் பாட்டில்களை எடுத்துக்கொண்டு வரும்போது மாட்டி ஆப்பு வைத்துவிட்டது. மது கடத்தல் கேஸ் புக் செய்துவிட்டனர் சிலிண்டர் தொப்பி போலீஸார். நண்பரின் கார் சில நாட்கள் போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே காவல் காத்துக்கொண்டு நின்றிருந்தது. பெரிய போராட்டத்துக்குப் பின்பு அதை மீட்டெடுத்தார். அதற்கும் ட்ரீட் கேட்டு அந்த கும்பல் லந்து செய்தது தனிக் கதை.

பைக்கைத் திருடி சாராயம் கடத்துவது ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பெயர் போன கலை. போலீஸ் பிடித்தால், பைக்கையும் சாராயத்தையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடி விடலாம். அதேபோல, அடுத்தவன் பைக்கில் ட்ரங்க்கன் டிரைவ் பிராக்டீஸ் செய்வது தமிழகத்தில் அவ்வளவாக வெளியே தெரியாத எத்னிக் வீர விளையாட்டு.

இங்கு பஞ்சர் போடப்படும்!

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நண்பனைப் பார்ப்பதற்காக, புத்தம் புதிதாக வாங்கியிருந்த யமஹா பைக்கை எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். வெளிநாட்டில் வேலை வாங்குவது எப்படி; எவ்வளவு சம்பாதிக்கலாம்; என்ன டெக்னாலஜி டிமாண்டாக இருக்கிறது எனப் பேசிக்கொண்டு இருந்தோம். மாடியில் அப்போதே வெளிநாட்டு இறக்குமதி மதுபானம் கரை புரண்டு ஓடிக் கொண்டு இருந்தது. பல நண்பர்கள் வந்திருந்தனர். இரவு மணி பதினொன்று ஆனதும், நண்பன் ஏற்பாட்டில் அனைவருக்கும் அறுசுவை விருந்து. அது முடிந்ததும் இருப்பதிலேயே ஸ்டெடியாக இருப்பதுபோல நடித்துக்கொண்டு இருந்த ஒரு நண்பன், ''மாப்ள... புது மாட்டல் யமக்காஹ் வாங்கி இருக்கான். சாவி குடு மாப்ள, செமையா வீலிங் செஞ்சி காட்டறேன்'' என சனி சுழி போட்டான்.

வெளிநாட்டு நண்பனும் சூழ்நிலையை ஜாலியாக வைத்திருக்க வேண்டி, ''மச்சி, இவன் நல்லா ஸ்டெடியா வீலிங் செய்வான். பயப்படாமக் குடு மச்சி'' என எங்கேயோ பார்த்துக்கொண்டு சொல்லி, என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினான். நானும் பாடிகார்ட் முனீஸ்வரரை வேண்டிக் கொண்டு சாவி கொடுத்தேன். சாவி போட்டு கிக்கரை இரண்டு முறை உதைத்து, பின் எந்த அறிவியலாலும் விளக்காவொண்ணா வண்ணம் கார்ட்டூன் போல கீழே விழுந்தான். சில நிமிடங்கள் கேப் விட்டு பின் ஸ்டைலாக எழுந்து, லைட்டாக பின் பக்கம் தட்டிக் கொண்டே, ''புது வண்டி இல்ல, அதான் கிக்கர் எதுத்துக்கிட்டு அடிக்கிது'' எனச் சொல்லியபடி சிகரெட் பற்றவைக்கச் சென்று விட்டான். எனக்கு அப்பாடா என இருந்தது. நிம்மதியாக நண்பனுடன் பேச்சைத் தொடர்ந்தேன். திடீரென என் வண்டி ஸ்டார்ட் ஆகும் சவுண்ட் பிரளயம் போலக் கேட்டது. சாவியை வண்டியிலேயே அஜாக்கிரதையாக விட்டுவிட்டேன். மற்றொரு நண்பன் வண்டியை எடுத்து, நின்ற இடத்திலேயே ரவுண்ட் போட ஆரம்பித்தான். சுற்றி நின்று சிலர் கை தட்டிக்கொண்டு இருந்தனர். எனக்கு எழவு வீட்டில் ஒப்பாரிக்குக் கைதட்டுவது போல இருந்தது. நல்ல காலமாக வண்டிக்கு ஏதும் சேதாரம் ஆகும் முன்னே நிறுத்திவிட்டான். இறங்கி வாஷ்பேசினுக்கு ஓடினான். வாழ்க்கையில் முதன்முறையாக வாந்திக்கு நன்றி சொன்னேன்.

ஒரு வழியாக மேலே சென்று படுத்தோம். சில நிமிடங்களில் அறைக் கதவு தட்டப்பட்டது. வெளிநாட்டு நண்பன் சிபாரிசுடன் இன்னொரு நண்பன் நின்றிருந்தான். ''மச்சி, இவன்கூட வந்தவன் இவனை விட்டுட்டுப் போயிட்டான். இவங்க வீட்ல இவன் நைட்டு போகலைன்னா, பயங்கர பிரச்னை ஆயிடும். எனக்கு இவனைப் பத்தி நல்லாத் தெரியும். செம ஸ்டெடியா பைக் ஓட்டுவான். இங்கே இருந்து 9 கிலோ மீட்டர்தான் வீடு. பைக்கைக் கொஞ்சம் குடு, காலைல கொண்டாந்து குடுத்துடுவான்'' எனச் சொன்னான். சாவியைக் கொடுத்துத் தொலைத்தேன்.

காலையில் அவன் போனுக்கு மெசேஜ் அடித்து அடித்துப் பார்க்கிறோம், ரெஸ்பான்ஸ் இல்லை. எனக்குச் சற்றே பயமாக இருந்தது. ''இல்லடா தூங்கிட்டு இருப்பான்'' என்றான் நண்பன். ஒரு வழியாக 11 மணிக்கு போனில் அழைத்தான். ''வீட்டுக்கு இன்னும் அரை மணி நேரத்தில் வர்றேன். நேர்ல பேசிக்கலாம்'' என்றான். ''நேர்லயா??? பேசறதுக்கு என்னடா இருக்கு?'' எனக் கத்துவதற்குள் லைன் கட்டாகி விட்டது.

நேரில் நடந்து வந்தான்; பைக்கைக்  காணோம். வந்து மூன்று டீ குடித்தான்; நான்கு சிகரெட் பிடித்தான்; விஷயம் ஒன்றும் வாயில் இருந்து வரவில்லை. அவனே பேசட்டும் என செம கடுப்பில் அமைதியாக இருந்தேன். ஒரு வழியாக நிமிர்ந்து பார்த்து க்ளோஸ் அப்பில் பேச ஆரம்பித்தான். ''சாரி மாப்ள, கோச்சுக்காத, நைட் போற வழியில தள்ளுவண்டி மேல மோதிட்டேன். சின்ன ஆக்ஸிடென்ட்தான், வண்டிக்கு ஒண்ணும் ஆகலை. வண்டி பல்லாவரம் ஸ்டேஷன்ல இருக்கு... வாங்க போயி பேசி எடுத்துக்கலாம்'' என்றான். அவனை அப்படியே பிடித்து நாய் புடிக்கும் வண்டியில் போட்டுவிடலாம் போல இருந்த கோபத்தை வெளிக்காட்டாமல், மன்மோகன்சிங் போல அவனுடன் அமைதியாக நடந்தேன்.

நேராக பல்லாவரம் ஸ்டேஷன் சென்றோம். ரைட்டரிடம், இன்ஸ்பெக்டரைப் பார்க்க வேண்டும் எனச் சொல்லி, ஒரு மணி நேரம் காத்திருத்தலுக்குப் பின்பு அழைத்ததும் உள்ளே சென்றோம். மரியாதையாக எதிரே அமரவைத்தார். பைக்கை எடுத்துச்சென்ற நண்பன் பம்மிப் பம்மிப் பேச ஆரம்பித்தான். ''சார், நேத்து கொஞ்சம் தூக்கக் கலக்கத்துல கரெக்ட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்க்க இட்லி வண்டி மேல மோதிட்டேன். ஸாரி சார், நீங்கதான் வண்டியை எடுத்து ஸ்டேஷன்ல வெச்சிட்டு காலைல வந்து வண்டியை எடுத்துக்கச் சொன்னீங்க. கம்மியா ஃபைன் போட்டு வண்டியைக் குடுத்துடுங்க சார்'' என்றான்.

''தூக்கமா? தண்ணி அடிச்சிருந்தியா?'' என்றார் மிஸ்டர் இன்ஸ்.

''இல்லை சார், தூக்கக் கலக்கம்தான் சார்.''

''ஏய் என்னா விளையாடறியா, நேத்து நைட் இந்த ஸ்டேஷனுக்கு முன்னால எந்த ஆக்ஸிடென்டும் நடக்கலை. நாங்க எந்த வண்டியையும் புடிக்கலை. போதையில எந்த ஸ்டேஷன்ல வண்டியை உட்டோம்னுகூட தெரியாம இங்க வந்து டார்ச்சர் பண்ணிக்கிட்டு, வெளிய போடா...'' எனக் கத்தினார் இன்ஸ்பெக்டர்.

திக்பிரமை பிடித்து வெளியே வந்தேன். அவனோ கூலாக ஷாப்பிங் செய்கையில் 'அடுத்த கடை பாக்கலாம் மாப்ள’ என்பது போல, ''அடுத்து குரோம்பேட்டை ஸ்டேஷன் போய் பாக்கலாம்'' என்றான். குரோம்பேட்டை ஸ்டேஷன் உள்ளே நுழைந்ததுமே, இன்ஸ்பெக்டர் இவனைப் பார்த்துக் கத்தினார், ''யோவ், அந்த ஆள் வந்துட்டான் பாரு. நைட்டு என்னா கூத்தடிச்சிட்டுப் போனான். இப்ப பதூசா வந்து நிக்கிறான் பாரு'' என்றார். ஸ்டேஷனில் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு இட்லி வண்டி கிட்டத்தட்ட இரண்டாகப் பிளந்து கிடந்தது. பக்கத்திலேயே என் யமஹா முண்டமாக நின்றுகொண்டு இருந்தது.

இன்ஸ்பெக்டர் என்னிடம் கரிசனமாகப் பேசினார். ''சார், உங்க வண்டியா? ஏன் சார் இதுபோல ஆளுங்ககிட்ட எல்லாம் குடுக்கறீங்க? நேத்து நைட்டு ரேஸ் வண்டி மாதிரி நடு ரோட்ல தறிகெட்டு ஓவர் ஸ்பீடுல வர்றான். எங்களைப் பார்த்ததும் சிவனேனு ரோட்டு ஓரமா நின்னு இட்லி வியாபாரம் செஞ்சிக்கிட்டு இருந்த வண்டி நடுவுல போய் வுட்டாங்க. வண்டி ரெண்டாப் பொளந்து இட்லி, ஆஃபாயில், முட்டை, சட்னி, சாம்பார் எல்லாம் புஸ்வாணம் மாதிரி மேல தெறிக்குது. சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒரு ஆளு மேல சால்னா அபிஷேகம் ஆயி ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிருக்காரு. ஆக்ஸிடென்ட் ஆனதும் நான் கூப்பிடக் கூப்பிட வண்டியைப் போட்டுட்டு ஓடிட்டான் சார். நாங்க டூட்டியில் இருந்தோம், எடுத்துவெச்சோம். இல்லைன்னா எவனாவது பைக்கை எடுத்துட்டுப் போயிருப்பான்'' என்றார்.

இட்லிக்காரர் வண்டிக்கு காசு செட்டில் செய்ய அவரைப் பார்த்தோம். ''இட்லி சாம்பார் சட்னி எல்லாம் கொட்டிப்போச்சி சார். 120 இட்லி, 60 முட்டை...'' என கணக்குச் சொல்ல ஆரம்பித்தார். தலையில் அடித்துக் கொண்டு அதையும் செட்டில் செய்துவிட்டு, பைக்கை மெக்கானிக்கிடம் தள்ளிக்கொண்டு சென்றேன். அவர் ஒரு எஸ்டிமேட் சொன்னார்.

என்ன லாஜிக் என இன்று வரை தெரியவில்லை. பைக்கை ஓட்டிச்சென்று ஆக்ஸிடென்ட் செய்த நண்பன் என்னிடம் டீல் பேசினான். ''இதுவரைக்கும் ஆன செலவுல ஆளுக்குப் பாதியாப் பிரிச்சிக்கலாம்(!?). இப்ப எங்கிட்ட காசு இல்லை. நீயே எல்லா செலவும் பாத்துக்க. என் பங்கை நான் மாசா மாசம் கொடுத்துடறேன்'' என்றான் அப்பாவி முகத்துடன்.

உங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா?

இங்கு பஞ்சர் போடப்படும்!

(கியரை மாத்துவோம்)

அடுத்த கட்டுரைக்கு