-அராத்து, ஓவியங்கள்: ஹாசிப்கான் 

 ##~##

திருமணம் ஆனதும் ஒருவனின் வாழ்வில் மனைவி வருவாள். கூடவே மச்சினிச்சி, மாமனார் எனப் பல கேரக்டர்கள் அடித்துப் பிடித்து அவன் வாழ்வில் நுழைந்து விடுவார்கள். அதே போல, ஒருவர் கார் அல்லது பைக்கை வாங்கி ஓட்ட ஆரம்பித்ததும் அவர் வாழ்க்கையில் மெக்கானிக், சர்வீஸ் மேலாளர், பெட்ரோல் போடுபவர் எனப் பல கேரக்டர்கள் உள்ளே வந்து உலுக்கி எடுப்பார்கள். இந்த கேரக்டர்களில் மிக முக்கியமான டீம் ஒன்று இருக்கிறது. நைஸாக நுழைந்து வாகனம் ஓட்டும் வாழ்க்கையையே படு சுவாரஸ்யப்படுத்துபவர்கள், டிராஃபிக் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜென்ட் எனப்படும் அரசு ஊழியர்கள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த இருவர் ஜோடியின் கெமிஸ்ட்ரி, 'ஈருடல் ஒரு மொபைல்’ என வாழும் தெய்வீகக் காதல் ஜோடிகளுக்குக்கூட கைவரப் பெறாத பிசிக்கல், ஆர்கனிக், இன்-ஆர்கனிக் எனக் கலந்து கட்டிய கெமிஸ்ட்ரி. முதலில் கான்ஸ்டபிள் வாகனங்களைப் பிடித்து லேசாக மிரட்டி கூலிங் கிளாஸ் ஐயாவிடம் அனுப்புவார். 'ஐயா’ கட் அண்டு ரைட்டாக, 'ஆயிரம் ரூபாய் ஃபைன் கட்டுங்க’ என்பார். கான்ஸ்டபிளைப் பார்த்து ஒரு லுக் விடுவார். கான்ஸ்டபிள் புரிந்துகொண்டு, 'ஐயாவை டிஸ்டர்ப் பண்ணாத... இப்படி வா’ எனத் தள்ளிக்கொண்டு வந்து, 'ஐயா கோவக்காரரு’ எனச் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, கூலிங் கிளாஸ் ஐயா, கேட்க ஆளில்லாத ஆட்டோ டிரைவரை சுளீரென்று அடிக்க, பிடிபட்ட நபர் மிரண்டுபோய், கான்ஸ்டபிள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆவார். கான்ஸ்டபிளிடம் பேரம் படியாமல் சிலர் பேசிக்கொண்டே இருக்கையில், 'யோவ் கோர்ட்டுக்குக் கணக்கு காட்டணுமாம். ரெண்டு கேஸ் குறையுதாம், இந்த ஆளை கோர்ட்டில் ப்ரொட்யூஸ் பண்ணு’ என சவுண்ட்விட்டு கிலி கிளப்புவார் ஐயா. இவர்களின் கெமிஸ்ட்ரி, ரகளையான கெமிஸ்ட்ரி.

இங்கு பஞ்சர் போடப்படும்!

100 முதல் 2,000 வரை நடுத் தெருவில் நின்றுகொண்டு பாக்கெட் மணி சேகரிப்பது இந்த ஜோடிகளின் ஹாபி. சின்னச் சின்னப் பிரச்னைகளுக்குத்தான் நான் சொன்ன 100 முதல் 2,000 கணக்கு. பெரிய விஷயம் என்றால், அது ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் டீக்கடைகளில் டீலிங் நடக்கும்.

நல்ல, நேர்மையான போலீஸ்காரர்களும் நிச்சயம் இருக்கிறார்கள். இந்த டிராஃபிக் கான்ஸ்டபிள் வேலையும் சாதாரணமானது அல்ல; கடும் வெயிலில் நின்று கொண்டே இருக்க வேண்டும். டீசல் புகைக்கு நடுவே தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். நேரம் பார்க்காமல் மழை, வெயிலுக்கு இடையே விஐபி கிராஸிங்குக்காக நிற்க வேண்டும். அதிகாலை 6 மணிக்கே நடுரோட்டில் நிற்பது சென்னை டிராஃபிக் போலீஸ் மட்டுமே! எனக்குத் தெரிந்து டிராஃபிக்கைக் கையாள்வதிலும் சென்னை போலீஸ்தான் பெஸ்ட்.

இருப்பினும்,சில டிராஃபிக் போலீஸ்காரர்கள் செய்யும் அலும்புகள் கொஞ்சநஞ்சமா? கான்ஸ்டபிள் - சார்ஜென்ட் ஜோடியில், சார்ஜென்ட் தான் சீனியர். இவர் ஆட்டையைப் போட புவியியல் மற்றும் சைக்காலஜி அறிவின் துணைகொண்டு, டெக்னிக்கலாக ஓர் இடத்தைக் கவனமாக தேர்ந்தெடுப்பார். அந்த இடத்தில் சார்ஜென்ட் சற்று மறைவாக நின்றுகொள்வார். மலச் சிக்கலில் மாட்டியதுபோல அவர் முகம் கடுகடுவென இருக்கும். எதோ பேப்பரைக் கையில் வைத்துக்கொண்டு, கூலிங் கிளாஸ் வழியாக அதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். கான்ஸ்டபிள் கொஞ்சம் சாந்தமான முகத்தோடு, கூலிங் கிளாஸ் போடாமல் அசிரத்தையாக யூனிஃபார்ம் போட்டபடி, ரோடு ஓரத்தில் இருந்து நடுரோடு வரை சடுகுடு ஆடியபடி இருப்பார்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

சமூகவியல் மற்றும் சைக்காலஜி அத்துப்படி என்பதால், மக்கள் பரபரப்பாக வேலைக்குச் செல்லும் பீக் ஹவரில், டிராஃபிக் அதிகம் இருக்கும் இடங்களில் பைக்குகளை மடக்கித் தொந்தரவு செய்ய மாட்டார்கள். மக்கள் அன்றைய வாழ்க்கையில் செட் ஆன பின்பு, 11 மணிவாக்கில் தன் வேட்டையை முழு வீச்சில் ஆரம்பிப்பார்கள். அவர்கள் நின்று வாகனங்களை மடக்கும் இடங்களுக்கு அருகே, நிச்சயம் ஏடிஎம் இருக்கும். ஆங்கில  L , S , Zபோன்ற ரோட்டு வளைவுகளில், மர்மமாக நிற்பார்கள். முதல் ஷிஃப்ட் கலெக்ஷன் முடிந்ததும் உணவு இடைவேளை. பிறகு, இரண்டாம் ஷிஃப்ட் மாலை 5 மணிக்குள் முடித்துவிடுவார்கள். மாலை 6 மணி முதல் மக்கள் அலுவலகம் விட்டு சீரியல் பார்க்க தலைதெறிக்க வீட்டுக்கு ஓடும் நேரம் என்பதால், அப்போது மடக்கினால் மக்கள் புரட்சி வெடித்துவிடும் என அவர்களுக்கு நன்கு தெரியும்.

மூன்றாவது ஷிஃப்ட், 'ட்ரங்கன் டிரைவ்’ ஸ்பெஷல் ஷிஃப்ட். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, நியாயமாக 11 மணிக்குத்தான் வேட்டையை ஆரம்பிப்பார்கள். கலெக்ஷனைப் பொருத்து இந்த ஷிஃப்ட் அதிகாலை 2 மணி வரை நீடிக்கும். இங்கு பலருக்கும் குடிக்காமலேயே வாய் துர்நாற்றம் அடிப்பதால், ஊதச் சொல்லிக் கண்டுபிடிப்பதில் போலீஸுக்கு அசாத்தியத் திறமை வேண்டும். குடிகாரர்களிடம் சாஃப்ட்டாகத்தான் நடந்துகொள்கிறார்கள். குடிகாரர்கள் போதையில் பிரச்னை செய்யாமல், குற்ற மனதுடன் பணம் கொடுத்துவிடுவது காரணமாக இருக்கலாம். 'இனிமே குடிச்சிட்டு வண்டி ஓட்டக் கூடாது. என்னா?’ என அறிவுரையைப் பாசமாகச் சொல்லி அனுப்பிவிடுகின்றனர்.

ஷேர் ஆட்டோக்காரர்களிடம் பேசி வைத்துக்கொண்டு, சுழற்சி முறையில் கேஸ் போடுவார்கள். ஃபைன் போடுவார்கள். கேஸ் மற்றும் ஃபைன் சுழற்சி முடிந்த ஷேர் ஆட்டோ எனில், ஆட்டோ டிரைவர் கையில் காசு எடுத்து ரெடியாக வைத்து, ஜன்னலுக்கு வெளியே கையைத் தொங்கவிட்டபடி இருப்பார். கூலிங் கிளாஸ் போடாத கான்ஸ்டபிள் அதை கரெக்ட்டாக லபக்கிக் கொள்வார். இதே முறை, லோடு வண்டிகளுக்கும் பொருந்தும். இந்த அளவு அண்டர்ஸ்டேண்டிங் லாரி விஷயத்தில் கிடையாது. லாரிகள் பல மாநகரங்களில் இருந்தும் வருவதால், துரத்திப் பிடித்து விசாரித்து என நிறைய உழைப்பைப் போட்ட பின்பே காசைப் பார்க்க முடியும்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

பைக்தான் இவர்களின் டார்கெட். கார் என்றால், கொஞ்சம் அலர்ஜி. காரில் செல்பவர்கள் எல்லோரும் ஏதாவது அரசியல்வாதியின் பெயர், போலீஸ் பெயர், செக்ரட்ரியேட் எனச் சொல்லி மிரட்டுவதால், இந்த அலர்ஜி. இப்போது மாருதி 800, அம்பாஸடர், இண்டிகா போன்ற கார்களின் மீது மரியாதை குறைந்து நிறுத்திவிடுகின்றனர்.

அவ்வப்போது ஏதாவது சீஸன், இவர்களின் வாழ்க்கையை வசந்த காலமாக்கும். ஹெல்மெட் சீஸன் என இரண்டு மாதங்கள் சக்கைப் போடு போடுவார்கள். நம்பர் பிளேட் ஸ்டிக்கரில் இருக்கக் கூடாது. பெயின்ட்டில் இருக்க வேண்டும் என ஒரு சீஸன். கார் கண்ணாடியில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் எனக் கொழுத்த சீஸன்.

என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டு போலீஸ் என்பதால், சென்டிமென்டுக்கு தனி இடம் கொடுப்பார்கள். மனைவியோடோ அல்லது கள்ளக் காதலியோடோ ஃபேமிலிமேன் லுக்கில் இருந்தால், பிடிக்க மாட்டார்கள். காதலியோடு சென்றால், நிச்சயம் பிடிப்பார்கள். அதுவும் கிழக்குக் கடற்கரைச் சாலை என்றால், மாட்டுவது நிச்சயம். பின் சீட் பார்ட்டி ஸ்லிம்மாக இருந்தாலோ, சிவப்பான தன் முகம் கருத்துவிடும் என்பதற்காக துப்பட்டாவை முகமூடி போல சுற்றி இருந்தாலோ, இவர்களுக்கு அவள் காதலி. மடக்கிய பின்பு டிராஃபிக் சம்பந்தமாக ஏதும் கேட்க மாட்டார்கள். கலாசாரக் காவலர்களாக மாறிவிடுவார்கள்.

நண்பன் ஒருவன் சனிக்கிழமை அன்று அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பலநாள் தோழியை கையில் காலில் விழுந்து, பழந்தமிழர் கட்டடக் கலை, சிற்பத்தின் சிறப்பு, பல்லவ நாட்டுச் சிற்பிகளின் அர்ப்பணிப்பு, கடலில் மூழ்கி இருக்கும் கோவில்கள் எனப் பலவற்றையும் பல்லவ நாட்டு பிஆர்ஒவாகவே மாறி, தோழி மிரளும் அளவுக்குச் சொல்லிச் சொல்லி மாமல்லபுரத்துக்கு அவனுடன் வரச் சம்மதிக்க வைத்தான்.

காலையில் எழுந்து பைக்கைக் கழுவித் துடைத்து, தோழி அமரும் இடம், அவள் கால் வைக்கும் இடம் எக்ஸ்ட்ராவாக பாலீஷ் செய்து, அவளைப் போய் பிக்-அப் செய்தான். முதன்முதலாக காபிஷாப்புக்குச் சென்றான். பைக்கில் அவளுடன் மாமல்லபுரம் நோக்கி ஈசிஆரில் செல்கையில், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி என அனைத்தும் நொடிகளில் கடந்தது போல இருந்தது. பைக் டோல் பிளாசாவுக்கு சற்று முன்னால் வந்தபோது, பைக்கில் ஜோடியாக வரும் இளம் சிட்டுக்களை மட்டும் இரண்டு கான்ஸ்டபிள்கள் அன்பாக நிறுத்தி, அரவணைத்து அழைத்துச் சென்று பைக்கை ஸ்டாண்ட் போடச் சொன்னார்கள்.

இதெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம் என்பதுபோல, நம்மாளும் பேப்பர்ஸை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறான். பேப்பர்ஸை  அலட்சியமாகத் தூக்கி போட்டுவிட்டு, ''அவங்க யாரு பொண்டாட்டியா?'' என கூலிங் கிளாஸ் கேட்டிருக்கிறார்.

''இல்லை சார்.''

''அப்ப லவ்வரா?''

''இல்லை சார்..''

''அப்ப தள்ளிட்டுப் போறியா?''

''சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க!''

''என்னடா மரியாதை...?''

''சார், என்கூட வேலை செய்யற பொண்ணு. ஐடி கார்டு வேணா காட்டறேன்.''

''ரெண்டு பேரும் வீட்டு நம்பர் குடுங்க, கேஸ் - ஃபைன் எதுவும் கேக்கலை. உங்க வீட்டுல இருந்து அப்பா, அம்மா வந்து எங்ககிட்ட சொல்லிட்டு உங்களைக் கூட்டிக்கிட்டுப் போகட்டும்.'' இவர் இப்படி எல்லாம் பேச சட்டத்திலோ, முட்டத்திலோ எங்கும் இடம் இல்லை எனினும், தமிழ்நாட்டு கேடு கெட்ட ஒருதலைக்காதலனால் என்ன செய்ய முடியும்?

''இங்க வாம்மா'' என தோழியை அழைத்தார். ''உன் அப்பா அம்மா நம்பர் குடு'' என்றார்.

தோழிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நண்பன் கெஞ்ச ஆரம்பித்தான். ''சார், வீட்டுக்கு எல்லாம் எதுக்கு சார்? நாங்க என்னா தப்பு பண்ணோம் சார்?''

''சென்னையில இல்லாத பீச்சா, கோவிலா? இங்க ஏண்டா போறீங்க? சவுக்குத் தோப்பில் ஒதுங்கி, எதாவது பண்ணிட்டு, இவளைக் கொலை பண்ணிட்டு நீ போயிடுவ. நாங்கதான் மாரடிக்கணும்!''

இங்கு பஞ்சர் போடப்படும்!

தோழி இவனிடம், ''என் வீட்டில் என் ஃப்ரெண்டு சாந்திகூட போறேன்னுதான் சொல்லிட்டு வந்திருக்கேன். இவங்ககிட்ட அசிங்கப்படுவதற்கு எங்க அம்மா - அப்பாகிட்டயே சொல்லிடறேன், அவங்க புரிஞ்சிக்குவாங்க. நீ என்கூட வேலை செய்றதும் அவங்களுக்குத் தெரியும்'' என்றாள். அவள் மொபைலை அவரிடம் கொடுத்து, ''எங்க அப்பா நம்பர். கூப்பிட்டுச் சொல்லுங்க'' என்றாள்.

கூலிங் கிளாஸுக்கு சுரத்து குறைந்தது. ''அவரு வந்தாலும், உடனே கூப்பிட்டுக்கிட்டுப் போக முடியாதும்மா. ஸ்டேஷன் வரணும், எழுதிக் கொடுத்துட்டுக் கூப்பிட்டுப் போகணும். போய் ஓரமா நில்லுங்க'' என்றார்.

கான்ஸ்டபிள் 10 நிமிடங்களுக்குப் பிறகு வந்து, ''ஏன் சார் தேவையில்லாத பிரச்னை. எதாவது கவனிச்சிட்டுப் போங்க, நான் சொல்லிக்கிறேன்'' என்றார். ரூபாயை உரிமையாகக் கேட்டு வாங்கிக் கொண்டு, ''வீக் டேஸ்ல போங்க சார், தொந்தரவு இருக்காது'' என வாங்கிய காசுக்கு டிப்ஸ் கொடுத்தார்.

இதனால் நடந்த நல்லது என்னவென்றால், அதுவரை நண்பர்களாக இருந்த இருவரையும் காதலர்களாக மாற்றியதுதான் காவல் துறையின் சாதனை. தோழியை வீட்டில் இறக்கிவிடுகையில் நண்பனை முத்தமிட்டு, 'லவ் யூ’ சொல்லி வீட்டினுள் நுழைந்தாள்.

- கியரை மாத்துவோம்