கார்ஸ்
Published:Updated:

என் லீனியா திரும்பக் கிடைக்குமா?

என் லீனியா திரும்பக் கிடைக்குமா?

 ##~##

கார் வாங்கி இரண்டரை வருடங்கள் ஆன நிலையில், 57,000 கி.மீ ஓடி முடிப்பதற்குள் இன்ஜின் சீஸ் ஆகி, எக்ஸ்டண்டட் வாரன்ட்டி இருக்கிறதா இல்லையா என்பதுகூடத் தெரியாமல், ''ஒன்றரை லட்சம் செலவழிச்சாதான் திரும்ப காரை எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க சார்!'' என்று நம்முடைய ஹெல்ப்லைன் எண்ணில் அலறினார் சிதம்பரத்தைச் சேர்ந்த ரத்தின சபாபதி. 

த்து லட்சம் பட்ஜெட்டுக்கு உள்ள கார் வாங்கலாம்னு முடிவெடுத்தப்போ, சட்டுனு என் கண் முன்னாடி வந்தது ஃபியட் லீனியாதான். அதோட ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பென்ஸ் மாதிரி 'க்ளாஸ்’ ஆகவும் இருக்கும். அதேசமயம் பிஎம்டபிள்யூ மாதிரி 'மாஸ்’ ஆகவும் இருக்கும். அதைவிட, ஸ்கோடாவுக்கு அடுத்து ஃபியட்தான் பில்டு குவாலிட்டியில் பெஸ்ட்னு மேட்டார் விகடன்லயும் படிச்சிருக்கேன்.

என் லீனியா திரும்பக் கிடைக்குமா?

2011 பிப்ரவரி மாசம் 7-ம் தேதி, அண்ணாநகர் விஎஸ்டி மோட்டார்ஸ்ல காரை டெலிவரி எடுத்தேன். என் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இருந்து 10 ரூபாய்கூட எக்ஸ்ட்ரா இல்லாம, லீனியாவை வீட்டுக்குக் கொண்டுவந்தேன். அப்போது ஃபியட், டாடா மோட்டார்ஸ்கூட கூட்டணியில் இருந்துச்சு.

'ஏன்டா இந்த காரை எடுத்தே? சர்வீஸ்ல உன்னை அலைய விடப் போறாங்க பாரு’னு நண்பர்கள் என்னை எச்சரிச்சாங்க. ஆனா, லீனியாவோட அழகு என்னை எதுவுமே யோசிக்க விடலை. இது வரைக்கும் மூணு ஃப்ரீ சர்வீஸும், ஒரு பெய்டு சர்வீஸும் பண்ணிட்டேன். பொதுவா, செடான் கார்களில் ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டியெல்லாம் சர்வீஸ் பண்ணினா, இன்ஜின் ஆயில் மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாய்க்கு மேல ஆகாது. ஆனா, எனக்கு 10,000 ரூபாய் வந்தது. பிரச்னை இது இல்லை.

ஒவ்வொரு தடவையும் சர்வீஸ் விட்டு காரை டெலிவரி எடுக்குறதுக்குள்ள, ரேஷன் கடையில வெற்றிகரமா 'இலவசம்’ வாங்கிட்டு வர்ற ஃபீலிங் வரும். கூட்டம் முண்டியடிக்கும். பார்க்கிங்குக்கு இடம் இருக்காது. மவுன்ட் ரோட்ல இருக்கிற விஎஸ்டி மோட்டார் சர்வீஸ் சென்டர்ல, டாடா கார்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பாங்க. ஃபியட் கார்கள் வந்தா, வெயிட் பண்ணித்தான் ஆகணும். சர்வீஸ் சென்டர்ல ரெண்டு பசங்களை ஃப்ரெண்ட்ஸ் பிடிச்சுக்கிட்டேன். அவங்க தயவுல, கொஞ்சம் டென்ஷன் குறைஞ்சது. நடுவுல என் கார்ல ஏ.சி-யில் இருந்து கேஸ் லீக் ஆகி, பெரும் போராட்டத்துக்குப் பிறகு நாலஞ்சு தடவை அலைஞ்சுதான் அந்தப் பிரச்னையை சரி பண்ணுனேன். இப்போ, என் பிரச்னை இதுவும் இல்லை.

என் லீனியா திரும்பக் கிடைக்குமா?

கடந்த ஜூலை மாசம் சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு லீனியாவுல ஃபேமிலியோட போய்க்கிட்டு இருந்தேன்.. தைலாபுரம் தாண்டினப்போ, கார் பானெட்டிலிருந்து ஏதோ 'கடமுடா’ சத்தம் வந்துச்சு. என்னன்னு பானெட்டைப் பார்த்தப்போ, இன்ஜினில் இருந்துதான் அந்த சவுண்ட் வந்துச்சு. ஐடிலிங்கில் இருக்கும்போது கம்மியாகவும், ஆக்ஸிலரேட்டர் அழுத்தினா, கூடுதலாகவும் வர ஆரம்பிச்சது. பயந்துபோய், சென்னை விஎஸ்டி மோட்டார்ஸுக்கு போன் அடிச்சுக்கிட்டே இருந்தேன். கிட்டத்தட்ட 20 தடவை அடிச்சிருப்பேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அப்போதான், ஃபியட்டும், டாடாவும் கூட்டணியிலிருந்து பிரிஞ்சது ஞாபகம் வந்தது. ஃபியட் தனியாக டீலர்ஷிப் துவங்கியிருக்கும் நந்தனம் ஆர்டிசி (RDC) மோட்டார்ஸுக்கு போன் அடிச்சேன். அவங்களும் எடுக்கலை.

அப்புறமா, புதுச்சேரி சர்வீஸ் சென்டருக்கு முயற்சி பண்ணலாம்னு 'மணக்குளர் மோட்டார்ஸுக்கு’ போன் அடிச்சேன். 'நீங்க சொல்றதைப் பார்க்கும்போது இன்ஜின்ல ப்ராப்ளமா இருக்கும், காரை டிரைவ் பண்ணாம, 'டோ’ பண்ணிக்கிட்டு வந்துடுங்க.. பார்க்கலாம்’னு அங்க சொன்னாங்க.

என் லீனியா திரும்பக் கிடைக்குமா?

ஒருவழியா டோ பண்ணிக்கிட்டு, மணக்குளர் சர்வீஸ் சென்டர்ல காரை நிப்பாட்டினேன். மறுநாள் வரச் சொன்னாங்க. போனப்போ, 'கம்ப்ளீட்டா சாஃப்ட்வேர் மூலமா செக் பண்ணியாச்சு... டைமிங் பெல்ட் ப்ராப்ளம் சார்... கிட் மாத்துனா சரியாயிடும்’னு சொல்லிட்டு, கூடவே ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. 'ஆனா, எங்ககிட்ட ஸ்பேர்ஸ் இல்லை சார்... ஒரு மாசம் ஆகும்’னு அசால்ட்டா சொன்னாங்க.

நான் வேற வழியில்லாம, சரின்னு சொன்னாலும் எப்படியாவது என் காரை வெளியேத்தணும்ங்கிறதுலயேதான் குறியா இருந்தாங்க. 'டாடா மோட்டார்ஸ்கூட கூட்டுல இருந்தப்போ வாங்கின கார்... இப்போ எதுக்கு இதைக் கட்டி அழணும்’னு நினைச்சிருப்பாங்களோ என்னவோ! 'ஒரு மாசம் வரைக்கும் இங்க வெச்சிருக்க முடியாது. காரை டிரைவ் பண்ணிட்டுப் போகாதீங்க... இன்ஜின் சீஸ் ஆகிடும். நீங்க காரை 'டோ’ பண்ணி சென்னைக்கே கொண்டு போய்ப் பார்த்துருங்க’னு சொன்னார் சர்வீஸ் மேனேஜர். 'டோ பண்ணினா, டயர் தேயும்... கார் டேமேஜ் ஆகும் சார்’னு நான் மறுத்தேன். 'ஸ்பேர் வாங்கிக் குடுத்தா பண்ணித் தருவீங்களா’னு கேட்டேன். அதுவும் முடியாதுன்னுட்டாங்க.

ரெண்டு நாள் கழிச்சுப் போனப்போ, 'எங்க சர்வீஸ் மேனேஜர் எல்லாத்தையும் கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டாரு சார்... நீங்க டோ பண்ண வேண்டியதில்லை... டிரைவ் பண்ணிட்டே போலாம்’னு சொன்னாங்க. எனக்கு, தூக்கி வாரிப் போட்டுச்சு! 'என்ன சார், அன்னைக்கு ஓட்டிட்டுப் போனா இன்ஜின் சீஸ் ஆகிடும்னு சொன்னீங்க... இப்போ ஒண்ணும் ஆகாதுனு சொல்றீங்க’னு சத்தம் போட்டேன்.

அப்புறம் ஒருவழியா, மாத்தித் தர்றதா ஒப்புக்கிட்டாங்க. 'டைமிங் செயின் கிட் வாங்கியாச்சு... இன்ஜின் ஆயில், ஆயில் ஃபில்டர்.... அது இதுன்னு என்னென்னவோ மாத்தணும்’னு சொல்லி, 26,600 ரூபாய் ஆகும்னு எஸ்டிமேட் காட்டினாங்க. ஆனா, சென்னையில விசாரிச்சப்போ, டைமிங் செயின் கிட், வெறும் 4,000 ரூபாய்தான்னு சொன்னாங்க. ஆயில், ஃபில்டர்னு அவங்க சொன்ன எல்லாம் சேர்த்துப் பார்த்தா 12,000தான் பில் வரும்னு என் ஃப்ரெண்ட் சொன்னாரு.

சரி, போயிட்டுப் போகுதுன்னு வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன். திரும்ப இன்னொரு குண்டு. 'சார், டைமிங் செயின் மாத்தியாச்சு. ஆனா, இன்னும் சத்தம் வருது. வால்வ் டைமிங்ல பிரச்னை. இன்ஜின் கிராங்க் ஷாஃப்ட் தேய்ஞ்சிருக்கு. எக்ஸ்டன்டட் வாரன்ட்டி நோட் வெச்சிருந்தீங்கன்னா, ஈஸியா வேலையை முடிச்சுரலாம்’னு மூச்சு விடாமப் பேசி, என்னை மூச்சுவிட முடியாமப் பண்ணிட்டாரு.

கார் வாங்கும்போது எல்லாரும் ஒரு தப்பு பண்ணிடறாங்க. என்னன்னா, டாக்ஸ் இன்வாய்ஸ் தவிர்த்து, எக்ஸ்டன்டட் வாரன்ட்டிக்குனு தனியா ஒரு டெபிட் நோட் தருவாங்க. அதை நாம மறக்காமக் கேட்டு வாங்கணும். என் விஷயத்தில அந்தத் தப்பு எனக்கு நடந்தது. எக்ஸ்டன்டட் வாரன்ட்டி நம்பர் கேட்டு ஆர்டிசி மோட்டார்ஸுக்கு அலைஞ்சு, இப்போ விஎஸ்டி மோட்டார்ஸில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு எக்ஸ்டண்டட் வாரன்ட்டி டெபிட் நோட் வாங்கிட்டுப் போனா, 'ரெண்டு பேரிங்கும் உடைஞ்சிருக்கு சார்... இன்ஜினை ரீ-போரிங் பண்ணணும். கிட்டத்தட்ட 22 பார்ட்ஸ் மாத்தணும். 80,000-க்குள்ள சரி பண்ணிடலாம்’னு அசால்ட்டா சொன்னாரு மேனேஜர். ஆசை ஆசையா அன்னிவர்சரி கொண்டாடின என் காரைப் பிரிச்சுப் போட்டு, கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேல சர்வீஸ் சென்டர்ல ஊற வெச்சிருக்கறதைப் பார்த்தா, எனக்கு அழுகையே வருது.

என் லீனியா திரும்பக் கிடைக்குமா?

என் கேள்வி என்னன்னா, இன்ஜின் விஷயத்தில் சின்ன சத்தம் கேட்டவுடனே கவனமா டோ பண்ணி எடுத்துட்டுப் போயிருக்கேன். ஊருக்கெல்லாம் இன்ஜின் தயாரிச்சுக் கொடுக்கிற ஃபியட்டோட இன்ஜினே 57,000 கி.மீ-லயே சீஸ் ஆகுமா? கிட்டத்தட்ட 27 பார்ட்ஸ் மாத்தினா, என் காரோட பெர்ஃபாமென்ஸ் பாதிக்காதா? எனக்கு ஏன் புது இன்ஜின் மாற்றித் தரக் கூடாது? கார் இல்லாத இந்தக் காலகட்டத்தில், ஃபியட் நிறுவனம் எனக்கு ஆல்டர்நேட் கார் ஏன் தரலை? இது சம்பந்தமா பல தடவை நான் ஃபியட் கஸ்டமர் கேருக்கு மெயில் அனுப்பியும், வருத்தப்பட்டு ரிப்ளை பண்ணியதைத் தவிர வேறெந்த உதவியும் எனக்கு ஃபியட் பண்ணலையே... ஏன்? கஸ்டமர் கேரே சரியில்லைன்னா, நான் எங்கே போய் புகார் செய்றது?'' என்று நான்- ஸ்டாப்பாக வெடித்து விட்டார் ரத்தின சபாபதி.

இது பற்றி மணக்குளர் மோட்டார்ஸ் சர்வீஸ் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

 ரத்தின சபாபதியின் காரை சர்வீஸ் செய்த சர்வீஸ் மேனேஜரைத் தொடர்புகொண்டோம். ஸ்விட்ச்டு ஆஃப். அவரது உதவியாளரை விசாரித்தோம். ''இது ரொம்ப க்ரிட்டிக்கலான விஷயம். எப்படின்னே தெரியலை சார்? மொத்தம் 27 பார்ட்ஸ் இன்ஜின்ல மாத்த வேண்டியிருக்கு. ஃபியட்டுக்கு மெயில் பண்ணியிருக்கோம். எங்க சர்வீஸ் சென்டர் இப்போ லீவு... அடுத்த திங்கள்கிழமை மெயில் ரிப்ளை வந்த பிறகுதான் சார் எதுவும் க்ளீனா சொல்ல முடியும்?'' என்று பட்டும் படாமலும் பேசி போனை வைத்து விட்டார். இது தொடர்பாக, ஃபியட்டின் மண்டல மேலாளரிடம் பேசினோம். அவர் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, விரைவில் ரத்தின சபாபதியின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்திருக்கிறார்.

என் லீனியா திரும்பக் கிடைக்குமா?
என் லீனியா திரும்பக் கிடைக்குமா?
என் லீனியா திரும்பக் கிடைக்குமா?