Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!
News
இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

 ##~##

ருத்துச் சொல்வதில் நம் ஆட்களுக்கு அலாதிப் பிரியம். பெண்கள் தங்கள் டி-ஷர்ட்டில் கிண்டலாகக் கருத்து எழுதி, கவனத்தைக் கவர்வது பல காலமாக  ஃபேஷன். நம் ஆட்கள் அந்த ஃபேஷனைத் தோற்கடிக்கும் வகையில், கார்  - பைக்கில் எல்லாம் கருத்தைத் தெளிப்பதில் உலக சாதனை படைத்து வருகிறார்கள். பெரும்பான்மையான மக்கள் கருத்துச் சொல்லும் சாதனமாக வாகனங்களைப் பயன்படுத்தினாலும்... மைனாரிட்டியினர்  தங்களது அன்பை, பாசத்தை வெளிக்காட்டும் சாதனமாகவும் வாகனங்களைப் பயன்படுத்துவது உண்டு. 

'ஐ லவ் மம்மா, ஐ லவ் சுஜிக்குட்டி’ என்றெல்லாம் எழுதி அன்பை ஆறாக ஓட விடுவார்கள். சிலர் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, தங்கள் கார்களையே ரேஷன் கார்டாக உபயோகிப்பதும் உண்டு. பெரிய தாத்தா பெயர் முதல் வயிற்றில் சில மணித் துளிகளுக்கு முன்னால் உருவான கருவின் பெயர் வரை ஒரே ஃபான்ட்டில் கார் முழுக்க எழுதி வைப்பார்கள்.

சில விளம்பர அன்பு வெறியர்கள், பெயரோடு விடாமல் குடும்ப போட்டோவையும் போட்டு குலை நடுங்க வைப்பதும் உண்டு. வெட்டி பந்தாவுக்காகக் கண்டதையும் எழுதும் போக்கும் நிலவுகிறது. இவர்கள் வாகனம் வாங்கியதும் முதல் வேலையாக அதைக் கொண்டுபோய் நிறுத்துமிடம் ஸ்டிக்கர் கடைதான்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

கண்டதையும் எழுதி வாகனத்தைக் களங்கப்படுத்துவதில் பைக், ஆட்டோ, லாரி, கார், பஸ், வேன் இவர்களுக்குள் கடும் போட்டி. நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என ஷேர் ஆட்டோக்களும் புதிதாகக் களத்தில் குதித்துக் கலக்கிக்கொண்டு இருக்கின்றன. இந்த விஷயத்தில் விட்டுக்கொடுக்கக் கூடாது என வீராப்பாக மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும்கூட போட்டி போடுகின்றன.

'எங்கிட்ட மோதாதே, தொடர்ந்து வா... தொட்டு விடாதே, டோண்ட் கிஸ் மீ’ போன்ற டபுள் மீனிங் வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். 'நாம் இருவர் நமக்கு மூவர்’ என இன்னும் பெயின்ட் மாற்றாமல் ஓடும் லாரிகளை எப்போதாவது காண நேரிடலாம்.  'நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை’ லாரிகளையும் பார்க்கலாம். குழந்தை விஷயத்தில் பல்வேறு கொள்கைகளுடன் பல லாரிகள் ஓடிக்கொண்டுள்ளதை நுட்பமாகப் பார்த்தால் உணர முடியும்.

அரசாங்கப் பேருந்துகளைத் தவிர, மற்ற தனியார் பேருந்துகள் எந்த ஊருக்குச் செல்கின்றன என்ற போர்டை இந்தியா மேப்பில் கண்ணம்மாப்பேட்டையைத் தேடுவது போல தேட வேண்டியிருக்கும். பஸ்ஸா, இல்லை தியேட்டரா அல்லது ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடையா எனக் குழம்பும் வகையில் 5.1 மல்ட்டி சேனல் சிஸ்டம், டிஜிடல் டீடிஎஸ், டால்பி ஸ்டீரியோ, ஸரவுண்டு சவுண்ட் சிஸ்டம் என முன் பக்கம் 3டீ ஸ்டிக்கர்கள் மிரட்டும்.

பஸ் ஓனருக்கு, தெரியாத்தனமாக மூன்று பெண் குழந்தைகள் சைக்கிள் கேப்பில் தொடர்ந்து பிறந்து இருக்கும். தன் எதுகை மோனை அறிவை குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் பயன்படுத்தி, குடும்ப வட்டாரத்தில் அடைந்த புகழை மாவட்ட அளவில் அடையும் பொருட்டு, பேருந்திலும் திவ்யா, நவ்யா, பவ்யா என நளினமாக எழுதிவைத்து இருப்பார். பேருந்தின் சைடில் தங்கத் தேர், ராஜ ரதம் என எழுதி

இங்கு பஞ்சர் போடப்படும்!

இருக்கும். சில பேருந்துகளில் ஒரு ராக்கெட் படத்தை, நெருப்பைக் கக்கிக்கொண்டு சீறிப் பாய்வதைப் போல போட்டு, 'ஏர் ஜெட்’ என எழுதி திகிலைக் கிளப்புவார்கள். கிராமங்களுக்கு உள்ளேயே சுற்றும் மினி பஸ்களில்கூட 'பைபாஸ் ரைடர்’ என எழுதிக் குழப்பி அடிப்பார்கள். டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், லக்ஸ¨ரி க்ளாஸ், ப்ரீமியம் க்ளாஸ் என என்ன எழுதி இருந்தாலும் அதற்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லை. சமயங்களில் இந்தப் பேருந்துகளில் சீட்டைக் கொஞ்சம் பின்னால் சாய்க்கலாம்; அவ்ளோதான் இதற்கு அர்த்தம்.

கார் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் தனித்தன்மையுடன் எழுதுவதில் கில்லாடிகள். 'நோ ரூல்ஸ்’ என சிவப்பு கலரில் கொட்டை எழுத்தில் எழுதி விட்டு, டிராஃபிக் கான்ஸ்டபிள் கை காட்டியவுடன் எல்லா பேப்பரையும் எடுத்துக்கொண்டு இறங்கி பவ்யமாகக் கை கட்டி நிற்பார்கள். பதட்டத்தில் வாட்டர் வாஷ் செய்த பில்லையும் காட்டி கான்ஸ்டபிளை டென்ஷன் ஏற்றுவார்கள். It’s my dad’s road என பந்தாவாக ஸ்டிக்கர் ஒட்டி வைத்துக் கொண்டு, சிக்னலில் பச்சை விழுந்தும் பத்து விநாடிகள் கழித்துதான் காரை பயந்து கொண்டே எடுப்பார்கள். God’s Gift என ஸ்டிக்கர் ஓட்டிய கார்களும், பைக்குகளும் பல ஒயின் ஷாப்புகளின் ஓரத்திலேயே எப்போதும் நின்றிருக்கும்.

'நோ கேர்ள் ஃபிரண்ட், நோ டென்ஷன்’ என எழுதி ஒட்டி இருப்பார்கள். இந்த ஸ்டிக்கர் 'சீ.. சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன். உச்சகட்ட காமெடி என்னவெனில், ஸ்டைல் என நினைத்து மார்ல்ப்ரோ, 555 போன்ற சிகரெட் கம்பெனிகளின் விளம்பரங்களை தங்கள் சொந்தச் செலவில் பெயின்ட் செய்து இருப்பார்கள். சிலர், தங்கள் மதக் கடவுளுக்கு கார் கண்ணாடியில் மார்க்கெட்டிங் செய்வார்கள். தொழில் சார்ந்த ஸ்டிக்கர்களை காரில் ஒட்டுவது எதற்கு என்றே தெரியவில்லை.

டிராவல் டாக்ஸி, மேக்ஸி கேப்புகள் இதில் ரொம்பவும் நல்லவர்கள். 'ராஷ் டிரைவிங் செய்தாலோ, இந்த வேகத்தை மீறினாலோ, இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்’ என கார் கண்ணாடியின் முன்னும் பின்னும் தெளிவாக எழுதியிருப்பார்கள். ஆனால், அந்த எண்ணுக்கு நீங்கள் போன் அடித்தால் யாரும் எடுக்கமாட்டார்கள். அப்படியே எடுத்தாலும், கார் எண் என்ன, எந்தச் சாலையில் என எந்த விவரமும் கேட்காமல், ''நாங்கள் சொல்கிறோம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என  கண் ஆஸ்பத்திரி விளம்பரம் போலப் பேசுவார்கள்.

அரசியலில் இருப்பவர்கள் தங்கள் தலைவர், தான் சார்ந்த கோஷ்டி தலைவரில் ஆரம்பித்து, அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் வரை போட்டோ ஒட்டி இருப்பார்கள்.

சிறுவர் முதல் கிழவர்கள் வரை எல்லோருக்கும் 'அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறள் தெரிகிறதோ இல்லையோ, 'சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்ற வாசகம் நிச்சயம் தெரியும். இதற்குக் காரணம், தத்துவ உலகின் தலைமை ஞானிகளான ஆட்டோ ஓட்டுநர்கள்தான். பல தத்துவங்கள் இவர்களின் கலந்துரையாடலின்போது கிடைக்கப் பெற்று, ஆட்டோவின் பின்புறம் சாகாவரம் பெற்ற வாசகமாகப் பொறிக்கப்பட்டு, தமிழ் சமூகம் தலைமுறை தலைமுறையாகப் படித்து பயன்பெறும்.

காலத்தால் அழியாத சில கிளாஸிக் ஆட்டோ வாசகங்கள்.

'ஆடிக்குப் பின்னால் ஆவணி...

என் தாடிக்குப் பின்னால் தாவணி!’

'கண்களை சேலையில் அலைய விடாதே...

காலனின் ஓலையை அழைத்து விடாதே!’

'கடவுள் காதலித்தால் புராணம்...

மனிதன் காதலித்தால் மயானம்!’

- இப்படி இவர்கள் தத்துவமாகப் பொழிந்தாலும், தத்துவத்துக்கெல்லாம் அப்பாற்பட்டுதான் ரேட் கேட்பார்கள். ஒரு இடத்துக்குப் போவதற்கு இவர்கள் கேட்கும் ரேட் எந்த லாஜிக்கிலும் பொருந்தாது. ரேட் கட்டுப் படியாகி ஆட்டோவில் பயணிக்கையில், நாம் ஒரு வார்த்தை பேசி விட்டால் போதும், சென்னை நகர் முழுக்க ஓடும் அனைத்து ஆட்டோக்களின் பின்புறம் எழுதப்பட்டிருக்கும் அனைத்து வாசகங்களையும் விளக்கி, சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்து விடுவார் ஆட்டோ டிரைவர்.

மொத்தத்தில் விளம்பரப் பிரியர்கள், தத்துவப் பிரியர்கள், ஜாலி கோலி பேர்வழிகள் அனைவரும் தத்தம் வெறியைத் தீர்த்துக்கொள்ள வாயில்லா வாகனங்கள்தான் மாட்டுகின்றன. இந்த வெறி அளவோடு இருந்தால்கூட பொறுத்துக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக ஆகி, நம்பர் பிளேட் வரை கை வைக்கும்போதுதான் பிரச்னை ஆகிறது. ஆம்புலன்ஸுகளிலும், அமரர் ஊர்திகளிலும்கூட தற்போது தத்துவங்களும் விளம்பரங்களும் தென்படுகின்றன. அமரர் ஊர்திகளிலும் இப்போது அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள் சிரிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

'எனக்கு ஸ்டிக்கரே வேண்டாம்’ என்று எதையும் ஒட்டாமல் நாம் இருந்தாலும், விதி வலியது. சர்வீஸ் ஒழுங்காகச் செய்கிறார்களோ இல்லையோ, அந்த சர்வீஸ் சென்டர் அட்டெண்டர்கள் முதல் வேலையாக ஸ்டிக்கர்களை முன்னும் பின்னும் தெளிவாக ஒட்டிவிடுவார்கள். மியூசிக் சிஸ்டம் மாட்ட, அலாய் வீல் போட என ஆக்சஸரீஸ் கடைகளுக்குச் சென்றால், அவர்களும் தங்கள் பங்குக்கு இலவசமாக அவர்கள் கடை விளம்பரத்தை நம் காரில் பார்த்துக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் வெளியே வாட்டர் வாஷ் விடக்கூட பயமாக இருக்கிறது. அவர்களும் ஸ்டிக்கர்களுடன் அலைய ஆரம்பித்திருக்கிறார்கள்!

(கியரை மாத்துவோம்)

இங்கு பஞ்சர் போடப்படும்!