கார்ஸ்
Published:Updated:

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

டிஸ்டர்ப் பண்ணும் சஸ்பென்ஷன்!

 ##~##

''நான் ஒரு கார் பிரியன். அதிலும் சின்ன கார் என்றால், ரொம்பப் பிடிக்கும். ஏற்கெனவே டொயோட்டா இனோவா வைத்திருக்கிறேன்.  இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் வரலை. டொயோட்டானாலே பிரச்னை இல்லாத காராத்தான் இருக்கும். அப்படி நினைச்சுத்தான் எட்டியோஸ் லிவாவையும் வாங்கினேன். இப்போ விழி பிதுங்கி நிக்கிறேன். 

ஊர்ல இரண்டு ஆண் பிள்ளைகள் வெச்சிருக்கறவங்க ஒரு பழமொழி சொல்வாங்க. 'என்கிட்ட ஆனை மாதிரி ஒரு புள்ள... அழகா ஒரு புள்ள இருக்கு’னு புளகாங்கிதம் அடைவாங்க. அந்த வகையில, ஏற்கெனவே ஆனை மாதிரி என்கிட்ட இனோவா இருக்கு. அதே பிராண்டிலேயே, அழகா இன்னொரு சின்ன காரா, லிவா வாங்கலாம்னு முடிவு பண்ணினேன். 2012-ல், கிட்டத்தட்ட 7.5 லட்ச ரூபாய் ஆன் ரோடு விலையில், எட்டியோஸ் லிவா டாப் எண்ட் மாடலை புக் செய்தேன். திருச்சி ஆனைமலை டொயோட்டா போனபோது, செம வரவேற்பு. 'செம பில்டு குவாலிட்டி சார். சின்ன கார்லேயே சேஃப்ட்டியான காரைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க... வாழ்த்துகள்’னு வழக்கம்போல் பில்ட்-அப் கொடுத்தாங்க. ஒருத்தர், என்னதான் பிரச்னையான கார் வாங்கினாலும் ரெண்டு வருஷம், இல்லேன்னா ஒரு வருஷம், இல்லை ஒரு மாசம், அதுவும் இல்லன்னா அட்லீஸ்ட் ஒரே ஒரு வாரமாவது சந்தோஷமா இருந்திருப்பாரு. ஆனா, லிவா வாங்கி ஒரு மணி நேரம்கூட நான் சந்தோஷமா இல்லை.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

காரை டெலிவரி எடுத்துட்டு நாகப்பட்டினம் போற வழியிலேயே எனக்கு கெரகம் ஆரம்பிச்சிடுச்சு. டிரைவர் காரை ஓட்ட, நான் ஃபேமிலியோட பின்னாடி உக்காந்து  வந்தேன். ஒரு சின்னப் பள்ளத்தில் கார் ஏறி இறங்கினப்போ, உள்ளுக்குள்ள தடதடனு சத்தம். எங்க சத்தம் வந்ததுன்னே தெரியலை. திரும்பவும் டெஸ்ட் பண்ணும்போதுதான் சஸ்பென்ஷன் படு மோசமா இருந்தது தெரிஞ்சது.

உடனே ஆனைமலை டொயோட்டாவுக்கு போன் செஞ்சேன். 'கும்பகோணத்துக்கு வந்துடுங்க சார்... செக் பண்ணிடலாம்’னு சொன்னாங்க. கும்பகோணத்துக்குப் போனேன். 'ஸாரி சார்... நீங்க சொன்ன மாதிரியே சஸ்பென்ஷன்ல கம்ப்ளெய்ன்ட் இருக்கு. மாத்திடலாம்’னு சொன்னாங்க.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

இதுல என்ன ஒரு விஷயம்னா, நான் கார் டெலிவரி எடுக்கிறதுக்கு முன்னாடி, டெமோ காரை எனக்கு டெஸ்ட் டிரைவ் கொடுத்தாங்க. 'டெமோ கார் சூப்பரா இருந்துச்சே... என் கார் மட்டும் ஏன் சார் இப்படிப் பிரச்னை பண்ணுது?’னு கேட்டேன்.

'அப்போ டெமோ கார்ல இருக்கிற சஸ்பென்ஷனை, உங்க கார்ல போட்டுவிடுறோம். இப்போதைக்கு இதை ஓட்டுங்க... புதுசு வந்த உடனே கால் பண்றோம்’னு அனுப்பிச்சுட்டாங்க. டெமோ காரோட சஸ்பென்ஷனோட கொஞ்ச நாள் ஓட்டினேன். போன் பண்ணிக் கேட்டப்போ, ''ரெடியாகிடுச்சு சார்... திருச்சி வந்து மாட்டிக்கிட்டுப் போங்க''னு சொன்னாங்க. சரின்னு திருச்சி ஆனைமலைக்குப் போனேன். புது சஸ்பென்ஷன் மாட்டினாங்க. 'அப்பாடா..’ன்னு ஒருவழியா காரை  சந்தோஷமா எடுத்துட்டுப் போனேன். திரும்பவும் அதே பிரச்னை. இந்த முறை சஸ்பென்ஷனோட காரும் சேர்ந்து ஆட ஆரம்பிச்சது. ஸ்டீயரிங்ல கன்ட்ரோல் கிடைக்கலை. அதாவது, சைக்கிள்ல போகும்போது காத்தடிச்சா சைக்கிள் ஆடுமே... அந்த மாதிரி ஒரு ஃபீலிங். 'என்ன சார் இது?’னு திரும்பவும் போய் நின்னேன்.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

அவங்களே டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்த்தாங்க. ''நீங்க சொல்ற அளவெல்லாம் இல்லை. அதைவிட இது கொஞ்சம் பெட்டராத்தான் இருக்கு’னு சொன்னாங்க. நான் திருப்தியடையலை. உடனே கஸ்டமர் கேருக்கு போன் பண்ணேன். கொஞ்ச நாள்ல R&D (Research and Development) டிபார்ட்மென்ட் ஆட்கள் வந்து செக் பண்ணினாங்க. அவங்க, 'ப்ராப்ளம் இருக்கு... மாத்திடுங்க’னு சொன்ன பிறகுதான் வேற சஸ்பென்ஷன் கிட் போட்டுக் கொடுத்தாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க... என் நேரம்... சொல்லவே அசிங்கமா இருக்கு. திரும்பவும் அதே ப்ராப்ளத்தோட திருச்சி சர்வீஸ் சென்டர்ல போய் நின்னேன். அவங்களும் கடுப்பாகிட்டாங்க.

''சார்.. இந்த விலைக்கு இப்படித் தாங்க பண்ண முடியும். இதோட நாங்க மூணாவது தடவையா சஸ்பென்ஷன் மாத்திருக்கோம்''னு சொல்லி, திரும்பவும் சஸ்பென்ஷன்ல ரீ-ஒர்க் பண்ணினார் மேனேஜர்.

'சார், நாங்க என்னதான் ஃப்ரீ சர்வீஸ் பண்ணினாலும், நீங்க திருப்தியே பட மாட்றீங்க... ஆக்ஷ§வலா இது எங்க ஜாப் கிடையாது. இந்த முறை சஸ்பென்ஷன் நல்லா இருக்குன்னு ஃபீட்பேக் லெட்டர்ல கையெழுத்துப் போட்டுத் தந்தால்தான், நாங்க காரை டெலிவரி தருவோம்’னு சொன்னார் அந்த மேனேஜர்.

'அது எப்படிங்க ஓட்டிப் பார்க்காமலே பாஸிட்டிவ்வா லெட்டர் தர முடியும்’னு முரண்டு பிடிச்சேன். என்னோட பிடிவாதம் தாங்க முடியாம, காரை புது சஸ்பென்ஷனோட டெலிவரி குடுத்தாங்க. சத்தியமா நம்புங்க சார். சஸ்பென்ஷன் பிரச்னையில் டிஸ்டிங்க்ஷனே வாங்கிடுவேன் போல!

திரும்பவும் கஸ்டமர் சர்வீஸுக்கு போன் பண்ணப்போ, சாதாரணமா ஒரு புள்ளி விவரம் சொன்னாங்க. 'சார்... எங்களுக்கு ஏற்கெனவே இதே மாதிரி ஒரு லட்சம் கம்ப்ளெய்ன்ட்டுக்கு மேலே இருக்கு(!) கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’னு சொன்னாங்க. அதுவும் கஸ்டமர் கேர்ல முழுசும் இந்தியிலதான் பேசுறாங்க. என்னோட நண்பனைக் கூட்டிட்டுப் போய்தான் கஸ்டமர் கேருக்கு போன் பண்ண வேண்டியதா இருந்தது. கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா, அங்கே ஒரு கொடுமை நாட்டாமை பண்ணிட்டு இருந்துச்சாம். அந்த மாதிரி ஆகிப் போச்சு என் கதை. இப்போ இந்த ஓட்டை சஸ்பென்ஷனை வெச்சுத்தான் காலம் தள்ளிக்கிட்டு இருக்கேன்!'' என்று நொந்து போய் சொன்னார் சந்திரமோகன்.

அவர் சொல்வது உண்மைதானா என்றறிய, அவரது காரில் ஒரு ரவுண்ட் வந்தோம். சின்னச் சின்ன மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, கரடுமுரடான சாலைகளில் ஆஃப் ரோடிங் செய்வதுபோல் இருந்தது. முன் பக்க வீலில் இருந்து கர்ண கொடூரமான சத்தம் காதைப் பிளந்தது. 'கார் ஓட்டுறதுல நான் எக்ஸ்பர்ட்டாக்கும்’ என்று வேகமாகப் போகும்போது கொஞ்சம் ஸ்டைலாக  ஸ்டீயரிங்கைப் பிடித்தோமானால், அவ்வளவுதான். எந்நேரமும் வீல் கழன்று ஓடிவிடுமோ என்ற அச்சத்தில், புதிதாக அலாய் வீலெல்லாம் மாற்றிவிட்டதாகச் சொன்னார் சந்திரமோகன்.

லிவாவில் சஸ்பென்ஷன் பிரச்னையைத் தாண்டி, மேலும் ஒரு தலைவலியாக அவர் சொல்வது, மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வருகிறது என்பது. காரணத்தை ஆராய்ந்தபோது, நான்கு பக்கக் கதவுகளும் சரியாக லாக் ஆகவில்லை. ஏதோ கிழிந்துபோன பழைய ரூபாய் நோட்டை ஒட்டுவது போல், செல்லோடேப்பினால் டோர் லாக்குகளை கவர் செய்திருந்தார் சந்திரமோகன்.

''எட்டியோஸ் கார்களை இந்தியா முழுசும் ரீ-கால் பண்ணியதாக மோட்டார் விகடனில் படிச்ச பிறகுதான் நான் லிவா காரை வாங்கினேன். இன்னும் அந்தப் பிரச்னை அப்படியேதான் இருக்கு. கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது. இப்போ இதுவே பழகிடுச்சு!'' என்று கையெடுத்துக் கும்பிட்டார் சந்திரமோகன்.

இது பற்றி திருச்சி ஆனைமலை டொயோட்டா மோட்டார்ஸ் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்...?

லிவாவைக் குறை சொல்லும் ஒரே நபர் இவர்தான்!

 ஆனைமலை டொயோட்டா மோட்டார்ஸின் சேல்ஸ் அண்டு சர்வீஸ் சீனியர் மேனேஜரைத் தொடர்புகொண்டோம். ''சார், நாங்க ஆல்-இந்தியா லெவல்ல எட்டியோஸ் லிவா டெலிவரி பண்ணிக்கிட்டு இருக்கோம். பிரச்னைனு வந்தா, கஸ்டமர் திருப்தியடையற வரை விட மாட்டோம். முதன் முதலா சஸ்பென்ஷன் ப்ராப்ளம்னு வந்தப்போ, பெங்களூருல உள்ள டொயோட்டா மேனுஃபேக்சர்ஸ்ல இருந்து சஸ்பென்ஷன் கிட் வாங்கிட்டு வந்து பொருத்தினோம். அந்த பேட்ஜுல வந்த மத்த எல்லா கஸ்டமர்ஸும் திருப்தியடைஞ்சுட்டாங்க. ஆனா, இவர் மட்டும்தான் திரும்ப வந்தார். மறுபடியும் அதுல ரீ-ஒர்க் பண்ணி கொடுத்தோம். ரெண்டு மாசம் கழிச்சு திரும்பவும் வந்தார். இது வரைக்கும் எங்களோட கஸ்டமர்ஸிலேயே திருப்தி அடையாதவர் இவர் மட்டும்தான் சார்! நீங்க சொல்றது மாதிரி மற்ற பிரச்னை பற்றி எதுவுமே கம்ப்ளெய்ன்ட் பண்ணலையே?'' என்றார்.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்