கார்ஸ்
Published:Updated:

ரஷ்

ரஷ்

ரஷ்’ - பரபர ஆக்ஷன் காட்சிகளுக்குக் குறைவில்லை என்றாலும், அதையும் தாண்டி இந்தப் படம் பேசும் ஃபார்முலா-1 ரேஸ் அரசியலும், தனி மனித தத்துவார்த்தங்களும்தான், இதை உலகின் தலைசிறந்த படமாக மாற்றியிருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் தீப்பொறி கிளப்பும் ரேஸ் டிராக் சாகசங்களை எதிர்பார்த்தால், ஏமாந்துபோவீர்கள்!

இது, ரேஸ் கார்களைப் பற்றிய படம் அல்ல. ரேஸ் டிரைவர்களைப் பற்றிய படம்.

பிரிட்டனின் ஜேம்ஸ் ஹண்ட், ஆஸ்திரியாவின் நிக்கி லவ்தா ஆகிய இரு ஜாம்பவான்களின் மோதல்தான் இந்தப் படத்தின் கதை. ஃபார்முலா-3 ரேஸில் இருவருக்கும் ஏற்படும் சிறு உரசல், ஃபார்முலா-1 ரேஸ்களில் நீயா, நானா? என முஷ்டி முறுக்க வைத்து, இறுதியில் வாழ்வா, சாவா போராட்டமாக மாறுவது வரையிலான கிராஃப், மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டு இருக்கிறது.

ரஷ்

மழை பெய்து முடித்த பின்பு, ரிஸ்க் அதிகம் என ஜெர்மன் கிராண்ட் ப்ரீயை நிக்கி நிறுத்தச் சொல்ல.... அவரை தேவை இல்லாமல் சீண்டி ரேஸுக்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார் ஜேம்ஸ் ஹண்ட். எதிர்பாராத விபத்தில் உயிர் மட்டுமே எஞ்சிய நிலையில் மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருக்கிறார் நிக்கி. அதன் பிறகு எல்லா ரேஸ்களிலும் ஜேம்ஸ் வெற்றிபெற, அதனால் உந்தப்பட்டு மீண்டு வருகிறார் நிக்கி.

ஒருவொருக்கொருவர் கொலை வெறியோடு திரிந்தாலும், மற்றவரின் திறமை மீது மரியாதை வைத்திருக்கின்றனர். விபத்துக்குப் பிறகான பிரஸ் மீட்டில், நிக்கியிடம் அந்தரங்கக் கேள்விகளைக் கேட்டு கோபமூட்டிய ஒரு ரிப்போர்ட்டரை, ஜேம்ஸ் ஹண்ட் நையப்புடைக்கும் ஒரு காட்சி போதும், அவர்கள் இருவருக்குமான உறவைச் சொல்ல!

படத்தின் இயக்குனர், ஹாலிவுட் ஜாம்பவான் ரான் ஹாவர்ட். 'அப்போலோ-13, தி டாவின்சி கோட், தி பியூட்டிஃபுல் மைண்ட்’ என மிக முக்கிய ஹாலிவுட் படங்களின் இயக்குனர் இவர்.

ஜேம்ஸ் - நிக்கி இருவரில் யார் சிறந்தவர் என்ற ஒப்பீடு இல்லாமல் படம் பார்த்தால், ஃபார்முலா-1 பந்தயத்தைப் பற்றிய ஒரு மிக முக்கியப் பதிவை படமாகப் பார்த்த திருப்தி, 'ரஷ்’ படத்தில் கிடைப்பது நிச்சயம்!

மோ.அருண்ரூப பிரசாந்த்