Published:Updated:

ஷோ-ரூம் ரெய்டு

ஷோ-ரூம் ரெய்டு

சொகுசு கார், சொகுசு கார் என்கிறார்களே? சொகுசு கார் ஷோரூமுக்குப் போனால்... வாடிக்கையாளருக்கான மதிப்பு எப்படி இருக்கும்? இந்த முறை பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி ஷோரூம்களுக்குச் சென்றேன்.

 கே.யு.என் எக்ஸ்க்ளூசிவ்

பிஎம்டபிள்யூ, மீனம்பாக்கம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரெய்டு தேதி : 19/11/2013

முதலில், பிஎம்டபிள்யூ ஷோரூம் நெருங்கியதும், 'ஷோரூமுக்குள் என் காரை பார்க் செய்ய உள்ளே போகலாமா?’ என செக்யூரிட்டியிடம் கேட்டேன். செக்யூரிட்டி வட நாட்டு ஆள் போல, ''வள்ளே நெறைய ஃபுல்லா இர்க்கு. வெளியே சைட்லே பார்க் பண்ணு'' என்றார். ''கார் பாக்க வண்டுருக்கா?'' என்று கேட்டார். 'ஆமா வண்டிருக்கு’ எனச் சிரித்தபடியே சொல்லிவிட்டு, ஷோரூம் பக்கவாட்டில் இருந்த ரோட்டில் காரை பார்க் செய்ய நகர்த்தினேன்.

ஷோ-ரூம் ரெய்டு
 ##~##

ஆஃப் ரோடு அட்வென்ச்சருக்கு ரோடைத் தயார் செய்து வைத்திருந்ததைப்போல பெரிய பள்ளங்களில் நீர் தேங்கி இருந்தது. 'ஜமுக்கு ஜிக்காங்... ஜிக்காங்க்..’ என கார் துள்ளித் துள்ளி ஒவ்வொரு பள்ளத்தையும் கடந்து சென்றது. இருபுறமும் பல கார்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன. கடைசியாக டஞ்சனான இடத்தில் காரை பார்க் செய்துவிட்டு, ஷோரூமை நோக்கி நடந்தேன். பிரம்மாண்டமான ஷோரூம். பிஎம்டபிள்யூ கார்கள் அசத்தலாக வரிசை கட்டி நின்றன. நான் நேராக ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் சென்றேன். அவர் கேள்விக்குறியோடு என்னைப் பார்க்க, ''என்கொயரிக்காக வந்திருக்கிறேன்'' என்றேன்.

சிரித்தவாறே, ''என்ன என்கொயரி?'' என்று கேட்டார்.

நானும் சிரித்துக்கொண்டே, ''நியூ கார் என்கொயரி'' என்றேன்.

என்னை அழைத்துச் சென்று ஒரு சேரில் அமரவைத்து, 'டீ ஆர் காபி’ என்றார். 'வாட்டர் மட்டும் போதும்’ என்றேன். இந்த சேர் டேபிள் செட்டப், 'பப்’ செட்டப் போல இருந்தது.

தண்ணீர் கொடுத்து, 'சற்று நேரம் காத்திருங்கள்’ எனப் பணிவாகச் சொல்லிவிட்டு அகன்றார் அந்தப் பெண். 10 நிமிடங்கள் காத்திருத்தலுக்குப் பிறகு, ஒருவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

எடுத்த உடனேயே, ''டெஸ்ட் டிரைவ் செய்கிறீர்களா?'' எனக் கேட்டார். ''இல்லை சார், நான் ஜஸ்ட் ப்ரிலிமினரி என்கொயரிக்காகத்தான் வந்திருக்கேன். பணம் ரெடி பண்ண, முடிவெடுக்க இன்னும் ஒரு மாசத்துக்கு மேல ஆகலாம்'' என்றேன்.

''அதனாலென்ன? டெஸ்ட் டிரைவ் செய்ங்க... அப்புறம் முடிவெடுத்துக்கலாம்'' என எனெர்ஜடிக்காகக் கூறி, 30 லட்ச ரூபாய் விலை கொண்ட பிஎம்டபிள்யூ 1 சிரீஸ் காரில் உட்கார வைத்தார். ஓட்ட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஓட்டவைத்தார். ஓட்டும்போது, அலுக்காத வண்ணம் காரைப் பற்றி ஒவ்வொரு விபரமாகச் சொல்லிக்கொண்டும், செய்து காட்டியும் வந்தார். 80 கி.மீ ஸ்பீடில் சென்று ஸ்பீடைக் குறைக்காமல் வளைக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார். அதேபோல, ஸ்பீடாகப் போய் சடன் பிரேக் அடிக்கச் சொன்னார். அனைத்தையும் சிரித்துக்கொண்டே அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தார். இந்த காரை விற்றாக வேண்டும் என்ற அவரின் முனைப்பை, ஷோரூம் ரெய்டுகளிலேயே, இப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். காரைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெளிவாக, அதேசமயம் போர் அடிக்காத முறையில் சொன்னார். ஷோரூமில் உட்கார்ந்துகொண்டு சொல்வதை விட, ஓட்டிக்கொண்டே பிராக்டிக்கலாக டெமோ காட்டுவது சிறந்த முறை. மோட்டார் விகடனுக்காக ரெய்டு போன எனக்கே, உண்மையிலேயே அந்த காரை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.

இப்போதெல்லாம் மளிகைக் கடைக்குப் போனால்கூட ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், பிஎம்டபிள்யூ ஷோரூம் என்பதற்காக, வெட்டியாக பீட்டர் விடாமல், ஆளைப் பொறுத்து தமிழில் பேசினார். லோக்கல் டச்சிங்கோடு மார்க்கெட்டிங் செய்தார்.

லோன் ஆப்ஷன்களையும் குழப்பாத வண்ணம் சிம்பிளாகச் சொல்லி பிரின்ட் அவுட் எடுத்துக் கொடுத்தார். 'சீக்கிரம் பணத்தை ஏற்பாடு பண்ணிட்டுச் சொல்லுங்க’ என மோட்டிவேட் செய்து அனுப்பி வைத்தார். இதுவரை ரெய்டு சென்ற அனுபவத்தை எழுதும்போது,  சேல்ஸ்மேன்களின் பெயரைக் குறிப்பிட்டது இல்லை. இந்த முறை இவரைப் பாராட்டும் வண்ணம் பெயரைச் சொல்லலாம் என நினைக்கிறேன். இவர் பெயர், கோபால். கங்கிராட்ஸ் பிரதர்!

டிரான்ஸ்கார் இந்தியா - பென்ஸ், மீனம்பாக்கம்

ரெய்டு தேதி : 19/11/2013

அடுத்து, கிளாஸிக் எனச் சொல்லப்படும் பென்ஸ் ஷோரூமுக்கு என் காரை ஓட்டிச் சென்றேன். பழைய விமான நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி ரோடில் இருக்கும் பென்ஸ் ஷோரூமில் காரை ஏற்றினேன். 'கஸ்டமர் பார்க்கிங்’ என இருக்கும் சைன் போர்டை பார்த்து காரைத் திருப்பினால், பார்க்கிங்கே இல்லை. தொடர்ந்து ஓட்டினால், பின்னால் இருக்கும் தெருவில் கொண்டுபோய்விட்டது. அங்கே தெருவின் ஓரம் காரை பார்க் செய்துவிட்டு, ஷோரூமுக்கு நடந்து வந்தேன். வெளியே இருந்து பார்க்க ஷோரூம் அட்டகாசமான லுக். உள்ளேயும் விசாலமாக, சுத்தமாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் கோட்டு சூட்டு போட்ட இரு பெண்கள் ரிசப்ஷனில் இருந்தார்கள். ஒரு கோட் அணிந்த பெண், உடனடியாக என்னை விசாரித்தார். என்னை சோஃபாவில் அமரவைத்த பின்பு, ஒரு ஐ-பேட் கொடுத்து, என்னை ஃபேஸ்புக்கில் லாக்-இன் செய்யச் சொல்லி, 'பென்ஸ் சென்னை’ பக்கத்தை லைக் செய்யச் சொன்னார்.

ஷோ-ரூம் ரெய்டு

வாடிக்கையாளரின் விபரங்களை பேப்பரில் வாங்குவதற்குப் பதில், இந்த ஏற்பாடு. அதற்குப் பிறகு, அவர் ஒரு சேல்ஸ் பெர்சனை அறிமுகப்படுத்திவிட்டு விலகிச் சென்றார். அந்த சேல்ஸ் பெர்சன் அருமையாக கோட் சூட் போட்டபடி என் முன் நின்றார்.

அவர் முகம் குழப்பமாக இருந்தது. அதே குழப்பத்துடன் என்னைக் கேள்விக்குறியோடு பார்த்தார். ''இது என்னடா வம்பாப்போச்சு’ என நினைத்துக் கொண்டு, 'பென்ஸ் கார் என்கொயரிக்காக வந்திருக்கிறேன்'' எனச் சொன்னதும், ''ம்..'' என்றார்.

அட, எப்படித்தான் ஆரம்பிப்பது எனக் குழம்பியபடி, ''கேன் யூ ப்ளீஸ் எக்ஸ்ப்ளெய்ன் அபௌட் தி வேரியன்ட்ஸ் அண்டு ப்ரைஸஸ்'' என பீட்டர் விட்டதும்... கொஞ்சம் சுறுசுறுப்பாகி, ஃபைனான்ஸ் மேனேஜரிடம் இழுத்துச் சென்றார்.

டவுன் பேமென்ட், ஈ.எம்.ஐ, எவ்வளவு வருஷம் போன்றவற்றை ஃபைனான்ஸ் ஆள் விளக்கிய பின்பு, இவர் திரும்பவும் பரபிரம்மம் போல என அருகில் வந்து நின்றுகொண்டு கேள்விப் பார்வை பார்த்தார்.

நானே அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பென்ஸ் காரை கடமைக்குத் திறந்து பார்த்தேன். அவர் கையைக் கட்டிக்கொண்டு என் பின்னால் நின்றுகொண்டு இருந்தார்.

''ஓகே, நான் செல்கிறேன்'' என்றதும், பக்கா ஸ்டைலாகக் கைகொடுத்தார். நான் சென்றபோது, நான் மட்டுமே அங்கே இருந்த ஒரே கஸ்டமர். கோட் சூட் போட்டு, ஐ பேடில் ஃபேஸ்புக் லைக் வாங்குவதுதான் அட்வான்ஸ் திங்கிங் என நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. என்ன மாடல் வாங்கப் போகிறீர்கள்? டெஸ்ட் டிரைவ் போகிறீர்களா என எதைப் பற்றியும் கேள்வி இல்லை. அவர் கேட்ட ஒரே கேள்வி, ''உங்க பட்ஜெட் என்ன?''

அவர் செய்த ஒரே வேலை... என்னை ஃபைனான்ஸ் மேனேஜரிடம் கொண்டுவிட்டு, கை கட்டி பக்கத்தில் நின்றதுதான்.

ஆடி இந்தியா, நந்தனம்.

ரெய்டு தேதி: 19/11/2013

அதே சூட்டோடு காரை ஆடி ஷோரூமுக்குத் துரத்தினேன். வெளியே பரந்து விரிந்த பார்க்கிங் ஸ்பேஸ். ரசனையான வடிவமைப்புடன் ஷோரூம் டிசைன். நான் நுழைந்த நேரம் மாலை 7 மணி என்பதால், ரிசப்ஷனில் பெண்கள் இல்லை.

ரிசப்ஷனில் அமர்ந்திருந்தவரிடம் சென்று இந்த முறை தெளிவாக, ''புதிதாக ஆடி கார் வாங்க என்கொயரிக்காக வந்திருக்கிறேன்'' எனக் கூறினேன். ''எந்த மாடல்?'' என்றார்.

''க்யூ3...''

''வாங்க'' என அழைத்துக்கொண்டு போய் காரிடம் விட்டார். திறந்து பார்த்தேன். சுற்றிச் சுற்றி வந்து பார்த்தேன். இருவரும் சோஃபாவில் அமர்ந்தோம்.

ஷோ-ரூம் ரெய்டு

ஒரு பேப்பரை எடுத்துப் படம் போட்டு, ஆடி காரின் 4 வீல் டிரைவ் எப்படி மற்ற கார்களைவிட சிறப்பானது என்று விளக்கினார். 'க்வாட்ரோ என்ற தொழில்நுட்பம் ஆடி காரில் தனித்துவமானது’ எனக் கூறி இம்ப்ரெஸ் செய்தார்.

சமீபத்தில், ஒரு ஆஃப் ரோடு டிராக் ரெடி செய்து, ஆடி கஸ்டமர்களை அதில் ஓட்டவிட்டிருக்கிறார்கள். அதை தன் மொபைல் போனில் படம் பிடித்து வைத்துள்ளார். அந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக எனக்கு ஓடவிட்டுக் காட்டினார். பெர்சனல் மொபைலில் இருந்து காட்டுவதால், நம்பகத்தன்மை உடையதாகவும் வாடிக்கையாளரைக் கவர்வதாகவும் இருந்தது.

லோன் ஆப்ஷன்களை விதவிதமாக விளக்கினார். பேச்சினூடே ஆடியின் காம்பெடிட்டர் என பிஎம்டபிள்யூவை ஒப்பிட்டு, ஆடியே சிறந்தது என வாதிட்டார். ''பிஎம்டபிள்யூவில் இருக்கும் அம்சங்களைவிட இதில் கூடுதலாக உள்ளது. மேலும், இது 4 வீல் டிரைவ். விலையும் கிட்டத்தட்ட அதே விலைதான்'' எனக் கூறி மார்க்கெட்டிங் செய்தார்.

ஆனால், டெஸ்ட் டிரைவ் பற்றி மூச்சே விடவில்லை. அதேபோல, நான் கிளம்பியபோது, என் தகவல்களை எழுதி வாங்கிக்கொள்ளவில்லை. தண்ணீர், டீ, காபி வேண்டுமா என்று பேச்சுக்குக்கூடக் கேட்கவில்லை.

ஷோ-ரூம் ரெய்டு