Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்
##~##

வந்துவிட்டது புதிய எஸ் கிளாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென்ஸ் ரசிகர்களின் உச்சபட்ச சொகுசு காரான எஸ் கிளாஸ், புதிய மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. இப்போதைக்கு பெட்ரோல் இன்ஜின்கொண்ட மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்கிறது பென்ஸ். இது, ஜெர்மனியில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கே விற்பனை செய்யப்பட இருக்கிறது. 4.7 லிட்டர் ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் இன்ஜினை இதயமாகக் கொண்டிருக்கிறது புதிய எஸ் கிளாஸ். இது, அதிகபட்சமாக 435 bhp சக்தியையும், 71.36 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 7-ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கொண்ட இந்த காரின் சென்னை ஆன் ரோடு விலை, 2 கோடி ரூபாயை நெருங்குகிறது!

டாடாவின் ரெவோட்ரான்!

மோட்டார் நியூஸ்

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ரெவோட்ரான் இன்ஜினை அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். 'ரெவோட்ரான்’ என்பது டாடா மோட்டார்ஸின் புதிய இன்ஜின் வரிசையின் பெயர். இந்த ரெவோட்ரான் இன்ஜின் வரிசையில், முதல் இன்ஜினாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது. 1.2 லிட்டர் கொள்ளளவுகொண்ட இந்த 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில், வாட்டர் கூல்டு லோ இனெர்ஷியா டர்போ சார்ஜர் இருக்கிறது. இந்த இன்ஜின் 83.8 bhp சக்தியை 5,000 ஆர்பிஎம்-லும் 14.3 kgm டார்க்கை 1,750 - 3,500 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. ஓட்டுபவரின் விருப்பத்துக்கேற்ப இன்ஜினை இயக்குவதற்கு மல்ட்டிபிள் டிரைவிங் மோடு உண்டு. இந்த இன்ஜினில் சத்தம், அதிர்வுகள் குறைவாக இருக்கும்.

இந்தியாவில் இண்டியன்!

அமெரிக்காவின் முதல் மோட்டார் சைக்கிள் நிறுவனமான இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ், இந்தியாவில் டயர் பதித்திருக்கிறது. 1901-ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்ட இந்த க்ரூஸர் பைக் தயாரிப்பு நிறுவனத்துக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கிட்டத்தட்ட 110 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் இண்டியன் நிறுவனம் கிளாஸிக், வின்டேஜ், சீஃப்டெய்ன் என மூன்று புதிய க்ரூஸர்களை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. மூன்று பைக்குகளில் இருப்பது 1,811 சிசி திறன்கொண்ட ஒரே இன்ஜின்தான். இது அதிகபட்சமாக 14.17 nm டார்க்கை அதிகபட்சமாக 2,800 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்துகிறது. மூன்றிலுமே 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். மூன்றின் விலையும் 28 லட்சம் ரூபாயில் துவங்கி 35 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. டெல்லியில் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் பெங்களூருவிலும் ஷோரூம் திறக்கவிருக்கிறது இண்டியன்.

மோட்டார் நியூஸ்

பனிச்சறுக்கு விளையாடியபோது விபத்து!

கோமாவில் மைக்கேல் ஷூமேக்கர்!

மோட்டார் நியூஸ்

முன்னாள் ஃபார்முலா-1 ரேஸ் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர், பிரான்ஸ் நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். ஹெல்மெட் அணிந்திருந்த போதும் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஷூமேக்கர், இன்று வரை சுயநினைவு திரும்பாமலேயே இருக்கிறார். தலையில் ஏற்பட்டுள்ள காயங்கள் மிகவும் கடுமையாக இருப்பதால், அவரைத் தொடர்ந்து கோமா நிலையிலேயே வைக்க மருந்துகள் தரப்பட்டுள்ளன. கோமாவில் இருந்து ஷூமேக்கர் மீண்டுவருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என டாக்டர்கள் கைவிரித்துவிட்ட நிலையில், கடவுளின் கருணை வேண்டி உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்!

டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர்

கார்ல் ஸ்லிம் மரணம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம்மின் திடீர் மரணம் ஆட்டோமொபைல் உலகையே அதிர வைத்தது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸின் தாய்லாந்து பிரிவு அலுவலகத்துக்குச் சென்றிருந்த கார்ல் ஸ்லிம், பாங்காக்கில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மனைவியுடன் தங்கியிருந்தார். ஜனவரி 26-ம் தேதி காலை அவரது உயிரற்ற உடலை, ஹோட்டலின் திறந்தவெளி மைதானத்தில் ஊழியர்கள் கண்டெடுத்தனர். முதல்கட்ட விசாரணையின்படி, அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று தாய்லாந்து போலீஸ் அறிவித்துள்ளது.

மோட்டார் நியூஸ்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 52 வயதான கார்ல் ஸ்லிம், 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவாலாகி இருந்த அன்றைய காலகட்டத்தில், ஜிஎம் இந்தியா நிறுவனத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் திறம்பட நிறுவனத்தை இயக்கியவர் கார்ல் ஸ்லிம். 2012-ம் ஆண்டு ரத்தன் டாடாவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குத் தலைமையேற்க அழைக்கப்பட்டபோது, டாடா மிகப் பெரிய சரிவில் இருந்தது. சவால்களை விரும்பும் கார்ல் ஸ்லிம், டாடாவுக்குத் தலைமையேற்றார்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கார்ல் ஸ்லிம் தலைமையில் டாடா புத்தம் புதிய கார்களை அறிமுகப்படுத்தவிருந்த நிலையில், அவரது மரணம் எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கார்ல் ஸ்லிம்மின் மரணம், டாடா மோட்டார்ஸுக்கு மட்டுமல்ல; ஆட்டோமொபைல் துறைக்கே மிகப் பெரிய இழப்பு!

மோட்டார் நியூஸ்

ஆடி - நம்பர் ஒன்!

பிரீமியம் செக்மென்ட்டில், ஜெர்மன் நிறுவனங்களிடையே இத்தனை ஆண்டுகளாக நடந்த கடும் போட்டியில், பிஎம்டபிள்யூதான் முன்னிலையில் இருந்துவந்தது. ஆனால், 2013-ம் ஆண்டில் 10,002 கார்கள் விற்று, முதல் இடத்துக்கு வந்துவிட்டது ஆடி. நம் நாட்டில் ஒரே ஆண்டில் 10,000 கார்களுக்கு மேல் விற்ற முதல் சொகுசு கார் தயாரிப்பாளரும் ஆடிதான். இந்த வளர்ச்சி கடந்த ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிகம். 'வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும் மார்க்கெட்டிங் உத்திகளால், இது சாத்தியமானது’ என்கிறது ஆடி நிறுவனம். மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் 9,003 கார்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆடியைவிட பென்ஸின் வளர்ச்சியை இங்கு நாம் கவனிக்க வேண்டும். 2013-ம் ஆண்டில் மட்டும் பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நிறைய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியதாலும், தன்னுடைய சில கார்களை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்ததாலும்தான் இந்த வளர்ச்சியை பென்ஸ் அடைந்தது.  கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னிலையில் இருந்த பிஎம்டபிள்யூ, 2013-ம் ஆண்டில் வெறும் 7,287 கார்களை மட்டுமே விற்று, 21.85 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதற்குக் காரணம், தன்னுடைய எஸ்யூவி கார்களைச் சரியாக மார்க்கெட்டிங் செய்யாமல் போனதுதான். 2,913 கார்களுடன் நான்காவது இடத்தில் டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட்-ரோவர் இருக்கிறது. இதன் வளர்ச்சி 22 சதவிகிதம் என்றாலும் ஜெர்மன் நிறுவனங்களை வெற்றிகொள்ள இன்னும் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும்!

மோட்டார் நியூஸ்

ஜீப் தாமதம்!

நம் நாட்டில், ஜீப் நிறுவனம் இந்நேரம் அறிமுகமாகியிருக்க வேண்டும். ஜீப் தனது கார்களையும் இந்தியாவில் வெகுவாக சோதனை செய்துவந்தது. ஆனால், 2014 ஆட்டோ எக்ஸ்போவில் ஜீப் கார்கள் காண்பிக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நம் நாட்டில் ஜீப் நிறுவனம் கால் ஊன்ற விரும்பினாலும், இப்போது இருக்கும் சந்தை நிலவரம் காரணமாக தன்னுடைய அறிமுகத் திட்டங்களைத் தள்ளிப்போட்டு இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என இல்லாமல், இந்திய ஆட்டோமொபைல் சந்தையை மிகக் கவனமாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறது ஜீப். சந்தை நல்ல நிலைக்குத் திரும்பும்வரை ஜீப் நிறுவனத்தின் அறிமுகம் தாமதம் ஆகும் என்றே தோன்றுகிறது.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism