Published:Updated:

காருக்கு பாலீஷ் போட்டாச்சா?

ர.ராஜா ராமமூர்த்தி, படங்கள்: சொ.பாலசுப்பிரமணியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கார்களைச் சுத்தம் செய்வது பலருக்கு பேஷன். சட்டையில் கறை இருந்தாலும் பிரச்னை இல்லை; காரில் எந்தக் கறையும் இருக்கக் கூடாது என்பதுதான் கார் பிரியர்களின் விருப்பம். கார் கிளினிக், கார் ஸ்பா, கார் டீட்டெய்லிங் என கார்களைச் சுத்தம் செய்யும் சர்வீஸ் சென்டர்கள் மழையில் முளைக்கும் காளான்கள்போல ஏராளமாக முளைத்துவிட்டன. இதில், நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருப்பது 3M. அமெரிக்க நிறுவனமான 3M, இந்தியா முழுக்க கிளை பரப்பியிருக்கிறது.

இங்கு கார் டீட்டெய்லிங் எப்படிச் செய்கிறார்கள்? 5 ஆண்டுகள் பழைய மாருதி டிசையர் காரை, நந்தனத்தில் உள்ள 3M ஷோரூமுக்குக் கொண்டுபோனோம். இந்த காரை இதற்கு முன்பு டீட்டெய்லிங் செய்தது இல்லை.

காருக்கு பாலீஷ் போட்டாச்சா?

மருத்துவமனைக்குப் போனால் டாக்டர்கள் செக்-அப் செய்வதுபோல, 3M ஷோரூமுக்குள் நுழைந்ததும் காரைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்து பார்த்தார்கள். 'டெமோ வீடியோக்களைக் காண்பித்து 5 ஆண்டுகள் ஓடிய காருக்கு என்னென்ன செய்யலாம்!’ என விளக்கினார் நந்தனம் ஷோரூமின் உரிமையாளர் துஷி. '3M பெயின்ட் சீலன்ட் அட்வான்ஸ்டு’ காரின் வெளிப்புறத்துக்காகவும், '3M இன்டீரியர் ஜெர்ம்க்ளீன் ப்ளஸ்’ காரின் உள்புறத்துக்காகவும் என இரண்டு பேக்கேஜுகளைத் தேர்ந்தெடுத்தோம்.

முதலில், காரின் உள்பக்கத்தை வாக்குவம் க்ளீனர் மூலம் சுத்தம் செய்தார்கள். காரின் ஸ்பேர் டயரை வெளியே எடுத்துவிட்டு அங்கிருந்து துருப்பிடித்த பகுதிகளையும் சுத்தம் செய்தார்கள். பின்னர், வாட்டர் வாஷ் மூலம் வெளிப்புறத்தைக் கழுவிவிட்டு, 3M ஃபோம் மூலம் காரை நுரையில் குளிப்பாட்டித் துடைத்துவிட்டு, இன்னொரு வாட்டர் வாஷ் செய்தார்கள்.  

அடுத்ததாக, காரை டீட்டெயிலிங் பூத்தில் நிறுத்தி 'க்ளேயிங்’ என்ற வேலையைச் செய்தார்கள். க்ளேயிங்-ல், காரின் பெயின்ட்டின் மேல் படிந்திருக்கும் மாசு, பறவை எச்சங்கள் ஏற்படுத்திய பாதிப்பு போன்றவை அகற்றப்பட்டன.

காருக்கு பாலீஷ் போட்டாச்சா?

அடுத்து காரின் உள்பக்கத்தில் 'ஜெர்ம்க்ளீன் ப்ளஸ்’ துவங்கியது. ஜெர்ம்க்ளீன் ப்ளஸ்-ல் உள்ள ஒரு நன்மை என்னவென்றால், இதில் காரின் உள்ளே இருக்கை, பிளாஸ்டிக்குகளில் படிந்திருக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு விடுமாம். இதற்கு ஆன்டி மைக்ரோபியல் பிளாஸ்டிக்/அப்ஹோல்ட்ஸ்டரி க்ளீனர் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துகிறார்கள். காரின் இன்டீரியர் நமக்கு பார்க்க சுத்தமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், இந்த ஸ்ப்ரே கொண்டு சுத்தம் செய்யும்போதுதான் அதில் இருக்கும் அழுக்கு வெளியே வருகிறது. உதாரணத்துக்கு, சீட் பெல்ட் பார்க்க சுத்தமாகவே தெரிகிறது. ஆனால், இங்கு ஸ்ப்ரே செய்தபோது, அதில் இருந்த அழுக்கைப் பார்த்து அதிர்ந்துவிட்டோம்.

காருக்கு பாலீஷ் போட்டாச்சா?

இந்த வேலை நடக்கும்போதே, காரின் வெளிப்புறத்தில் உள்ள சின்னச் சின்ன ஸ்க்ராட்ச்சுகளை, பிரத்யேக எமெரி ஷீட் மூலம் தேய்த்து எடுக்கிறார்கள். மிகவும் ஆழமான ஸ்க்ராட்ச்சுகளை இந்த முறையில் மறைக்க முடியாது. பின்னர் காரின் ஜன்னல்களை முழுவதும் பேப்பரால் மூடிவிட்டு, பஃப்பிங் (Buffing) செய்கிறார்கள். இதனால், காரின் மேற்புறம் இருக்கும் அழுக்கு படிந்த பெயின்ட் லேயர் அகன்று, ஃப்ரெஷ்ஷான லேயருடன் தோற்றமளிக்கிறது. பிறகு, ரப்பிங் (Rubbing) காம்பவுன்ட் மூலம் காரில் இருந்த மிக மிகச் சிறிய ஸ்க்ராட்ச்சுகளும், காரைத்  துடைக்கும்போது ஏற்படும் Swirl மார்க்குகளும் மறைந்துவிடுகின்றன. கடைசியாக பாலீஷ் செய்யப்படும்போது, காரின் வெளிப்புறம் முன்பைவிட பளிச்சென இருக்கிறது. இறுதியாக, பெர்ஃபாமென்ஸ் வாக்ஸ் மூலம் வாக்ஸிங் செய்கிறார்கள். இது காரின் புதிய பெயின்ட் லேயருக்கு மேல், ஒரு பாதுகாப்பான கோட்டிங்போல செயல்படுகிறது.

'5 பாயின்ட் செக்’ மூலம் காரின் பேட்டரி டெர்மினல்கள், ஒயர்கள், இன்ஜின் பெல்ட், ஜன்னல் இடுக்குகள், கதவு மூலைகள் போன்றவற்றையும் கவனித்து விடுகிறார்கள். ஏ.சி ஃபோம் மூலம் ஏ.சி வென்ட்டுகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.

சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட புதிய காராகவே மாறியிருந்தது, 5 ஆண்டுகளான ஸ்விஃப்ட் டிசையர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு