கார்ஸ்
Published:Updated:

புலி உறுமுது... புலி உறுமுது..

புலி உறுமுது... புலி உறுமுது..

சு.சுரேஷ்குமார்

ன்னதான் மார்க்கெட்டில் புதிது புதியதாக கார்கள் வந்தாலும், வின்டேஜ் கார்களுக்கு இருக்கும் மதிப்பே தனிதான்! படத்தில் இருப்பது 1925 மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கார். முதலையின் தோலால் செய்யப்பட்ட சீட் கவர்களின் வெளிர் சிவப்பு நிறமும், துப்பாக்கி பொருத்தப்பட்ட பின் இருக்கையும், பாம்பு வடிவ ஒலிப்பான்களும் கொண்ட இந்த கார், ராஜஸ்தானில் உள்ள கோட்டாவின் முன்னாள் மகாராஜாவான உமேத் சிங்குக்காகத் தயாரிக்கப்பட்டது. இந்த கார் இப்போது லண்டனைச் சேர்ந்த 'போன்ஹம்ஸ்’ எனும் நிறுவனத்தால் ஏலம் விடப்பட இருக்கிறது.

நான்கு கியர்கள் மற்றும் 6 சிலிண்டரைக் கொண்ட இந்த கார், 7668 சிசி இன்ஜின் கொண்டது. 1925-ல் வடிவமைக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரில், வேட்டையாடுவதற்குத் தேவையான கருவிகள் பொருத்தப்பட்டன. தானியங்கி வேட்டைத் துப்பாக்கியும், தோட்டாக்கள் வைக்க ஒரு பெட்டியும் சேர்க்கப்பட்டன.

புலி உறுமுது... புலி உறுமுது..

இரவில் அடர்ந்த காட்டில் ஓடும் விலங்குகளைக் காண வசதியாக, சக்தி வாய்ந்த சுழல் விளக்குகள் காரின் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டு உள்ளன. அதற்கு மின்சாரம் தர சக்தி வாய்ந்த பேட்டரியும் இணைக்கப்பட்டிருக்கிறது.  

1971-ல் வின்டேஜ் கார்களைச் சேகரிக்கும் கிறிஸ்டோபர் ரென்விக் என்பவரின் கண்ணில் இது படவும், விலைக்கு வாங்கி இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றார். இங்கிலாந்தில் இந்த பொக்கிஷம், சார்லஸ் ஹோவர்ட் என்பவரின் கைக்கு மாறியது. அவருக்கு இது மிகவும் ராசியான கார். அவர் இந்த காரை வாங்கி வீட்டின் முன் நிறுத்த... அதைப் பார்த்த ஒரு நண்பர் தன்னிடமுள்ள 6 பழைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இவருக்கு விற்றிருக்கிறார். இன்று ஹோவர்டின் பட்டறையில் பன்னிரண்டுக்கும் அதிகமான வின்டேஜ் கார்கள் இருக்கின்றன.

இந்த டைகர் காரின் இன்றைய சந்தை மதிப்பு, பல மில்லியன் டாலர்கள்!