கார்ஸ்
Published:Updated:

திறமைக்கு தடா போட்ட விசா!

யுரேகார்

மோ.அருண்ரூப பிரசாந்த்  ஜெ.தான்யராஜூ

கார், பைக் தவிர எங்களுக்கு வேறு எதைப் பற்றியும் பேச்சே வராது’ என்று துடிப்போடு சொல்லும் மாணவர்கள் குழு, ஃபார்முலா கார் ஒன்றை வடிவமைத்திருக்கிறது. இந்தக் குழுவில் இருப்பது சென்னை ஆவடியில் உள்ள வேல் டெக் பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை மாணவர்கள். எஸ்.ஏ.இ (SAE) அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் ஃபார்முலா கார் டிசைன் போட்டியில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற ஒரே அணி இந்த அணி மட்டும்தானாம்.

''ஐ.ஐ.டி, என்.ஐ.டி மாணவர்கள்கூட 'எஃப்.எஸ்.ஏ.இ மெக்சிகன்’ வரைக்கும்தான் தங்களோட கார்களைக் கொண்டு போக முடிஞ்சது. கலிபோர்னியாவுல கலந்துகிட்ட முதல் டீமுங்குற பெருமை எங்களுக்குத் தான். ஆனா, கடைசி நேரத்துல விசா பிரச்னையால எங்களால் அந்தப் போட்டியில கலந்துக்க முடியாமப் போச்சு!'' என்றார்கள்.

திறமைக்கு தடா போட்ட விசா!

ஆனாலும் என்ன... இந்த காரை வடிவமைத்த சாஹில், இளமாறன், லெனின், கார்த்திக், விஜய சிம்மன் ஆகிய ஐந்து பேரும் இருபத்தியெட்டே நாட்களில் மொத்த காரையும் ஃபேப்ரிகேட் (Fabrication) செய்து முடித்திருக்கிறார்கள்.

திறமைக்கு தடா போட்ட விசா!

''எஸ்.ஏ.இ-யில் சின்னதும், பெரிதுமாக ஏகப்பட்ட ரூல்ஸ். '600 சிசி இன்ஜின செட் செய்றதுக்குள்ள நாங்க படாதபாடு பட்டோம். முதல்ல 500 சிசி புல்லட் இன்ஜினை வெச்சுத்தான் வேலையை ஆரம்பிச்சோம். ஆனா, அந்த இன்ஜின்ல பயங்கரமான ஸ்டார்ட்டிங் பிரச்னை. பிறகு டெல்லியிலிருந்து ஒரு வேனோட 600 சிசி இன்ஜினைக் கொண்டு வந்தோம். இப்ப எங்க காரோட டாப் ஸ்பீடு மணிக்கு 105 கி.மீ! எட்டு விநாடில 105 கி.மீ வேகத்தைத் தொடும்'' என்றார் இளமாறன்.

''காரின் மொத்த எடையே 225 கிலோதான். மைல்டு ஸ்டீல் (Milo Steel) மெட்டீரியல்லதான் மொத்த காரையும் உருவாக்கினோம். 32 bhp சக்தியுடைய இன்ஜின், 13'' ரேஸிங் டயர்... இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாகச் செய்தோம். டிசைன், கான்செப்ட், ஃபேப்ரிகேஷன், கன்ஸ்ட்ரக்ஷன்னு ஒவ்வொரு படியா முன்னேறும்போதும் நாங்க கலிபோர்னியாவுக்குத் தெரியப்படுத்திக்கிட்டே இருந்தோம். இருக்கணும். இதுதான் போட்டியோட கண்டிஷன். காஸ்ட் ரிப்போர்ட், டிசைன் டேட்டா, 3டி டிசைன் டாக்குமென்ட் என எல்லாவற்றையும் அவர்கள் பரிசோதிச்சு, ஓகே சொன்ன பிறகுதான் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கணும்'' என இந்தப் போட்டியின் கடுமையான விதிமுறைகளைப் பகிர்ந்து கொண்டார் லெனின்.

பொதுவாக, இது போன்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் போது கொஞ்சம் ரிஸ்க்கான வேலைகளை வெளியாட்களுக்குக் கொடுத்து விடுவார்கள். ஆனால், அம்பத்தூரில் ஒரு வொர்க் ஷாப்பை வாடகைக்குப் பிடித்து வெல்டிங், கிரைண்டிங் உட்பட அத்தனை வேலையையும் இவர்களே செய்திருக்கிறார்கள்.

''அடுத்த வருஷம், இதே போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றாலும், அந்த நேரம் வேற ரூல்ஸ் இருக்கும். திரும்பவும் முதல்ல இருந்துதான் ஆரம்பிக்கணும். காரை முழுவதுமாக டிஸ்மேன்டில் செய்யலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கோம். அடுத்த வருஷம் கலிபோர்னியா போட்டியில கண்டிப்பா ஜெயிப்போம். அப்போ இன்னும் சந்தோஷமா உங்களைச் சந்திக்கிறோம்!'' என்றார் சாஹில்.

திறமைசாலிகளின் வெற்றியைத் தாமதப்படுத்த முடியுமே தவிர, தடை செய்ய முடியாது அல்லவா?!