Published:Updated:

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு ஆஃப்ரோடு அட்டகாசம்!

மேற்குத் தொடர்ச்சி மலை / Into The Ghats
பிரீமியம் ஸ்டோரி
மேற்குத் தொடர்ச்சி மலை / Into The Ghats

5 மலைகள்… 7 நாட்கள்… பயணம்: Into The Ghats | மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு ஆஃப்ரோடு அட்டகாசம்!

5 மலைகள்… 7 நாட்கள்… பயணம்: Into The Ghats | மேற்குத் தொடர்ச்சி மலை

Published:Updated:
மேற்குத் தொடர்ச்சி மலை / Into The Ghats
பிரீமியம் ஸ்டோரி
மேற்குத் தொடர்ச்சி மலை / Into The Ghats

குஜராத் முதல் கேரளா வரை 1,600 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். யுனெஸ்கோவின் கருத்துப்படி, உலகின் உயரமான மலையாகக் கருதப்படும் இமயமலையைவிடப் பழைமையானது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேசியப் பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்கள் மற்றும் ரிஸர்வ் ஃபாரஸ்ட் உட்பட மொத்தம் 39 பகுதிகள், 2012-ம் ஆண்டில் உலகப் பாரம்பரியத் தலங்களாக அறிவிக்கப்பட்டன. கேரளாவில் 20, கர்நாடகாவில் 10, தமிழகத்தில் 6 மற்றும் மகாராஷ்டிராவில் 4 எனப் பரவிக் கிடக்கும் இந்த மலைத்தொடரில் ஒரு வாரம் பயணப்பட்டேன்.

கூடவே ஜீப் பிரியர் அஷ்வின், பைக் வெறியர் சதீஷ், கேமரா எக்ஸ்பர்ட் கார்த்திக்கும் கிளம்ப ரெடியாக இருந்தார்கள். என்னோடு சேர்த்து 4 பேர்; 3 டோர் தார், ஒரு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்!

இனி Over to the Ghats...

சக்லேஷ்பூர்
சக்லேஷ்பூர்

கர்நாடகா மற்றும் கோவா மலைத்தொடரில் இருக்கும் உயரமான மலைகள்தான் எங்கள் டார்கெட். தாருக்கும் ஹிமாலயனுக்கும் ஏற்ற தாறுமாறான சாலைகளை நோக்கிக் கிளம்பினோம். அட்வென்ச்சர் ட்ரிப் இல்லையா… செல்லுமிடத்தில் ஓட்டல்களில் தங்காமல், காட்டுக்குள் கூடாரம் போட்டுத் தங்க வேண்டும் என்பதும் எங்கள் திட்டத்தில் ஒன்று. கிருஷ்ணகிரியில் இருந்து ஆரம்பித்து சக்லேஷ்பூர் - குதிரேமுக் - அகும்பே - கொடசாத்திரி - ஜோக் ஃபால்ஸ் - கோகர்ணா - கோவா - ஹூப்ளி - பெங்களூரு - கிருஷ்ணகிரி என சுமார் 2,000 கிமீ பயணத்தை எழுத பக்கங்கள் போதாது. எனவே, ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆல்பமாக!

சக்லேஷ்பூர்
சக்லேஷ்பூர்

பட்ல பெட்டா (Patla Betta)

சக்லேஷ்பூரிலிருந்து 44 கிமீ போக வேண்டும் இந்த மலைக்கு. செங்குத்தான பாதை மிகக் சவாலாக இருந்தது. குளிர் காற்றும், மூடு பனியும் இன்னும் அதிகமான சிரமத்தை ஏற்படுத்தியது. Into The Ghats பயணத்தின் முதல் ஆஃப் ரோடு மலை என்பதால் எதிர்பார்ப்பும் அச்சமும் சிறிதளவு இருந்தது. மஹிந்திரா தாரை ஓட்டிய அஸ்வின் ராஜ்வர்மா மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஓட்டிய சதீஷ்குமார் அனைத்து ஆஃப் ரோடு இடையூறுகளையும் சமாளிக்க... இறுதியில் மலை உச்சியை அடைந்தோம். சில மணி நேரம் மலைக்காற்றை ரசித்தபடி அமர்ந்திருந்து, பிறகு சக்லேஷ்பூர் திரும்பினோம். இரவு சக்லேஷ்பூர் அருகில் இருக்கும் ஒரு சிறிய குன்றின்மேல் கூடாரம் அமைத்து ரெஸ்ட்.

சக்லேஷ்பூர்
சக்லேஷ்பூர்

குதிரேமுக்

சக்லேஷ்பூரில் இருந்து 115 கிமீ குதிரேமுக் மலை. குதிரேமுக் மலைத்தொடர் பயணம் சுவாரஸ்யமான நினைவுகளை ஏற்படுத்தியது. குதிரேமுக் வழியாக அகும்பே சென்றடைவது இரண்டாவது நாள் இலக்கு. இந்த வழியில் ஒரு ரிஸர்வ் ஃபாரஸ்ட்டைக் கடக்க வேண்டும். அதுவும் ஒன்றரை மணி நேரத்துக்குள். அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதற்கு அபராதம் கட்ட வேண்டி இருக்கும். என்ட்ரன்ஸில் QR Code கொண்ட என்ட்ரி கார்டு கொடுத்தார்கள் காவல் அதிகாரிகள். குதிரேமுக்கில் அழிந்த நகரம் ஒன்று இருக்கிறது.

குதிரேமுக்
குதிரேமுக்
குதிரேமுக்
குதிரேமுக்

மனித நடமாட்டம் என்பது இங்கே சுத்தமாக இல்லை. மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மட்டும் வீடுகளாய்… மாளிகைகளாய் இருந்தன. அங்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லாததால் ஆறுகளையும் தொடர்ந்து, மழையில் நனைந்தபடி அந்தக் காட்டுப் பாதையைக் கடந்து சென்றோம். குதிரேமுக் மலைத்தொடரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சாலையோரம் ஓடும் அருவிகள் ரம்மியத்தைக் கூட்டின. தெரியாமல்கூட சாலையோரத்தில் இருக்கும் செடிகளைத் தொட்டுவிட்டால் போதும், அட்டைப் பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும் என்பதை அனுபவப்பூர்வமாகத் தெரிந்து கொண்டோம். அட்டைக் கடி அனுபவத்துடன் அடுத்த நாள் அகும்பேவில் ஸ்டே.

குதிரேமுக்
குதிரேமுக்

கொடசாத்திரி

அகும்பேவில் இருந்து கிளம்பி கொடசாத்திரி மலைக்குச் சென்று வருவது மூன்றாவது நாள் இலக்கு. Into the Ghats பயணத்தில் மிகவும் சவாலான மலை என்றால் அது கொடசாத்திரி மலைதான். கொடசாத்திரி அடிவாரத்தில் இருந்து உச்சிக்குச் செல்லும் தூரம் 8 கிமீ. எட்டு கிமீ தூரமும் மிகவும் மோசமான பாதை. காட்டின் நுழைவில் காவல் அதிகாரிகள் நாங்கள் சென்ற தாரை அனுமதிக்கவில்லை. காருக்கு அனுமதி இல்லை என்றால் பைக்குக்கு மட்டும் சொல்லவா வேண்டும்?

கொடசாத்திரி
கொடசாத்திரி

லோக்கல் ஜீப் வாடகைக்கு எடுத்துத்தான் உச்சிக்குச் செல்ல வேண்டுமென்பது அவர்களது நிபந்தனை. ஒரு மணி நேரம் அவர்களிடம் இறைஞ்சினோம். நமது ராஜதந்திரங்கள் வீணாகவில்லை. `சரி; தாரை மட்டும் கொண்டு செல்லுங்கள்’ என்று அனுமதித்தார்கள்.

கொடசாத்திரி
கொடசாத்திரி

உண்மையில் இந்தப் பாதையில் உங்கள் ஜீப்பில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மலை ஏறி இறங்கி விட்டால் நீங்கள் சிறந்த ஆஃப் ரோடு டிரைவர் என்று நீங்களே வாகை சூடிக் கொள்ளலாம். ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் பாதையில் மஹிந்திரா தார் மிக சுலபமாக ஏறி இறங்கியது. அஸ்வினுக்கும் மஹிந்திராவுக்கும் ஹேட்ஸ் ஆஃப்!

கொடசாத்திரி
கொடசாத்திரி

ஜோக் ஃபால்ஸ்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரபலமான அருவி ஜோக் ஃபால்ஸ். இதை நோக்கிப் போகும் வழியில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், தாரையும் பைக்கையும் ஒரு ஃபெர்ரியில் ஏற்றி, சாராவதி நீர்தேக்கத்தை கடந்தது செம அனுபவம்.

ஜோக் ஃபால்ஸ்
ஜோக் ஃபால்ஸ்

'இந்த ஃபெர்ரி ரைடுக்காகவே இன்னொரு தடவை ஜோக் ஃபால்ஸுக்குப் போயிடணும்' என்று அப்போதே அடுத்த திட்டம் போட்டுக் கொண்டோம். ஜோக் ஃபால்ஸில் ராஜா அருவி, ராணி அருவி, டைகர் ரோரிங், ஸ்மோக் அருவி என்று நான்கு அருவிகள் கவனம் கவரும். ஜோக் ஃபால்ஸில் இருந்து கிளம்ப மனசில்லைதான். ஆனால், கடமை இருக்கே பாஸ்! அன்று இரவு கோகர்ணா பீச்தான் எங்களைத் தாலாட்டியது.

ஜோக் ஃபால்ஸ்
ஜோக் ஃபால்ஸ்
ஜோக் ஃபால்ஸ்
ஜோக் ஃபால்ஸ்

Dot 4x4

கோகர்ணாவில் இருந்து கோவா செல்லும் வழியில், வலதுபுறம் திரும்பினால் Dot 4x4 எனும் தனியாருக்குச் சொந்தமான மலை ஒன்று இருக்கிறது. இந்திய அளவில் பல ஆஃப்ரோடு போட்டிகள் இங்கு நடைபெறும்.

Dot 4x4
Dot 4x4

அந்த மலையின் உரிமையாளர் மஞ்சுநாத் துக்ளே, `மோட்டார் விகடனும் மஹிந்திராவுமா… வாங்க வாங்க’ என்று வரவேற்றார். அவரின் அனுமதியுடன் Dot 4x4 மலையில் இரவு கூடாரம் போட்டோம்.

Dot 4x4
Dot 4x4

காட்டுக்கு நடுவில் இரவு உணவை நாங்களே சமைத்துச் சாப்பிட்டது... கூடாரம் அருகில் பாம்புகளுக்கும் இடம் கொடுத்தது... பூச்சிகளின் சத்தத்தில் தாலாட்டுக் கேட்டது… என்று அது ஓர் அலாதியான இரவு. அடுத்த நாள் அருகிலிருந்த ஆற்றுக்குள் மஹிந்திரா தாரையும், ஹிமாலயனையும் இறக்கி ரிவர் கிராஸிங் செய்து ஆஃப்ரோடு அட்டகாசங்களைச் செய்தோம்.

Dot 4x4
Dot 4x4

கிருஷ்ணகிரியில் ஆரம்பித்து கோவா வரை ஐந்துவிதமான மலை உச்சிக்குச் சென்ற முழு விஷுவலையும் வீடியோவாக மோட்டார் விகடன் யூடியூப் சேனலில் பார்த்து விடுங்களேன்.