
ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ்களில் காரை அழகுபடுத்த அழகுச் சாதனங்களும் உண்டு; காருக்குத் தேவையான அத்தியாவசிய சாதனங்களும் உண்டு. அப்படி ஒரு… இல்லை…இரண்டு அத்தியாவசிய ஆக்சஸரீஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது க்யூபோ எனும் நிறுவனம். `A Hero Group Venture’ எனும் அடைமொழியின் கீழ் வரும் க்யூபோ (Qubo), ஓர் இந்திய நிறுவனம்.
சன் கிளாஸ் முதல் வீடியோ எடுக்கப் பயன்படுத்தும் கிம்பல், டோர் லாக், மினி யுபிஎஸ் என்று பலவிதமான கேட்ஜெட்களைத் தயாரிக்கும் க்யூபோவின் முக்கியமான இரண்டு கார் ஆக்சஸரீஸ்களைப் பற்றிப் பார்க்கலாம்.
காருக்கு ஒரு சிசிடிவி!
Qubo Smart DashCam Pro GP - விலை: ரூ.6,690/–
இப்போதுதான் ஹூண்டாய் நிறுவனம், தனது வென்யூ NLine காரில், டேஷ் கேமராவை வசதியாகக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. டேஷ் கேமராக்களைச் சுருக்கமாக Dash Cam எனலாம். இதை காரின் மேலே… அல்லது டேஷ்போர்டில் பொருத்திக் கொண்டால்… இது ஒரு சிசிடிவி கேமரா மாதிரி தனது வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும்.
இது பில்ட்–இன் ஜிபிஎஸ் சிஸ்டம் மூலம் இயங்குவதால்… காரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை… காரின் வேகத்தை… லொக்கேஷனை எல்லாவற்றையுமே ஒரு எஸ்டி கார்டில் சேமித்து வைத்துக் கொள்ளும். நீங்கள் ஓட்டுதலில் ஒரு நியாயவானாக இருந்து… ‘ஓவர்ஸ்பீடில் வந்துட்டீங்க’ என்று காவல்துறையினர் உங்களைத் தவறுதலாக நிறுத்தும் பட்சத்தில்… இதைக் காண்பித்து அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம். யாராவது காரை இடித்து விட்டால் யார் மீது தவறு என்பதில் தொடங்கி… இன்ஷூரன்ஸ் க்ளெய்ம், வாகனம் திருடப்பட்டால் அதைக் கண்டுபிடிப்பது, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வது வரை எல்லாமே படம் பிடித்துக் கொள்ளும் இந்த ஸ்மார்ட் டேஷ் கேம். QuboPro எனும் App –ஐ உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டு, உங்கள் பயணத் திட்டம் ஆரம்பித்ததில் இருந்து அது முடியும் வரை நடந்த நிகழ்வுகள், லொக்கேஷன், வேகம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளலாம். இதில் Time Lapse ஆப்ஷனும் உண்டு. உங்கள் காரை டிரைவரிடம் கொடுக்கும் பட்சத்தில்… அதையும் மானிட்டர் செய்து கொள்ளலாம். காரில் அடிக்கடி டூர் அடித்து வி–லாக் செய்பவர்களுக்கு இது நன்கு பயன்படலாம். இதில் 2 வேரியன்ட்கள் உண்டு. இந்த ஜிபிஎஸ் வேரியன்ட், சுமார் 6,690 வரை வருகிறது. இப்போதைக்கு மார்க்கெட்டில் உள்ள என்ட்ரி லெவல் கேமராக்களில் இதுவும் ஒன்று.

டயருக்குக் காற்றடிப்பது ரொம்ப ஈஸி!
Qubo Smart Tyre Inflator விலை: ரூ.2,990/–
அடிக்கடி காரை எடுக்கும் நபர்கள், டயர் இன்ஃப்ளேட்ட்ர்களைப் பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், நீண்ட நாட்களாக பார்க் செய்யப்பட்ட காரை எடுக்கும்போதுதான், டயர் இன்ஃப்ளேட்டர்களின் அருமை புரியும். நீண்ட நாள் கழித்து காரை எடுக்கும்போது, நிச்சயம் டயர்களில் காற்று குறைந்திருக்கும். அந்த நேரத்தில் பெட்ரோல் பங்க் போகும் வரையாவது டயரில் காற்றழுத்தம் இருந்தால்தான் நல்லது. டயர் இன்ஃப்ளேட்டர்கள் இருந்தால் கவலையே படத் தேவையில்லை. Qubo நிறுவனம், ஸ்மார்ட்டாக ஒரு டயர் இன்ஃப்ளேட்டரைத் தயாரித்திருக்கிறது. பார்க்கவே குட்டி ஐபாட் மாதிரி அழகாக இருக்கிறது இன்ஃப்ளேட்டர். எல்இடி ஸ்க்ரீன் இருப்பது இன்னும் ஸ்டைலாக இருக்கிறது. இதில் டயருக்கு எவ்வளவு காற்றழுத்தம் தேவையோ… காரை ஆன் செய்துவிட்டு இந்த 12V பவர் ஸாக்கெட்டை காரில் உள்ள போர்ட்டில் சொருகினால் போதும். சில விநாடிகளில் இன்ஃப்ளேட் ஆகிறது. இதில் வலது பக்கம் Deflation வசதியும் கொடுத்திருக்கிறார்கள். நான்கு பக்க வீல்களுக்கும் வசதியாக இதன் ஒயரிங் செட்அப்பும் நீளமாக இருக்கிறது. கால்பந்து, சைக்கிள், பைக், நீச்சல் ட்யூப் என மல்ட்டி பர்ப்பஸ் இன்ஃப்ளேட்டராகப் பயன்படுகிறது இந்த க்யூபோ இன்ஃப்ளேட்டர். இதன் விலை ரூ.2,990.
