Published:Updated:

தமிழ்நாட்டில் 650 EV கார் சார்ஜிங் ஸ்டேஷன் வருது! ஆனால்... இரண்டு சிக்கல்கள்?

EV charging
News
EV charging

FAME-II நிதியில் இதுவரை ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்கூட இல்லை!

``2030–க்கு மேல் பெட்ரோல்/டீசல் கார்கள் தயாரிப்பை முழுதுவமாக நிறுத்திவிடுவோம்’’ என்று சொல்லியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். ஜீப், ஃபியட் க்ரைஸ்லர், வால்வோ, பிஎம்டபிள்யூ, பென்ஸ் என்று எல்லா நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத்தான் இந்தியாவில் இனி மார்க்கெட் இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டுவிட்டன. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் மிகப் பெரிய பாஷ் நிறுவனம்கூட, 2030–ல் 80% எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஓடும் என்று சொல்லிவிட்டது.

இப்போதே இந்தியாவில் 2021–ல் மட்டும் சுமார் 1,04,806 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 45,300 எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதாவது, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு 7–வது இடத்தில் இருக்கிறது. ஆனால், இவற்றுக்கெல்லாம் ஒரே சிக்கல் – சார்ஜிங் ஸ்டேஷன் பற்றாக்குறைதான். அதற்கான முன்னெடுப்பாக, இப்போது சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதில் முனைப்பு காட்ட ஆரம்பித்திருக்கிறது மத்திய அரசு. ‘‘இந்தியா முழுக்க உள்ள நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே 6,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்படும்’’ என்று அறிவிப்பு கொடுத்துவிட்டார் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே. ‘தமிழ்நாடு ஹைவேஸுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் வருமா வராதா’ என்று நாம் கத்தியது கேட்டுவிட்டது அரசுக்கு.

Charging socket
Charging socket

ஆம்! தமிழ்நாட்டை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 650 எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கான ஒப்புதலும் அதில் அடங்கும். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அரசால் தரப்படும் FAME-II (Faster Adoption and Manufacturing of Hybrid and EV) மானியத் தொகை எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமில்லை பாஸ்… சார்ஜிங் ஸ்டேஷன் வைப்பதற்கும்தான். இந்த நிதியில் இதுவரை ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்கூட பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து கொண்டே வந்தது. தனியார் நிறுவனங்களும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவே இல்லை. ஓலா, உபர், ஏத்தர் போன்ற நிறுவனங்கள் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வால்மவுன்ட் சார்ஜரெல்லாம் கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்த்து விற்பனை செய்தாலும், இதுபோன்ற பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்தான் மக்களுக்கு, எலெக்ட்ரிக் வாகனங்களில் வெளியே பயணிக்க நிம்மதியாக இருக்கும். இப்போதுதான் FAME-II திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ இருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. முதற்கட்டமாக 651 ஸ்டேஷன்களுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. இதுபோக சென்னையில் இருந்து திருவனந்தபுரம், நாக்பூர், புவனேஸ்வர் போன்ற நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளிலும் இந்த சார்ஜிங் ஸ்டேஷன் வரலாம்.

எல்லாம் ஓகே! ‘எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்ஸ் வந்துட்டா எல்லா கார்/பைக்ஸுக்குமே சார்ஜ் ஈஸியா போட்டுட்டுக் கிளம்பிடலாமா’ என்றால், அதில் முக்கியமாக இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
EV Charging
EV Charging

முதல் சிக்கல் – எல்லா வாகனங்களுக்கும் யூனிவெர்சல் சார்ஜிங் ஸாக்கெட் மற்றும் இணைப்பு இருந்தால் மட்டும்தான் இது சாத்தியம். எந்த பெட்ரோல் / டீசல் வாகனங்களையும், எந்த பங்க்கில் வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம்தானே! அதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வாய்ப்பில்லை ராஜா! உதாரணத்துக்கு, செல்போன்களில் C டைப், யுஎஸ்பி A டைப், நார்மல் டைப், மைக்ரோ யுஎஸ்பி சார்ஜர் என்று பலவகைகள் உண்டுதானே! சாம்சங் மொபைல் சார்ஜர், ஒன்ப்ளஸ் மொபைல்களுக்கு செட் ஆகாதுதானே! அதேபோல், ஏத்தர் பைக்குக்கு ஓலா சார்ஜரை வைத்து சார்ஜ் ஏற்ற முடியாது. ஒகினாவாவுக்கு கோமாகி சார்ஜரைச் சொருக முடியாது. பென்ஸ் கார்களுக்கு ஜாகுவார் சார்ஜர் செட் ஆகாது. அதனால், எல்லா வாகனங்களுக்கும் ஏற்றபடி சார்ஜிங் ஸ்டேஷன்கள் செட் ஆக வேண்டும். எனவே, அனைத்து வகையான சார்ஜிங் அமைப்பும் இருந்தால்தான் இதெல்லாம் வேலைக்கு ஆகும்!

சிக்கல் 2– எல்லா வாகனங்களுக்கும் சார்ஜிங் நேரம் மிக முக்கியம். ஒரு எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்ய 5 – 8 மணி நேரம் ஆகும். ஸ்கூட்டடர்/பைக்குகளுக்கு இது நிமிடக்கணக்கில் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஆனால், நிமிடக்கணக்கில் சார்ஜ் ஏறும் ஃபாஸ்ட் சார்ஜிங் செட்–அப் இருந்தால் மட்டும்தான் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் வருவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. மணிக்கணக்கில் சார்ஜிங் ஸ்டேஷன்களில் காத்திருந்து காருக்கு சார்ஜ் ஏற்றும் நேரத்தில், உங்கள் மொபைலில் சார்ஜ் இறங்கும் வாய்ப்புண்டு. ஒரு டிகிரி காபியோ, டிபனோ சாப்பிடும் கேப்பில் காருக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு சட்டு புட்டுனு கிளம்புற மாதிரி வசதி இருந்தால்தானே மக்கா சரிப்படும்!