இப்போது ஹைபிரிட் கார், எலெக்ட்ரிக் கார்களைவிட ஃப்ளையிங் கார்கள்தான் ட்ரெண்ட். அந்த வகையில் ரெனோவைத் தொடர்ந்து தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயும் ஒரு பறக்கும் காரைத் தயாரிக்க இருக்கிறது. இதில், உபர் நிறுவனமும் பார்ட்னர்ஷிப் என்பது ஸ்பெஷல்.
2020–ம் ஆண்டின் தொடக்கத்தில் S-A1 எனும் ஒரு கான்செப்ட் பறக்கும் காரைக் காட்சிப்படுத்தியது ஹூண்டாய். "அடுத்த பத்து ஆண்டுகளில் சாலைகளில் டிராஃபிக் நெருக்கடி என்பதே இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். பறக்கும் வாகனங்கள் நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்கும். 2028–க்குள் எங்கள் S-A1 கான்செப்ட், வானத்தில் பறக்கும்" எனக் கூறுகிறார், ஹுண்டாயின் ஐரோப்பிய ஆபரேஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கோல்.

ஹுண்டாய், உபர், ஏரோமொபில், வோலோகாப்டர் போன்ற நிறுவனங்கள் தங்களின் பறக்கும் கார் முன்மாதிரிகளை வடிவமைத்து, 2030–க்குள் வெளியிடப் போட்டியிடுகின்றனர். இந்தப் பறக்கும் கார்களை ஒரு தனிநபரால் வாங்க இயலாதுதானே! அதனால், ஒரு புதுத் திட்டத்தில்தான் இந்தப் பறக்கும் கார்கள் வானமிறங்க இருக்கின்றன. அதாவது, ‘பறக்கும் டாக்ஸி’ என்ற பெயரில் ஒரு பொதுப் போக்குவரத்தாக இவை முதலில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ‘ஏர் டாக்ஸி’ எனப்படும் கான்செப்ட், மெட்ரோ ரயில்கள் போல அரசாங்கத்தாலோ – விமானங்கள் போல தனியார் நிறுவனங்களாலோ நடத்தப்படலாம் என்கிறார்கள்.
ஹுண்டாய் நிறுவனத்தின் S-A1 ஒரு ‘ஏர் டேக்ஸி’ வகை வாகனம் மட்டும் கிடையாதாம். இது ஒரு ‘பர்சனல் ஏர் வெஹிக்கிள் (PAV)’ ஆகவும் செயல்படும். இந்தப் பறக்கும் காரில் 4 புரோபெல்லர்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் பிளாட் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கார் வானத்திலும் ஏறும்; தரையிலும் சீறும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். அதேநேரம், இந்த கார் விமானத்தைப்போல அதிக உயரத்தில் பறக்காது. இதன் அதிகபட்ச உயரம் தரையில் இருந்து 1000 -2000 அடி மட்டுமே! ஒரு போயிங் விமானத்தின் அதிகபட்ச உயரம் 33,000 அடி. ஒரு விமானத்தைவிட ஒரு பறக்கும் கார், பத்து மடங்கு கீழான உயரத்தில்தான் பறக்கும். ஆனால், இதன் வேகம் ஃபார்முலா1 கார்களுக்கு இணையாக இருக்கும். அதாவது, மணிக்கு 290 கிமீ வேகத்தில் பறக்குமாம் இந்த S-A1 வகை பறக்கும் கார்கள். நான்கு பேர் மற்றும் ஒரு பைலட் உட்காரும் வகையில் இதன் இன்டீரியர் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது .

ஹூண்டாய் இந்த கார்களை எப்படி நிறுத்துவது, எடுத்துச் செல்வது, பயணிகளை ஏற்றுவது போன்றவற்றையும் இப்போதே திட்டமிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து உலகின் முதல் பாப்-அப் (pop-up) விமான நிலையத்தை இங்கிலாந்தில் நிறுவும் திட்டத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
eVTOL" (எலெக்ட்ரிக் வெர்ட்டிக்கல் டேக்-ஆஃப் அண்ட் லேண்டிங்) எனும் திட்டத்துக்காக கோவென்ட்ரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஓடுபாதை இல்லாத உலகின் மிகச்சிறிய விமான நிலையத்தை வடிவமைக்கவும் திட்டம் தீட்டி வருகிறது. விமான டாக்ஸிகள், அட்டானமஸ் வாகனங்கள் மற்றும் டெலிவரி ட்ரோன்களை இந்த வகை அர்பன் விமான நிலையங்களால் ஆதரிக்க முடியும். இவ்வகை விமான நிலையங்களில் 0% புகை மாசு மற்றும் இடஅளவு ஒரு ஹெலிபேட்–ஐ விட 40% குறைவாகவுமே இருக்கும்.
‘எல்லாம் ஓகே… இந்தியாவுக்கு எப்போ பாஸ் இது வரும்’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த SA-1 கார், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளிலேயே 2029 மத்தியில்தான் வானத்தில் பறக்க வாய்ப்புண்டு என்று அதிகாரிப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் நம் நாட்டில் எலெக்ட்ரிக் கார்களுக்கு வரிவிலக்கு பெறவே முக்கல் முனகல் நடந்து கொண்டிருக்கிறது. இதுல பறக்கும் காருக்கெல்லாம் இன்னும் நாளாகும்… ஸாரி வருஷங்கள் ஆகும் பாஸ்!
முதல்ல அனுமதி வாங்கோணும்… விமான நிலையம் கட்டோணும்; அப்புறம்தான் பறக்கோணும்!