Published:Updated:

மாருதி ஸ்விஃப்ட்டைத் தொடர்ந்து பெலினோவும் ஜீரோ ரேட்டிங்! -வீடியோவைப் பாருங்க! #MarutiSuzukiBaleno

Baleno crash test
News
Baleno crash test

இந்த டெஸ்ட்டில் பயன்படுத்தப்பட்ட பெலினோ, பாதுகாப்பு வசதிகள் குறைந்த பேஸ் மாடல் என்பதால் இந்தக் குறைவான ரேட்டிங் கிடைத்திருக்கிறது. #MarutiSuzukiBaleno

சர்வீஸிலும் நம்பகத்தன்மையிலும் பராமரிப்பிலும் சொல்லியடிக்கும் மாருதி, பாதுகாப்பு என்று வரும்போது பின்தங்குகிறது என்பதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக, லேட்டஸ்ட்டாக க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட மாருதி சுஸூகியின் பெலினோ கார், பாதுகாப்பில் ஜீரோ ரேட்டிங் வாங்கியிருக்கிறது.

‘பாதுகாப்பில் ஒரு கார் எப்படிப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்தது’ என்பதைச் சொல்லும் சோதனைதான் க்ராஷ் டெஸ்ட் எனும் பரீட்சை. நிஜமான காருக்கு உள்ளே மனித பொம்மைகளை வைத்து முன்பக்கம், பக்கவாட்டில் என விபத்தை ஏற்படுத்திச் சோதனை செய்து, அதன் மூலம் மனித பொம்மைகளுக்கும் காருக்கும் ஏற்படும் சேதாரத்தைக் கணக்கெடுத்து ரேட்டிங் செய்வதுதான் NCAP (New Car Assessment Programme) க்ராஷ் டெஸ்ட். இதில் குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்தான் உச்சம். நம் இந்தியாவிலும் பாரத் என்கேப் க்ராஷ் டெஸ்ட் நடக்கும். இதில் குறைவான வேகத்தில் சோதனையிடுவார்கள்.

குளோபல் என்கேப்புக்கு இணையான க்ராஷ் டெஸ்ட்தான் லத்தீன் என்கேப் க்ராஷ் டெஸ்ட். குஜராத்தில் தனது கார்களைத் தயாரித்து வரும் மாருதி நிறுவனம், லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் அடிப்படையில்தான், மாருதி சுஸூகி பெலினோவுக்கு லத்தீன் என்கேப் க்ராஷ் டெஸ்ட் நடந்துள்ளது. இதில் அதிர்ச்சிகரமாக ஜீரோ ரேட்டிங் வாங்கியிருக்கிறது பெலினோ. ஏற்கெனவே மாருதியின் இந்தியா–மேக் ஸ்விஃப்ட் ஜீரோ ரேட்டிங் வாங்கியதைத் தொடர்ந்து, பெலினோவும் பாதுகாப்பில் பின்வாங்கியிருக்கிறது.

இந்தியத் தயாரிப்பான பெலினோவை, குளோபல் என்கேப் டெஸ்ட்டுக்கு இணையாக 64 கிமீ வேகத்தில் வந்து சோதனை செய்ததில் – அடல்ட் ஆக்குபன்ஸ் டெஸ்ட்டில் வெறும் 20.03 சதவிகிதமும், குழந்தைகள் பாதுகாப்புச் சோதனையில் 17.06 சதவிகிதமும் பெற்றிருக்கிறது. ரியர் இம்பேக்ட் டெஸ்ட் மற்றும் பக்கவாட்டு பேரியர் சோதனையிலும் ஜீரோ பாயின்ட்கள்தான் வாங்கியிருக்கிறது. இந்த பெலினோவில் தலைகளுக்கான பாதுகாப்பு இல்லையென்பதால், side pole impact எனும் டெஸ்ட்டை நடத்தவே இல்லை லத்தீன் என்கேப். இந்த டெஸ்ட்டில் பயன்படுத்தப்பட்ட பெலினோ, பாதுகாப்பு வசதிகள் குறைந்த பேஸ் மாடல் என்பதால் இந்தக் குறைவான ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

Baleno crash test
Baleno crash test

2 காற்றுப்பைகள், சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர், சீட் பெல்ட் ரிமைண்டர், பின் பக்கம் ISOFIX மவுன்டட் சீட்கள், ஏபிஎஸ் – இவைதான் இந்த பெலினோவில் இருக்கும் பாதுகாப்பு வசதிகள். அதனாலேயே Safety restraints installation எனும் கேட்டகிரியில் 12 புள்ளிகளுக்கு வெறும் 4.36 புள்ளிகள்தான் பெற்றிருக்கிறது. ஓவர்ஆலாக vehicle assessment டெஸ்ட்டில் 13 புள்ளிகளுக்கு 4 புள்ளிகள்தான் வாங்கியிருக்கிறது. வேகமாகப் போகும் டைனமிக் டெஸ்ட்டில் 24 புள்ளிகளுக்கு 1 பாயின்ட்கூட எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி.

இந்த பெலினோவில் பெஸ்ட் என்னவென்றால், பாதசாரிகளின் பாதுகாப்பில் மட்டும் அசத்தலாக 64.06 சதவிகிதம் ஸ்கோர் செய்திருக்கிறது. இதில் கவலைப்படும்படியாக சேஃப்டி அசிஸ்ட் செக்ஷனில் வெறும் 6.96 சதவிகிதம்தான் பெற்றிருக்கிறது பெலினோ.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கு முன்பு நடந்த Euro NCap Crash Test-ல் 3 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருந்தது பெலினோ. காரணம், இது டெஸ்ட் செய்யப்பட்டது 6 காற்றுப்பைகள், ESC (Electronic Stablility Control) போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஐரோப்பிய மாடல் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மேலும் குளோபல் என்கேப் சோதனையில் – விட்டாரா பிரெஸ்ஸா 4 ஸ்டாரும், எர்டிகா 3 ஸ்டாரும், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்–ஆர் கார்கள் 2 ஸ்டாரும் வாங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, குளோபல் என்கேப் நிறுவனம் – கட்டுமானத்திலும், பாதுகாப்பிலும் கவனம் செலுத்தச் சொல்லி மாருதிக்கு அறிவுரை கூறியிருக்கிறது. காரணம், 2022 டெஸ்ட்டின்போது எல்லா கார்களுக்கும் ESC என்பது ஸ்டாண்டர்டாக இருக்க வேண்டிய கட்டாயம் வரலாம்.