Published:Updated:

Rishabh Pant: தீப்பிடிக்குமா பென்ஸ் கார்கள்? தூக்கத்தில் டிரைவிங்; ஏர்பேக்குகளால் பிழைத்தாரா?

Rishabh Pant:

அவர் தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டியிருக்கிறார் என்கிறார் ஒரு விசாரணைக் காவல்துறை அதிகாரி. மேலும் அவர் கிட்டத்தட்ட 1 கிமீ வரை தூக்கக் கலக்கத்திலேயே கார் ஓட்டியிருக்கிறாராம்.

Rishabh Pant: தீப்பிடிக்குமா பென்ஸ் கார்கள்? தூக்கத்தில் டிரைவிங்; ஏர்பேக்குகளால் பிழைத்தாரா?

அவர் தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டியிருக்கிறார் என்கிறார் ஒரு விசாரணைக் காவல்துறை அதிகாரி. மேலும் அவர் கிட்டத்தட்ட 1 கிமீ வரை தூக்கக் கலக்கத்திலேயே கார் ஓட்டியிருக்கிறாராம்.

Published:Updated:
Rishabh Pant:

பாதுகாப்பான வாகனங்கள் என்று பெயரெடுக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த கார்கள்கூட இப்போது மோசமான விபத்துக்குள்ளாவது பயமாகவே இருக்கிறது. 

இன்று காலை ஓர் அதிர்ச்சியான சம்பவம். இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், டெல்லியில் இருந்து தன் வீட்டுக்குப் போகும் வழியில், ஹரித்வாரில் விபத்துக்குள்ளானார். அவர் சென்ற கார் மெர்சிடீஸ் பென்ஸ் GLE எனும் எஸ்யூவி. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், இப்போது டெஹ்ராடூன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். நல்லவேளையாக அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாத நிலையில், பன்ட்டின் வலது பக்க கண் புருவம் கிழிந்திருக்கிறது. நெற்றியிலும் பலத்த காயம். வலது பக்க முழங்காலில் தசை நார்களில் பெருத்த அடி மற்றும் அவர் முதுகிலும் தீ மற்றும் சிராய்ப்புக் காயங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மருத்துவமனையில் ரிஷப் பன்ட்
மருத்துவமனையில் ரிஷப் பன்ட்

டெல்லி – ஹரித்துவார் சாலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது. டெல்லியில் இருந்து அதிகாலை ரூர்கி எனும் இடத்தில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார் ரிஷப் பன்ட். துணைக்கு யாரையும் அழைக்காத நிலையில், தனது மெர்சிடீஸ் பென்ஸ் GLE  காரைத் தானே ஓட்டி வந்திருக்கிறார் பன்ட். 

‘‘காலை 5.30 மணி இருக்கும். திடீரெனப் பெரிய சத்தம்! ஏதோ கார் ஒன்று சாலைத் தடுப்பில் மோதியதில் ஏற்பட்ட அந்தச் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்திருக்கிறார்கள். பக்கத்துக் காவல்நிலைய அதிகாரிகளுடன், ரிஷப் பன்ட்டைக் காரில் இருந்து வெளியே இழுத்து டெஹ்ராடூன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்!’’ என்கிறார், கிஷோர் சிங் எனும் சூப்பரிண்டென்ட் ஆஃப் போலீஸ். 

பொதுவாக, அதிகாலை மற்றும் இரவு விபத்துகள் பனி மூட்டத்தால் ஏற்படும் வெளிச்சாலைப் பார்வைக் (Visibility Lag) குறைபாட்டால் ஏற்படுபவையாகத்தான் அதிகமாக இருக்கும். ஆனால், ரிஷப் பன்ட் வந்த அந்தச் சாலையில் அந்த நேரத்தில் பனி ஏதும் இல்லை என்கிறார்கள். மேலும் அதிகாலை என்பதால், அவர் தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டியிருக்கிறார் என்கிறார் ஒரு விசாரணைக் காவல்துறை அதிகாரி. மேலும் அவர் கிட்டத்தட்ட 1 கிமீ வரை தூக்கக் கலக்கத்திலேயே கார் ஓட்டியிருக்கிறாராம்.

எரிந்த நிலையில் பென்ஸ் GLE
எரிந்த நிலையில் பென்ஸ் GLE

சாலைத் தடுப்பை நோக்கிப் போகும்போது, பிரேக்குக்குப் பதில் ஆக்ஸிலரேட்டர் மிதித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சாலைத் தடுப்பில் மோதிய வேகத்தில், கார் குட்டிக் கரணம் அடித்திருக்கிறது. இதனால், பெட்ரோல் டேங்க்கில் இருந்து எரிபொருள் கசிந்து, கார் முழுவதும் தீப்பிடித்திருக்கிறது. இருந்தாலும் சரியாக யோசித்து காரின் கண்ணாடியை உடைத்து வெளியேற முயற்சித்திருக்கிறார் பன்ட். இதன் மூலம்தான் அவரைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது. இந்தக் கொடூர விபத்தில் ரிஷப் பன்ட் உயிர் பிழைத்ததே அதிசயம்தான் என்கிறார்கள். 

காரணம், காவல்துறை விசாரணையின்போது, காற்றுப் பைகள் திறந்திருக்கின்றனவா என்பதைக்கூடச் சோதனை போட முடியாத அளவு பென்ஸ் எரிந்திருக்கிறது என்பது கோர விபத்துதானே! 

ரிஷப் பன்ட் ஓட்டிய பென்ஸ் காரின் விலை சுமார் 1.15 கோடி ரூபாய். இது ஒரு எஸ்யூவி. GLE மாடலில் AMG எனும் வெர்ஷன். பென்ஸின் பெர்ஃபாமன்ஸ் கார்கள் இந்த AMG சீரிஸில் வரும். அதாவது சாதாரண GLE–யைவிட இந்த AMG–யில் பவர் எல்லாமே அதிகம். ரிஷப் பன்ட் எப்போதுமே தனது ஆடி A8 காரில்தான் வலம் வருவாராம். என்றாலும், பென்ஸின் மேல் தனி விருப்பம் உண்டாம். இந்த GLE தவிர, பென்ஸில் C க்ளாஸ் காரும், ஒரு ஃபோர்டு மஸ்டாங் காரும் இருக்கிறது பன்ட்டிடம்.

பென்ஸ் மற்றும் ஃபோர்டு கார்களுடன் ரிஷப் பன்ட்...
பென்ஸ் மற்றும் ஃபோர்டு கார்களுடன் ரிஷப் பன்ட்...

பொதுவாக, பென்ஸ் போன்ற ஜெர்மன் கார்கள் கட்டுமானத்தில் கிண்ணென்று இருக்கும். உலகில் கார்களின் பாதுகாப்பைச் சோதனை செய்யும் குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குபவை. அதற்காக இதற்கும் ஒரு லிமிட் இருக்கிறது. காரணம், 64 கிமீ வேகத்தில் போய் இந்த கார்களை மோத விடுவார்கள். அதில் ஏற்படும் பாதிப்புகளை வைத்துத்தான் க்ராஷ் டெஸ்ட்டில் ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும். இந்த பென்ஸ் GLE, யூரோ என்கேப் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார். என்னதான் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார்கள் என்றாலும், விபத்து ஏற்படும் தன்மை, கார் ஓடும் வேகம், அதிர்ஷ்டம் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. 

இருந்தாலும், விசாரணைக்குக்கூட ஒத்துழைக்க முடியாத வகையில் பென்ஸ் கார்கள் தீப்பிடிக்குமா என்றால்…. அதிலும் சில விஷயங்கள் இருக்கின்றன. வெறுமனே மோதியதில் கார் தலைகுப்புறக் கவிழாமல் இருந்தால் கார் எரிய பெரிதாக வாய்ப்பில்லை. சென்னையில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் என்பவரின் பிஎம்டபிள்யூ Z4 எனும் கார், மரத்தில் மோதிய தாக்கத்தில் எரிபொருள் டேங்க் மற்றும் இன்ஜினில் உள்ள எரிபொருளில் கசிவு ஏற்பட்டு எரிந்து போன சம்பவம் நினைவிருக்கலாம். 

பென்ஸ் GLE
பென்ஸ் GLE

மோதிய வேகத்தில் காற்றில் மேலெழும்பி கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புறக் கவிழ்ந்து, குட்டிக் கரணம் அடிக்கும்போதுதான் பெட்ரோல் டேங்க்கில் அதிர்வுகள் ஏற்பட்டு, எரிபொருள் கசிந்து கார் தீப்பிடிக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இது ஒரு எஸ்யூவி என்பதால், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருப்பதால்… குட்டிக் கரணங்கள் அடிக்க வாய்ப்புகள் அதிகம். பன்ட் கார் விபத்தில் இதுதான் நடந்திருக்க வேண்டும். இந்த பென்ஸ் காரில் 7 முதல் 9 காற்றுப் பைகள் வரை உண்டு. இந்தக் காரில் காற்றுப் பைகள் திறந்து இருக்கலாம் என்றும்... அதன் பிறகு முழுமையாக எரிந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காரணம், காற்றுப்பைகள் தான் உயிரைக் காப்பாற்றுவதிலும், காயங்களைக் குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.

இதில் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் என்றெல்லாம் விதிவிலக்கில்லை. இருந்தாலும், காரே முழுக்க எரிந்து போன இந்தக் கோர விபத்தில் ரிஷப் பன்ட்டின் கண்டிஷன் நார்மலாகவே இருக்கிறது என்றும், அவர் சுயநினைவில் இருந்து பேசும் அளவு தெம்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயமாக இருக்கிறது. 

என்னதான் பாதுகாப்பான காராக இருந்தாலும்… தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டுவது… அதிவேகங்களில் கார் ஓட்டுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது!