செய்தி தொடர்பாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்குச் சென்றுவிட்டு ஊட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஓங்கி உயர்ந்த அழகிய மரங்களும் பசுமை போர்த்திய வனங்களும் நிறைந்த குளுகுளு ஊட்டி- கூடலூர் சாலையோரம் சற்று வித்தியாசமான வடிவில் கண்ணைப் பறிக்கும் நிறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை வேடிக்கைப் பார்க்க பெருங்கூட்டமே கூடியிருந்து.
அந்த வழியாக சென்ற பயணிகள் ஆச்சர்யத்துடன் அருகில் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். என்னதான் நடக்கிறது என எட்டிப் பார்த்து அந்த கார் உரிமையாளரிடம் அறிமுகமானோம்.

மலையாளம் கலந்த தமிழில் பேசிய அவர், " கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து குடும்பமா ஊட்டிக்கு டூர் வந்திருக்கோம். என்னுடைய பெயர் ஃபைசல். வின்டேஜ் கார்கள் மீது எனக்கு ரொம்ப இஷ்டம். மலப்புரம் வின்டேஜ் கார் அசோசியேஷன்ல மெம்பரா இருக்கேன். என்கிட்ட பி.எம்.டபிள்யூ கார் இருந்தாலும் சில வின்டேஜ் கார்கள் அப்புறம் ஒரு ஸ்கூட்டரும் இருக்கு.
எப்போ லாங் டூர் போனாலும் எனக்கு ரொம்ப இஷ்டமான இந்த மோரிஸ் மைனர் ( morris minor) கார்லதான் போவோம். 1951- வருஷ மாடலான இந்த கிளாசிக் ப்ளூ கலர் கார் 72 வருஷம் பழைமையான கார். 2 வருஷத்துக்கு முன்னாடி 5 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கினேன். சின்ன மாற்றங்கள் கூட பண்ணல. ஒரிஜினாலிட்டி மாறாம அப்படியே மெயின்டெய்ன் பண்றோம். பேப்பர்ஸ் எல்லாமே பக்காவா இருக்கு. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 கி.மீ மைலேஜ் கொடுக்குது.

15 -18 கி.மீ ஸ்பீட்லதான் போகும். ஆனா, இந்தக் காரை ஓட்டுற ஃபீல் வேற எந்த காரை ஓட்டினாலும் கிடைக்காது. லாஸ்ட் டைம் 500 கி.மீ டிராவல் போனோம். ஒரு பிராப்ளமும் இல்லை. கார்ல 4 பேர் இருந்தாலும் தொட்டபெட்டா உச்சிக்கு ஈஸியா போக முடிஞ்சது. எல்லாரும் ஆச்சரியமா பார்த்தாங்க. எந்த ஊருக்குப் போனாலும் இந்த காரைப் பார்க்க மக்கள் கூடுவாங்க. இதுவரை டிராவல்ல எப்போதுமே இந்த கார் எங்களைக் கைவிட்டதில்ல. இந்த எக்ஸ்பீரியன்ஸ் வேற லெவல்ல இருப்பதால அடிக்கடி லாங் டூர் போறோம்" என்றார்.