கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

4.63 கோடிக்கு... ஆஸ்ட்டன் மார்ட்டினின் சூப்பர் எஸ்யூவி!

ஆஸ்ட்டன் மார்ட்டின் DBX 707
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஸ்ட்டன் மார்ட்டின் DBX 707

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஆஸ்ட்டன் மார்ட்டின் DBX 707

ஆஸ்ட்டன் மார்ட்டின் கார் என்பதைவிட, ஜேம்ஸ்பாண்ட் கார் என்றால்… 80’ஸ், 90’ஸ், 2'K கிட்ஸ் எல்லாருக்குமே தெரியும்! ஜேம்ஸ்பாண்ட் கேரக்டருக்கு ஏற்ப சுறுசுறுப்பும், ஸ்டைலும், அழகும் ஆஸ்ட்டன் மார்ட்டினுக்கு இயல்பாகவே வாய்த்து விட்டிருக்கும். ஆனால் ஆஸ்ட்டன் மார்ட்டின், அழகான ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு மட்டுமில்லை; கட்டுமஸ்தான எஸ்யூவிகளுக்கும் பெயர் போனவை. அப்படி ஒரு எஸ்யூவிதான் DBX 707.

ஆம், சூப்பர் கார் தெரியும்; சூப்பர் எஸ்யூவி என்றொரு செக்மென்ட் உண்டு. அந்த செக்மென்ட்டின் புது வரவு இந்த DBX 707. ஸ்போர்ட்டினெஸ்ஸும் அழகும் ஸ்டைலும் கலந்த DBX மாடலின் புது வேரியன்ட் 707 பற்றிப் பார்க்கலாம். ஏற்கெனவே உள்ள DBX மாடலின் அடுத்த வெர்ஷன்தான் இந்த DBX 707.

அதென்ன 707…? நாட் நாட் செவனுக்கு ப்ரமோஷனா என்று நினைத்து விடாதீர்கள். இதன் வெறித்தனமான பவர்தான் இந்த 707. ஆம், 707bhp பவர் கொண்ட ஸ்போர்ட்டி எஸ்யூவி இது. இதன் டார்க் 900Nm. இது நம் ஊர் கம்யூட்டர் கார்களைவிட சுமார் 3 மடங்கு அதிகம்.

Brutal Acceleration என்று சொல்வார்களே… அதாவது, வெறித்தனமான ஆக்ஸிலரேஷன்தான் இதன் ஸ்பெஷல். வெறும் 3.3 விநாடிகளில் 100 கிமீ–யைத் தாண்டிப் பறக்கும் இந்த DBX 707. இதன் டாப் ஸ்பீடு 193Mph. அதாவது, மணிக்கு சுமார் 310 கிமீ. இந்த 4,000 சிசி ட்வின் டர்போ V8 இன்ஜினின் உறுமலுக்கு ஏதாவது ரேஸ் ட்ராக்தான் சரிப்பட்டு வரும். இதிலுள்ள Sport+ மோடை ஆன் செய்துவிட்டு, ஆக்ஸிலரேட்டர் மிதித்தால்… அந்த 900Nm டார்க்கும் கொப்புளிப்பது தெரியும்.

இதிலிருப்பது AMG-ன் 9 ஸ்பீடு ஸ்பீடுஷிஃப்ட் கியர்பாக்ஸ். கியர் ஷிஃப்ட் ஆவதே டிரைவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வதில் ஸ்பெஷல். இன்ஜினில் இருந்து கியர்பாக்ஸ் வரை AMG-யிடம் இருந்து கடன் வாங்கி, ஆஸ்ட்டன் மார்ட்டினுக்கு ஏற்றபடி, புது Ball Bearingகுகள் கொண்ட டர்போ சார்ஜரில் நன்றாக கேலிபரேஷன் ட்யூனிங் செய்திருக்கிறது ஆஸ்ட்டன் இன்ஜீனியரிங் டீம். பேடில் ஷிஃப்ட்டர்கள் டிரைவிங், சிட்டிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஸ்போர்ட் ப்ளஸ் மோடும், வெறித்தனமான ஆக்ஸிலரேஷனும் இந்தியச் சாலைகளுக்கானதாக இருக்காது. ஆனால், இதன் ஏர் சஸ்பென்ஷனும், எக்குத்தப்பான கிரவுண்ட் கிளியரன்ஸும், நம் ஊரின் மோசமான சாலைகளைத் தாங்கும்… இல்லை… சமாளிக்கும்... இல்லை… ஜாலியான அனுபவமாக்கும் ரைடு அண்ட் ஹேண்ட்லிங் கொண்டது. ஹைவேஸ்களில் அப்படியே தரையிறங்கி ஜிவ்வென்று பறக்கும் என்றால்… மோசமான டெரெய்ன்களில் 190 மிமீ கொண்ட இந்த காரின் உயரத்தை 235 மிமீ வரை ஏற்றிக் கொண்டு ஏறி இறங்கலாம். இதற்கென ஒரு சஸ்பென்ஷன் பட்டன் உண்டு. சில வெளிநாட்டு கார்களை இங்கே ஓட்ட முடியாது. இந்த ஆஸ்ட்டன் மார்ட்டின் DBX 707 விதிவிலக்கு. இதன் 285/325 செக்ஷன் கொண்ட 23 இன்ச் டயர்கள்… அடப் போங்கடா என்கின்றன மேடு பள்ளங்களைப் பார்த்து! நம் நாட்டில் 22 இன்ச் டயர்களை ஆப்ஷனலாகவும் வழங்குகிறார்கள்.

4.63 கோடிக்கு...
ஆஸ்ட்டன் மார்ட்டினின் சூப்பர் எஸ்யூவி!

ஸ்போர்ட்ஸ் கார்களில் பாடி ரோல்… மூச்! ஆனால், இது எஸ்யூவி ஆச்சே என்பவர்களுக்கு, 48V Roll Mitigation தொழில்நுட்பம் மூலம் பதில் சொல்கிறது AM. இதன் ஆன்ட்டி ரோல் பார் சிஸ்டம், மூன்றிலக்க வேகங்களில் காரைத் திருப்பும்போதுகூட, இயற்பியலையே யோசிக்க வைக்கிறது சில நேரங்களில். இதன் டர்னிங் ரேடியஸ் 12.4 மீட்டர் என்பது, பெரிய `ஓ’ டர்ன் அடிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், இதன் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் வேற ரகம்!

இதன் டைனமிக், டிசைனிலும் தெரிகிறது. பெரிய கிரில், பெரிய வீல்கள், பெரிய பம்பர், படுக்கைவசமான DRLகள், வளைவான நெளிவு சுளிவுகள் என்று எஸ்யூவி… கூபே… ஸ்போர்ட்ஸ் என்று கலந்து கட்டி அடிக்கிறது DBX 707. இதன் ஹெட்லைட்களை லாங் ஷாட்டில் பார்த்தால்… ஏதோ ஒரு கொடூர விலங்கின் கண் மாதிரி பயமுறுத்துகிறது… ஆனால் அழகாக!

இன்டீரியரில், ஆஸ்ட்டன் மார்ட்டின் தரம் தெரிகிறது… இல்லை தெறிக்கிறது. ‘கிரே கலரில் டல் அடிக்குதே’ என்று நினைப்பவர்களுக்கு கஸ்டமைசேஷன் ஆப்ஷன் உண்டு. இதில் டிரைவருக்கு 16–Way பவர்டு சீட் வசதி இருக்கிறது. ஹீட்டிங், கூலிங் என எல்லாமே உண்டு. இதன் கியர் லீவரே ஏதோ விமானத்தில் உள்ள காக்பிட்டின் லீவர் மாதிரி ஸ்டைலாக இருக்கிறது.

கேபினின் நடுவே உள்ள சென்டர் கன்சோல் பட்டன்கள் கூட்டமாக இருப்பதும் மிரட்டலாக இருக்கிறது. அங்கங்கே இடவசதியைத் தாண்டி இதன் பூட் ஸ்பேஸ் 638 லிட்டர். இதன் வீல்பேஸ், 3,060 மிமீ. பின் சீட் இடவசதி… தாராஆ…ளம்!

ஆனால், இத்தனை மிரட்டலான ஆஸ்ட்டன் மார்ட்டினில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டச் ஸ்க்ரீன் இல்லை என்பது… ப்ச்! இந்த 10.2 இன்ச் ஸ்க்ரீனை மெர்சிடீஸின் 2–nd ஜென்னிடம் இருந்து வாங்கியிருக்கிறார்கள். இதற்கான டச் பேடைக் கீழே கொடுத்திருக்கிறார்கள். ஃபேஸ்லிஃப்ட்டில் மாற்றி விடுங்கள் ஆஸ்ட்டன் மார்ட்டின்.

இனி வரப் போகும் ஃபெராரி Purosangue, லம்போகினி உருஸ் போன்ற எஸ்யூவிகளுக்குப் போட்டியாக வந்திருக்கும், இந்த DBX 707–ன் இந்திய எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 4.63 கோடி. இது உருஸ் காரைவிடக் காஸ்ட்லிதான். 725bhp கொண்ட ஃபெராரி ப்யூரோசங் வந்தால் இன்னும் இந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

4.63 கோடிக்கு...
ஆஸ்ட்டன் மார்ட்டினின் சூப்பர் எஸ்யூவி!
4.63 கோடிக்கு...
ஆஸ்ட்டன் மார்ட்டினின் சூப்பர் எஸ்யூவி!