
ஃபர்ஸ்ட் லுக்: ஆடி Q3
என்ட்ரி லெவல் ப்ரீமியம் செக்மென்ட்டில், சுமார் 40 - 45 லட்சம் விலையில் ஓர் அந்தஸ்த்தான எஸ்யூவி வேண்டுமென்றால், ஆடி ஷோரூமுக்குத்தான் போக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு எஸ்யூவி Q3. கொஞ்ச நாட்களாக ஆடி ஷோரூம்களில் Q3 காணாமல் போயிருந்த நிலையில், தனது செகண்ட் ஜெனரேஷன் மூலம் அட்டகாசமான மாற்றங்களுடன் கம்பேக் கொடுத்திருக்கிறது Q3.
இரண்டு ஆண்டுகள் கழித்து ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும் Q3–ல் என்ன விசேஷங்கள் என்று பார்க்கலாம்!
மொத்தம் 2 வேரியன்ட்களில் வந்திருக்கிறது ஆடி Q3. Premium Plus மற்றும் Technology என மொத்தம் இரண்டே இரண்டுதான். இதில் டெக்னாலஜி வேரியன்ட்தான் டாப் எண்ட். இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக 50.39 லட்சம் பொசிஷன் செய்திருக்கிறது. இதுவே Premium Plus வேரியன்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை 44.89 லட்சம்.
ஆடி என்றாலே ஒரு க்ளாஸ் லீடிங் பெர்ஃபாமன்ஸ்தான். அந்த வகையில் 2.0TFSi பெட்ரோல் இன்ஜினை இதில் வழங்குகிறது ஆடி. இது 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல். இதன் பவர் 190bhp மற்றும் டார்க் 320Nm. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைந்து வருகிறது. ஆடி கார்கள் என்றாலே அதன் ஃபேவரைட்டான Quattro ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கும்தானே! இந்த Q3–லும் அது உண்டு. இந்த Q3, 0–100 கிமீ வேகத்தை வெறும் 7.3 விநாடிகளில் எட்டும் என்கிறது ஆடி. இதன் டாப் ஸ்பீடு 222 கிமீ.
இந்த பெட்ரோல் இன்ஜின் Q5–ல் இருக்கும் அதே இன்ஜின் என்பது ஸ்பெஷல். கூடவே ஃபோக்ஸ்வாகன் குழும எஸ்யூவிகளான டிகுவான் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவற்றில் இருப்பதும் இதே 2.0TFSi தான்.
ஒரே ஒரு முக்கியமான மாற்றம்… இல்லை.. ஏமாற்றம்… இதில் போன ஜெனரேஷன் Q3 மாதிரி டீசல் இன்ஜின் மிஸ்ஸிங். வெறுமனே பெட்ரோல் மட்டும்தான். கூடவே, ஃபோக்ஸ்வாகனின் கிண்ணென்ற கட்டுமானம் கொண்ட ப்ளாட்ஃபார்மான MQB கட்டுமானத்தில்தான் இந்த Q3–ம் தயாரிக்கப்படுகிறது. டிகுவான், கோடியாக் கார்கள் இந்தக் கட்டுமானம்தான்.
பழைய Q3–ல் இருந்து தோற்றத்தில் கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது புது ஆடி Q3. நீள/அகலத்தில் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. வீல்பேஸும்தான். டிசைனைப் பொருத்தவரை இதன் பெரிய Q7 காரை இன்ஸ்பயர் செய்து இந்த Q3–யை டிசைன் செய்திருக்க வேண்டும். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தபோது, நான் அப்படித்தான் நினைத்தேன்.
பெரிய அறுங்கோண வடிவ கிரில், அதற்கு மேலே இருக்கும் ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைன் ஹெட்லைட்ஸ், பம்பர் க்ரீஸ்கள் என்று நன்றாக மாறியிருக்கிறது Q3. இதில் 18 இன்ச் பெரிய அலாய் வீல்கள் உண்டு. 5 கலர்களில் வருகிறது Q3. இதில் ஆரஞ்ச்தான் எல்லோரது ஃபேவரைட் கலராக இருக்கலாம்.




உள்ளேயும் பழசிலிருந்து நன்றாக மாறியிருக்கிறது Q3. இடவசதியை இப்போது நன்றாக முன்னேற்றி இருக்கிறதாகச் சொல்கிறது ஆடி. அந்த 10.1 இன்ச் ஃப்ரீ ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டேஷ்போர்டுடன் அழகாக இன்டக்ரேட் செய்திருக்கிறார்கள். 3 ஸ்போக், லெதர் சுற்றப்பட்ட மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், நல்ல ஸ்டைல். இது எலெக்ட்ரோ மெக்கானிக்கல் பவர் ஸ்டீயரிங். டிரைவர்களின் சொல் பேச்சுக் கேட்கும்.
இதில் ஆடி ஸ்மார்ட்போன் இன்டர்ஃபேஸ் வசதி உண்டு. இதன் விர்ச்சுவல் காக்பிட், செம ஸ்போர்ட்டி! பனோரேமிக் சன் ரூஃப் வசதி கொடுத்திருக்கிறார்கள். முன் பக்கம் பவர்டு சீட்கள்.. எல்லாமே லெதர் வாசம் அடிக்கிறது. முன் பக்க சீட்களுக்கு 4 வே லம்பர் சப்போர்ட் வசதி உண்டு. MMI Touch கொண்ட MMI நேவிகேஷன் சிஸ்டம் இருக்கிறது.
இந்த செக்மென்ட்டில் அதிக பூட் ஸ்பேஸ் இந்த Q3–ல்தான். 530 லிட்டர் இடவசதி உண்டு. பக்கவாட்டையும் சேர்த்து மொத்தம் 6 காற்றுப்பைகள். காரைச் சுற்றிலும் 10 ஸ்பீக்கர்கள் வைத்திருக்கிறார்கள். வசதிகளிலும் சொகுசிலும் குறை வைக்கவில்லை ஆடி Q3.
முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு எக்ஸட்ரா 3 ஆண்டுகள் வாரன்ட்டியும், 50,000 கிமீ–க்குள் Comprehensive Service Value Package போன்ற சில வசதிகளையும் வழங்குகிறது.
பென்ஸ் GLA, பிஎம்டபிள்யூ X1, மினி கன்ட்ரிமேன், வால்வோ XC40 போன்ற ப்ரீமியம் கார்களுக்குப் போட்டியாக வருகிறது ஆடி Q3. விலையை ஒப்பிடும்போது, இதன் டாப் எண்டான டெக்னாலஜி, மற்ற போட்டியாளர்களைவிட சுமார் 4 லட்சம் அதிகம்தான். இருந்தாலும் ஆடி ஆச்சே!
