கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பழைய ஆட்டோ பைக்கெல்லாம் புதுசா ஓடுது!

மகாலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
மகாலிங்கம்

ஆட்டோ பெயின்ட்டிங்

இப்போதும் வேலூர் சுற்று வட்டாரத்தில் பளீரென மின்னும் புத்தம் புது பைக்குகளை நிறுத்தி விசாரித்தால், அதற்குப் பின்னால் மகாலிங்கத்தின் வேலைப்பாடு இருக்கும். ஆம், பழைய ஆட்டோ, பைக்குகளுக்கு பெயின்ட் அடித்துப் புதுசாக்கித் தருவதில் எக்ஸ்பெர்ட் மகாலிங்கம்.

வேலூர் ரங்காபுரத்திலுள்ள திருமண மண்டபம் அருகிலிருக்கிறது, மகாலிங்கத்தின் ஒர்க்ஷாப். தன் ஆட்டோவில் ஜம்மென்றுவந்து கடையைத் திறந்தவர், எம்ஜிஆர் படத்துக்கு சல்யூட் அடித்துவிட்டு, பெயின்ட் மனம் கமகமக்கப் பேசினார்.

‘‘அலமேலுமங்காபுரம்தான் என் சொந்த ஊர். இப்போ, எனக்கு 60 வயசாகுது. 1983-ல், மைசூரில் இருந்த என் தாய்மாமன்கிட்ட போய் ஆட்டோ, டூ வீலர்களுக்குப் பெயிண்ட் அடிக்கக் கத்துக்கிட்டேன். வேலூர் வந்து, தோட்டப்பாளையத்துல இருக்கிற தனியார் ஒர்க்ஷாப்புல வேலைக்குச் சேர்ந்து, 13 வருஷம் கூலிக்குத்தான் பிழைப்பு ஓடிச்சு!

1999-ல் எனக்குப் பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சாங்க. உயரம் குறைவா இருக்கிறதால, சொந்தக்காரங்க யாரும் எனக்குப் பொண்ணு கொடுக்கல. அசல்ல இருந்துதான் பொண்ணு எடுத்தோம். மனைவி பேரு வளர்மதி. அவங்க வந்த பின்னாடிதான் என் வாழ்க்கை மாறிச்சு. பத்தாயிரம் ரூபாய் முதலீடு போட்டு சொந்தமா ஒர்க்ஷாப் ஆரம்பிச்சேன். என் வேலையோட நேர்த்தியப் பார்த்து, நிறைய ஆட்டோக்காரங்க வர ஆரம்பிச்சாங்க. பைக்குகளுக்கும் பெயின்ட் அடிக்க ஆரம்பிச்சேன். இத வரை 5,000 ஆட்டோ/பைக்குகளுக்கு மேல பெயின்ட் அடிச்சிருக்கிறேன். என்கிட்ட பெயின்ட் அடிச்ச பழைய டூ வீலர்கள்கூட இப்போ புதுசு மாதிரி ரோட்டுல ஓடிக்கிட்டிருக்குது. டூ-வீலர் பெயிண்ட் கொஞ்சம் காஸ்லி. பழைய ஆட்டோவா இருந்தால், டிங்கரிங் பார்த்து பெயிண்ட் அடிக்க ஒரு வாரத்துக்கு மேல ஆகிடுது. 3,500 - 4,000தான் வாங்குவேன்!

ஹீரோ, ஹோண்டா ஷோரூம்களிலும் டேமேஜ் பைக்குகளுக்கு பெயின்ட் அடிக்க என்னைக் கூப்பிடுவாங்க. டூவீலருக்கே பெயின்ட் அடிச்சாலும், என்னால டூ வீலர் மேல ஏறி உட்கார்ந்து ஓட்ட முடியாது. அதனால, நின்னுக்கிட்டு ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டேன். ஆட்டோவுலதான் வீட்டுல இருந்து ஒர்க்ஷாப்புக்கு வந்துப் போறேன். ஆரம்பத்துல எனக்கு சினிமா வாய்ப்புகூட வந்துச்சி. தொழில்மேல இருந்த துடிப்பால சினிமா வாய்ப்பை மறுத்துட்டேன். ஆக்ட்டிங்கைவிட பெயின்ட்டிங்தாங்க நமக்கு உசுரு!’’ என்கிறார் மகாலிங்கம்.

மகாலிங்கம்
மகாலிங்கம்