Published:Updated:

ஏன் இந்த விலையேற்றம்?

Spares
பிரீமியம் ஸ்டோரி
News
Spares

காரணம் என்ன?

ஏன் இந்த விலையேற்றம்?

2020-ல் ஒரு பைக் அல்லது கார் வாங்கலாம் என்ற திட்டம் இருந்து அதனை நீங்கள் தள்ளிப் போட்டிருந்தால், உங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஏனென்றால், ஒரு வருடத்தில் வாகனங்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிவிட்டது, ஏறிக் கொண்டிருக்கிறது, இன்னும் ஏறப்போகிறது. இந்த வருடம் மட்டுமல்ல; கடந்த நான்கு வருடங்களாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனங்களின் விலை ஏறிக் கொண்டுதான் இருக்கிறது.

வாகனம் வாங்க வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்கள் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும், வாகனங்களின் விலை ஏறிக் கொண்டே இருக்கும். இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து இதுவரை நான்கு முறை விலை உயர்வு அறிவிப்பை அறிவித்திருக்கிறது ஹீரோ நிறுவனம். மொத்தமாக 10,000 ரூபாய் விலை வரை ஹீரோ பைக்குகளின் விலை உயர்ந்திருக்கிறது. 2020 டிசம்பரில் டியூக் 250 பைக்கை நீங்கள் வாங்கியிருந்தால் 2.09 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் நீங்கள் பைக்கை வாங்கியிருக்கலாம். ஆனால், இன்று அதன் விலை 2.29 லட்சம் ரூபாய். 20,000 ரூபாய் அதிகம். கேடிஎம்-ன் மற்ற பைக்குகளுக்கும் இதே போன்ற விலையை உயர்ந்திருக்கிறது கேடிஎம்.

ஹீரோ, கேடிஎம் மட்டும் அல்ல, இந்தியாவில் இருக்கும் அனைத்து வாகனத் தயாரிப்பாளர்களும் தங்கள் வாகனங்களின் விலையை உயர்ந்தியிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு விலையேற்றம்?

இந்தியாவில் வாகனங்களின் விலையேற்றத்திற்கு ஒரே ஒரு காரணியை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. இது ஒரு தொடர்ச் சங்கிலி. ஒன்றைத் தொட்டு மற்றொன்று, அதனைத் தொட்டு மற்றொன்று என்று சங்கிலித் தொடராய் இந்த விலையேற்றம் நிகழ்ந்து வந்திருக்கிறது. முதலில் BS-4 மாற்றம், அதன் பின்னர் 125சிசிக்கு மேற்பட்ட பைக்குகளில் ஏபிஎஸ் கட்டாயம் என்ற அறிவிப்பு, அதனைத் தொடர்ந்து BS-6 மாற்றம் எனத் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் பல மாற்றங்களும் அறிவிப்புகளும் வெளியாகிக் கொண்டே இருந்தன. இதோடு வாகனங்களின் மேல் 28 சதவிகித GST-யும் சேர்ந்து கொள்ள, வாகனங்களின் விலை நாம் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு கூடியது. சரி, ஏப்ரல் 2020-க்குப் பிறகு BS-6 விதிமுறைகளும் அதற்கான வாகனங்களுக்கான அப்டேட்களும் வந்த பிறகு, வாகனங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அதன் பின்பும் விலை உயர்வு தொடர்ந்தது.

ஏன் இந்த விலையேற்றம்?
ஏன் இந்த விலையேற்றம்?

கொரோனா பெருந்தொற்று என்ற பெரிய அச்சுறுத்தல் நம்மை மட்டுமல்ல, தொழில்துறைகளையும் பலமாகவே தாக்கியது. அதில் சிக்கிக் கொண்டதில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. வாகனங்களின் உற்பத்திக்குத் தேவையான பொருட்களின் விலை விறுவிறுவென உயர்ந்தது. ஸ்டீலின் விலை இருமடங்காகியது. அலுமினியம், காப்பர் போன்ற மற்ற பொருட்களின் விலை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வரை உயர்ந்தது. டயர்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக்குகள் என உற்பத்திப் பொருட்களின் விலை அனைத்துமே உயர்ந்தது. உற்பத்திப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டும் அவற்றின் விலை உயர்வுக்கு ஒரு காரணியே! இதோடு செமிகண்டக்டர் பற்றாக்குறை, டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி என அனைத்துக் காரணிகளும் சேர்ந்து கொள்ள, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவையெல்லாம் நாம் நேரடியாகக் காணும் காரணங்கள் என்றாலும், இவையனைத்துக்குப் பின்னும் மறைமுகக் காரணியாக கொரோனாவும் ஒளிந்திருக்கிறது.

இவற்றைக் கடந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30 சதவிகிதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது எந்தவொரு பொருளின் விலையிலும் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஒரு வாகனம் என்பது நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டது. ஒவ்வொரு பொருளின் விலையிலும் மேற்கூறிய காரணிகள் அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கம், மொத்தமாக ஒரு வாகனத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முடிவில் இது பயனாளர்களையே மொத்தமாகத் தாக்குகிறது. ஒவ்வொரு விலை உயர்வும் கடைசியில் திணிக்கப்படுவது வாடிக்கையாளர்களின் கைகளில்தான்.

இவை எல்லாம் சரி செய்து, விலை நிலையாகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மேற்கூறிய பிரச்னைகளெல்லாம் எளிதில் தீர்க்கப்படக் கூடிய பிரச்னைகள் அல்ல. மிகவும் விலையுயர்ந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்னைகள் தீரும் எனக் காத்திருப்பதை விட, நம்மை நாமே தகவமைத்துக் கொண்டு இவற்றோடு வாழ்வதைவிட வேறு வழியில்லை.