பென்ஸில் பெர்ஃபாமன்ஸுக்கு ஏஎம்ஜி வெர்ஷன்கள் இருப்பதுபோல்… அல்ட்டிமேட்டான சொகுசுக்கு மேபேக் (Maybach) சீரிஸ் வகை கார்கள் இருக்கின்றன. ஏற்கெனவே எஸ்–க்ளாஸ் என்பதே சொகுசு. சொகுசில் எக்ஸ்ட்ரா சொகுசு சேரும்போது, அதன் லெவலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்த மாதம் 3–ம் தேதி, பென்ஸ் தனது மேபேக் எஸ்–க்ளாஸ் மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. S580 4Matic மற்றும் S680 4Matic என இரண்டு ட்ரிம்களில் வந்திருக்கிறது இந்த எஸ்–க்ளாஸ் மேபேக்.
அதிபர்கள் இதை வாங்கி, எக்ஸ்ட்ரா நீளத்துக்கு லிமோசினாக வடிவமைக்கத் தேவையில்லை. இதுவே 5.7 மீட்டர் நீ…ளம்! பழசைவிட 180 மிமீ வீல்பேஸ் கூடியிருக்கிறது. இதில் சொகுசுக்காக AIRMATIC சஸ்பென்ஷன் பொருத்தியிருக்கிறது பென்ஸ். மேடு பள்ளங்களில் ஈஸி சேரில் ஆடுவதுபோல் ஜாலியாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மசாஜ் சீட்கள், 30 ஸ்பீக்கர் Burmester ஆடியோ சரவுண்ட் சிஸ்டம், ஒவ்வொரு சீட்டுக்கும் பவர்டு மெமரி, ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், 3D டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே என்று கலக்குகிறது. பாஸ்கள் அமர்ந்து இல்லை… ஸ்லீப்பராகவே பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குப் பின் பக்க சீட்டைப் படுக்கையாக்கிக் கொள்ளலாம். காரின் ரூஃபில் 3 HD கேமராக்கள் வேறு உண்டு.
S680 4Matic–ல் 6.0லி பை–டர்போ பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் 612 bhp; 90kgm டார்க். S580 4Matic-ல் இருப்பது 4.0லி V8 பெட்ரோல் இன்ஜின். 503 bhp பவர் மற்றும் 70kgm டார்க் கொண்டிருக்கிறது இது. இரண்டிலுமே 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். முறையே 4.5 விநாடிகள் முதல் 4.8 விநாடிகளில் 100 கிமீ–யைத் தொடும் அளவு வேகம் இரண்டுக்கும். இவற்றின் டாப் ஸ்பீடு 250 கிமீ.
இந்தியாவில் 13 காற்றுப்பைகள் கொண்ட கார், இந்த மேபேக்தான். இதில் லெவல்–2 அட்டானமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் இருக்கிறது. பார்க்கிங்கில் இடிபாடுகளைத் தவிர்க்க 360 டிகிரி கேமரா, இன்டீரியரிலும் மானிட்டரிங் சிஸ்டம் என பல வசதிகள் உண்டு.
2.5 கோடி எக்ஸ் ஷோரூம் விலையில் இதை லாஞ்ச் செய்திருக்கிறது மெர்சிடீஸ். நேட்டோ நாட்டு அதிபர்கள் கவனிக்க!
