Published:Updated:

ஒழுங்கா பைக் ஓட்டலேனா... தோப்புக்கரணம்!

 பைக் க்ளப்: பொள்ளாச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
பைக் க்ளப்: பொள்ளாச்சி

பைக் க்ளப்: பொள்ளாச்சி

வார இறுதி அதிகாலையில் கோழி கூவியோ, அலாரம் அடித்தோதான் எழுந்திருக்க வேண்டும் என்று இல்லை; சில நேரங்களில் பைக் எக்ஸாஸ்ட்கள் என்னை எழுப்பி விட்ட சம்பவமெல்லாம் உண்டு. அரசு அதிகாரிகள் கான்வாய் மாதிரி, பைக்குகள் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என அந்த விடியாத வீக் எண்டுகளில் பறந்து கொண்டிருக்கும். விசாரித்தால், ‘`டீ குடிக்க... டிபன் சாப்பிடப் போறோம்’’ என்பார்கள். இன்னும் சிலர், ``இந்தியா ஃபுல்லா லாங் ரைடு’’ என்று அசால்ட்டாக ஹெல்மெட்டைக் கழற்றி, கூடவே ஏதாவது ஒரு பைக் க்ளப்பின் பெயரைச் சொல்வார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஒழுங்கா பைக் ஓட்டலேனா... தோப்புக்கரணம்!

அப்படி ஒரு க்ளப்பினரைத்தான் அந்த வீக் எண்டில் சந்தித்தேன். தென்னை மரங்கள் சூழ்ந்த பொள்ளாச்சியில், ஒரு பைக்கர் க்ளப் - கூர்க், மேகமலை, வாகமன், அதிரப்பள்ளி என்று தென்னிந்தியாவின் பிரபல சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று, ரிட்டர்ன் வந்து கொண்டிருந்தார்கள். (லாக்டெளனுக்கு முன்புதாங்க!) பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் க்ளப் (PMC) நிறுவனராகவும், ஒரு தனியார் வங்கியில் மேலாளராகவும் இருக்கும் செல்வ மணிகண்டனிடம் ஒரு சின்ன சாட்!

 “2012-ம் ஆண்டுதான் திருப்பூரைச் சேர்ந்த எனது நண்பர் ஜோஷ், என்னை ரைடிங் உலகத்திற்குள் கூட்டிச் சென்றார். எல்லா பைக்கர் க்ளப்புக்கும் பொதுவான சில விதிமுறைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதையெல்லாம் கற்றபின், `நாம் ஏன் பொள்ளாச்சியில் ஒரு ரைடிங் க்ளப் ஆரம்பிக்கக் கூடாது’ என எண்ணி, பைக் ரைடிங்கில் ஆர்வம் உள்ள எனது நண்பர்கள் கிரி பிரசாத், நிஷாந்த், கார்த்திகேயன் போன்றோருடன் ஆலோசித்தேன். அப்படித்தான் 2013-ல் ஆரம்பிக்கப்பட்டது PMC. இன்று எங்கள் க்ளப்பில் 21 வயது இளைஞர்கள் முதல் 55 வயது சீனியர் சிட்டிஸன்கள் வரை சுமார்  50 - 60 ரைடர்ஸ் இருக்கிறோம்!” என்றார்.

``ஏதோ விதிமுறைகள்னு சொன்னீங்களே...என்னது?’’ என்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒழுங்கா பைக் ஓட்டலேனா... தோப்புக்கரணம்!

“அனைத்து பைக்கர்ஸ் க்ளப்போல், எங்கள் க்ளப்பிலும் ரைடிங் கியர்ஸ் கட்டாயம். பொள்ளாச்சி போன்ற டவுனில் ரைடிங் கியர்ஸ் பற்றி போதிய விழிப்புஉணர்வு இல்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் suit-up ஆகிக் கிளம்பியபோது, ஏதோ ஏலியன்களைப் பார்ப்பதுபோலப் பார்த்தார்கள். ஆனால், இன்று நிறைய கல்லூரி மாணவர்கள் எங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டுதான் ஹெல்மெட்டின் அவசியம் உணர்ந்ததாகச் சொன்னார்கள். இது பெருமைதானே!” என்றார்.

``இப்படிப்பட்ட பைக்குகள் வைத்திருந்தால்தான் PMC-ல் ரைடர் ஆக முடியும் என்று கட்டுப்பாடுகள் ஏதும்?”

``அப்படியெல்லாம் இல்லை. எங்கள் க்ளப்பில் ஒருவர் வாகனத்தை வைத்து அவரிடம் பாகுபாடு காட்டுவதில்லை. 150 பல்ஸர், அப்பாச்சி முதல், 250 சிசி கேடிஎம், 350 சிசி புல்லட், 1000 சிசி ஹார்லி டேவிட்சன் ரைடர் வரை எங்கள் க்ளப்பில் எல்லோருமே ஒன்றுதான். சரிசமமாக நடத்துவோம்.”

ஒழுங்கா பைக் ஓட்டலேனா... தோப்புக்கரணம்!

``பவர் வித்தியாசத்தால், நெடுஞ்சாலை ரைடிங்கில் சிக்கல் ஏற்படாதா?’’

“நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக்குகள் டாப் கியரில் 80 kmph வேகத்துக்குக் கீழே சென்றால், கியர்பாக்ஸ் தட்டும். இதனால் தான் பெரும்பாலான க்ளப்கள் ஒரே மேக் அல்லது ஒரே சிசி கொண்ட பைக்குகளால் அமைக்கப்பட்டிருக்கும். PMC-ல் அனைத்து வகை பைக்குகளும் உள்ளதால், ஸ்லோ ஸ்டெடி, ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் என இரண்டு குழுக்களாகப் பிரிவோம். 150 - 220 சிசி மற்றும் புல்லட் வகை பைக்குகள் உள்ள  ஸ்லோ ஸ்டெடி குழு, ‘லீட்’ எனும் வழிகாட்டியுடன் 6 மணிக்குக் கிளம்பிச் சென்று, 7.30-க்கு தேநீர் இடைவேளை ஸ்பாட்டை அடைவார்கள்.

ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் குழு - ‘சூப்பர் லீட்’ தலைமையில், 250 சிசி மற்றும் அதற்கும் மேற்பட்ட பைக்குகளுடன் 6.30-க்குப் புறப்பட்டு, அதே 7.30-க்கு வந்துவிடுவார்கள். எந்த லாங் ரைடாக இருந்தாலும் இதுதான் எங்கள் ரூல். இரவு ரெஸார்ட்டை அடையும் போது, கால் மணிநேர வித்தியாசத்தில் எல்லோரும் ஒன்று கூடியிருப்போம். இதையும் மீறி சில ஜூனியர் ரைடர்கள், பொசிஷனை விட்டு முந்திச் செல்வார்கள். அவர்களுக்கு அடுத்த இடைவேளையில், தோப்புக்கரணம் தண்டனை உண்டு!” எனச் சிரித்தார்.

PMC-ல் தொழில் செய்யும் மற்றும் அலுவலகத்திற்குச் செல்லும் நடுத்தர வயதினரே அதிகம் என்பதால், இவர்களின் ரைடிங் ப்ளான், வெள்ளி - சனி - ஞாயிறு வார இறுதியைக் குறிவைத்துத்தான் இருக்கும். முதல் நாள் முழுவதும் ரைடிங்; 2-ம் நாள் ரிலாக்ஸ்டாக லோக்கல் இடங்களில் ரவுண்டு; 3-ம் நாள் ரிட்டர்ன். இதுதான் ப்ளான்.

ஒழுங்கா பைக் ஓட்டலேனா... தோப்புக்கரணம்!

ஒரு தடவை, மழை நாளொன்றில் மேகமலையில் ஆஃப்ரோடு போனபோது, சேறும் சகதியுமாக இருந்த இடத்தில், பைக்குகள் அனைத்தும் மண்ணைக் கவ்வ... அப்போது சட்டென ஐடியா செய்து, எல்லோரையும் தூக்கிவிட்டு உதவியது, PMC கிளப்பின் 55 வயது சீனியர் ரைடர் என்று ஒருவரைக் காட்டினார், ``இப்போ எனக்கு 20 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு’’ என அந்த ரைடர், தன்னைக் கட்டிப்பிடித்து முத்தம் குடுத்ததை நெகிழ்ச்சியாகச் சொன்னார் செல்வா.

லாங் ரைடு தவிர, மாதம் ஒருமுறை ஒரு நாள் ஷார்ட் ரைடும் உண்டாம். இதுவே அதிகபட்சமாக 500 கிமீ இருக்கும்.

3 நாட்கள் கொண்ட `ஸ்டே ரைடு’ என்றால், குறைந்தது 1000 கிமீ ஆவது இருக்கும். பெரிதாகவெல்லாம் செலவு ஆகவில்லை. பெட்ரோல், தங்குமிடத்துக்கு மட்டும் சராசரியாக 1500 ருபாய் ஆகுமாம்.உணவுச் செலவு தனி. இது ஷேரிங்.

“கடைசியாக பொங்கலுக்குத்தான் வால்பாறை - சோலையாறு போனோம். சம்மர்க்கு குடகு திட்டம் போட்டு வச்சிருந்தோம். கொரோனா எங்களை முடக்கிடுச்சு. ஆனா, திரும்பக் கிளம்புவோம் பாஸ்!’’ என்று தம்ஸ்-அப் காட்டினார் செல்வா.