கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

புயல் காற்று மழையில் அட்டோ 3 எலெட்ரிக் கார் ஓட்டிய அனுபவம்!

BYDஅட்டோ 3 எலெக்ட்ரிக்
பிரீமியம் ஸ்டோரி
News
BYDஅட்டோ 3 எலெக்ட்ரிக்

ஃபர்ஸ்ட் டிரைவ்: BYDஅட்டோ 3 எலெக்ட்ரிக்

புயல் காற்று மழையில்
அட்டோ 3 எலெட்ரிக் கார் 
ஓட்டிய அனுபவம்!

ஒரு கார் எல்லாவிதமான தட்பவெட்ப நிலைகளுக்கும் ஈடுகொடுக்கிறதா என்பதைக் கண்டறிய அதை - பனிமழையில், மலைப்பாதையில், பாலைவனத்தில் என்று பல விதமான நிலப்பரப்புகளில் ஓட்டிச் சோதனை செய்து பார்ப்பார்கள். மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தின் கடற்கரையைக் கடந்த புயல் தினத்தன்று BYD அட்டோ 3 என்கிற E-SUV-யை புயல் காற்றில் ஓட்டி, இது எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்ககூடிய வாய்ப்பு வாய்த்தது.

சென்ற இதழ்களில் கூறியதைப்போல, BYD என்கிற இந்தச் சீன நிறுவனம் ட்ரக், பஸ் துவங்கி அனைத்து வகையான வாகனங்களையும் மின்சார வாகனங்களாகத் தயாரிக்கும் நிறுவனம். ஒரு சில மாதங்களுக்கு முன்பு வர்த்தகப் பயன்பாட்டுக்காக E6 என்கிற கமர்ஷியல் வாகனத்தை வெளியிட்ட இந்நிறுவனத்தின் இரண்டாவது இந்திய அறிமுகம் இது. சீனாவில் இப்போது நூறு வாகனங்கள் விற்பனையானால், அதில் முப்பது வாகனங்கள் மின்சார வாகனங்கள். சீனாவின் சந்தையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் BYD, 2030 -ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 30 சதவிகித மார்க்கெட்டைத் தன் வசமாக்க வேண்டும் என்று இலக்கோடு, சென்னையை அடுத்திருக்கும் ஒரகடத்தில் தன் தொழிற்சாலையை இப்போதைக்குச் சிறிய அளவில் துவங்கியிருக்கிறது.

புயல் காற்று மழையில்
அட்டோ 3 எலெட்ரிக் கார் 
ஓட்டிய அனுபவம்!

பேட்டரி தயாரிப்பிலும், செமி கண்டக்டர்கள் தயாரிப்பிலும் உலக அளவில் தாதாவாக இருக்கும் நிறுவனம் என்பது இதன் மிகப் பெரிய பலம். மின்சார கார்கள் என்றால் பலருக்கும் டெஸ்லா கார்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், அந்த டெஸ்லாவை விடவும் அதிக அளவில் மின்சாரக் கார்களை விற்பனை செய்வது BYDதான் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

சுமார் 30 - 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரவிருக்கும் BYD அட்டோ 3 காரின் முன்பதிவு துவங்கிய உடனேயே 1,500 பேர் அதை வாங்குவதற்கு முன்பதிவு செய்துவிட்டார்கள். இந்த மாதத்தில் இந்தே இதன் டெலிவரியும் துவங்க இருக்கிறது என்பதால் சாலைகளிலும் இதைப் பார்க்க முடியும்.

சென்ற இதழ்களிலேயே இதன் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்த்து விட்டதால் மிகச் சுருக்கமாக அதைப் பற்றிய ஒரு ரீகேப் கொடுத்துவிட்டு, BYD அட்டோ 3 செயல்பாடுகள் குறித்துப் பார்க்கலாம்.

வெளிப்புறத் தோற்றம்:

வடிவமைப்பில் இது SUV என்றாலும், ஒரு க்ராஸ்ஓவருக்கான சாயல்களையும் இதில் பார்க்க முடிகிறது. அழகம்சங்களைத் தாண்டி ஏரோடைனமிக்ஸ் முறையில் செய்யப்பட்டிருக்கும் வடிவமைப்பு, காற்றலைகளை நினைவுபடுத்தும் வகையில் 18 இன்ச் வீல்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வீல் ஹப்ஸ், மணற்பரப்பில் காற்று போடும் கோலத்தை நினைவுபடுத்தும் D பில்லர் டிசைன், ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர் என்று இதன் டிசைன் அர்த்தத்தோடு செய்யப்பட்டிருக்கிறது.

உள்ளலங்காரம்:

காரின் கதவைத் திறந்தால் இசை வழியும் உடற்பயிற்சிக் கூடத்தின் சாயல்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். டம்பெல்ஸ் போன்ற வடிவம் கொண்ட ஏசி வென்ட்டுகள், ட்ரெட் மில் போன்ற ஆர்ம் ரெஸ்ட், முறுக்கேறிய தசைகளைப் போன்ற டேஷ்போர்டு, கிட்டார் வடிவிலான பேப்பர் மற்றும் பாட்டல் ஹோல்டர்கள், 8 ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை எல்லாம் ரசனையோடு வடிவமைத்திருக்கிறார்கள். நீளமான வீல்பேஸ் கொண்ட கார் என்பதால் முன் வரிசை, பின் வரிசை, பூட் ஸ்பேஸ் ஆகியவை எல்லாம் தாராளமாக இருக்கின்றன. ஃப்ளாட் ஃப்ளோர் என்பதால், பின் வரிசையில் நான்கு பேர் உட்கார்ந்தாலும் அசெளகரியமாக இருக்காது.

12.8 இன்ச் அடாப்டிவ் டச் ஸ்க்ரீன், செம ரெஸ்பான்ஸ்... அற்புதமான ஆம்பியன்ட் லைட்டிங்!
12.8 இன்ச் அடாப்டிவ் டச் ஸ்க்ரீன், செம ரெஸ்பான்ஸ்... அற்புதமான ஆம்பியன்ட் லைட்டிங்!
ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர் அழகும்கூட!
ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர் அழகும்கூட!
க்ரிஸ்ட்டல் க்ளியர் ஹெட்லைட்ஸ்.. வெளிச்சம் செம!
க்ரிஸ்ட்டல் க்ளியர் ஹெட்லைட்ஸ்.. வெளிச்சம் செம!

வசதிகள்:

ஒன் டச் சன் ரூஃப், 12.8 இன்ச் அளவுக்குப் பெரிதாக இருக்கும் டச் ஸ்க்ரீனை ரசனைக்கு ஏற்ப செங்குத்தாகவோ அல்லது நீள வாக்கிலோ மாற்றி வைத்துக் கொள்ளகூடிய வசதி, ஒயர்லஸ் ஃபோன் சார்ஜர், வாய்ஸ் அசிஸ்டென்ஸ், NFC கார்டு வடிவில் இருக்கும் ஸ்மார்ட் கார் சாவி, ஆம்பியன்ட் லைட்டிங், CN95 ஏர்ஃபில்டர், க்ரூஸ் கன்ட்ரோல், ஆன்ட்டி பிஞ்ச் விண்டோஸ் ஆகியவையும் உண்டு.

பாதுகாப்பு:

8 காற்றுப்பைகள், டிஸ்க் பிரேக்ஸ், ABS, EBD, ESP, டிராக்‌ஷன் கன்ட்ரோல், டயர் ப்ரஷர் மானிட்டர், 360 டிகிரி கேமரா ஆகியவற்றோடு, லேன் கீப் அசிஸ்ட், லேன் டிப்பார்ச்சர் வார்னிங், ப்ளைண்ட் ஸ்பாட் டிடக்‌ஷன், டோர் ஓபனிங் வார்னிங், ஃப்ரண்ட் கொலிஷன் வார்னிங், ரியர் கொலிஷன் வார்னிங் என்று பல பாதுகாப்பு அம்சங்களும் இருக்கின்றன.

ஜிம் இன்ட்டீரியர்
ஜிம் இன்ட்டீரியர்
ஜிம்மில் இருக்கும் Dumpbell போன்ற ஏசி வென்ட்ஸ்...
ஜிம்மில் இருக்கும் Dumpbell போன்ற ஏசி வென்ட்ஸ்...
புஷ் டைப் எலெக்ட்ரானிக் கியர் லீவர்!
புஷ் டைப் எலெக்ட்ரானிக் கியர் லீவர்!
NFC டைப்பில் ஸ்மார்ட் கார் சாவி..
NFC டைப்பில் ஸ்மார்ட் கார் சாவி..

பெர்ஃபாமன்ஸ்:

மின்சார வாகனங்களுக்கு உரிய இன்ஸ்டன்ட் டார்க், அட்டோ 3-யிலும் அற்புதமாக வெளிப்படுகிறது. 310Nm அளவுக்கு டார்க் இருப்பதால், எடுத்த எடுப்பிலேயே பிக்-அப் அதகளம் செய்கிறது. இதில் இருக்கும் Permanent Magnet Synchronous Electric Motor-ல் 201bhp சக்தி வெளிப்படுவதால், 0 - 100 கிமீட்டர் வேகத்தை 7.3 விநாடிகளில் தொட்டுவிடுகிறது. என்னதான் ஏரோடைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட வாகனமாக இருந்தாலும், இதன் wind resistance coefficient 0.29 Cd என்ற அளவில் இருந்தாலும், மழைக்கும், பலத்த புயல் காற்றுக்கு நடுவே கிழக்குக் கடற்கரைச் சாலையில் அட்டோ 3-யை வேகமாக ஓட்டிப் பார்த்தபோது, அது சற்றே தடுமாறியது. வேகத்தைக் குறைத்ததும் அது நிலைத்தன்மையோடு பயணித்தது. ஆனால், ஸ்டீயரிங் ஃபீட்பேக்கைச் சும்மா சொல்லக் கூடாது.

2,720 மிமீ வீல்பேஸ் என்பதால், நல்ல இடவசதி!
2,720 மிமீ வீல்பேஸ் என்பதால், நல்ல இடவசதி!
டிராகன் டிசைன்...
டிராகன் டிசைன்...

60.48kWh பேட்டரி என்பதால், ஒரு முறை சார்ஜ் செய்தால் 521 கிமீட்டர் ஓட்டமுடியும் என்கிறது BYD. சர்வீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் DC சார்ஜரில் இதை 0 - 80% சார்ஜ் செய்ய, வெறும் 50 நிமிடம் போதுமானது. கூடவே வீட்டிலேயே சார்ஜ் செய்ய 3kW மற்றும் 7kW AC home charger ஆப்ஷனும் கொடுக்கிறார்கள். இந்த வகையில் அட்டோ 3-யை சார்ஜ் செய்தால் கூடுதல் நேரமாகும்.

இதில் இருக்கும் பேட்டரி Blade டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டது என்பதால், இதில் ஆணி வைத்து அடித்தாலும் சரி, ஒரு லாரியை இதன் மீது ஏற்றினாலும் சரி, இது ஒன்றும் ஆகாது. அந்த அளவுக்கு இது பாதுகாப்பான பேட்டரி.

மோட்டார் விகடன் தீர்ப்பு

இடவசதி, பாதுகாப்பு, பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றில் எல்லாம் ஃபுல் மார்க் வாங்குகிறது அட்டோ 3. `இன்னும் எத்தனை கிமீட்டர் ஓட்ட முடியுமோ?' என்கிற ரேஞ்ச் பயமும் இல்லை. தாரளமான ரேஞ்ச் தருகிறது. கூடவே அற்புதமான இடவசதி, தேவையான நவீன உபகரணங்கள் ஆகியவற்றிலும் குறை இல்லை என்றாலும் போட்டியாளர்களோடு ஒப்பிடுகையில் இதன் விலை சற்றே அதிகம். பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற லக்ஸூரி கார்களை வைத்திருக்கும் பலரும் இதை இரண்டாவது காராக வாங்க பெரும்பாலும் முன்வந்திருக்கிறார்கள் என்று BYD சொல்வதை வைத்துப் பார்க்கும்போது இந்த காருக்கு டார்கெட் ஆடியன்ஸாக யாரை அது குறிவைக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

புயல் காற்று மழையில்
அட்டோ 3 எலெட்ரிக் கார் 
ஓட்டிய அனுபவம்!