
ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் க்ரெட்டா
ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, ஏலியன்ஸ், காட்ஃபாதர் 2, டார்க் நைட் எனப் பல பார்ட்-டூ படங்கள், புகழ்பெற்ற அதன் முந்தைய பாகத்தைவிடச் சிறப்பாகவே இருந்திருக்கின்றன (என்னது, தமிழ் சினிமாவா? ஸாரிங்க!).
இப்படி முதல் பாகமே அசத்தலாக இருந்ததால், இரண்டாவது பாகத்தை அதைவிட அற்புதமாக எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. கார்களில் இதே சூழலை, தற்போது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எதிர்கொண்டுள்ளது.
ஏனெனில் - முதல் தலைமுறை க்ரெட்டா, கிட்டத்தட்ட தனது இறுதிக்காலம் வரை அசைக்க முடியாத இடத்தில் இருந்தது தெரிந்ததே! இதனால் அந்த வரலாற்றை அப்படியே முன்னெடுத்துச் செல்லும் விதத்தில் புதிய க்ரெட்டா இருப்பது அவசியம். தற்போது மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் செல்ட்டோஸ், ஹெக்டர், ஹேரியர், கிக்ஸ் எனக் கடந்த ஒரு ஆண்டிலேயே பல மாடல்கள் அணிவகுத்திருக்கும் நிலையில், இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் எஸ்யூவி அதே வெற்றியைச் சுவைக்குமா?
டிசைன்
முதல் தலைமுறை க்ரெட்டாவின் எஸ்யூவி போன்ற அதன் வடிவமைப்பு பலருக்குப் பிடித்தது; சிலருக்குப் பிடிக்காமல் போனது. பெரிய சைஸில் திடகாத்திரமாக இல்லாததுடன், ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய வெர்ஷனின் தோற்றமும் கொஞ்சம் டல் ரகம்தான்.

இப்போது புதிய க்ரெட்டா, செம ஃப்ரெஷ்ஷாக வந்திறங்கி இருக்கிறது. முன்பை விட பெரிதாக, பர்ஃபெக்ட் சைஸில் கவர்கிறது. சதுர வடிவ முன்பக்கம், வீல் ஆர்ச்சுக்கு மேலே செல்லும் பாடி லைன், C-பில்லரில் இருக்கும் சில்வர் நிற வேலைப்பாடு (ரூஃப் லைன்) ஆகிய டிசைன் அம்சங்கள் அதற்கான உதாரணம். ஆனால் சிறிய விஷயங்களில் ஹூண்டாய் கொஞ்சம் இறங்கி அடித்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அதற்கேற்ப 17 இன்ச் அலாய் வீல்கள், பார்வைக்குக் கொஞ்சம் சாதாரணமாகவே தெரிகின்றன.
பெரிய காஸ்காடிங் கிரில்லின் இருபுறமும், C-வடிவ LED DRL-க்குள்ளே 3 பாகங்களாக LED ஹெட்லைட் வீற்றிருக்கின்றன. இதற்குக் கீழே இண்டிகேட்டர்களும் பனி விளக்குகளும் தாழ்வாக வைக்கப்பட்டிருக்கின்றன. LED ஹெட்லைட்டுக்கு மேட்சிங்காக, LED டெயில் லைட்களும் C-வடிவத்தில் உள்ளன. இதற்கிடையே செல்லும் கறுப்புப் பட்டையின் நடுவே, Stop Lamp அழகாக பொசிஷன் செய்யப் பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, முதல் தலைமுறை மாடலுடன் ஒப்பிட்டால், இரண்டாம் தலைமுறை க்ரெட்டா அனைத்து வயதினரையும் கவருமா என்ற சந்தேகம் எழவே செய்கிறது.
கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்
வெளிப்புறத்துடன் ஒப்பிடும்போது, உட்புறம் சிம்பிளாகவே உள்ளது. நீட்டான டேஷ்போர்டில் V-வடிவ சென்டர் கன்சோல் பொருந்திப் போகிறது. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல்களில், சிவப்பு நிற வேலைப்பாடுகளுடன் கூடிய ஸ்போர்ட்டியான கறுப்பு நிற கேபின் வழங்கப்படுகிறது.

மேலும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், கியர் லீவர் ஆகியவற்றில் இருக்கும் கான்ட்ராஸ்ட்டான தையல் வேலைப்பாடு க்ளாஸ். (இது ஆடியை நினைவுபடுத்துகிறது). இதுவே மற்ற வேரியன்ட்களில் வழக்கமான கறுப்பு -பீஜ் உள்ளலங்காரம்தான்.
மிட்சைஸ் எஸ்யூவிகளின்படி க்ரெட்டாவின் பிளாஸ்டிக் தரம் நன்றாகவே இருந்தாலும், போட்டியாளர்களில் இருக்கும் சாஃப்ட் டச் ப்ளாஸ்டிக்ஸ் இங்கே இல்லாதது நெருடல். இதனாலேயே இந்த கார்களில் ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய அந்த ப்ரீமியம் ஃபீல் கொஞ்சம் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இது குறையாகத் தெரியாதபடி, 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் தன்வசம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது.
ஆப்பிள் கார் ப்ளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ - புளூலிங்க் ஆகிய கனெக்ட்டிவிட்டி வசதிகளை உள்ளடக்கிய இதன் கிராஃபிக்ஸ், ரெஸ்பான்ஸ் நச் ரகம். அதற்குக் கீழே வழக்கமான பட்டன்களும் கொடுக்கப்பட்டுள்ளதால், சாலையில் கவனத்தைச் செலுத்துவதில் தடையேதும் இருக்காது. நீல நிற ஆம்பியன்ட் லைட்டிங், Knurled ஃபினிஷ் கொண்ட சில்வர் நிற ஏசி நாப், அனலாக் டிஜிட்டல் மீட்டர் என ரசிக்கும்படியான விஷயங்கள் க்ரெட்டாவின் கேபினில் நிறைய உள்ளன. டேக்கோமீட்டர், ஃப்யூல் & டெம்ப்ரேச்சர் கேஜ் ஆகியவை ஓரத்தில் இருந்தால், நடுவே 7 இன்ச் ஸ்க்ரீன் வீற்றிருக்கிறது. இது டிரைவிங் மோடுகளுக்கேற்ப கலர்களை மாற்றிக் கொள்வதுடன், தேவையான தகவல்களைத் தெளிவாகக் காட்டுகிறது.
கம்ஃபர்ட், எக்கோ, ஸ்போர்ட் ஆகியவை ஆன் ரோடுக்கும், Snow - Sand - Mud ஆகியவை ஆஃப் ரோடுக்குமான மோடுகளாக உள்ளன. ஆனால் க்ரெட்டாவில் பழைய காரைப் போலவே ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கிடையாது. தானாக இயங்கும் ஹெட்லைட்ஸ் & வைப்பர்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் மிரர், எலெக்ட்ரிக் டிரைவர் சீட், TPMS, ஏர் Purifier, கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், Bose ஆடியோ சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பனோரமிக் சன்ரூஃப் எனத் தனது பாணியில் அதிகப்படியான வசதிகளை க்ரெட்டாவில் வாரியிறைத்திருக்கிறது ஹூண்டாய். 6 காற்றுப்பைகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ரியர்வியூ கேமரா, டிராக்ஷன் & ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் எனப் போதுமான பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
முன்பக்க சீட்கள் பெரிதாக இருப்பதுடன், அவை பக்கா குஷனிங் மற்றும் சப்போர்ட்டைக் கொண்டிருக்கின்றன.
Artificial Leather சீட் கவர் நன்றாக இருக்கிறது. முந்தைய மாடலைவிட அகலம் மற்றும் லெக்ரூம் கூடியிருப்பதால், மூன்று பேருக்கான இடவசதி நிறைவாகக் கிடைக்கிறது. ஆனால் பின்பக்க ஆர்ம்ரெஸ்ட் மடித்து வைத்தாலும், வெளியே கொஞ்சம் துருத்திக் கொண்டு நிற்பது அசெளகரியத்தைத் தரலாம்.

காருக்குள்ளே சென்று வருவது சுலபமாக இருப்பதுடன், உள்ளேயிருந்து வெளிச்சாலையும் தெளிவாகத் தெரிவது ப்ளஸ். மெர்சிடீஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் போல பின்பக்க இருக்கையின் ஹெட்ரெஸ்ட்டுக்கு எனத் தனியாகக் குஷன்கள் ஆக்சஸரீஸில் வருகின்றன. ஏசி வென்ட், USB பாயின்ட்டுக்கு மேலே மொபைல் வைக்க ட்ரே, பின்பக்க விண்டோ பிளைண்ட்ஸ் எனப் பின்பக்க பயணிகளுக்கான சொகுசு வசதிகள் இருப்பது செம. ஆனால் பனோரமிக் சன்ரூஃப், கொஞ்சம் ஹெட்ரூமைக் காலி செய்துவிட்டது. எனவே 6 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருப்பவர்களூக்கு ஹெட்ரூம் கொஞ்சம் குறைவாகத் தெரியலாம்.
இன்ஜின் பர்ஃபாமன்ஸ்
1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் (115bhp) மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் (140bhp) என மூன்று இன்ஜின் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது புதிய க்ரெட்டா. இவை எல்லாமே கியா செல்ட்டோஸில் நாம் பார்த்ததுதான். 1.5 லிட்டர் இன்ஜின்களுக்கு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருந்தாலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுக்கு ஆட்டோமேட்டிக் மட்டுமே உண்டு (7 ஸ்பீடு DCT). 140bhp பவர் மற்றும் 25kgm டார்க்கைத் தரும் இந்தக் கூட்டணி, அதிரடியான பர்ஃபாமன்ஸுக்கு வழிவகை செய்கிறது. இங்கே மேனுவல் கியர்பாக்ஸ் இல்லை என்றாலும், அது மைனஸாகத் தெரியாத அளவுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடு விரைவாக இருக்கிறது.
ஆனால் ஜெர்மானியத் தயாரிப்புகளில் இருப்பதைப்போல, இந்த DCT கியர்பாக்ஸ் அவ்வளவு துல்லியமாக இல்லை. குறைவான வேகத்தில் கொஞ்சம் ஜெர்க் தெரிந்தாலும், செல்ட்டோஸைவிட இங்கே கியர்பாக்ஸின் இயக்கம் ஸ்மூத்தாக உள்ளது. மேலும் கியர்களும் உடனுக்குடன் மாறுகின்றன. இதை நம்பி குறைவான ஆர்பிஎம்மில் இருக்கும்போது திடீரென ஆக்ஸிலரேஷன் கொடுத்தால், கியர்பாக்ஸ் கொஞ்சம் சுணக்கம் காட்டுகிறது.
இதர DCT போலவே, இதுவும் அதிக ஆர்பிஎம் - அதிக வேகத்தில் இயங்குவதையே விரும்புகிறது. இந்த செக்மென்ட்டிலேயே முதன்முறையாக, பேடில் ஷிஃப்ட்டர்கள் க்ரெட்டாவில் இடம்பெற்றுள்ளன.
எனவே, இந்த இன்ஜினின் முழு செயல்திறனையும் சோதிக்கக் கூடிய வாய்ப்பு ஓட்டுனருக்குக் கிடைத்துவிட்டது நைஸ். அதிக ஆர்பிஎம்மைத் தவிர, பெரும்பான்மையான நேரங்களில் இன்ஜின் சைலன்ட்டாகவே இயங்குகிறது. ஆரம்ப கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸே மனநிறைவைத் தரும்படி இருப்பதால், இன்ஜினை ரெட்லைன் வரை விரட்டுவதற்கான சாத்தியம் குறைவுதான். கியர் செலெக்ட்டருக்கு வலதுபுறத்தில் இருக்கும் ரோட்டரி டயலில், டிரைவிங் மோடுகளைத் தேர்வு செய்யலாம்.
எக்கோ மோடில் கியர்கள் குறைவான வேகத்திலேயே உடனுக்குடன் மாறுவதுடன், ஏசி மற்றும் இன்ஜினின் ரெஸ்பான்ஸும் அதற்கேற்ப அமைந்திருப்பதால், நெரிசல்மிக்க நகர டிராஃபிக்கில் செல்லும்போது இந்த மோடு கைகொடுக்கும். மற்ற நேரங்களில் கம்ஃபர்ட் மோடே போதுமானதாக இருக்கிறது. ஸ்போர்ட் மோடில் இன்ஜினை இயக்கும்போது, கியர்பாக்ஸும் ஸ்போர்ட் மோடுக்கு வந்துவிடுகிறது. இங்கே எதிர்பார்த்தபடியே ரெட்லைன் வரை கியர் ஹோல்டு ஆவதுடன், பவர் டெலிவரியும் கிச்சென இருக்கிறது.
ஓட்டுதல் அனுபவம்
புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப் பட்டுள்ள இரண்டாம் தலைமுறை க்ரெட்டா, இந்த ஏரியாவில் கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. முன்பிருந்ததைவிடக் கட்டுறுதியான பெரிய வாகனத்தில் இருக்கிறோம் என்ற உணர்வைத் தருவதில் வெற்றி பெற்றுள்ளது இந்த ஹூண்டாய் கார்.

ஆனால் ஐரோப்பிய கார்களுடன் ஒப்பிட்டால், கையாளுமையில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. மென்மையான செட்-அப்பிலேயே சஸ்பென்ஷன் இருப்பதால், காருக்குள்ளே இருப்பவர்கள் கொஞ்சம் ஆட்டம் போடவே செய்வார்கள். ஆனால் இதனாலேயே கரடுமுரடான சாலைகளைச் சிறப்பாகச் சமாளிக்கிறது புதிய க்ரெட்டா.
பழைய க்ரெட்டாவை விட பாடிரோல் கன்ட்ரோலில்தான் உள்ளது என்பதுடன், அதிக வேகங்களில் காரின் நிலைத்தன்மையும் சூப்பராகவே இருக்கிறது. அனைத்து விதமான ஓட்டுனர்களையும் கவரும்படியே புதிய க்ரெட்டாவின் ஓட்டுதலை ஹூண்டாய் கட்டமைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
எடை குறைவான ஸ்டீயரிங் மற்றும் கன்ட்ரோல்கள், பயன்படுத்த வாட்டமாக உள்ளன. ஆனால் ஆக்ஸிலரேட்டரில் அதிக பலத்தைக் காட்டும்போது, கார் ஒருபக்கமாகச் செல்வதுபோலத் தோன்றுகிறது. மேலும் திருப்பங்களில் காரைச் செலுத்தும்போது, போதுமான ஃபீட்பேக்கைத் தர ஸ்டீயரிங் தவறுகிறது.
முதல் தீர்ப்பு
க்ரெட்டாவின் புக்கிங் தொடங்கிய முதல் இரு வாரத்திலேயே, 14,000-க்கும் அதிகமான கார்கள் புக் ஆகிவிட்டன. மொத்தத்தில் புதிய போட்டியாளர்கள் எஸ்யூவி செக்மென்ட்டின் எல்லா பக்கமும் அணிவகுத்து நிற்கின்றன என்பதுடன், மஹிந்திரா XUV3OO, எம்ஜி ஹெக்டர் போன்றவை அதிக வசதிகளுடனும் - கொடுக்கும் காசுக்கான மதிப்புடனும் இருப்பது தெரிந்ததே!
எனவே, தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் இந்தக் காரில் பிரயோகித்துள்ளது ஹூண்டாய். மேலும் தனது பலங்களான சிறப்பம்சங்கள், எளிதான ஓட்டுதல் ஆகியவற்றில் இந்த நிறுவனம் அடுத்த பரிமாணத்தை க்ரெட்டாவில் காட்டியிருக்கிறது. பனோரமிக் சன்ரூஃப், வென்ட்டிலேட்டட் சீட்கள் அதற்கான உதாரணம்.

அசத்தலான அறிமுக விலையில் (11.47 - 20.53 லட்ச ரூபாய், சென்னை ஆன்ரோடு விலை) களமிறங்கியிருக்கும் புதிய க்ரெட்டா, முன்பைவிடக் கொடுக்கும் காசுக்கான மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. இது ஒருபுறம் செல்ட்டோஸுடன் போட்டி போட்டாலும், முந்தைய க்ரெட்டா சாதித்ததைவிட ஒருபடி மேலே செல்ல வேண்டும் என்பதே ஹூண்டாயின் ஆசையாக இருக்கிறது. ஹூண்டாய் விரும்பிகளின் ஆசையும் அதுதான்.