Published:Updated:

பஜாஜ் சேர்... மாருதி கேஷ் கவுன்ட்டர்... காரிலே கலைவண்ணம் காணும் வேணு!

அர்ஜுன் கே. வேணு
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுன் கே. வேணு

கலை: ஆட்டோமொபைல்

பஜாஜ் சேர்... மாருதி கேஷ் கவுன்ட்டர்... காரிலே கலைவண்ணம் காணும் வேணு!

கலை: ஆட்டோமொபைல்

Published:Updated:
அர்ஜுன் கே. வேணு
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுன் கே. வேணு

கண்டமான பழைய கார்களை எடைக்கு வாங்கி வந்து, அதை வீட்டு உபயோகப் பொருட்களாக மாற்றி வருகிறார் கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்த கார் மெக்கானிக் அர்ஜுன் கே. வேணு. முழு காரை அப்படியே நிறுத்தி, ஐந்து பேர் அமரக்கூடிய சோஃபா செட்டாக மாற்றிவிடுகிறார்; பழைய ஸ்கூட்டர் பார்ட்டை ரோல் சேராக மாற்றுகிறார்; காரை கேஷ் கவுன்ட்டராக வடிவமைக்கிறார்; காரின் பின்பகுதியை அலங்கார மீன் வளர்க்கும் தொட்டியாக உருவாக்குகிறார். அவர் தயாரிக்கும் கார் சோஃபா செட்களில் இண்டிகேட்டர் உள்ளிட்ட விளக்குகள் எரியும் வண்ணம் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார். அது மட்டுமல்லாது, இரும்பு பேரல்களை இரண்டாக அறுத்து அதில் இரண்டு இருக்கைகளை வடிவமைத்து விடுகிறார்.

தனது மெக்கானிக் ஷாப்பில் கார் பெயின்ட்டிங் வேலை செய்துகொண்டிருந்த அர்ஜுன் கே.வேணுவிடம் பேசினேன். “என்கிட்ட 1985 மாடல் பழைய மாருதி 800 கார் இருந்தது. அதுக்கு ஆர்.சி பேப்பர் தேதி முடிவடைந்தது. அதன் மெக்கானிக்கல் பாகங்கள் மிக மோசமாக இருந்தன. அதை ஓட்டுவது சாத்தியமானதாக இல்லை. மேலும் அது தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் கார் என்பதால் கேரளத்தில் ஆர்சி மாற்றி எடுப்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. எனவே, அந்த காரின் FC தேதி வந்தபோது அதை நான் கேன்சல் செய்தேன்.

அந்த காரை எடைக்குப் போட்டு விற்க மனம் இல்லை. எனக்கு மீன் வளர்ப்பு பிடிக்கும். இந்த காரை மீன் தொட்டியாக மாற்றினால் என்ன என்று ஒரு ஐடியா. காரின் பின்பகுதியை அப்படியே மீன் வளர்க்கும் அலங்காரத் தொட்டியாக மாற்றிவிட்டேன். அதன் உள் பகுதியில் பைபர் போன்ற பொருட்களால் கப்பல், செடிகள் என செய்து வைத்தேன்” என ஒரே மூச்சில் முன்னுரை கொடுக்கிறார் அர்ஜுன்.

சாவி ஹோல்டர்
சாவி ஹோல்டர்
பஜாஜ் சேர்
பஜாஜ் சேர்


“இதைப் பார்த்து பழைய கார்களை ஆல்ட்டர் செய்யச் சொல்லி பலர் என்னிடம் வந்தார்கள். பழைய பிரீமியர் பத்மினி காரை கேஷ் கவுன்ட்டராக மாற்றி தொடுபுழாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குக் கொடுத்த்திருக்கிறேன். அதுபோல பழைய மாடல் பஜாஜ் சூப்பர் ஸ்கூட்டரின் பாடியைக் கொண்டு சேர் செய்து கொடுத்திருக்கிறேன். அதிலிருந்துதான் பழைய கார்களை வீட்டு உபயோகப் பொருட்களாக மாற்றலாமே என்ற எண்ணம் பிறந்தது” எனக் கூறியவர் தன்னைப்பற்றியும், தனது ஃபீல்டு பற்றியும் விரிவாகப் பேசினார்.

“நான் BSC Electronics படித்துவிட்டு கார்கள் மீதான காதல் காரணமாக இந்த ஃபீல்டுக்கு வந்தேன். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடுபுழாவில் சொந்தமாக மெக்கானிக் ஒர்க்‌ஷாப் போட்டு, கார்களுக்கு பாடி ஒர்க், பெயின்ட்டிங் வேலைகளைச் செய்துவருகிறேன். கண்டமான கார்களை ஃபர்னிச்சர்களாக மாற்றுவதை ஃபேஷனாக ச்செய்துவந்தேன். சிலருக்கு அந்த மாடல்கள் பிடித்ததால் தங்களுக்கும் செய்துகொடுக்கும்படி கேட்டனர். எனது மனதுக்குப் பிடித்த வேலை என்பதால் அதையே பிசினஸாகச் செய்யத் தொடங்கி விட்டேன். பெரிய ரிஸார்ட்டுகள், ஹோட்டல்களில் இருந்தும் இப்போது அதிகளவு ஆர்டர்கள் வருகின்றன.

ஆர்டர் தருபவரின் வீட்டுக்குச் சென்று முதலில் இடவசதியைப் பார்ப்பேன். எந்த இடத்தில் ஃபர்னிச்சரை வைக்க வேண்டுமோ, அதற்குத் தகுந்தாற்போல முழு கார் அல்லது பாதி காரை வீட்டில் செட் செய்து சோஃபா போன்றவை செய்து கொடுக்கிறேன். முழு காரில் சோஃபா செய்வதற்காக காரை வீட்டுக்குள் கொண்டு செல்ல வேண்டும். எனவே பெரிய வாசல் உள்ள ஹோட்டல்கள் போன்றவற்றில்தான் முழு காரைக் கொண்டு சென்று சோஃபா செட், கேஷ் கவுன்ட்டர் போன்றவைகளாக மாற்ற முடியும். சிறிய வாசல் உள்ள வீடுகள், கட்டடங்களில் பாதி காரைக் கொண்டு ஃபர்னிச்சர் செய்து கொடுக்கிறேன்.” எனும் வேணு, பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இதற்கு பட்ஜெட் வைக்கிறார்.

பஜாஜ் வீல் சேர்
பஜாஜ் வீல் சேர்
காரிலே கலைவண்ணம்
காரிலே கலைவண்ணம்
காரிலே கலைவண்ணம்
காரிலே கலைவண்ணம்
செவர்லே சோஃபா
செவர்லே சோஃபா


கார், பைக் ஆகியவற்றில் என்ன பொருட்கள் செய்தாலும் அதன் இயற்கை மாறாமல் அப்படியே விட்டுவிடுவேன். டயர், ஹெட்லைட் என கார்/பைக்குகளில் உள்ள பொருட்கள் அப்படியே இருக்கும். காரில் உள்ள ஹெட்லைட், இண்டிகேட்டர் போன்றவை ஒளிரும் வகையில் வடிவமைக்கிறேன். அதற்காக மின் இணைப்பு கொடுத்து, அதை 12 வால்ட் DC மின்சாரமாக கன்வெர்ட் ஆகும்படி செட் செய்திருக்கிறேன். ராத்திரி நேரங்களில் இந்த மின் விளக்குகளை ஒளிரவிடும்போது மிகவும் அழகாக இருக்கும்.

அர்ஜுன் கே. வேணு
அர்ஜுன் கே. வேணு


இந்தப் பணிகளுக்காக பழைய கார்கள், ஸ்கூட்டர்களை எனது ஒர்க்‌ஷாப்பில் வாங்கி ஸ்டாக் வைத்திருக்கிறேன். மிலிட்டரியில் உள்ள பழைய ஜிப்சி போன்ற வண்டிகளை ஏலத்தில் எடுத்துக் கொண்டுவருவார்கள். அதில் நான் ஃபுல் ஆல்ட்ரேஷன் பணி செய்துகொடுக்கிறேன்” என்றவர் எதிர்காலத் திட்டம் பற்றி கூறினார்.

“பழைய கார்களில் இருந்து ஃபர்னிச்சர் தயாரிப்பதை விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறது. இப்போது கார் ஃபர்னிச்சர்கள் சிலவற்றை மாடலாகத் தயாரித்துப் பார்வைக்கு வைத்திருக்கிறேன். மேலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் சிறுவர்களுக்கான எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் கம்பெனி தொடங்கும் திட்டம் இருக்கிறது” என்றார்.

காரில் கலைவண்ணம் காணும் அர்ஜுனுக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றேன்.