Published:Updated:

மதிப்பெண்களை விட... க்ரியேட்டிவிட்டி முக்கியம்!

மதிப்பெண்களை விட... க்ரியேட்டிவிட்டி முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
மதிப்பெண்களை விட... க்ரியேட்டிவிட்டி முக்கியம்!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் 41

மதிப்பெண்களை விட... க்ரியேட்டிவிட்டி முக்கியம்!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் 41

Published:Updated:
மதிப்பெண்களை விட... க்ரியேட்டிவிட்டி முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
மதிப்பெண்களை விட... க்ரியேட்டிவிட்டி முக்கியம்!

கார்கள் என்பது வெறும் வாகனங்கள் அல்ல; உலோகத்தால் செய்யப்பட்ட உருளிகள் அல்ல; அவை ஒரு வாழ்வியல் பண்பாட்டு அடையாளங்கள். வால்வோவின் ஸ்கேண்டினவியன் வெள்ளிப் பாத்திரத் தட்டுச் சுத்திகளைப்போல், அமெரிக்காவின் டிராக் ரேஸ்களைப் போல, ஜப்பானியர்களின் ஜென் தத்துவங்களைப்போல, கொரியாவின் அமைதியான நீரோட்ட வளைவுகள் போல, சைனாவின் கட்டுப்பாடான விதிகளுக்குட்பட்ட தற்காப்புக் கலைக் களஞ்சியங்கள் போல... அவை வரலாற்று விழுமியங்கள்.

கார் டிசைன் பற்றிய ஒரு கட்டுரைக்கு என்ன மாதிரியான மொழிநடை இருக்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு முன்னுதாரணமும் இல்லாத நிலையில், கடந்த 40 மாதங்களாக தமிழில் ஆட்டோமொபைல் டிசைன் எழுத முயன்றிருக்கிறேன். என்னிலும் மொழி ஆளுமையுள்ள எழுத்தாளர்கள் ஏராளமுண்டு; அவர்கள் இதுவரை இதை எழுதவில்லை; அதனால் நான் எழுத வேண்டியதாயிற்று. என்னிலும் சிறந்த ஆட்டோமொபைல் டிசைனர்கள் பலர் உண்டு; அவர்கள் தமிழில் எழுத இயலவில்லை. அதனால்நான் எழுத விழைந்தேன்.

டிசைன் நாட்டுக்கான தேவை என்பது உங்களுக்குக் கடத்தப்பட்டிருந்தால் அதை எங்கள் குழுவின் வெற்றி எனக் கொள்வேன். ஜப்பான் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியர்களின் படைப்பாற்றலை மிகக் குறைத்தே மதிப்பிடுகிறார்கள். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, 2018-ல் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் `ஸ்டீவ் வோஸ்நியாக்’ இந்திய எதிர்கால வளர்ச்சியைப் பற்றிப் பற்ற வைத்த ஒரு கருத்து. மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா இது பற்றிக் கருத்து எழுதும் அளவுக்குப் பெரும் விவாதப் பொருளானது. அதற்குப் பின் உள்ள உண்மை, என்னைப் போன்றே பலருக்கும் பெரும் சிந்தனையைத் தூண்டியிருக்கக் கூடும். இந்தத் தொடருக்கான கருப்பொருள் என்னவோ, அதைத்தான் அந்தப் பெரிய மனிதர் பட்டவர்த்தனமாகச் சொல்லிக் காட்டினார்.

"இந்தியாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன? எதிர்காலத்தில் ஆப்பிள் போல், ஒரு அகில உலகத் தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் இருந்து முளைத்து வருவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் உண்டா?’’ என்று கேட்கப்பட்ட கேள்விக்குத்தான், அவர் இதுவரை யாருமே வைக்கத் துணியாத ஒரு குற்றச்சாட்டை இந்திய சமூகத்தை நோக்கி வீசினார் .

மதிப்பெண்களை விட... க்ரியேட்டிவிட்டி முக்கியம்!


“ஒரு நாட்டைப் பற்றிக் கருத்துச் சொல்லும் அளவுக்கு நான் ஒரு மானுடவியலாளர் அல்ல; இந்தியாவைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், இந்தியாவில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிற கம்பெனி என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா? ஒருவேளை இன்ஃபோசிஸ் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் ஒரு பெரிய புதிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு பெரும் நிறுவனமாக இந்தியாவிலிருந்து அது முளைத்து எழும் சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தோன்றுகிறது!” என்றார் அவர்.

இங்கே, வெற்றி என்பது உங்களுடைய பள்ளி, கல்லூரித் தேர்வின் மதிப்பெண்களில் இருப்பதாக நம்பப்படுகிறது. கடினமாக உழைத்துப் படிக்க வேண்டும்; நிறைய மார்க் எடுக்க வேண்டும்; எம்பிஏ போக வேண்டும்; பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்பதாக இருக்கிறது. திட்டமிட்டபடி வாழும் வாழ்க்கையில் கிரியேட்டிவிட்டி வெளியே சென்று விடுகிறது.

இந்த டிஜிட்டல் இந்தியச் சமூகத்தில் நாம் எல்லோரும் தொழில்நுட்ப வேலையாட்களாக இருக்கிறோம். ஸ்டீவ் சொன்னதில் ஒரு பேருண்மை இருப்பதாகவே படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் போன்ற தனித்த நிறுவனங்கள் முளைத்து வருவதற்கு இந்த மண்ணில் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. நெகடிவ் சிந்தனை என்பதாகப் பட்டாலும் அதுதான் உண்மை.

இன்றைய தேதியில் நம்மைச் சுற்றி இருக்கும் சாதனங்கள் எல்லாமே பெருவாரியாக வெளிநாட்டுப் பொருட்களாகவே இருப்பதைச் சிந்தித்திருப்போம். ஆனால் கேள்வி எழுப்பி இருக்கிறோமோ? அப்படியென்றால், யாரிடம் இந்தக் கேள்விகளை எழுப்புவது என்ற குழப்பம் நீடிக்கிறது. நமது பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விப் பாடத்திட்டங்கள் இப்படிப் புதிய மாற்றுச் சிந்தனைகளை விதைப்பதில்லை. ஆனால், வடிவமைப்பு என்பது புதிய தடம் அமைக்கும் பணி. மதிப்பெண் குவிக்கும் இலக்கை நோக்கிய வெற்றி வெறி தன்நலம் சார்ந்தது. புதியபாதை அமைக்கும் விருப்பப்பணியில் வடிவமைக்கும் முயற்சிதான் பிறர் நலம் சார்ந்தது.

உலக வளர்ச்சியின் தாரக மந்திரம், வடிவமைப்பே என்பதை உணர்த்துவதுதான் இந்த நெடிய பயணத்தின் நோக்கம். அதிலும், குறிப்பாக தமிழ்ப் பிரதேசத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கார் டிசைன் செய்வதற்கு ஆர்வத்தோடு படிக்க வருகிறார்கள். கிரியேட்டிவ் டிசைன் சம்பந்தமான படிப்பு என்ன என்பது தெரியாமலேயே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் சேர்ந்து விடுகிறார்கள். `பின்பு இதுவல்ல நான் விரும்பும் தேவதை’ என்று தெரிந்ததும் ஒப்புக்காக இன்ஜினியரிங் முடித்துவிட்டு, திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு வகையான கிரியேட்டிவ் துறைகளுக்குச் சென்று சாதனை புரிந்தவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் வழிநடத்தப்பட்டு, கார் வடிவமைப்பைச் சென்றடைந்திருந்தால், கொரியாவைப்போல ஒரு புரட்சி இந்தியாவில் நடந்திருக்கக் கூடும்.

98% இந்தியக் குழந்தைகள், தங்கள் 5 வயதில் மிகவும் வித்தியாசமான, பலவிதமான கற்பனைத்திறனோடு இருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு 5 வயது குழந்தையிடம் ஒரு காரைக் காட்டி, இதைப் பார்த்தால் உனக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு அக்குழந்தை ஓர் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்புபோல இருக்கிறது என்று கொஞ்சமும் பயமின்றிச் சொல்லிச் சிரித்தது .

மதிப்பெண்களை விட... க்ரியேட்டிவிட்டி முக்கியம்!


25 வயது நிரம்பிய இந்திய இளைஞர்களில் 2% பேர் மட்டுமே வித்தியாசமான கற்பனைத் திறனுடன் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால், நமது கல்விமுறை 98% மாணவர்களை மனனம் செய்து ஒப்பிக்கும் பிரதி எடுக்கும் இயந்திரங்களாக உருவாக்குவதைத் தான் பல ஆண்டுகளாகச் செய்துவருகிறது. கல்வி என்பதே வேலைவாய்ப்பின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல் என்பதாக ஒரு தலைமுறை புரிந்து கொண்டிருக்கிறது.

பள்ளிக் கல்வி அளவில், டிசைன் குறித்துச் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை நாடு தழுவிய புரிதலோடு கையாள்வதற்குத் திட்டமிட வேண்டும். கல்வி முறைகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. ROTE கல்விமுறை: இது கான்செப்ட். என்னவென்றே புரியாவிட்டாலும் மனனம் செய்து தேர்வுக்குத் தயார் செய்து மதிப்பெண்களைக் குவிப்பது. இதுவே நமது கல்விமுறை.

2. ONUS கல்விமுறை: இது மிகவும் பிராக்டிக்கல் ரகம். கேள்விகளுக்கான விடையை ஆசிரியர் போதிக்காமல், மாணவர்களையே தேடி உணரச் செய்வது. ஆடியோ/வீடியோ என மாணவர்களுக்குப் பிடித்த வகையிலும் புரியும் வகையிலும் பாடங்களைப் பிடித்த படங்களாக்குவது. பள்ளி ஆசிரியர்களுக்கும் நாம் onus கல்வியை முன்னெடுக்க வைத்து, டிசைன் குறித்த விழிப்புஉணர்வு ஊட்டுவது மிகவும் அவசியம். கல்லூரியில் அது எந்தப் பாடப்பிரிவு ஆனாலும் (கலை, இன்ஜினீயரிங், மருத்துவம், சட்டம், டிப்ளமோ) எல்லா தளங்களிலும் வடிவமைப்பைப் பாடமாக்குதல் அவசியம்.

ஆட்டோமொபைல் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இருப்பதாலும், IT துறை கவர்ச்சியின் விளைவாக அனைவரும் கம்ப்யூட்டர் வேலைகளில் ஆர்வம் காட்டுவதாலும், ஆட்டோமொபைலில் ஆர்வமிக்க மாணவர்கள், இண்டஸ்ட்ரியல் அனுபவம் பெறுவது கடினமாகி வருகிறது. பல கல்லூரிகள் `இண்டஸ்ட்ரியல் எக்ஸ்போஷர்’ என்ற வார்த்தையை வெறும் பெயரளவில் பயன்படுத்துவது கூடுதல் சோகம். குறிப்பாக வடிவமைப்பு சார்ந்த விவாதங்களையும் படைப்புகளையும் காட்சிப்படுத்த, முதலீடுகளை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் `ஆர்ட் டிஸ்ட்ரிக்’ போன்ற ஒரு கான்செப்ட் இருந்தால் நலம். மத்திய அரசு இதற்கான துறையை உருவாக்க வேண்டியது அவசியம். மெர்சிடீஸ் பென்ஸைத் தெரிந்து கொண்டு அதன் காரைப் பன்மடங்கு விலை கொடுத்து வாங்குவதல்ல இந்திய வளர்ச்சி. மெர்சிடீஸ் பென்ஸிலும் சிறந்த காரை அதனிலும் குறைவாகப் படைத்து எடுப்பதே இந்திய வளர்ச்சி.

சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள். ஷேர்ஆட்டோ என்பது எந்த ஒரு ஐரோப்பியனாலும், அமெரிக்கானாலும் புரிந்து கொள்ளவே முடியாது. ஷேர் ஆட்டோ வீட்டு வாசலுக்கு வந்து ஏற்றிக் கொள்ளும். நான் சொல்லும் எந்த இடத்திலும் நிற்கும். காத்திருப்புகள் மிகக் குறைவு.

உதாரணத்துக்கு, பேருந்துகளில் புட் போர்டு அடிக்கும் இளைஞர்களைத் திட்டுகிறோம். ஏன், அது பாதுகாப்பானது இல்லை என்பதால். உடனே Step Travelling-யைத் தடை செய்வதல்ல தீர்வு. ஃபுட் போர்டு டிராவலிங்கைப் பாதுகாப்பானதாகவும், ஃபன்னாகவும் மாற்றி பேருந்தை டிசைன் செய்யலாமே! ஏர்பேக், சீட்பெல்ட், தெர்மோகோல் சேஃப்டி என்று அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதைத் தாண்டிய தொழில்நுட்பமாகவும் இருக்கலாம். அதுதான் கிரியேட்டிவிட்டி. பேருந்துகளில் மட்டுமல்ல; வாகனங்களில் நமக்குத் தேவையான வாகனம் எத்தகையது? எப்படிப் படைப்பது போன்ற கேள்விகளுக்கு விடை நம்மிடம் இருந்தே வரவேண்டும். நமக்கான வர்த்தகத்தை நாமே உருவாக்க வேண்டும் என்ற நிலை வரவேண்டும். அந்த இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வடிவமைப்பே நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்!

- (முற்றும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism