Published:Updated:

அமெரிக்காவின் கனுவும் இங்கிலாந்தின் அரைவலும்!

கனு எலெக்ட்ரிக் பஸ்கள்
பிரீமியம் ஸ்டோரி
கனு எலெக்ட்ரிக் பஸ்கள்

வளைவு நெளிவுகள் அதிகம் இல்லாத... Micro Manufacturing முறையில் தயாராகும் கனு எலெக்ட்ரிக் பஸ்கள்...

அமெரிக்காவின் கனுவும் இங்கிலாந்தின் அரைவலும்!

வளைவு நெளிவுகள் அதிகம் இல்லாத... Micro Manufacturing முறையில் தயாராகும் கனு எலெக்ட்ரிக் பஸ்கள்...

Published:Updated:
கனு எலெக்ட்ரிக் பஸ்கள்
பிரீமியம் ஸ்டோரி
கனு எலெக்ட்ரிக் பஸ்கள்

கனு என்பது 2017-ல் அமெரிக்காவில் முளைத்த புதிய எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல் நிறுவனம்.பல ஸ்மார்ட்டான வடிவமைப்பாளர்களின் மிக ஸ்மார்ட்டான ஐடியாக்களின் கலவையாக மாதிரி ப்ரோட்டோடைப் ஒன்றை ஊடகங்களுக்கு முன் நிறுத்தியது அது.

ஒரு நேர்த்தியான மாடுலர் ஸ்கேட் போர்டு விரிந்தும் சுருங்கவும் கூடிய அதன் ஃப்ளோரின் அடியில் பாதுகாப்பாக அடுக்கப்பட்ட பேட்டரிகள். நான்கு முனைகளிலும் எலெக்ட்ரிக் மோட்டாருடனும், சொகுசான சஸ்பென்ஷனுடனும் கூடிய வீல்களும், முழுக்கத் தட்டையான பாடி பாகங்களும் என வந்து நின்றது கனு. காராக இருந்தாலும் சரி; டெலிவரி வேனாக இருந்தாலும் அல்லது சிறிய வகை ட்ரக்காக இருந்தாலும் சரி - ஒரே ஸ்கேட் போர்டு கட்டுமானத்தின் மேல் வாகனங்களைக் கட்டமைத்துக் கொள்கிற மாதிரியான ஓர் அற்புதமான யுக்தி அது.

கனு என்பது 2017-ல் BMW-ன் சில முன்னாள் எக்ஸிக்யூட்டிவ்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மிகச் சிறிய ஸ்டார்ட் -அப். இந்த இளைஞர்களின் முயற்சிக்கு சீனாவிலிருந்து முதலீடு வந்து குவிந்தது. அதோடு தைவானின் TPK என்னும் டெக் கம்பெனியும் வந்து இணைந்து கொண்டது. இந்த முயற்சி, ஒரு பிரமாண்ட ஹைடெக் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இயல்பாக வழிவிட்டது. TPK என்னும் இந்த நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துக்கு டச்-ஸ்க்ரீன் தயாரித்து வழங்கும் நிறுவனம்.

ஸ்டீல் இல்லை; அதனால் வெல்டிங்கும் தேவையில்லை.
ஸ்டீல் இல்லை; அதனால் வெல்டிங்கும் தேவையில்லை.


முதலில் ஒரு கமர்ஷியல் வாகன நிறுவனமாகவே கனு துவங்கப்பட்டது. அதாவது, நமது தோஸ்த்தைப்போல ஒரு டெலிவரி வேனைத்தான் முதன்முதலில் காட்சிப்படுத்தினார்கள். ஆனால் பின்னாளில் கனுவுக்குக் கிடைத்த வரவேற்பினால் கார்கள் வரை நீண்டு வந்தது.

கனு போன்ற நிறுவனங்கள் ஒரு பெரும் மரபைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஒரு நீண்ட வரலாற்றை உடைய ஆட்டோமொபைலில் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மரபுகளை உடைக்கும்விதம் பேசுபொருளானது. நீளமான, அதேநேரத்தில் எந்த விளைவுகளும் அற்ற, தட்டையான எக்ஸ்ட்ரூஷன்களைக் கொண்டு மிக மிக எளிமையான உற்பத்தி மூலமாக, மைக்ரோ மேனுஃபேக்ச்சரிங் முறையில், எங்கு வேண்டுமாலும் எளிதில் தயாரிக்க முடிகிற, செலவுகள் குறைக்கப்பட்ட, எளிமையான உற்பத்தி முறையை முன்வைக்கிறது கனு. அந்த முறையில் ஒரு மாதிரி வடிவத்தை டெலிவரி வேனை ஒரு கான்செப்ட்டாக அறிமுகப்படுத்தியபோது, வல்லுநர்கள் வியந்தார்கள். இது தயாரிப்புச் சிக்கல்களை எவ்வளவு எளிமையாக்கி இருக்கிறது என்று ஒருவித குழப்பதோடு உற்றுநோக்கினார்கள். அது ஒப்பற்ற, எதிர்கால வாகன வடிவமைப்புக்கான முன்னெடுப்பு என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும்.

உதாரணமாக, ஒரு டெலிவரி வேனில் அதனுடைய தட்டையான பரப்புகளை ஒரு நீண்ட LCD டிவியைப்போலப் பயன்படுத்த முடியும். ஒரு விளம்பரப் பலகை கிடைத்து விடுகிறது. `தோஸ்த்’ போன்ற ஒரு வாகனம், தன் பக்கவாட்டில் ஒரு வீடியோ விளம்பரத்தை நிகழ்த்திக் காட்டினால்?

ஒரு ஃபுட் வேன் தன் மெனுகார்டை, அதனுடைய பக்கவாட்டில் தட்டையான சுவர்களில் LED ஸ்க்ரீனில் தெரிய வைத்தால்... அதுவும் டச் ஸ்க்ரீனாக இருந்தால், வாடிக்கையாளர்கள் தனக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்யலாமே! இன்றைய டிஜிட்டல் வாடிக்கையாளர்களின் தேவைகளை, தொழில்நுட்ப எலெக்ட்ரானிக் அனுகூலங்களை வைத்து நிறைவேற்றி, ஓர் அற்புதமான கனவுலகத்தில் நிறுத்துகிறது இந்த கனு.

ஹெட்லைட்ஸைப் பொறுத்தவரை, ஒரு பக்கத்தில் ஒரே அளவுடைய லெட் பேனல்கள். மேலும் கீழுமாக இரண்டு. மேலும் பக்கவாட்டில் மூன்றாவதும் உண்டு. LH மற்றும் RH என 6 தனி யூனிட்கள். இதே அமைப்பைச் சிவப்பு நிறமாக்கினால், டெயில் லைட்ஸ் ஆகிவிடுகின்றன. அதாவது, ஒரே டூலில் ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ், LH மற்றும் RH. ஆக மொத்தம், 12 பார்ட்ஸ்கள் ஒரு வாகனத்துக்கு! இதனால் அழகில் எந்தச் சேதாரமும் இல்லை. செய்கூலியும் குறைவே!

கனுவின் லோகோவே, இந்த லைட்ஸ் அமைப்பின் கதையைச் சொல்கிறது. தட்டையான கட்டுமானத்திலேயே இந்த மாடுலாரிட்டி சாத்தியம். வடிவமைப்பை ஜனநாயகப்படுத்துதலின் உச்சகட்டம் இந்த வாகனம். 2022-ல் சாலைக்கு வரும் இதன் மல்ட்டி பர்ப்பஸ் எலெக்ட்ரிக் வேனுக்கு புக்கிங் இப்போதே தொடங்கிவிட்டது . விலை, வெறும் 33,000 டாலர்கள்தான்!

சாதாரண பஸ்களைவிட 50% எடை குறைந்த அரைவல் நிறுவனத்தின் பேருந்துகள்...
சாதாரண பஸ்களைவிட 50% எடை குறைந்த அரைவல் நிறுவனத்தின் பேருந்துகள்...


இது முற்றிலும் தானியங்கி. ஒப்புக்கு ஒருவர் டிரைவர் என்ற பேரில் உட்கார்ந்திருப்பார். அதுவும் கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டும்தான்.

இதுவே கார் என்றால், இன்டீரியர் ஒரு வீட்டின் வரவேற்பறையைப்போல இருக்கும்.சாலையைப் பார்த்து அமர்ந்திருக்கும் கட்டாயம் இல்லை. கனுவில் இருந்து இப்போது ஒரு கார் முளைத்து வருகிறது.

ஒரு பத்திரிகையைச் சந்தா செலுத்தி வாங்குவதைப்போல நீங்கள், தேவைப்படும்போது இந்த காரை `சப்ஸ்க்ரைப்’ செய்யலாமே தவிர, ஓனர் என்கிற பெயரில் சொந்தம் கொண்டாட முடியாது. தேவைப்பட்டால் பயன்படுத்திவிட்டு, வெகுநாட்களுக்கு வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதை கனு விரும்பவில்லை.

இது ஒரு இன்டெலிஜென்ட் மொபிலிட்டி என்பதில் சந்தேகமே இல்லை. இது உலகின் கார் வடிவமைப்பின் போக்கை மாற்றி யமைத்துவிடும் என்பது என் யூகம். இஸ்ரேலின் ஸ்கேட்போர்டில் ஏறி, அமெரிக்காவின் எலெக்ட்ரிக் மல்ட்டி பர்ப்பஸ் வேனைப் பின்தொடர்ந்த நாம், இப்போது இங்கிலாந்தின் `அரைவல்’ எனும் புதிய பஸ் மற்றும் வேன் நிறுவனத்தை அடைந்திருக்கிறோம்.

அரைவல் என்பது, பஸ் டிசைன் உலகில் ஒரு மைல்கல். இதுவரை இருந்த பஸ் மேக்கிங் உத்திகளைப் பெரும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது இந்த மிகச் சிறிய ஸ்டார்ட் அப்.

IOT (Internet of Things) உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பஸ்களின் டிசைன்...
IOT (Internet of Things) உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பஸ்களின் டிசைன்...


டிசைனில் ஓர் எளிமையான சிந்தனையைச் செயல்படுத்த முடியுமா? முடியும் என்கிறது arrival. அரைவலில் குறிப்பிட்டுச் சொல்ல ஏராளம் இருக்கின்றன. ப்ரொடக்க்ஷனைப் பொறுத்தவரை ஸ்டீல் என்ற பஸ் கட்டுமானத்தின் மிக முக்கிய அம்சத்தைத் தவிர்த்துவிட்டார்கள். இதனால் வெல்டிங் எனும் சிக்கலான பழைய இணைப்பு முறை தவிர்க்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அலுமினியம் மற்றும் ஒரு ரகசிய காம்போசிட் மெட்டீரியல் ஒன்றை, அரைவல் காப்பீடு பெற்று வைத்திருக்கிறது. அப்படியானால், உலோகமான அலுமினியத்தையும், காம்போசிட்டையும் எப்படி இணைப்பது? இருக்கவே இருக்கிறது பசை.

ஆம், மிகுந்த ஒட்டும் தன்மை உடைய பெரும் பசை கொண்டு இணைக்க இப்போது வழி இருக்கிறது. இதனை `Additives Manufacturing' என்று அழைக்கிறார்கள். இதனால் வாகனங்களின் எடை 50% குறையும். ஆட்டோமொபைலைப் பொறுத்தவரை கத்திரிக்காயைப் போன்றுதான். எடையே விலையைத் தீர்மானிக்கும். இந்த உற்பத்தி உத்தியின் விளைவாக `மைக்ரோ தொழிற்சாலைகள்’ உருவாக வாய்ப்புகள் உண்டு.

இங்கு நல்ல அனுபவமே வடிவமைப்பின் குறிக்கோளாக இருக்கிறது. மிக எளிமையான சீட்கள். எளிதில் சுத்தப்படுத்தும் விதமாக முழுக்க ஃப்ளாட் ஃப்ளோர். கூரையில் வெளிச்சம் பரப்பும் கண்ணாடி பேனல்கள். உங்கள் ஸ்மார்ட் போனோடு வைஃபை மூலம் இணைத்துக் கொண்டால், பேருந்து பற்றிய அனைத்துத் தகவல்களும் உங்கள் கையில். போகும் வழித்தடங்கள். வழியில் நடக்கும் நிகழ்வுகள் என `IOT’ என்னும் `இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ உதவியுடன் உங்கள் பயண அனுபவத்தை மேலும் பயனுள்ளதாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றிவிடும் ஆற்றல் இந்த வடிவமைப்புக்கு உண்டு.

IOT (Internet of Things)
IOT (Internet of Things)


இந்த இரு ஸ்டார்ட்-அப்களைத் தொடர்ந்து, புற்றீசல்போல உலகெங்கிலும் புதிய எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல் கம்பெனிகள் முளைத்து எழுகின்றன. சுவாரஸ்யம் என்னவென்றால், மிகப்பெரும் நிறுவனங்கள் அவசரம் அவசரமாக பணமுதலீடு செய்வதிலும் போட்டி போடுகின்றன. அமேஸான், ஃபோர்டு, ஆப்பிள், ஹூண்டாய் போன்ற பெரு நிறுவனங்கள் தங்கள் எதிர்காலத் தொழில் முன்னெடுப்புகளுக்கு உகந்த ஸ்ட்ரேட்டஜிகளைத் தீர்மானிப்பதற்கு இப்படிப்பட்ட சிறு துடிப்பான புதிய பயமற்ற இளங்கன்றுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

புதிய மாற்றங்களுக்கான சரியான வழியை பழைய கண்கள் கொண்டு சென்றடைய முடியாது. மாறாக, பழைய மரபுகளை உடைத்து, தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்று அவை மறுபடியும் நிகழாமல் தடுத்து, தேவைகளை முன்னிறுத்தும் புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. குறைகளற்ற புதிய உலகைப் படைப்பதற்கு வடிவமைப்புதான் நம் கையில் இருக்கும் ஆயுதம். ஆட்டோமொபைல்தான் இதன் அடித்தளம்.

இந்தப் புரட்சியில் இந்திய இளைஞர்களும் ஈடுபடாமல் இல்லை. ஆனால், அவர்கள் வடிவமைப்பைப் பற்றிய புரிதலின்றி தொழில்நுட்பப் பார்வையோடு உலகைப் பார்ப்பதற்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். சிக்கலானவற்றை டீல் செய்வதுதான் கெத்து என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, எளிமைப்படுத்த வேண்டியவற்றை மேலும் சிக்கலாக்கி வைத்திருக்கிறார்கள்.

வடிவமைப்பே பெரும் வர்த்தகத்துக்கான காரணி என்பது தெரியாமலேயே ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இனி வருவது டிசைன் காலம். டிசைனும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புதிய அத்தியாயத்தைத் துவங்குகிறது.

வடிவமைப்பு எனும் பஸ்ஸை வடிவமைக்க, ஒரு கடைசி வாய்ப்பு வருவதாகவே படுகிறது. கனிந்து வரும் இந்த மாற்றத்தைச் சரியாக நாம்தான் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

(வடிவமைப்போம்)அமெரிக்காவின் கனுவும் இங்கிலாந்தின் அரைவலும்!IOT (Internet of Things) உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பஸ்களின் டிசைன்...ஸ்டீல் இல்லை; அதனால் வெல்டிங்கும் தேவையில்லை.சாதாரண பஸ்களைவிட 50% எடை குறைந்த அரைவல் நிறுவனத்தின் பேருந்துகள்...

Micro Manufacturing
Micro Manufacturing