சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“கார் டிசைனுக்கு இட்லித் தட்டு கூட இன்ஸ்பிரேஷன்!”

சத்தியசீலன்
பிரீமியம் ஸ்டோரி
News
சத்தியசீலன்

ஒரு காரை டிசைன் செய்வதற்கு… நமக்குப் பெரிய பட்டறிவோ… பொது அறிவோ வேண்டும் என்றில்லை.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

அது சென்னை டான் போஸ்கோ பள்ளியின் மற்றொரு கிளையான வரதராஜன்பேட்டைப் பள்ளி. 6-ம் வகுப்புப் பாடசாலை. வரலாற்றுப் பாடம் நடந்துகொண்டிருந்தது. நமது தொன்மை வாய்ந்த சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார் ஆசிரியர். ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்கவில்லை. குனிந்து நோட்டில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான். டீச்சருக்குச் சரியான கோபம். ``தொண்டைத் தண்ணி வத்த பாடம் எடுத்துக்கிட்டிருக்கேன். நோட்ல என்னடா கிறுக்கிக்கிட்டிருக்க..?’’ என்று பிரம்பைக் கையில் எடுத்து, நடத்திய பாடம் சம்பந்தமாகக் கேள்விகளாகக் கேட்டுத் துளைத்தெடுத்தார். ஆனால், பிரம்படிகளுக்கு அங்கே வேலையில்லாமல் செய்தான் அந்தச் சிறுவன். `காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி, பாடத்தின் ஒவ்வொன்றையும் போர்டில் எழுதிக் காட்டி அந்தச் சிறுவன் அத்தனைக்கும் பதில் சொன்னபோது, மொத்த வகுப்பும் வியப்பில் ஆழ்ந்தது. காரணம், அவன் சொன்ன பதில்கள் அனைத்தும் எழுத்துகளால் இல்லை; ஓவியத்தால்!

வியந்துபோன டீச்சர், அவன் நோட்டை வாங்கிப் பார்த்தபோது, சிந்து சமவெளி நாகரிகமே உயிர் பெற்றதுபோல் இருந்தது. ஆம், அவர் நடத்திய மொத்தப் பாடமும், குழந்தைகளுக்கே உண்டான ஓவிய வடிவில் இருந்ததைக் கண்டபோது, தான் வரைந்த ஒவ்வொரு புள்ளிக்கும், ஒவ்வொரு கோட்டுக்கும் ஒரு குறியீடு இருந்ததைச் சுட்டிக்காட்டினான் அந்தச் சிறுவன். ``எனக்கு எழுத்தால் குறிப்பெடுக்கிறது பிடிக்காது. டிராயிங்கிலேயே குறிப்பு எடுத்துப்பேன். ஒரு டிராயிங்கைப் பார்த்தே அதோட மொத்த ஹிஸ்டரியையும் சொல்லிடுவேன்’’ என்று சொன்ன அந்தச் சிறுவனின் பெயர் சத்தியசீலன்.

“கார் டிசைனுக்கு இட்லித் தட்டு கூட இன்ஸ்பிரேஷன்!”

‘‘நீ பெரிய டிசைனரா வருவடா!’’ என்று டீச்சர் சொன்னது, இன்று நிஜமாகவே நடந்திருக்கிறது. இப்போது சாலைகளில் நீங்கள் பார்க்கும் அசோக் லேலாண்ட் பேருந்துகள், ட்ரக்குகள், லாரிகள், கமர்ஷியல் வாகனங்கள், டாடா கார்கள், ஹூண்டாய் கார்கள், டி.வி.எஸ் ஆட்டோக்கள் என ஏராளமான வாகனங்களைத் தனது டிராயிங் நோட்டில் வரைந்து, சாலைகளில் உயிர் கொடுத்து ஓட வைத்திருப்பவர் சத்தியசீலன். இவர், இப்போது அசோக் லேலாண்டின் தலைமை வடிவமைப்பாளர்.

‘‘டிசைனரா வருவடான்னு சொன்னாங்க என் டீச்சர். ஆனா, எந்த டிசைனர்னு சொல்லலை! அவங்களுக்கு என்றில்லை; இன்று யாருக்குமே கார்/பைக்குகளுக்கு என்று டிசைனிங் தொழில்/வகுப்பு இருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை!’’ என்று தனது வெண்தாடியைத் தடவிச் சிரிக்கிறார் சத்தியசீலன்.

ஓவியம், கார், அதற்கான டிசைன் படிப்பு, வாகனத் துறையின் R&D, ஆட்டோமொபைல் தொழில் என விடிய விடியப் பேசிக்கொண்டே இருக்கிறார்.

‘‘ஓவியத்தின் மேல் அப்படி ஓர் ஆர்வமா?’’

``நீங்கள் இதுதான் யானை என்று ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைவிட, யானையை அந்தக் குழந்தையை விட்டே வரையச் சொல்லிக் கொடுத்துப் பழகுங்களேன்! அந்த யானையின் அளவுக்கு ஏற்ப துதிக்கையின் நீளம் இவ்வளவுதான் இருக்கும்; கால் பாதங்கள் இப்படித்தான் இருக்கும் என்று உங்களைவிட டேட்டா அனலைஸில் குழந்தைகள் கலக்குவார்கள்!’’ என்கிறார் சத்தியசீலன்.

அவர் சொல்வது நிஜம்தான்; ஓர் ஓவியத்தை நாமே வரைவதன் மூலம் அதன் டெக்னாலஜி, ஹிஸ்டரி, ஜியோகிராபி வரை எல்லாமே அலசி ஆராயலாம் என்பதுதான் உண்மை.

குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி மற்றும் கார் டிசைனிங் சொல்லிக் கொடுப்பதற்காகவே ‘ஆயா அகாடமி’ எனும் பெயரில் ஒரு பயிற்சி மையத்தையும் நிறுவியிருக்கிறார். இந்த அகாடமி மூலம், மோட்டார் விகடனுடன் இணைந்து, ‘கார் டிசைன் ஒர்க்‌ஷாப்’ எனும் பயிலரங்கத்தையும் நடத்திவருகிறார் சத்தியசீலன். இதில் மாணவர்களுக்குச் சிறப்பு முன்னுரிமை உண்டு.

``முதலில் ஒரு பேப்பர்/பென்சிலில் ஆரம்பிக்கும் இந்த ஒர்க்‌ஷாப், கடைசியாக ஒரு மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அந்த மாணவனை கார் டிசைனராகப் பணிபுரியும் எல்லைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கோவில்பட்டியைச் சேர்ந்த ஷரோன் ராமலிங்கம் எனும் மாணவர், இதற்கு ஆகப்பெரிய உதாரணம். கடவுள் படங்களை வரைவதில் செம ஆர்வமாக இருந்த ஷரோன் ராமலிங்கம், இப்போது ஒரு மிகப்பெரிய கார் டிசைனர். சீனாவில் உள்ள எம்ஜி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் இன்டர்ன்ஷிப் செய்த ஒரே தமிழன். கூடவே, ஆடி TT எனும் ஸ்போர்ட்ஸ் கார் டிசைனரின் உதவியாளராகவும் இருந்திருக்கிறார் என்பது ஸ்பெஷல்'' என்கிறார்.

சத்தியசீலன்
சத்தியசீலன்

‘‘கார் டிசைனர் ஆவதற்கு என்ன தேவை?’’

‘‘ஒரு காரை டிசைன் செய்வதற்கு… நமக்குப் பெரிய பட்டறிவோ… பொது அறிவோ வேண்டும் என்றில்லை. நமக்குப் பிடித்த விலங்கினங்களில் இருந்துகூட, அதற்கான இன்ஸ்பிரேஷனை எடுத்துக்கொள்ளலாம்!

கியா காரின் கிரில்-ஐ கவனியுங்கள்; புலியின் மூக்கு போலவே இருக்கும். அப்பாச்சி பைக்கை டாப் ஆங்கிளில் பார்த்தால், சுறா மீனைப் போல இருக்கும். டாடா நெக்ஸான் காரின் பம்பர் ஒரு மனிதன் சிரிப்பதுபோல இருக்கும். ஹூண்டாய் காரின் முன் பக்கம் தேன்கூட்டில் இருந்து எடுக்கப்பட்ட டிசைன். ஃபோர்டு கார்களின் டேஷ்போர்டு, ஓர் அருவியைப் போன்றே இருக்கும். ஹூண்டாய் கார்களின் டே டைம் ரன்னிங் லைட்ஸ், ‘பூமராங்’ ஆயுதம் போன்று இருக்கும். இப்படி கார் டிசைன் என்பது உயிரோட்டமான உணர்வுகளோடு பேசும் கலை. உயிரற்ற இயந்திரப் பொறியியல் அல்ல!’’

‘‘கார்களுக்கான இன்ஸ்பிரேஷனை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?’’

``ஒரு தடவை டி.வி-யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். விராட் கோலி 100 அடித்து ஹெல்மெட்டையும் பேட்டையும் தூக்கி உற்சாக போஸ் கொடுத்தார். அதைப் பார்த்துதான் நான் அசோக் லேலாண்டின் லேட்டஸ்ட் ட்ரக் ஒன்றின் ஹெட்லைட் டிசைன் செய்தேன்! அட இவ்வளவு ஏன்… நான் ஒரு காரின் இன்டீரியரை டிசைன் செய்ய, இட்லித்தட்டை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன் என்றால் நம்புவீர்களா!

டிசைன் இன்ஸ்பிரேஷன் தாண்டி, ஓவியப் பயிற்சியும் நான் நடத்தும் ஒர்க்‌ஷாப்பில் சொல்லித் தருகிறேன். ஒரு புள்ளி; ஒரு கோடு - இந்த இரண்டை வைத்தே பென் டிரைவ் முதல் பென்டகன் பில்டிங் வரை வரையலாம் என்பதைச் சொல்லித் தருகிறேன்!’’ என்று சொல்லும் சத்தியசீலனுக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

கருணாநிதி, காகிதத்தில் கட்டுரை/கவிதைகள் எழுதும்போது, அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவார். தவறாக எழுதினாலும், அதை அடிக்காமல் அதிலிருந்தே ஒரு வாக்கியத்தை உருவாக்குவாராம். அப்படித்தான் சத்தியசீலன்! இவர் வரையும் ஓவியங்கள் அழிரப்பர் பயன்படுத்தாமல் வரையப்படுபவை. அதேபோல், ஓவியங்களுக்கு உபகரணங்களும் பயன்படுத்துவதில்லை என்பது இவரது ஸ்பெஷல். ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால்… அதிலிருந்தே ஓர் அற்புதமான ஓவியம் உருவாகும். ஒரு வட்டம் வரைய வேண்டுமென்றால்கூட, காம்பஸ் போன்ற உபகரணங்கள் இல்லாமல், வெறும் கையாலேயே வரைகிறார். இதைத்தான் ஓவியம் பயில வரும் மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறார். அப்படி இவர் அடித்தல் திருத்தல் இல்லாமல் வரைந்து உருவாக்கிய பல கார்கள்தான் இப்போது சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

“கார் டிசைனுக்கு இட்லித் தட்டு கூட இன்ஸ்பிரேஷன்!”

‘‘இப்போதுள்ள சூழ்நிலையில், கார் டிசைன் என்றாலே இந்தியர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நினைக்கின்றனவே?’’

‘‘ஆம்! நம் இந்திய மாணவர்களிடம் டிசைன் துறையைப் பற்றிய ஆர்வம் உள்ள அளவுக்கு வழிகாட்டுதல் இல்லை என்பதுதான் அர்த்தம். ‘நமக்கான காரை நாமே உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்! நான் உருவாக்கிய கார்களின் டிசைன் அனைத்துமே நமக்கு ஏற்றவையாக, நம் கலாசாரத்தைச் சொல்பவையாக இருக்கும்! விமான நிலையங்களில் போர்டிங் செய்யும்போது, உங்களை ஒரு பேருந்தில் அழைத்துச் செல்வார்கள். அந்தப் பேருந்தில் வயதானவர்கள் ஏறி இறங்க ஏதுவாக அதன் ஃபுட்போர்டு தாழ்வாக டிசைன் செய்யப்பட்டிருக்கும். டிரைவருக்கு நல்ல விசிபிலிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரது டிரைவிங் பொசிஷன் இருக்கும். அந்தப் பேருந்துகள் நான் உருவாக்கியவைதான். இப்படி நமக்கு ஏற்றதை நாம்தான் உருவாக்க வேண்டும்.

விவசாயத்துக்குக்கூட கல்லூரியில் கோர்ஸ் இருப்பது தெரியும். அதேபோல, கார் டிசைனுக்கென்று B.Des, (Bachelor of Design), JEE, UCEED (UnderGraduate Common Entrance Examination for Design) என்று ஏகப்பட்ட கோர்ஸ்கள் இருக்கின்றன.''

‘‘எந்தெந்தத் துறைகளுக்கு டிசைன் பொருந்தும்? எல்லாத் துறைகளுக்கும் டிசைன் அவசியமா?’’

‘‘காற்றைத் தவிர எல்லாவற்றுக்குமே உருவம் உண்டு. உருவத்தை உருவாக்குகிறவன் படைப்பாளி என்றால், டிசைனர்களும் அப்படியே! ஓர் உளுந்துவடைக்கு நடுவே ஓட்டை இருக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடித்தவரைக்கூட படைப்பாளி என்று சொல்லலாம். இதற்கு அடிப்படை, க்ரியேட்டிவிட்டி. இந்த க்ரியேட்டிவிட்டி எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

செல்போன், லேப்டாப், கண்ணாடி, வாட்ச், பர்ஸ், செருப்பு என்று பல பொருள்களை உருகி உருகிப் பயன்படுத்துகிறோம். ஆனால், இவை எங்கே, யாரால் டிசைன் செய்யப்படுகின்றன, இதன் க்ரியேட்டிவிட்டி என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இனோவா காரின் அடிப்படை ஸ்கெட்ச்சைப் பார்த்தால், ‘இதுவா இப்படி உருமாறியிருக்கு’ என்ற வியப்பு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு பேரனுபவம்தான் இந்த கார் டிசைனிங்!’’

“கார் டிசைனுக்கு இட்லித் தட்டு கூட இன்ஸ்பிரேஷன்!”

‘‘R&D என்றால் என்ன? அது எதற்காக? இப்போதுள்ள வாகனத் துறையின் R&D (Research and Development) பற்றிச் சொல்லுங்கள்!’’

‘‘எந்த ஒரு பொருளுக்குமே R&D துறை என்பது மிகவும் அவசியம். அதிலும் ஆட்டோமொபைலுக்கு இதுதான் முதுகெலும்பே! ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி. இதுதான் R&D. என்னைக் கேட்டால், இதில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்றுதான் சொல்வேன்.

2014–ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஓர் ஆராய்ச்சியைப் பற்றிச் சொல்கிறேன். இது என்னவென்றால்… ஒரு எல்.இ.டி பற்றியது. Blue LED (Blue Light Emitting Diodes). LED லைட் பற்றி உங்களுக்கு இப்போது பரவலாகத் தெரிந்திருக்கும். 3 ஜப்பானியர்கள்தான் இதன் ஆராய்ச்சியாளர்கள். ஏற்கெனவே வெள்ளை நிற எல்.இ.டி பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இதில் தூரம் குறைவாகவே வெளிச்சம் பாய்ச்சும். இதற்காக, பல மீட்டர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சக்கூடிய புளூ எல்.இ.டி கண்டுபிடித்தார்கள். அடுத்த ஆண்டில் வால்வோவில் இந்த புளு எல்.இ.டி-யைக் கொண்டு வந்துவிட்டார்கள். இப்போது வால்வோவின் எல்லா கார்களிலும் Blue LED லைட்கள்தான் இடம் பெற ஆரம்பித்திருக்கின்றன. அவர்கள் நாட்டுக்கான தேவையைக் கண்டறிந்து, செயல்பட ஆரம்பித்து… வளர்ச்சியும் அடைந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்திய நாட்டுக்கான தேவை என்ன… நமக்கான வளர்ச்சி என்ன என்பதை நாம் இன்னும் கண்டுகொள்ளாமலே இருக்கிறோம். இதற்கான ஆராய்ச்சிகள் நடக்காமலே இருக்கின்றன. அல்லது, இருக்கிற தொழில்நுட்பத்தை Validate செய்தாவது R&D நடக்கலாம். அதுவும் ஹிட் அடிக்கும். உடனே டிரைவர்லெஸ் கார்கள் வருகிறேதே என்று சொல்லாதீர்கள். அதை நாம் காப்பி அடிக்கிறோம். நமக்கான தேவையாக அதை மாற்றவில்லை.

ஓர் உதாரணம் சொல்கிறேன். நான் ஏற்கெனவே சொன்னதுதான். மேலை நாடுகளில், உணவில் கை படாமல் சாப்பிட வேண்டும் என்கிற ஆராய்ச்சி நடந்தபோது, ஃபோர்க் என்கிற ஒரு ஸ்பூனைக் கண்டுபிடித்தார்கள். சீனா போன்ற நாடுகளில் சாப்ஸ்டிக்… இவை இரண்டையும் வைத்து நூடுல்ஸ் போன்ற மேலை நாட்டு உணவுகளை வேண்டுமானால் சாப்பிடலாம். ஆனால் நம் முன் இருப்பது பழைய தயிர் சாதமும், தந்தூரி ரொட்டியும், இட்லி தோசையும்தானே! நான் மெக்கானிக்காக இருக்கிறேன்; கை க்ரீஸாக இருக்கிறது; தொழிற்சாலையில் இருக்கிறேன்; கை அழுக்காக இருக்கிறது. நமக்கும் உணவில் கை படாமல் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நமது இட்லி தோசையைக் கை படாமல் சாப்பிட நாம்தானே ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதைத்தான் R&D என்கிறோம்.

“கார் டிசைனுக்கு இட்லித் தட்டு கூட இன்ஸ்பிரேஷன்!”

அட, ஆட்டோமொபைலுக்கு வருகிறேன். நம் நாட்டில் ஸ்கூட்டர்கள் பயன்பாடு சுமார் 70 ஆண்டுகளாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஸ்கூட்டர்களின் பில்லியன் சீட்டில், பெண்கள் அமர்ந்து வருவதைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் வண்டி போகும் திசையில் அமர்வதில்லை. வாகனம் போகும் திசையின் இடதுபுறம்… சேலையோ சுடிதாரோ அணிந்த பெண்கள் அமர்ந்து பயணிக்கும் நிலை இன்னும் இருக்கிறது. ஸ்கூட்டர் பிரேக் அடிக்கும்போது, பல பெண்கள் பிடிமானம் இல்லாமல், கீழே விழுந்து விபத்தாகி இறந்த சம்பவங்களும் உண்டு.

என் அம்மா இருக்கிறார். அவரை ஜீன்ஸ் பேன்ட்/ஷர்ட் அணியவைத்து, பைக்கின் பின்னால் அமர வைத்துப் பயணிக்க வைக்க முடியாதுதானே! மேலை நாடுகளில் வடிவமைத்த ஸ்கூட்டர் டிசைனர்களுக்கு, சுடிதாரோ சேலையோ பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இடத்தில் என் அம்மாவுக்கு ஜீன்ஸ் பேன்ட் வாங்கிக் கொடுப்பதா… அல்லது வாகனங்களின் இருக்கைகளை என் அம்மாவுக்கு ஏற்றபடி வடிவமைப்பதா எனும் கேள்வி வருகிறதுதானே! இங்கே R&D–யின் முக்கியத்துவம் அவசியமாகிறது.''

‘‘நம் நாட்டில் இதை எப்படி உறுதியாக்குவது… அதில் தமிழர்கள் நுழைய என்ன செய்ய வேண்டும்?’’

‘‘நம் நாட்டில் இதை உறுதியாக்க, நம்மிடம் இரண்டு விஷயங்கள் பாக்கி இருக்கின்றன. டிசைன் என்பதைப் பேசுபொருளாக்க வேண்டும். ஒரு டீக்கடையில் நின்று ‘விக்ரம் படத்தில் கமல் நல்லா நடிச்சிருக்காருல்ல... இருந்தாலும், இந்துக்கள் பத்தி ஆ.ராசா இப்படிப் பேசியிருக்கக் கூடாது’ என்று சினிமா, அரசியல் பற்றிப் பேசுகிறோம் அல்லவா! அதுபோல் டிசைனையும் பேசுபொருளாக்க வேண்டும். அட, ராக்கெட் அறிவியலெல்லாம் பேசுபொருளாகி இருக்கிறது என்றால் நம்புவீர்களா! அதேபோல், டிசைன் பற்றிப் பேசுங்கள்.

இரண்டாவது – Inventive Culture. அதாவது, கண்டுபிடிப்புக் கலாசாரம். இதை நாம் உருவாக்க வேண்டும். இதுவும் நான் ஏற்கெனவே சொன்னதுதான். நமக்கான பொருள்களை நாமே உருவாக்குவோம் என்பதுதான் படைப்புக் கலாசாரம். சின்னச் சின்ன விஷயங்களை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, எனக்கு ஒரு பேனா ஸ்டாண்ட் வேண்டுமென்றால்… கீழே தூக்கிப் போடும் பொருள்களை வைத்து ஒரு பேனா ஸ்டாண்ட் நாமே உருவாக்க ஐடியா செய்ய வேண்டும் என்பதுதான் இது.

சீனாவில் மட்டும் டிசைனுக்கு என்று பல கல்லூரிகள் உண்டு. டிசைன் மொழி இல்லை என்றால், கொரியா எனும் நாடே இல்லை. தமிழ்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு அளவே உள்ள கொரியாவில்… 14 டிசைன் கல்லூரிகள் இருக்கின்றன. சீனாவில் டிசைனுக்கு என்று மாவட்டமே உண்டு. ஆனால், இந்தியாவில் டிசைனுக்கு என்று முழுமையாகக் கல்லூரிகளே இல்லை. இந்த நிலை மாற வேண்டும். எல்லோரும் டிசைனில் படைப்பாற்றலை உருவாக்க வேண்டும். இதை என் ஒருவனால் மட்டும் சாதிக்க முடியாது; நீங்களும் கைகோக்க வேண்டும். செய்வீர்களா!’’