கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
தொழில்நுட்பம்
Published:Updated:

சீனா, காப்பிகேட் நாடா?

கார்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 37

சீன கார் தயாரிப்பு என்றவுடன் நக்கலாக முகம் சுழித்தீர்கள் என்று சொன்னால், நீங்கள் 10 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறீர்கள் என்று பொருள். உண்மை இதுதான்... அமெரிக்கா போன்ற ஜாம்பவான்களைப் பல கிலோமீட்டர்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இன்று உலகிலேயே கார் உற்பத்தியில் நம்பர் ஒன் ஆக இருக்கிறது சீனா .

பல காலமாகவே சீனாவை இந்த உலகம் குறைத்துத்தான் மதிப்பிட்டு வந்திருக்கிறது. ஆனால், உண்மையில் 2019-ல் மட்டும் சீனா தயாரித்து விற்ற கார்களின் எண்ணிக்கை 2 கோடியே 70 லட்சம். 2-வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா, கிட்டத்தட்ட 1,14,00,000 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருக்கிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள இந்த வித்தியாசத்தைப் பார்த்தால் இது புரியும்.

சீனா, காப்பிகேட் நாடா?

தொடர்ந்து பல வருடங்கள் முதலிடம் வகித்த அமெரிக்கா, சராசரியாக ஒரு கோடிக்கும் சற்று அதிக எண்ணிக்கையைத் தாண்டவே இல்லை. ஜப்பானும் சாதனையாளர்தான். 1997 வரை உலக கார் தயாரிப்பில் டாப் 10 வரிசையில்கூட இடம் பிடிக்காத சீனா, மிக மிகக் குறுகிய காலத்தில் முதல் இடத்தை அடைந்தது எப்படி?

கார் தயாரிப்பில் 1998-ல் 10-ம் இடத்தில் இருந்தது சீனா. அந்த ஆண்டில் சீனாவின் மொத்த கார் உற்பத்தி 16 லட்சம் கார்கள் மட்டுமே! இரண்டே ஆண்டுகளில் அதாவது 2000-த்தில் 8-வது இடம் பிடித்தது. இந்த முறை ஆண்டுக்கு 21 லட்சம் கார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 40 லட்சம் கார்களோடு 4-வது இடத்துக்கு நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது சீனா. இப்போது நம்பர் ஒன். இந்த ஆட்டோமொபைல் அசுர வளர்ச்சி ஆட்டோமேட்டிக்காக, தற்செயலாக, அதிர்ஷ்டவசமாக நடந்திருக்க வாய்ப்பில்லை. இது எப்படிச் சாத்தியப்பட்டது?

ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் சீனா மீதான தங்கள் கருத்துகளை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டார்கள். உலகப் பொறியியல் வல்லுநர்கள், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதற்கு, சீனாவை நோக்கி விரைந்தார்கள். சீனா நிகழ்த்திக் காட்டிய மாற்றங்கள் பெரிய பாடங்களாகவும் படிப்பினைகளாகவும் பார்க்கப்பட்டது.

காப்பியடிப்பது என்பதை மேற்கத்தியக் கண்கொண்டு பார்த்தால், அது ஒரு குற்றம். உண்மையில் காப்பி அடிப்பது என்பது என்ன?

ரோல்ஸ்ராய்ஸ் போல் இருக்கும் சீனாவின் Geely GF லிமோசின் கார்...
ரோல்ஸ்ராய்ஸ் போல் இருக்கும் சீனாவின் Geely GF லிமோசின் கார்...

IC இன்ஜினை அப்பட்டமான காப்பியாகப் பயன்படுத்துவது, V8 போன்ற இன்ஜின் தொழில்நுட்பங்களை அப்படியே அச்சு அசலாக நகல் எடுப்பதை `காப்பி’ என்று இந்த உலகம் இதுவரை ஏன் சொன்னதில்லை? டர்போ சார்ஜர், ஏபிஎஸ், இன்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் - இப்படி எண்ணற்ற தொழில்நுட்பங்கள் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதை எல்லா நாடுகளும் நுட்பமாக நகல் எடுக்கும்போது, யாரும் அதைச் சுட்டிக்காட்டி இது `காப்பி’ என்று சொன்னதில்லை. அப்படியானால், ஒரு காரின் வடிவமைப்பை ஒட்டிய இன்னொரு காரைப் பார்த்தவுடன் மட்டும் ஏன் இந்த உலகம் சூடாகி, `அதோ பார், காப்பி அடித்த நகல் வந்து கொண்டிருக்கிறது’ என்று கதறுகிறது? அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வடிவமைப்பு சார்ந்த உருவ மாதிரிகளுக்கு IPR (Intellectual property rights) என்ற காப்பீடு உண்டு. ஆனால் ஆசியாவில், குறிப்பாக சீனாவில் - கலாசாரப் பின்புலம் கொண்டு இந்த காப்பி என்பதை அணுக வேண்டும்.

பென்ஸ் போல் இருக்கும் JAC
பென்ஸ் போல் இருக்கும் JAC

சீனாவில் பௌத்த தத்துவங்களைக் கடத்தும் கலாசாரப் பின்னணியில் - அதன் தொடர்ச்சியாக வந்த குங்ஃபூ மரபில், குரு-சிஷ்ய மரபு உண்டு. ஒரு குரு, தன் மொத்த கலை - யுத்த வழக்க முறைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கற்பிக்க விழைகிறார் என்றால், அந்தக் குருவின் சீடர்கள் அனைவரும் அவரை அச்சுப்பிசகாமல் அப்படியே பின்பற்ற வேண்டும். ஜாக்கிசானின் பழைய படங்களைப் பார்ப்பவர்களுக்கு இது தெளிவாகப் புரியலாம். அவர் கை வீசும் ஸ்டைலை வைத்தே சொல்லிவிடலாம், அவர் பௌத்த மடத்தின் மாணவர் என்று. பல ஆண்டுகள் கடினப் பயிற்சிக்குப் பிறகே, ஒரு மாணவன் தனித்துவமான ஸ்டைலைத் தனக்கென உருவாக்குவான். ஒருவர், ஒரு குருவின் போதனைகளை அப்படியே பின்பற்றுவது கடமையும் பெருமையும்தானே தவிர, எப்படிக் குற்றமாகும்? நமது இந்தியக் கலை வடிவங்களில்கூட, அப்படி ஒரு பின்பற்றுதல் - தார்மீகச் சீடனின் கடமையாகக் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் பாணியைப் பின்பற்றுதல் என்பது, கற்றுக்கொள்வதன் ஒரு பகுதிதான். பயிற்சி பெற்றுக் கொள்வதாகவும் இதை அணுகலாம். சீனாவில் பிரதி எடுப்பது பெருமைக்குரிய விஷயமேயன்றி, குற்றமில்லை என்று ஹார்பரி சொல்கிறார்.

பீட்டர் ஹார்பரி, கடந்த 10 ஆண்டுகளாக சீனாவின் `கீலி’(Geely) எனும் பெரு நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவர். 70 வயது நிரம்பிய அனுபவசாலி. லண்டன் RCA-வில் டிசைன் பயின்ற மாணவர். அவர் எழுப்பும் கேள்விகளில் நேர்மை இருக்கிறது. `சீனா மட்டும்தான் டிசைன்களைக் கடன் வாங்கி காப்பி அடிக்கிறதா? தொடக்க காலத்தில் ஜப்பான்கூட டிசைன்களைக் கடன் வாங்கிக் கழித்த கதைகள் கேட்டதில்லையா?’ எனப் பல கேள்விகளை முன்வைக்கிறார்.

இப்போது சீனாவில் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பொறியியல் தொழில்நுட்பத்தில், உற்பத்தித் தரத்தில் உலகத்தரத்தை அந்நாடு எட்டிவிட்டது என்பது விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். குறிப்பாக, டூலிங்/டை எனப்படும் கார் பாகங்களுக்கான மூல அச்சு வடிவமைக்கும் துல்லிய பொறியியல் நுட்பத்தை வெகு விரைவில் கற்றுக்கொண்டது சீனா. இந்தியா போன்ற நாடுகள் தடுமாறும் இடம் அதுதான். tooling துறையில் இந்தியா இன்னும் கத்துக்குட்டிதான். அதிலும், குறிப்பாக ஷீட் மெட்டல் டூலிங் மற்றும் ஹெட்லாம்ப் பாகங்களின் டூல்களை வடிவமைக்க இந்தியா முயன்றுகூடப் பார்க்காத நிலையில், இதுபோன்ற பல நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிச் செல்கிறது சீனா. அதோடு கூடுதலாக இப்போது டிசைன் தரமும், நேர்த்தியும் முன்னிலும் பல மடங்கு முன்னேறியுள்ளதைத் தெளிவாகக் காணலாம். டிசைன் குவாலிட்டியில் சீனா எந்த அளவுக்குப் பன்மடங்கு முன்னேறியிருக்கிறது என்பதற்கு ஒரு சம்பவம்.

சமீபத்தில் `DEZEEN’ அவார்டுகளுக்காக, சீனாவிலிருந்து 62 ப்ராஜெக்ட்கள் பரிந்துரைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல; சீனாவிலிருந்து சில டிசைனர்களும் சிறப்பு விருந்தினர்களாக இந்தப் பெருமைமிகு விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளைக் குனியவைத்து பச்சைக் குதிரை தாண்டத் தயாராகிவிட்டது சீனா என்று குறிப்பிடுகிறார் DEZEEN நிறுவனத்தின் தலைமை எடிட்டர் Marcus Fairs.

மாருதி 800 போல் இருக்கும் Jiangnan - TT
மாருதி 800 போல் இருக்கும் Jiangnan - TT

இது எந்த அளவுக்கு உண்மை என்பது கீலியின் வடிவமைப்பு நேர்த்தியைப் பார்க்கும்போது, `பளிச்’ என்று விளங்குகிறது. குறிப்பாக, `கீலி ஐகான்’ என்ற புதிய காரின் வடிவமைப்பு, அதன் சர்ஃபேஸ் ஃபினிஷ், இன்டீரியர் கலர், டெக்‌ஷ்சர் மற்றும் யூஸர் இன்டர்ஃபேஸ் சம்பந்தப்பட்ட வசதிகள் - இவற்றை எல்லாம் பார்க்கும்போது, சீனா நம்மைக் குனியவைத்து பச்சைக் குதிரை தாண்டிவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேற்கத்திய நாடுகளில், கான்செப்ட் காருக்கும் - ப்ரொடக்‌ஷன் மாடலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். கான்செப்ட் காரின் பெருவாரியான - கவர்ச்சியான அம்சங்களை, கடைசியில் உற்பத்தியாகும் சேல்ஸ் மாடலில் காணவே முடியாது. இது ஏமாற்று வித்தையல்ல; இதுதான் கார் டிசைனிங் நியதி என்று ஒருமாதிரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், இன்று சீன டிசைனர்கள் அந்தக் கருத்தியலைப் பொய்யாக்கும் அளவுக்கு - கற்பனைக்கும் விற்பனைக்கும் உள்ள இடைவெளியைப் பெரிதும் குறைத்து விட்டார்கள். தங்களது கார் வடிவமைப்புகளில், தங்களின் தனித்துவமான சீனக் கலாசார விழுமியங்களை இழையோட வைக்கிறார்கள் .

சீனாவின் இளைய தலைமுறை வடிவமைப்பாளர்கள், உலகளவில் கலக்குகிறார்கள். பீஜிங்கின் 798 ஆர்ட் சோன் ஆர்ட் டிஸ்ட்ரிக்ட்டில், துடிப்புமிக்க வடிவமைப்பாளர்கள் புதிய தளங்களைத் தேடி அலைகிறார்கள். ஆடி நிறுவனம் சீனாவுக்கென்று பிரத்யேகமான கார்களை வடிவமைக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஆடியின் சீன டிசைன் ஸ்டூடியோ, இன்று ஜெர்மனிக்கு வெளியே இருக்கும் இரண்டாவது பெரிய ரிஸர்ச் சென்டர் என்ற அளவில் புதிய டிசைன் வடிவங்களை சீன வாடிக்கையாளர்களின் சொகுசு வாழ்க்கை முறைகளைக் கலைப்பூர்வமாக அணுகி ஆராய்ந்து கொண்டிருப்பது ஓர் அதிசயம்தான். பின்னாட்களில் ஆடியின் அகில உலக ட்ரெண்ட்களைத் தீர்மானிக்கும் இடமாக இது மாறிவிடவும் கூடும்.

ஆய்வாளர்கள், வருங்காலத்தில் சீனா, இந்த உலகின் ஒட்டுமொத்த `க்ரியேட்டிவ் சூப்பர் பவர்’ என்ற நிலையை அடையும் என்று கணிக்கிறார்கள். கார் டிசைன் மட்டுமல்லாது, இன்ன பிற படைப்பாற்றல் சார்ந்த க்ரியேட்டிவ் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதே - வல்லரசு யார் என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறது சீனா.

(வடிவமைப்போம்)