Published:Updated:

டேஷ்போர்டில் சாமி சிலை வைக்கிறீங்களா? - தொடர்: சர்வீஸ் அனுபவம் #2

God Idols
பிரீமியம் ஸ்டோரி
God Idols

ஆர்.நரேந்திரன்

டேஷ்போர்டில் சாமி சிலை வைக்கிறீங்களா? - தொடர்: சர்வீஸ் அனுபவம் #2

ஆர்.நரேந்திரன்

Published:Updated:
God Idols
பிரீமியம் ஸ்டோரி
God Idols

போன மாதம் செய்திகளில் நடிகை யாஷிகா ஆனந்த் விபத்து பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வள்ளிச்செட்டி பவானி எனும் அவருடைய தோழி காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு இறந்திருக்கிறார். இதில் யாஷிகா ஆனந்த்துக்குப் பலத்த அடி. காரணம், சீட் பெல்ட். தோழி சீட் பெல்ட் போடவில்லை என்கிறார்கள்.

கார்களில், சீட் பெல்ட்டின் முக்கியத்துவம் பற்றிச் சின்னக் குழந்தைகளுக்குக்கூடத் தெரியும். ப்ரீ டென்ஷனர் சீட் பெல்ட்டின் தத்துவம் – டென்ஷன் ஆகும் நேரங்களில் அது இறுக்கமாக நம்மைப் பிடித்துக் கொள்ளும். ரிலாக்ஸ்டான நேரங்களில் நாம் இழுத்த இழுவைக்கெல்லாம் இழுத்தபடி நம் சொல்பேச்சுக் கேட்கும். அதனால்தான் கார் விபத்தாகும் நேரங்களில் நம்மை இறுக்கமாகப் பிடித்து முன்னே நகர விடாமல் பார்த்துக் கொள்கின்றன சீட் பெல்ட்கள். நேராகக் காற்றுப் பை மீது மோதுவதால், நமக்குப் பெரிதாகச் சேதாரமும் இருக்காது என்பதுதான் கான்செப்ட்.

எனது நண்பரின் நண்பர் ஒருவர், தனது எஸ்யூவியில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்தார். ஹைவேஸில் எதிரே வந்த காரின் மேல் மோதி விபத்தாகிவிட்டது. கோரமான விபத்து என்று சொல்ல முடியாது. காருக்குப் பெரிய சேதாரமெல்லாம் இல்லை. அதற்காக அடிபடாமலும் இல்லை. பின் சீட் பயணிகளுக்குப் பெரிய அடியும் இல்லை. சின்ன ட்ரீட்மென்ட் எடுத்துவிட்டு, மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்கள். ஆனால், காரை ஓட்டிய அவருக்கும் சரியான அடி. ஆனால், கோ டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அவரது நண்பர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இங்கேதான் ஓர் அதிர்ச்சியான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அவருக்கு வேறெங்கும் பலத்த அடிகள் இல்லை. கால்கள், இடுப்புப் பகுதி, தலைகூட பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. அப்படியும் அவர் இறந்து போனார். மேலும், காரைச் சுற்றி கர்ட்டெய்ன் காற்றுப் பைகள் விரிந்திருந்தன. முன் பக்கமும் இரண்டு காற்றுப் பைகள் திறந்திருந்தன. அப்படியும் அவர் இறந்து போனது வியப்பாக இருந்தது. இன்னோர் ஆச்சரியம் – அவர்கள் முறையாக சீட் பெல்ட் போட்டுத்தான் பயணித்திருந்தார்கள்.

God idols in dashboard
God idols in dashboard
God idols in dashboard
God idols in dashboard


பிறகுதான் தெரிந்தது – அந்த நண்பரின் வலது கழுத்திலும் கண்களிலும் ஊசி போன்ற ஒன்று இறங்கியிருந்தது. அவர் ஒரு தீவிர கடவுள் பக்தர். தனக்குப் பிடித்த கடவுளின் Idol எனப்படும் மினியேச்சர் சிலை ஒன்றை, தனது டேஷ்போர்டில் வைத்திருந்தார். விபத்தின்போது, அந்தக் குட்டிச் சிலையின் ஊசியான பாகம் ஒன்று வேகமாக அவரது கழுத்தில் இறங்கியிருந்ததுதான் அவரது மரணத்துக்குக் காரணமாக அமைந்து போனது. சிவப்பு விளக்கில் கிளம்பமாட்டார்; விதிகளை மதிப்பார்; சீட் பெல்ட் போடாமல் காரை எடுக்கமாட்டார்; ரேஷ் டிரைவிங் செய்யமாட்டார். இப்படிப் பாதுகாப்பு விதிகளை முறைப்படிக் கடைப்பிடிக்கும் அவருக்கு, தனது செயல்பாட்டால் நண்பர் இறந்து போனது இன்றும் பெரிய மனச்சுமையாக இருக்கிறது. ‘‘நான் கும்பிடுற சாமியே என் கண்ணைக் குத்திடுச்சே!’’ என்று இப்போதும் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு வாடிக்கையாளர் ஒருவர், தனது காரின் டேஷ்போர்டு முழுக்க கலைப்பொருட்களாக அடுக்கி வைத்திருந்தார். டேஷ்போர்டே அழுந்தும் அளவுக்குப் பொருட்கள் இருந்தன. இதில் என்ன சிக்கல் என்றால்… இதனால், காற்றுப்பைகள் விரிவடையாது. இதை அவருக்கு எடுத்துச் சொன்னோம்.

இப்போதும் எங்கள் சர்வீஸ் சென்டருக்கு வரும் பல கார்களின் டேஷ்போர்டில் இப்படி சாமி சிலைகளை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் பலர். அவர்களுக்கெல்லாம் இப்படித்தான் சொல்கிறோம். ‘‘தயவுசெய்து கடவுளோடும் காரோடும் விளையாடாதீர்கள்!’’

– தொகுப்பு: தமிழ்