கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

நினைச்ச இடத்தில் தங்கிக்கலாம்! வருது கேரவன் டூரிஸம்!

கேரவன் டூரிஸம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேரவன் டூரிஸம்!

கேரவனை ரெஸார்ட் ஆக மாற்றிய இளைஞர்!

பயணமே சுகமான விஷயம்தான். வீக் எண்ட் ட்ரிப்பாக இருந்தாலே ஜில்லிடும். அதுவும், நமக்குப் பிடித்த இடத்தில் சில தினங்கள் தங்கி, அந்தப் பகுதியின் த்ரில்லிங்கை, இயற்கை சுகத்தை அனுபவிப்பது என்பது பெரிய சுகம். ஆனால், இது சமயங்களில் பெரிய டாஸ்க் ஆகவும் அமைந்து விடும். காரணம், தங்குவதற்கு நல்ல இடம் கிடைக்காது; அப்படியே கிடைத்தாலும் அந்தத் தங்குமிடம் மனதுக்கு நெருக்கமாக இருக்காது; ரெஸார்ட்டில் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் அந்த இரவுகள் கழியாது. இப்படி, நினைத்த இடத்தில் தங்குவதைவிட, கிடைக்கிற இடத்தில் தங்க வேண்டிய சூழல்தான் பெரும்பாலும் அமையும்.

ஆனால், அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த சிவராமன்.

சுற்றுலா செல்கிற இடங்களில் பெரிய ஹோட்டல்களில், ரெஸார்ட்டுகளில் தங்குவதில் கிடைக்கும் வழக்கமான மகிழ்ச்சியைவிட நாம் நினைத்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் தங்கினால் எப்படி இருக்கும்?

நாம் தங்கியிருக்கும் அறை நகர்ந்து சென்று கொண்டிருந்தால் அந்த மகிழ்ச்சி எப்படி இருக்கும்? நான்கு வழிச்சாலையில், மலைச்சாலையில், வனத்துக்குள், பனி விழும் பள்ளத்தாக்கில், அருவி விழுந்தோடும் ஆற்றின் கரையில், அலை அடிக்கும் கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரேயொரு அறையில் நாம் மட்டும் தங்கியிருந்தால் எப்படி இருக்கும்? நினைக்கும்போதே த்ரில்லிங்கான மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லாவா?

நினைச்ச இடத்தில் தங்கிக்கலாம்! வருது கேரவன் டூரிஸம்!
நினைச்ச இடத்தில் தங்கிக்கலாம்! வருது கேரவன் டூரிஸம்!
நினைச்ச இடத்தில் தங்கிக்கலாம்! வருது கேரவன் டூரிஸம்!
நினைச்ச இடத்தில் தங்கிக்கலாம்! வருது கேரவன் டூரிஸம்!

‘‘அது ஒன்றும் கற்பனை அல்ல, கஷ்டமும் அல்ல’’ என்கிறார் சித்தார்த். எப்படி?

திரையுலகப் பிரபலங்கள் பயன்படுத்தும் கேரவனைப்போலவே டெம்போ வேனை வீடாக மாற்றி 'Road House' என்ற பெயரில் சாலையில் ஓட விட்டிருக்கிறார் சித்தார்த். ஒரு பெரிய டெம்போ வேனில் இரண்டு பேர் உறங்கும் வகையில் பெட் ரூம், சமையலறை, கழிவறை, குளியலறை, வாகனத்தின் மேலே தண்ணீர்த் தொட்டி, சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பவர் சிஸ்டம், நிறுத்துமிடத்தில் ரிலாக்ஸாக சேர் – டேபிள், அட.. கிட்டத்தட்ட மிக்ஸி கிரைண்டர்கூட இந்த கேரவனில் உண்டு என்றால் இதைவிட வேறென்ன வேண்டும் மக்கா! மொத்தத்தில் ஒரு ஸ்டார் ஹோட்டலின் மினி ரூம்போல அழகாக, திடமாக, பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த கேரவன்.

‘‘இந்த ஐடியா எப்படி வந்தது? இதுபோல் வாகனத்தை வடிவமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா? வெளியூர் செல்லும்போது எங்கெல்லாம் பார்க் பண்ணலாம்? வாகனத்துக்கான கட்டணம் எவ்வளவு?’’ எனப் பல விஷயங்களைப் பற்றி சித்தார்த் வர்மனிடம் கேட்டேன்.

"நான் சென்னை நீலங்காரையில இருக்கேன். படிச்சு முடிச்சுட்டு ஆட்டோமொபைல் பேஸ் கம்பெனியில் ஒர்க் பண்ணினேன். என் மனைவி ஆர்த்தி ஐடி கம்பெனில ஒர்க் பண்றாங்க. அவங்க ஹரித்துவார். நாங்க லவ் மேரேஜ். கல்யாணத்துக்குப் பின்னால பார்க்கிற வேலையில் ஒரு மாற்றம் வேணும்னு நினைச்சிட்டிருந்தேன். கடந்த வருடம் கோவிட் ப்ராப்ளம் வந்தவுடன், எல்லாத்தையும் விட்டுட்டு புது பிசினஸ்ல இறங்க முடிவெடுத்தேன்.

சின்ன வயசுலருந்து வாகனங்கள் மேல ரொம்ப இன்ட்ரஸ்ட். கார்/பைக்ஸ் பத்தி நியூஸ் படிச்சிட்டே இருப்பேன். அப்பத்தான் வெளிநாடுகளில் இதுபோல் வாகன வீடுகள் இருப்பதும், அது சுற்றுலா செல்பவர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் படித்துத் தெரிந்து கொண்டேன். அது ஒரு நல்ல தொழிலாக டெவலப்பாகி வருதும் தெரிந்தது. இதுபோல் தமிழகத்தில் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. என் மனைவிக்கும் இந்த ஐடியா ரொம்பப் பிடிச்சுடுச்சு!

அப்போதான் மொத்தமா இருந்த என்னோட சேமிப்பையெல்லாம் போட்டு இந்த கம்பெனியை ஆரம்பிச்சேன். டெம்ப்போவை வாங்கிட்டேன். ஆனால் அதை ஆல்ட்டர் பண்ண ஆள் கிடைக்கல. எனக்கு ஓரளவு ஆல்ட்டரேஷன் ஒர்க் தெரியும் என்பதால், நானே ஒர்க் பண்ணேன். எல்லா வேலையும் முடிய ஒரு வருஷம் ஆகிடுச்சு. போன சுதந்திர தினம் அன்று என் டெம்ப்போவை ட்ரிப்புக்கு விட ஆரம்பிச்சுட்டேன்.

தமிழகத்திலயே முதல்முறையா இந்த வேன் ஹவுஸை நான்தான் உருவாக்கியிருக்கேன். இதுக்கான அனுமதியும் கொடுத்திருக்காங்க. தமிழக அரசு சுற்றுலாவை டெவலப் பண்ண அதிகமாக ஆர்வம் காட்டிட்டு வர்றாங்க. அங்கேயும் பேசியிருக்கோம். இன்னும் அதிகமான ஆதரவு கிடைத்தால், பல மாவட்டங்கள்ல இதுபோன்ற வேன் ஹவுஸைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கோம்.

அடிப்படையில் நான் ஒரு டூர் பிரியன். மலை, காடுன்னு ஆன்ரோடு ஆஃப் ரோடு டிரிப் நிறைய பண்ணின அனுபவம் இருக்கிறதால, அதை ஐடியாவா வச்சுப் பண்ணேன். டூர் போகும்போது ஹோட்டல்ல ரூம் கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் விலை அதிகமா இருக்கும். அதனால நானே பலமுறை கார்லயே படுத்துத் தூங்கியிருக்கேன். அப்பத்தான் யோசிச்சேன். நம்மோட வாகனத்தையே தங்குற மாதிரி செட் பண்ணினா சிறப்பா இருக்கும்னு நினைச்சேன். அப்படித்தான் ரோட் ஹவுஸ் கம்பெனி உருவாச்சு!

இப்ப சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள்னு விஐபிங்க எல்லாருமே கேரவன் பயன்படுத்துறாங்க. அதுக்கு ஒரு நாள் செலவு அதிகம். சாதாரண மக்களால இதை அனுபவிக்க முடியாது. அவங்க ஆசையை நிறைவேற்றத்தான் வாடகைக்கு எடுக்கும் வகையில் இந்த வேனை ரெடி பண்ணினேன்.

இதில் எல்லா வசதிகளும் இருக்கு. ஃப்ரிட்ஜ், கிச்சன், டாய்லெட், பேட்டரி சார்ஜர், கரன்ட்டுக்கு 150ஆர்ம்ஸ் பவர் கொண்ட சோலார் பவர் சிஸ்டம், தண்ணீர் வசதினு எல்லாமே உண்டு. இதில் குளிக்க மிலிட்டரி மாடல் ஷவராகப் பயன் படுத்தினால் இந்தத் தண்ணீரை ரெண்டு நாளுக்குப் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வாடகை வசூலிக்கிறேன். நீங்க செல்ஃப் டிரைவும் பண்ணிக்கலாம். இல்லேன்னா நாங்களே டிரைவர் குடுத்தும் அனுப்புவோம். தமிழ்நாட்டுல எந்த டூரிஸ்ட் ஸ்பாட்டுக்குப் போனாலும், அங்கே எங்கே பார்க் பண்ணலாம்ங்கிற தகவல் வரைக்கும் நாங்க கொடுப்போம். ஹைவேஸ் அப்படினா லாரி யார்டுல பார்க் பண்ணிக்கலாம்!'' என்றார் சிவராமன்.

இந்த ஐடியா க்ளிக் ஆனால், இதுபோல பல கேரவன் கம்பெனிகள் உதிக்கும். பீக் சீஸன்களின்போது டூரிஸ்ட் ஸ்பாட்டில் ஹோட்டல் ரூம் கிடைக்குமா கிடைக்காதா என்ற கவலையும் மறையும்!

நினைச்ச இடத்தில் தங்கிக்கலாம்! வருது கேரவன் டூரிஸம்!
நினைச்ச இடத்தில் தங்கிக்கலாம்! வருது கேரவன் டூரிஸம்!