Published:Updated:

குழந்தைகளை பானெட் மீது விளையாட விடலாமா?

கார் பானெட் மீது குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
கார் பானெட் மீது குழந்தைகள்

சர்வீஸ் அனுபவம் | தொடர் #23 | கார் பானெட்

குழந்தைகளை பானெட் மீது விளையாட விடலாமா?

சர்வீஸ் அனுபவம் | தொடர் #23 | கார் பானெட்

Published:Updated:
கார் பானெட் மீது குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
கார் பானெட் மீது குழந்தைகள்

ஏகப்பட்ட சர்வீஸ் அனுபவங்களைத் தொடர்ந்து, இந்த மாதம் எல்லோருக்கும் தெரிந்த, ட்ரெண்டான விஷயத்தைப் பற்றித்தான் பேசப் போகிறேன். ‘க்ராஷ் கார்டு’ என்று நீங்கள் செல்லமாக அழைக்கும் எக்ஸ்ட்ரா பம்பரைப் பற்றித்தான் இந்த மாதம். ‘அதைப் பற்றி ஏகப்பட்ட விஷயங்களைப் படிச்சு… போலீஸ்லாம் புடிச்சு… ஃபைன்லாம் கட்டியாச்சே’ என்று நீங்கள் சலிப்படைவது கேட்கிறது.


`Ministry of Road Transport and Highway’ (MoRTH) அமைச்சகம், இந்த எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொருத்துவது தவறு என்று அறிக்கை விட்டபிறகு, சாலையில் அப்படிப்பட்ட கார்களையெல்லாம் வளைத்துப் பிடித்தது உங்களுக்கு நினைவிருக்கும். இதை என்றைக்கோ செய்ய வேண்டியது. காலதாமதமாகத்தான் இதைப் பற்றி யோசித்திருக்கிறார்கள்.

அபராதம் கட்டுவது, அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் படித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட சீரியஸான ஒரு கதையைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன். ‘எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்துவது சட்டப்படி குற்றம்’ என்ற அறிக்கை வருவதற்கு முன்பே பல மாதங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது.

எங்கள் நிறுவனத்தில் காரை புக் செய்பவர்கள் – சீட் கவர், நேவிகேஷன், ரிவர்ஸ் கேமரா, மேட், அலாய் வீல், ரியர் ஸ்பாய்லர் என்று எக்கச்சக்க ஆக்சஸரீஸ்கள் ஃபிட் செய்து பக்காவாக மாற்ற விரும்புவார்கள். அவர்களிடம் நான் முதலில் சொல்லும் விஷயம்: ‘‘நீங்கள் ஆக்சஸரீஸ் போடுவதில் தவறில்லை; ஆனால், எக்ஸ்ட்ரா பம்பர் மட்டும் பொருத்த வேண்டாமே’’ என்று அறிவுறுத்துவேன். இன்னொரு உண்மை என்னவென்றால், எந்த ஆத்தரைஸ்டு நிறுவனங்களிலும் எக்ஸ்ட்ரா பம்பரை ரெக்கமண்ட் செய்வதில்லை.

Air bags
Air bags


ஒரு வாடிக்கையாளர் தனது எர்டிகாவுக்கு எக்ஸ்ட்ரா பம்பர் ஃபிட் செய்திருந்தார். பார்க்கிங்கின்போது, தவறுதலாக லேசாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியவர், முன்னே இருக்கும் கல்லில் லேசாக மோதிவிட்டாராம். அந்த எக்ஸ்ட்ரா பம்பர்தான், தனது காரின் முன் பக்கத்தை அந்தச் சின்ன ஸ்க்ராட்ச்சில் இருந்து காப்பாற்றியதாகச் சொன்னார்.

அதே எர்டிகாவை, ஒரு சில மாதங்கள் கழித்து எங்கள் சர்வீஸ் சென்டருக்கு டோ செய்து கொண்டு வந்திருந்தார்கள். முன் பக்கம், பின் பக்கம், பக்கவாட்டுப் பகுதி – என காரைச் சுற்றிலும் இரும்பினாலான எக்ஸ்ட்ரா பம்பர்கள். காரின் மேலே ரூஃபும் எக்ஸ்ட்ராவாக ஃபிட் செய்திருந்தார்கள்.

சரியான விபத்தில் சிக்கியிருக்க வேண்டும். நேரே கொண்டு போய் எதிலேயோ மோதி இருக்கிறார்கள். சுற்றிப் பார்த்தேன். அந்த எக்ஸ்ட்ரா பம்பருக்குப் பெரிய அடியில்லை. காரின் முன் பக்க பானெட் நசுங்கியிருந்தது. பானெட்டைத் திறக்கவே முடியவில்லை. ஒரு வழியாக உள்ளே பார்த்தால்… ரேடியேட்டர் ஃபேன், கூலன்ட் வரை பாதிப்படைந்திருந்தது. நான் நினைத்ததுபோல், இன்னொன்றும் நடந்திருந்தது. அந்த காரின் சேஸியில் சரியான க்ராக் விழுந்து, உடைந்தே போயிருந்தது. விசாரித்ததில், அந்த காரை ஓட்டிய டிரைவருக்குப் பலத்த அடி. மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார்கள். காரணம், அந்த காரில் காற்றுப்பைகள் வேலை செய்யவில்லை. இத்தனைக்கும் அது டாப் வேரியன்ட்.

இதில், ஓர் ஆச்சரியமான விஷயம் சொல்லவா? நாம் ‘க்ராஷ் கார்டு’ என்று செல்லமாக அழைப்போமே… அந்த க்ராஷ் கார்டுக்கு எந்த அடியும் இல்லை; சின்னச் சின்னக் கீறல்கள்தான். தடிமனான உலோகம் கொண்ட அந்தக் கம்பி நெளியக்கூட இல்லை.

Crumple Zone
Crumple Zone


இந்த எக்ஸ்ட்ரா பம்பருக்கு உலகளாவிய பெயர்கள் பல உண்டு. Push Bumper, Brush Guard, Moose Bumber, Extra Bumper, Crash Guard… இப்படி ஏகப்பட்ட செல்லப் பெயர்கள். முதலில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முதலில் இதை ‘க்ராஷ் கார்டு’ என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதாவது, ‘மோதலில் இருந்து பாதுகாக்கும் காவலன்’ என்று இதற்கு அர்த்தம். ஆனால், க்ராஷ் கார்டின் பணியே வேறு.

பம்பர் என்றால், பம்ப் ஆவது. எதிலாவது மோதியவுடன் பம்ப் ஆகி ரிட்டர்ன் ஆவதுதான் பம்பர். காரின் முன் பக்கம் மென்மையான ஃபைபர் மற்றும் எடை குறைந்த உலோகங்களால் இந்த பம்பரை ஆட்டோமொபைல் நிறுவனங்களே டிசைன் செய்திருக்கும். Crumple Zone எனும் விதியின்படி, விபத்து நடந்தால், அந்தத் தாக்கத்தை கார் மட்டுமே வாங்கிக் கொண்டு பயணிகளுக்குக் கடத்தாமல் இருப்பதுதான் பம்பரின் பணி. ஆனால், நாம் எக்ஸ்ட்ராவாகப் பொருத்தும் பம்பரினால் பலவிதமான ஆபத்துகள் ஏற்படக்கூடும். இந்த லிஸ்ட்டைப் படிங்க!

பம்ப் ஆகி வருவதுதான் பம்பர். எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தினால், அது அந்த வேலையைச் செய்ய விடாமல் தடுக்கும்.

பெரிய இரும்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட பம்பர்களை, காரின் சேஸியில்தான் கனெக்ட் செய்திருப்பார்கள். இதனால், கார் தள்ளாடித் தள்ளாடித்தான் பயணிக்கும்.

காரின் கெர்ப் எடை இப்போது கூடியிருப்பதால், நெடுஞ்சாலையில் அதன் ஏரோ டைனமிக்ஸும் நிச்சயம் பாதிக்கும். மைலேஜும் அடி வாங்கும்.

கார் எதிலாவது மோதினால், பயணிகளுக்குத்தான் முதல் அடி விழும்.

Extra Bumper
Extra Bumper


எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்படாத கார்கள் விபத்துக்குள்ளானால், அதிகபட்சம் ஏசி கண்டென்ஸர் வரை பாதிப்பு ஏற்படும். (இது விபத்தின் தன்மையைப் பொருத்து). இதுவே எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்திய கார்களில் ரேடியேட்டர் ஃபேன், கூலன்ட் சிஸ்டம், சேஸி வரை எல்லாமே காலியாகும் அபாயம் உண்டு.

மென்மையான ஃபைபர் போன்ற மெட்டீரியல்களால்தான் பம்பர் தயாரிக்கப்பட்டிருக்கும். இது பாதசாரிகளின் பாதுகாப்புக்காகவும்தான். நீங்கள் இரும்பு மெட்டீரியலை ஃபிட் செய்து இடித்துவிட்டால்... பாதசாரிகள் பாவமில்லையா?

Crumple Zone எனும் விதிப்படி, விபத்தின்போது கார் உருக்குலைய வேண்டும் என்பதுதான் விதி. இந்த எக்ஸ்ட்ரா பம்பர் அந்த விதியை மட்டுமில்லை; பயணிகளின் விதியையும் மாற்றியமைத்து விடும்.

நீங்கள் அழகுக்காக மாட்டும் எக்ஸ்ட்ரா பம்பர், சின்ன ஸ்க்ராட்ச்சை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால், விபத்து நேரிடும்போது காருக்குள்ளே இருப்பவர்களுக்குத்தான் நேரடியாக பாதிப்பு ஏற்படும். முதலில் கால். அப்புறம் கழுத்து என்று சொல்கிறது ஆய்வு.

விபத்தின்போது, காற்றுப் பைகள் திறக்க வேண்டுமென்றால், எல்லா சென்ஸார்களும் வேலை செய்ய வேண்டும். எக்ஸ்ட்ரா பம்பர், அந்த சென்ஸாரை அப்செட் செய்துவிடும். இதனால் காற்றுப் பைகளைத் திறக்க விடாமல் செய்யும் அபாயம் உண்டு. இந்த எர்டிகாவில் அப்படித்தான் நடந்திருக்கிறது.

ஆம், எர்டிகாவின் சேஸி க்ராக் ஆகி, ரேடியேட்டர் ஃபேன் அடிபட்டு, இன்ஜின் ப்ளேஸ்மென்ட்டே இடம் மாறியிருந்தது. இதனால், அவருக்குக் கிட்டத்தட்ட 75,000 ரூபாய் செலவு. நல்லவேளையாக, இன்ஷூரன்ஸ் போட்டிருந்ததால் தப்பித்தார். இனி எக்ஸ்ட்ரா பம்பர் போடுவதால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ஆவதிலும் சிக்கல் இருக்கலாம்.

எனவே, எக்ஸ்ட்ரா பம்பர் வேண்டாமே ப்ளீஸ்!

எக்ஸ்ட்ரா பம்பர்
எக்ஸ்ட்ரா பம்பர்


இது இன்னொரு கேஸ் ஸ்டடி. ஒருவர் கார் வாங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந் திருந்தது. அவரின் கம்ப்ளெயன்ட் – காரின் பானெட்டில் டென்ட் விழுந்து பள்ளமாகிப் போகிறது என்பதுதான். விசாரித்தால், அவர் தனது குழந்தையை தனது காரின் பானெட்டில் வைத்துத்தான் கொஞ்சி விளையாடுவாராம்.

குழந்தைகளை பானெட்டில் வைத்து விளையாடுவது சரியில்லை. காரணம், பானெட்டும் மென்மையான உலோகத்தால் தயாரிக்கப்படுவதுதான். பானெட் சூடும் குழந்தைகளுக்கு ஒப்புக் கொள்ளாது என்பது இதில் தனி விஷயம்.

‘‘நான் கார் வாங்கியதிலிருந்து என் குழந்தையை பானெட் மேலதான் உட்கார வெச்சு விளையாடுவேன்! 5 வருஷத்துக்கு முன்னாடிலாம் இந்தப் பிரச்னை இல்லையே! இப்போ மட்டும் ஏன் இப்படி நெளியுது!’’ என்பதுதான்", அந்த கஸ்டமரின் கேள்வி. . அதாவது, அவரது குழந்தைக்கு இப்போது 6 வயது. 1 வயதுக் குழந்தையை உட்கார வைத்தால், பிரச்னை இல்லை. 6 வயதுக் குழந்தையை உட்கார வைத்தால், எந்த பானெட்டுமே டென்ட் விழத்தான் செய்யும் என்பதை அவருக்குப் புரிய வைத்தோம்.

முதலில், குழந்தைகளை பானெட் மீது உட்கார வைத்து விளையாடுவதைத் தவிர்க்கலாமே!

குழந்தைகளை பானெட் மீது விளையாட விடலாமா?

(தொகுப்பு: தமிழ்)