Published:Updated:

ரூபாய்க்கு ஒரு கி.மீ... அசத்தும் கோனாவும் எம்ஜியும்!

கம்பாரிஸன் ரிப்போர்ட்: ஹூண்டாய் கோனா EV Vs MG ZS EV

பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் கார்கள்... சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களாக இருக்கும் இவை, பெட்ரோல்/டீசல் கார்களுக்கு மாற்றாக வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கான உதாரணங்களைத்தான், நீங்கள் இங்கே படத்தில் பார்க்கிறீர்கள். ஆனால் இன்னுமே, இவற்றின் ரேஞ்ச் ஒரு சிக்கலாகவே இருப்பது நிதர்சனம். இந்த எலெக்ட்ரிக் கோதாவில் முதலில் கால்பதித்த ஹூண்டாய், 23.72 லட்ச ரூபாயில் (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) கோனாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

BIC-யில் இந்த காரை முதன்முறையாக ஓட்டியபோதே, அதன் பன்முகத்திறன் புரிந்துவிட்டது. இந்தியாவுக்கு வரக்கூடிய எலெக்ட்ரிக் கார்கள் எந்தளவுக்குச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அளவுகோலை, கோனா நிர்ணயித்திருப்பதாகவே தோன்றுகிறது. தற்போது இதற்குப் போட்டியாக, புதிய ZS EV காரைக் களமிறக்கிவிட்டது எம்ஜி. ஹெக்டரால் வெற்றியைச் சுவைத்ததால், தான் அடுத்து வெளியிட்ட காரையும் எஸ்யூவியாகவே இந்த நிறுவனம் கொண்டு வந்திருக்கிறது.

பேட்டரி I 39.2kWh ரேஞ்ச் I 250கி.மீ விலை I ரூ.23.72 லட்சம், பேட்டரி I 44.5kWh ரேஞ்ச் I 317கி.மீ விலை I ரூ.23.58 லட்சம்
பேட்டரி I 39.2kWh ரேஞ்ச் I 250கி.மீ விலை I ரூ.23.72 லட்சம், பேட்டரி I 44.5kWh ரேஞ்ச் I 317கி.மீ விலை I ரூ.23.58 லட்சம்

கோனாவைவிடப் பெரிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும் ZS EV, இரு வேரியன்ட்களில் 20.88- 23.58 லட்ச ரூபாய்க்குக் (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) கிடைக்கிறது. பனோரமிக் சன்ரூஃப், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் என லேட்டஸ்ட் அம்சங்களுடன் இந்த எம்ஜி தயாரிப்பு வருவது பெரிய ப்ளஸ். கோனா போலவே, ZS EV-யும் 8 வருட வாரன்ட்டியுடன் (பேட்டரி & மோட்டார்) வெளியாகி உள்ளது. எனவே, ஹூண்டாய் காரைவிட எம்ஜியின் கார், எந்தளவுக்கு மேம்பட்டதாக இருக்கிறது? இதைத் தவிர ஃபுல் சார்ஜ் ரேஞ்ச், தினசரிப் பயன்பாடு, சார்ஜிங் நேரம், ரன்னிங் காஸ்ட் ஆகியவற்றையும் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிசைன்

சர்வதேசச் சந்தைகளில் விற்பனையாகும் இந்த எஸ்யூவிகளின் பெட்ரோல்/டீசல் மாடல்கள் தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில்தான், இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. Europe NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், ZS EV 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது. அதேபோல Australia NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், கோனா EV 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. எனவே இந்த எலெக்ட்ரிக் கார்களின் பாதுகாப்பு குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். தட்டையான பானெட், உயரமான முன்பக்கம் என ZS EV-ன் டிசைன் நீட் ரகம். எம்ஜி லோகோவுடன் கூடிய க்ரோம் கிரில், காருக்கு அழகு சேர்க்கிறது. லோகோவை அழுத்தி ஃப்ளாப்பைத் தூக்கும்போது, சார்ஜிங் பாயின்ட் உள்ளே தெரிகிறது.

 1. கேபின் செம ப்ரீமியம். டேஷ்போர்டு ஜெர்மன் கார்களைப்போல இருக்கிறது. மென்மையான ப்ளாஸ்டிக்ஸ், ப்ளஸ். 
 2. எதிர்காலத்துக்கான எலெக்ட்ரிக் வாகனத்தில், பழைய அனலாக் டயல்கள் இருப்பது நெருடல். 
 3. ரோட்டரி டிரைவ் செலெக்ட்டர், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது.
1. கேபின் செம ப்ரீமியம். டேஷ்போர்டு ஜெர்மன் கார்களைப்போல இருக்கிறது. மென்மையான ப்ளாஸ்டிக்ஸ், ப்ளஸ். 2. எதிர்காலத்துக்கான எலெக்ட்ரிக் வாகனத்தில், பழைய அனலாக் டயல்கள் இருப்பது நெருடல். 3. ரோட்டரி டிரைவ் செலெக்ட்டர், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது.

இது கேட்பதற்கு நன்றாகத் தெரிந்தாலும், கொஞ்சம் ப்ளாஸ்டிக் ஃபீலிங்கே மேலோங்கியிருக்கிறது. 17 இன்ச் அலாய் வீல்களின் டிசைன், டர்பைனை நினைவுபடுத்துகிறது. மற்றபடி முன்பக்க ஃபெண்டரில் இருக்கும் எலெக்ட்ரிக் மற்றும் டெயில்கேட்டில் இருக்கும் இன்டர்நெட் Inside பேட்ஜிங் ஆகியவை சீப்பாக உள்ளன. மொத்தமாகப் பார்த்தால், எஸ்யூவி பிரியர்களுக்குப் பிடித்தபடியே இந்த எஸ்யூவியின் தோற்றம் அமைந்திருக்கிறது.

வித்தியாசமான கிரில், ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ் என கோனாவிலும் ரசிக்கும்படியான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. வீல் ஆர்ச்சுகளுக்கு, ஸ்டைலான அலாய் வீல்கள் பொருத்தமாக உள்ளன. ZS EV போலவே இந்த காரிலும் LED டெயில் லைட்ஸ் - ரூஃப் ரெயில் - ஸ்பாய்லர் - ஸ்கிட் ப்ளேட் ஆகியவை உள்ளன. ஆனால் என்னதான் பாடி க்ளாடிங் இருந்தாலும், இந்த ஹூண்டாய் கார் க்ராஸ்ஓவர் போலவே காட்சியளிக்கிறது. கோனாவின் சிறிய சைஸ் அந்த எண்ணத்துக்கு வலுச்சேர்க்கிறது. ஆனால் ZS EV-யைவிட இங்கே பெரிய வீல்பேஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. கனமான பேட்டரிகள் காரணமாக, இந்த இரு எலெக்ட்ரிக் கார்களும் 1.5 டன்னுக்கும் மேலான எடையில் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், எம்ஜியைவிட கோனாவின் எடை 17 கிலோ அதிகம் (1,535 கிலோ). ZS EV போலவே, இந்த காரிலும் கிரில்லில்தான் சார்ஜிங் பாயின்ட் உள்ளது. LED லைட் செம!

கேபின்

உயரமான சீட்டிங் என்பதால், ZS EV காரின் உள்ளே செல்வது சுலபமாக இருக்கிறது. டேஷ்போர்டின் டிசைனில் ஜெர்மானியத் தாக்கம் இருப்பதுடன், ஃபோக்ஸ்வாகன் கார்களில் காணப்படும் சில பாகங்கள் கேபினில் உள்ளன. எனவே, இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் மெட்டீரியல் மற்றும் ஸ்விட்ச்களின் தரம் செம. தொடுவதற்கு மென்மையான ப்ளாஸ்டிக்ஸ் நன்று. பனோரமிக் சன்ரூஃப், அந்த ப்ரீமியம் ஃபீலிங்குக்கு உறுதுணையாக நிற்கிறது. டிரைவர் சீட்டுக்கு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மென்ட் இருந்தாலும், Lumbar அட்ஜஸ்ட்மென்ட் இல்லாதது நெருடல். தவிர சிறிய Seat Base-ல் தொடைகளுக்கான சப்போர்ட் குறைவுதான். மேலும் ஸ்டீயரிங்குக்கும் அட்ஜஸ்ட்மென்ட் இல்லை. ஆனால், இது எல்லாம் குறையாகத் தெரியாதபடி டிரைவிங் பொசிஷன் பக்காவாக அமைந்திருக்கிறது.

1.  ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் செம! ஆனால், கறுப்பு கேபின் மற்றும் இறுக்கமான ப்ளாஸ்டிக்ஸ் கொஞ்சம் டல் ரகம்தான். 
2. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், காரின் டிசைனைப்போலவே மாடர்னாக இருக்கிறது.
 3. பேடில் ஷிஃப்ட்டர்கள், ரீ-ஜெனரேட்டிங் பிரேக்கிங் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.
1. ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் செம! ஆனால், கறுப்பு கேபின் மற்றும் இறுக்கமான ப்ளாஸ்டிக்ஸ் கொஞ்சம் டல் ரகம்தான். 2. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், காரின் டிசைனைப்போலவே மாடர்னாக இருக்கிறது. 3. பேடில் ஷிஃப்ட்டர்கள், ரீ-ஜெனரேட்டிங் பிரேக்கிங் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

டிரைவர் சீட்டிலிருந்து வெளிச்சாலை தெளிவாகத் தெரிவதுடன், பானெட்டையும் பளிச்செனப் பார்க்க முடிகிறது. கோனாவைவிட ZS EV-ல் இடவசதி அதிகமாக இருப்பதுடன், பின்பக்க சீட்டின் குஷனிங்கும் மென்மையாக உள்ளது. ஆனால் பேட்டரி, ஃப்ளோர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளதால், கொஞ்சம் முடங்கியே உட்கார வேண்டிய சூழல் இருக்கிறது. தவிர தொடைகளுக்கான சப்போர்ட்டும் குறைவுதான்.

கறுப்பு நிற கேபின் மற்றும் சிறிய கண்ணாடிகளைக் கொண்ட கதவுகள் எனக் கோனாவின் கேபினில் ஸ்பெஷலாக எதுவும் இல்லை. மேலும் இறுக்கமான ப்ளாஸ்டிக்ஸ், இதர ஹூண்டாய் கார்களில் காணப்படும் பாகங்கள் எனக் காருக்குள்ளே புதுமையாக ஏதும் இல்லாததும் நெருடல். Free Standing பாணியில் அமைந்திருக்கும் டச் ஸ்க்ரீன் பழைய டிசைனில் இருந்தாலும், அதனைச் சுற்றி இருக்கும் பெரிய ஷார்ட்கட் பட்டன்கள் சூப்பர். எம்ஜியுடன் ஒப்பிட்டால், ஹூண்டாயின் முன்பக்க இருக்கைகள் சொகுசு.மேலும் இவை வழங்கும் சப்போர்ட்டும் நைஸ். வென்டிலேஷன் வசதி இருப்பதால், வெயில் காலத்தில் இது செமையாக இருக்கும்.

எம்ஜி ஹெக்டர்
எம்ஜி ஹெக்டர்

பின்பக்க விண்ட் ஸ்க்ரீன் சிறிதாக இருப்பதால், ரிவர்ஸ் எடுக்கும்போது கவனமாக இருப்பது நலம். ZS EV போலவே, கோனாவிலும் முடங்கியே உட்கார வேண்டியுள்ளது. லெக்ரூமும் குறைவுதான். ஆனால் பின்பக்க சீட்டின் பேக்ரெஸ்ட் கச்சிதமாக இருப்பதுடன், ஆர்ம் ரெஸ்ட் மற்றும் மூன்றாவது ஹெட்ரெஸ்ட் இருப்பது வரப்பிரசாதம்தான். இவையெல்லாம் எம்ஜியில் கிடையாது.

சிறப்பம்சங்கள்

இரு எலெக்ட்ரிக் கார்களிலும் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உண்டு. பூட் ஸ்பேஸ் விஷயத்தில் ZS EV முன்னிலை வகிக்கிறது (359 லிட்டர்). கோனாவில் இருப்பதோ 332 லிட்டர்தான். ஆனால் இங்கே 60:40 ஸ்ப்ளிட் சீட் இருப்பதால், பொருள்களை வைக்க இடம் கிடைக்கும். பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் - 6 காற்றுப்பைகள் - ESP - 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ் இரண்டிலுமே உள்ளன. TPMS, ஆட்டோ ஹெட்லைட்ஸ், எலெக்ட்ரிக் டிரைவர் சீட், சன்ரூஃப், 17 இன்ச் அலாய் வீல்கள், க்ரூஸ் கன்ட்ரோல், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டிரைவிங் மோடுகள் எனச் சிறப்பம்சங்களும் பொதுவானவையே!

சிம் கனெக்ட்டிவிட்டி, பனோரமிக் சன்ரூஃப், லெதர் சுற்றப்பட்ட ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் ஆகியவை எம்ஜி ஸ்பெஷல். ஆனால், வழக்கமான அனலாக் டயல்களே இருப்பது மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி இல்லாதது மைனஸ்தான்.

ஏறக்குறைய இதே விலையில் கிடைக்கும் கோனாவில் LED ஹெட்லைட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்கள், பேடில் ஷிஃப்ட்டர்கள், ஆட்டோ டிம்மிங் மிரர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பின்பக்க ஆர்ம்ரெஸ்ட், டிஜிட்டல் மீட்டர் என அதிகமான வசதிகள் உள்ளன.

பர்ஃபாமன்ஸ்

இங்கிருப்பதிலேயே பெரிய கார் என்பதால், ZS EV-ல் பெரிய 44.5kWh பேட்டரி Pack இருக்கிறது. இது 143bhp பவர் மற்றும் 35.3kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. கோனாவில் இருக்கும் சிறிய 39.2kWh பேட்டரி Pack, 136bhp பவர் மற்றும் அதிகமான 39.5kgm டார்க்கைத் தருகிறது. இப்படி செயல்திறனில் இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தாலும், நகரத்தில் இதன் பர்ஃபாமன்ஸ் ஏறக்குறைய சமமாகவே உள்ளது.

பவர் டெலிவரி சீராக இருப்பதால், ஆக்ஸிலரேட்டரில் லேசாக அழுத்தத்தைக் காட்டும்போதே இவை ஜிவ்வெனப் பறக்கின்றன. எக்கோ மோடில் ஓட்டும்போதும், இவற்றின் பர்ஃபாமன்ஸ் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஆக்ஸிலரேட்டரிலிருந்து காலை எடுக்கும்போதும்... இதிலிருந்து உற்பத்தியாகும் Kinetic Energy, பேட்டரிகளைச் சார்ஜ் ஏற்றும். இந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியில் 3 லெவல்கள் இருக்கின்றன.

இதில் முதல் லெவல் Least Intrusive ஆகவும், மூன்றாவது லெவல் Aggressive ஆகவும் அமைந்துள்ளன. இதைக் கன்ட்ரோல் செய்வதற்கு, ZS EV-ன் சென்டர் கன்சோலில் பிரத்யேகமாக ஒரு ஸ்விட்ச் இருக்கிறது. கோனாவில் இருக்கும் பேடில் ஷிஃப்ட்டர்கள், ரீ-ஜெனரேஷன் அளவைக் கூட்டவும் குறைக்கவும் பயன்படுகின்றன. அதற்கேற்ப இடதுபுறம் உள்ள பேடில் ஷிஃப்ட்டர், ரீ-ஜெனரேஷன் அளவைக் கூட்டிவிடுகிறது. இதனால் அதிகமாகும் எலெக்ட்ரிக்க்கல் பிரேக்கிங், காரின் வேகத்தை உடனடியாகக் குறைத்துவிடுகிறது. ஆனால் இரு கார்களிலும் இது ஸ்மூத்தாக நடக்கவில்லை. அதாவது ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்த மாத்திரத்திலேயே, பிரேக் அடித்தமாதிரியான உணர்வே மேலோங்குகிறது.

ஹூண்டாய் கோனா
ஹூண்டாய் கோனா

ஸ்போர்ட் மோடுக்கு மாறும்போது, எதிர்பார்த்தபடியே பர்ஃபாமன்ஸில் கணிசமான மாறுதல் தெரிகிறது. இங்கேதான் எம்ஜி தன்வசமிருக்கும் கூடுதல் பவரைக் காட்டுகிறது. 0 - 100கிமீ வேகத்தை கோனாவுக்கு முன்பாகவே எட்டிவிடும் ZS EV (8.53 விநாடிகள்), 20 - 80கிமீ மற்றும் 40 - 100கிமீ வேகத்தின் ஆக்ஸிலரேஷனிலும் வெல்கிறது. ஆனால் கூடுதல் டார்க்கைக் கொண்டிருக்கும் கோனா, 120 கிமீக்குப் பிறகு வேகப்போட்டியில் முன்னிலை வகிக்கிறது. மேலும் ZS EV விட 6கிமீ அதிக டாப் ஸ்பீடையும் இது எட்டுகிறது (158கிமீ). இவை எலெக்ட்ரிக் கார்கள் என்பதால், அமைதியாகவே இவை இயங்குகின்றன. ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது, மோட்டார் வெளியிடும் சத்தம் காருக்குள்ளே கேட்கிறது. மற்றபடி எல்லாமே நிசப்தமாக இருப்பதால், கோனாவிற்குள்ளே கேட்கும் வெளிச்சத்தம் மற்றும் டயர்ச்சத்தம் ஆகியவை கொஞ்சம் அதிகமாகத் தெரியலாம். ZS EV-ன் கேபினுக்குள் இந்த மாதிரியான சத்தங்கள் குறைவாகவே கேட்கிறது.

ரேஞ்ச் மற்றும் சார்ஜிங்

பெட்ரோல்/டீசல் கார்களில் மைலேஜ் போல, எலெக்ட்ரிக் கார்களில் ரேஞ்ச்தான் முக்கியம். எனவே எக்கோ மோடில், ஏசி மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு இந்த கார்களை மாற்றி மாற்றி ஓட்டினோம். நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் பயணிக்கும்போது, ரீ-ஜெனரேஷன் சிஸ்டம் அதிகமாகச் செயல்பட்டு, பேட்டரிகளை சார்ஜ் ஏற்றி ரேஞ்ச்சை அதிகப்படுத்தும். இதுவே நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்யும்போது, வேகத்தை நிலையாக வைக்க அதிகமான சார்ஜ் தேவைப்படும். எனவே தொடர்ச்சியாக இதில் செல்லும்போது, ரேஞ்ச்சில் சரிவு தெரியும். பெட்ரோல்/டீசல் வாகனங்களில் இது அப்படியே எதிராக இருக்கும். நகரம் - நெடுஞ்சாலை எனக் கலந்து ஓட்டியபிறகு, சிங்கிள் சார்ஜில் ZS EV மற்றும் கோனா ஆகியவை, முறையே 317 கிமீ மற்றும் 250 கிமீ செல்கின்றன. பெரிய பேட்டரிகளால் கூடுதலாக 67 கிமீ செல்லும் எம்ஜி, இதனாலேயே பலரது லைக்குகளைப் பெறக்கூடும். Modified Indian Driving Cycle விதிகளின்படி இந்த கார்களை அராய் டெஸ்ட் செய்தபோது, கோனா 452 கிமீயும் ZS EV 340 கிமீயும் சென்றன.

MIDC-ல் டாப் ஸ்பீடு 50 கிமீதான் என்பதுடன், இங்கே இருக்கும் சூழல் நிஜத்தில் நாம் எதிர்கொள்ளும் விதத்தில் இருக்காது என்பதே நிதர்சனம். ஆனால் இந்த கார்களை வாங்குவோர், அதை தினசரி 40-50 கிமீ தூரம் மட்டுமே செல்வார்கள் என்றால், ஒரே சார்ஜில் 5 நாள்களுக்குப் பயணம் செய்யலாம். 3 Pin Portable சார்ஜர் மற்றும் 7kWh Wall Box உடன் இந்த எலெக்ட்ரிக் கார்கள் வருகின்றன (கோனாவில் 7.2kWh). 3 Pin Socket பயன்படுத்தும்போது, இரண்டுமே 2 மணிநேரத்தில் 10% சார்ஜ் ஏறின.

ஹூண்டாய் கோனா EV Vs MG ZS EV
ஹூண்டாய் கோனா EV Vs MG ZS EV

ஃபுல் சார்ஜ் ஏற கோனா 19 மணிநேரமும், ZS EV 20 மணிநேரமும் எடுத்துக் கொண்டன. Wall Box பயன்படுத்தும்போது, கோனா 6 மணிநேரத்திலும் ZS EV 8 மணிநேரத்திலும் சார்ஜ் ஏறிவிட்டன. இவை DC சார்ஜிங் திறனைக் கொண்டிருந்தாலும், அந்த சார்ஜர்கள் இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்தியாவில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை சராசரியாக 7 ரூபாய் எனக் கணக்கில் கொண்டால், ZS EV-யை ஃபுல் சார்ஜ் செய்ய 320 ரூபாயும் - கோனாவை ஃபுல் சார்ஜ் ஏற்ற 280 ரூபாயும் தேவைப்படும். எனவே ஒவ்வொரு கிமீக்கும் உத்தேசமாக 1-1.2 ரூபாய் மட்டுமே செலவாகும். இது பெட்ரோல்/டீசல் கார்களைவிட 5-7 மடங்கு குறைவு என்பதை நினைவில் கொள்ளவும்.

ஓட்டுதல் அனுபவம்

Hard Compound - Low Resistance 17 இன்ச் டயர்கள் இருப்பதால், கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது ஓட்டுதல் கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. குறைவான வேகங்களில் பயணிக்கும்போது, ZS EV-ன் மென்மையான சஸ்பென்ஷன் கைகொடுக்கிறது. காரை ஓட்டுவதும் ஈஸியாகவே உள்ளது. இதுவே அதிகமான வேகத்தில் செல்லும்போது, கோனாவின் இறுக்கமான சஸ்பென்ஷன் காரின் நிலைத்தன்மைக்கு உதவுகிறது.

ரூபாய்க்கு ஒரு கி.மீ... அசத்தும் கோனாவும் எம்ஜியும்!

மற்றபடி இந்த எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரி, காரின் ஃப்ளோரில் இருப்பதால், Low Centre Of Gravity ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பங்களில் இவற்றின் செயல்பாடு நன்றாகவே இருக்கிறது. டைட்டான சேஸி மற்றும் பின்பக்க மல்ட்டி லிங்க் சஸ்பென்ஷன் காரணமாக, கோனா ஸ்போர்ட்டியான ஃபீலைத் தருகிறது. இதன் ஸ்டீயரிங்கும் போதுமான எடையில் இருப்பதால், ஓட்டுனருக்குத் தேவையான நம்பிக்கை கிடைக்கிறது. மேலும் இதன் டிரைவ் செலெக்ட் பட்டன்கள், பயன்படுத்த வசதியாக உள்ளன. எம்ஜியில் இருக்கும் Rotary டிரைவ் செலெக்ட்டரும் பயன்படுத்தச் சுலபமாகவே இருக்கிறது.

ஸ்மூத்தான ஓட்டுதல், சிங்கிள் சார்ஜில் 250 கிமீ செல்லும் திறன், போதுமான பிராக்டிக்காலிட்டி, மல்ட்டி லிங்க் பின்பக்க சஸ்பென்ஷன் என கோனா சிறப்பான காராக இருக்கிறது. கொடுக்கும் காசை நியாயப்படுத்தும்படி, ஸ்போர்ட்டியான அனுபவம் - சொகுசான சீட்கள் - பெரிய டீலர் நெட்வொர்க் என ஹூண்டாயின் எலெக்ட்ரிக் கார் அமைந்திருக்கிறது. ஆனால் நெருக்கடியான பின்பக்க சீட், சாதாரணமான கேபின், க்ராஸ்ஓவர் தோற்றம் என இதில் மைனஸ்களும் இருக்கின்றன.

ரூபாய்க்கு ஒரு கி.மீ... அசத்தும் கோனாவும் எம்ஜியும்!

ஆனால், ஒரு எலெக்ட்ரிக் காருக்குத் தேவையான ரேஞ்ச் மற்றும் கேபின் இடவசதியில், ZS EV முன்னிலை பெற்றுவிடுகிறது. மேலும் தனது காருக்கு எம்ஜி, 5 ஆண்டு வாரன்ட்டி கொடுப்பதும் வரவேற்கத்தக்க அம்சமே! ஏனெனில் நீண்ட காலப் பயன்பாட்டில், எலெக்ட்ரிக் கார்களின் பராமரிப்புச் செலவுகள் எப்படி இருக்கும் என்பதில் இன்னுமே தெளிவில்லை. ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் LED ஹெட்லைட்ஸ் இல்லை என்றாலும், அதற்குப் பதில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, எம்ஜியின் எலெக்ட்ரிக் காரே வெற்றி பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு